வெள்ளி, டிசம்பர் 22, 2023

திருநீற்றுக் காப்பு

 

கோவிலூரின் கதை

கோவிலூர் ஆண்டவர் திவ்ய வரலாறு

திருநீற்றுக் காப்பு

            அவர் சிறு குழந்தை என்று எண்ணிவிட வேண்டாம். அவர் தன் பதிமூன்று வயதிலேயே, பல கலைகளையும் கற்றுத் துறை போகியவர். அவரின் எண்ணம் முழுவதும் பரம்பொருளின் பக்கமே இருந்தது. எந்நேரமும் திருநீறு அணிந்தவராகவே அவர் இருப்பார். நெற்றி நிறைய திருநீறு, பக்தி நிறைய மனம் என்றே அவரின் இளமை வாழ்க்கை அமைந்திருந்தது. பேசுவதெல்லாம் ஞானம். சொல்வதெல்லாம் நடந்தேறும். எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிலும் மெய்ப்பொருளையே எண்ணுபவர், சொல்பவர், செய்பவர்.

            திருநீற்றுக்காப்பு என்பது அவருக்கு மிகவும் பிடித்த செயல். ஒண்மைய னே! திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளிரும் வெண்மையனே விட்டிடுதிகண்டாய் என்று மாணிக்கவாசக சுவாமிகள் காட்டும் திருவாசக நெறிப்படி திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளர்வதில் அவருக்கு அளவு கடந்த ஆசை. நெற்றி மட்டுமல்லாது அங்கமெல்லாம் திருநீற்றைப் பூசிக் கொள்வதில் அவருக்கு அளவு கடந்த ஆசை.

            திருக்கோயிலுக்குச் செல்கிறோம். கோயிலில் திருநீறு அளிக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக தரப்பெற்ற திருநீற்றை என்ன செய்ய முடியும். நெற்றியில் அணிந்து, மீதமுள்ளதை தட்டி வீச முடியுமா?  அல்லது தூணில் தடவி கைகளுக்கு இதம் கொள்ள முடியுமா? எது நல்லது. இவை எதுவும் நல்லவை அல்ல. மீதமிருக்கும் திருநீற்றை உடல் முழுவதும் காப்பிட்டுக்கொள்ளலாம். அதுவே சிறப்பு. இளம் வயதில் மூத்தோர்கள் சொல்வார்கள் மீதமுள்ள திருநீற்றை வயிற்றில் தடவிக்கொள் என்று. மிக நல்ல பழக்கம் அது. நமக்கு நாமே செய்துகொள்ளும் திருநீற்றுக் காப்பு அது.

            ஞான சம்பந்தர் கூன் பாண்டியரின் உடல் முழுவதும் வெப்பு நோய் நீங்க திருநீற்றுக் காப்பு செய்தார். இதையெல்லாம் எண்ணி அறிந்து உணர்ந்து அவர் தன் உடலம் முழுவதும் தீருநீற்றைக் காப்பாகச் சாத்திக் கொண்டார்.

            கண்டவர்களுக்கு இது  விநோதமாக இருந்தது. விபரீதமாக இருந்தது. வித்தியாசமாக இருந்தது. அவரின் திருநீற்றுக் காப்பினை அவர்களது பெற்றோரிடத்தில் சொல்லிச் சொல்லி ஞானமின்றி மகிழ்ந்தார்கள்.

            தனது குழந்தை இப்படித் திருநீற்றில் விளையாடிக் களிப்பதைக் கண்ட பெற்றோரும் துணுக்குற்றனர். என்ன செய்வது இந்தக் குழந்தையை! எப்படித் தவிர்ப்பது இந்த வழக்கத்தை என்று எண்ணி எண்ணிக் கலங்கினர்.

            யாது செய்யலாம் என்று எண்ணிய அவர்களுக்கு ஒரு வழி கிடைத்தது. அருகில் சாமியாடி ஒருவர் இருப்பதை அறிந்தார்கள். அவரிடத்தில் இந்தத் திருநீற்றுக் காப்புக் குழந்தையை அழைத்துப் போய் காட்டினர்.

            சாமியாடி  அந்தச் சிறு குழந்தையை எதிரில் உட்காரவைத்து  நேருக்கு நேர் பார்த்தார். நெட்டி முறித்தார். கைகளைத் தூக்கி தூக்கி ஆடினார்.

”மனிதரில் சாமி வந்து இறங்குவது உண்டா? ” ஐயம் எழுந்தது அந்த ஞானக் குழந்தைக்கு.

சாமியாடியின் ஆட்டம் அதிகமானது. அவர்  பலவாறு கத்திக் கூச்சலிடுகிறார். இதனைக் கண்ட அந்தக் குழந்தைக்கு அதே கேள்விதான். மனிதரில் சாமி வந்து இறங்குவது உண்டா? பிறகு ஏன் தெய்வம். கோயில். சாமியாடியே போதுமே எல்லாவற்றுக்கும் என்று பல வகை எண்ணம் அந்தத் தெய்வீகக் குழந்தைக்கு.

இப்போது சாமியாடி ஆட்டத்தை நிறுத்தினார். கத்துவதை நிறுத்தினார். மெல்லிய குரலில் ”தாம்பூலம் தா!”  என்றார் சாமியாடி

”தந்தேன் தாம்பூலம்” என்றது குழந்தை

குழந்தை தந்த தாம்பூலத்தை வாங்கிச் சுவைத்தார் சாமியாடி. சுவைக்க சுவைக்க வாய் வெந்துபோனது. நாக்கு அழற்சி ஏற்பட்டது.

”என்ன தந்தாய்” என்றார் சாமியாடி

‘தின்ன வெத்திலையும் பாக்கும் சுண்ணாம்பு மூன்று கட்டியும்” என்றது

குழந்தை

”என்னது மூன்று சுண்ணாம்புக் கட்டியா?” அதிர்ந்தார் சாமியாடி

‘எல்லாம் அறிந்த தாங்கள் வெற்றிலைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியவில்லையா”

‘‘ம்...ம்...” விழித்தார் சாமியாடி

‘‘போலிச்சாமிக்கு மூன்று சுண்ணாம்புக் கட்டி சாட்சி” என்றது குழந்தை

”......”

சாமியாடியின் ஆட்டம் நின்றது. தான் போலி என்று உணர்ந்தார் சாமியாடி. ஞானக் குழந்தை சிரித்தது.

திருநீறும் வெள்ளை, சுண்ணாம்பும் வெள்ளை. முன்னது மெய். பின்னது பொய்.  முன்னது ஞானம். பின்னது போகம். சுண்ணாம்புக் கட்டிகள், திருநீற்று வெள்ளைக் காப்பின் அருமையைக் காட்டின. ஞானக்குழந்தை சிரித்துக் கொண்டே இருந்தது.

சீர் வளர் சீர் முத்திராமலிங்க ஆண்டவர்தம் இளவயதில் நடந்த திருநீற்றுக் காப்பு  நிகழ்ச்சி இது. அவர் அணிந்த திருநீறு இன்னமும் கோவிலூர் வேதாந்த மடத்தில் நின்றுவெல்கிறது.

ஒவ்வொரு காட்சியாய் ஒவ்வொரு சொல்லாய் ஒவ்வொரு கருத்தாய்க் கண்டு கொண்டிருந்த பெற்றோர்கள் தம் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல அல்லாமல் வேறுபட்டது. மெய்வயப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டுச் சாமியாடியை விட்டு விலகினர்.

            பொய் ஓடும். மெய் நிற்கும்.

கருத்துகள் இல்லை: