ஞாயிறு, நவம்பர் 27, 2022

இமயவரம்பன் பரம்பரையும், சேரநாடும்

 


2

siragu imayavaramban.jpg.

கடைச்சங்க காலத்தில் எழுந்த புற நூலான பதிற்றுப்பத்தில் சேரர்கள் பதின்மரைப் பற்றிய வரலாறு தெளிவுபட எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. இப்பத்திற்றுப்பத்தில் இமயவரம்பன் பரம்பரையினர், உதியன் சேரலாதன் பரம்பரையினர் என்ற இரு மரபினர் பற்றிய செய்திகள் வழங்கப்பெற்றுள்ளன. இக்குறிப்புகள் வழி இவ்விரு சேர மரபினரின் வரலாறு, கொடை, வீரம் போன்ற செயல்பாடுகளைத் தெளிவுபட அறியமுடிகின்றது.

இமயவரம்பன் பரம்பரையினர்

சேரநாட்டை வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டும், மாந்தை என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டும் இமயவரம்பன் பரம்பரையினர் ஆட்சி செய்துள்ளனர். வரலாற்று அளவில் முந்தைய பரம்பரையினராக, சேர அரசர்களில் மூத்தோர்களாக இமயவரம்பன் பரம்பரையினர் அறியப்பெறுகின்றனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னன் கி.பி. எழுபத்தோன்றாம் ஆண்டுமுதல், கி.பி. நூற்று இருபத்தொன்பதாம் ஆண்டுவரை ஆட்சி செய்தவனாகக் கருதப்படுகிறான். பதிற்றுப்பத்து இலக்கியத்தின் இரண்டாவது பத்தின் பாட்டுடைத் தலைவனாக இவன் விளங்குகிறான். முதல் பத்து கிடைக்காத நிலையில் இச்சேரன் குறித்த இரண்டாம் பத்தில் இருந்து சேரமரபினரைப் பற்றி அறிந்து கொள்ளமுடிகின்றது.

குறிப்பாகப் பதிற்றுபத்தின் பதிகங்கள் சேர மன்னர்களின் வரலாற்றைத் தெளிவுபடப் பதிவுசெய்துள்ளன. இவற்றின்வழி இமயவரம்பன் பரம்பரையினர் பற்றி அறிந்து கொள்ளமுடிகின்றது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தையையும், தாயையும் பற்றிய குறிப்புகள் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பதிகத்தில் சுட்டப்பெற்றுள்ளன.

”மன்னிய பெரும் புகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்”
என்று பெற்றோர் பெயரும்,
‘‘இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு”

என்று மன்னன் பெயரும் இரண்டாம் பத்தின் பதிகத்துள் குறிப்பிடப்பெறுகிறது. பதிற்றுப்பத்தின் பதிகத்தில் மன்னர் பெயரும் அவரின் இணையான அரசியின் பெயரும் குறிக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

இமயவரம்பன் பரம்பரை என்பது உதியன் சேரலாதனிடம் இருந்துத் தொடங்குகிறது என்றாலும், அவனைப் பற்றிய குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. உதியன் சேரலாதனைப் புறநானூற்றில் உள்ள பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்பவனுடன் எண்ணும் முறையும் வரலாற்று ஆசிரியர்களிடம் காணப்பெறுகிறது. இருப்பினும் அக்கருத்து வலுவுடையதாக இல்லை.

உதியன் சேரலாதனின் மகனான இமயவரம்பன் பற்றிய செய்திகளும், அவனின் பரம்பரையினர் பற்றிய செய்திகளும் பதிற்றுப்பத்தில் தரப்பெற்றுள்ளன.

இமயவரம்பனின் தந்தையின் பெயர் உதியன் சேரலாதன் என்பதும், தாயின் பெயர் வேண்மாள் நல்லினி என்பதும் தெரியவருகிறது. இவர்களுக்குப் பிறந்த மகன் இமயவரம்பன் ஆவான். இவன் மாந்தை என்னும் நகரை மையமாக வைத்துச் சேரநாட்டை ஆண்டான். இவன் சோழனுடன் போர்ப்புறம் என்னும் இடத்தில் போரிட்டு உயிர் துறந்த நிலையைப் புறநானூறு பாடுகின்றது.

பரணர், கழாஅத்தலையார் ஆகியோர் இம்மன்னன் போர் செய்து இறந்த நிலையைப் பதிவு செய்துள்ளனர். இம்மன்னன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற் கிள்ளி என்ற மன்னனுடன் போர் செய்தான். இப்போரில் இரு மன்னர்களும் தம் படைகளை மோதச் செய்வதை விடுத்து, தமக்குத் தாமே போர் செய்து கொண்டதாகவும் அவர்கள் இருவரும் மாண்டதாகவும் குறிகக்கப்பெறுகிறது.

இதனைப் புறநானூற்றின் அறுபத்து இரண்டாம் பாடல்

‘‘அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே”

என்ற பாடலடிகளில் பதிவு செய்துள்ளது. மேலும் போரில் இறப்பைத் தழுவிக் கொண்டிருக்கும் இச்சேரனிடம் சென்று அந்நேரத்தில் கழாஅத்தலையார் என்ற புலவர் இரந்து நின்று அவனிடம் குதிரை, யானை போன்றவற்றைக் கேட்க இயலாநிலையில் அவன் மார்பில் இருந்த ஆரத்தைக் கேட்கிறார். அவனும் இறக்கும் தருவாயில் அவருக்கு அதை அளிக்கிறான்.இதனையும் புறப்பாடல் பதிவுசெய்துள்ளது.

”தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்,
பாடி வந்த தெல்லாம், கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்தநின்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.”

என்று இப்பாடலடிகள் அவர் ஆரம் பெற்ற செய்தியைக் காட்டுகின்றன. இவ்வாறு இவனின் வாழ்நாள் இறுதியடைகின்றது.

அகநானூற்றிலும் இம்மன்னன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

‘‘வலம் படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
நல் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி,”

என்று இவன் கடலில் கடம்ப மரம் அழித்ததும், இமயத்திற்குச் சென்று வில் பொறித்ததும், மாந்தை என்னும் நகரில் பகைவர் தந்த பொருள்களைச் சேமித்து வைத்ததும் அகநானூற்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. இவனிடத்தில் பொருள் பெற ஒரு நாள் தங்கவேண்டி வரலாம் என்றாலும் தலைவன் தலைவியைக் காண ஒருநாள் கூட தங்கமாட்டான் என்ற அகச் செய்தியை இதனோடு இணைத்து அகநானூறு தருகின்றது.

இதன்வழி புறநானூறு, பதிற்றுப் பத்து, அகநானூறு ஆகிய இலக்கியங்களில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகின்றது.

பதிற்றுப்பத்தில் இவனின் பட்டத்தரசி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

‘ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்து பொதி துவர்வாய் அமர்ந்த நோக்கின்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்”

என்ற அடிகள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் சேரமாதேவி பற்றிய குறிப்புகளை அடக்கிய அடிகளாகும். இப்பகுதியில் இடம்பெறும் சேரமாதேவி – பதுமன் தேவியைக் குறிப்பதாகவும் கொள்ளமுடிகின்றது. நற்சோனையைப் பற்றியதாகவும் கொள்ள முடிகின்றது.

மற்றொரு அகநானூற்றுப் பாடலிலும் இவனைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.

‘‘சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,”

என்று இவன் பகைவரின் கடம்ப காவல் மரத்தை அறுத்து முரசு செய்த செய்தி இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது.

இவன் போரில் வீழ்ந்த நிலையில் இவனின் தம்பியான பல்யானை செல்கெழுகுட்டுவன் ஆட்சி பெறுகிறான். இமயவரம்பன் ஐம்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்து போரில் பட்ட நிலையில் பல்யானை செல்குழு குட்டுவன் ஆட்சி பெறுகிறான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர மன்னனாக ஆட்சி செய்த காலத்தில் இவன் இமயவரம்பனுக்கு அடுத்த நிலையில் குட்ட நாட்டில் வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்தான். இவன் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவனாக விளங்குகிறான்.

கருத்துகள் இல்லை: