ஞாயிறு, நவம்பர் 27, 2022

இமயவரம்பன் பரம்பரையும், சேரநாடும் – பகுதி-3 முனைவர் மு.பழனியப்பன்

 Oct 29, 2022

siragu imayavaramban.jpg.

சேரநாடு

சேரநாடு இமயவரம்பன் காலத்தில் இமயம் வரை தன் ஆட்சியைக் கொண்டிருந்தது. இமயவரம்பன் காலத்தில் சேரநாடு என்பது ‘‘தென் கன்னடம் மாவட்டத்தில் உள்ள குதிரைமலையும், ஏழில் மலையும், குடகு நாட்டிலுள்ள நறவுக்கல் பெட்டா மலையும், நீலகிரியிலுள்ள உம்பற்காடும், மலையான மாவட்டத்திலுள்ள வயநாட்டுப் பாயல் மலையும், குறும்பர் நாடு தாலுகாவிலுள்ள தொண்டியும், கொச்சி நாட்டிலுள்ள கருவூர்ப்பட்னமும், திருவஞ்சைக்களமும், கொடுங்கோளுரும், பேரியாறும் பிறவும் சேரர்க்குரியனவாகக் கூறப்படுகின்றன” என்று சேரநாட்டின் பரப்பினை ஔவை துரைசாமிப்பிள்ளை காட்டுகிறார்.

“சேர நாட்டில் அடங்கியுள்ள பகுதிகள் குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்ற நாடு, மலைநாடு, கொங்கு நாடு, பொறைநாடு, முதலியன ஆகும். இதில் அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, அகப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித் துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய இடங்களும் அடங்கும்” என்று சேரநாட்டின் பகுதிகளைக் காட்டுகிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

சேரநாட்டின் பல ஊர்களைப் பதிற்றுபத்து குறிக்கிறது. உம்பற்காடு என்பது பல இடங்களில் குறிப்பிடப்பெறுகிறது. தற்போது ஆனைமலைக்காடுகள் என்று வழங்கப்படும் இப்பகுதியை இமயவரம்பன் குமட்டூர் கண்ணனாருக்கு வழங்கினான். இதன்பின் இப்பகுதி சற்று கலகத்தை ஏற்படுத்த பல்யானை செல் கெழுகுட்டுவன் இதனை அடக்கினான். இதனின்று கிடைக்கும் வரப்பணத்தில் பாதியைச் செங்குட்டுவன் பரணருக்கு வழங்கினான் என்பன போன்ற செய்திகள் உம்பர்காட்டை முன்வைத்துப் பதிற்றுப்பத்தில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.

குட நாடு என்பதும் சேரர்க்கான பகுதியாக விளங்கியிருக்கிறது. இந்நாட்டின் ஓர் ஊரினை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பார்ப்பனருக்கு வழங்கினான்.

தண்டாராணியம் என்பது தக்கான பீடபூமிப் பகுதியாகும். இங்கு இருந்து ஆடுகளைக் கவர்ந்த நிலையில் கவர்ந்தவர்களை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அழிக்கிறான். இப்பகுதியும் சேரநாட்டின் ஒரு பகுதியாக அக்காலத்தில் விளங்கியது.

தொண்டி என்னும் நகரம் சேரர்களின் கடற்கரை நகரமாக விளங்கியதாகும். இவ்வூர் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகிறது.

கொங்கர் நாட்டினைப் பல்யானை செல்கெழுகுட்டுவன் கைப்பற்றிய திறத்தை ‘ஆகெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல் கெழு தானை வெருவெரு தோன்றல்’ என்று குறிக்கிறது பதிற்றுப்பத்தின் பாடல்
இவை போன்று கொடுகூர், கொல்லிக் கூற்றம், நறவு, பந்தர், புகாஅர், மையூர், வஞ்சி மூதூர், வியலூர் போன்ற பல சேரர் ஊர்கள் பதிற்றுப்பத்தில் காட்டப்பெறுகின்றன.

இவற்றின் வழியாக அக்காலத்தின் சேரநாட்டுப்பகுதிகளை அறிந்து கொள்ள முடிகின்றது. அவை தற்காலத்தில் வழங்கி வரும் நிலையையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

சேரர் ஆட்சி

இப்பரப்பினை உடைய சேரநாட்டு அரசமுறை என்பதும் சிறப்பிற்குரியதாக இருந்துள்ளது.

”சினனே, காமம், கழி கண்ணோட்டம்,
அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை,
தெறல் கடுமையொடு, பிறவும், இவ் உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்:
தீது சேண் இகந்து, நன்று மிகப் புரிந்து,
கடலும் கானமும் பல பயம் உதவ;
பிறர் பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது,
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து, தம்
அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய;
ஊழி உய்த்த உரவோர் ”

என்ற நிலையில் சேரர் தம் அரசியல் இருந்துள்ளது. அளவு கடந்த சினம், காமம், மிகுந்த கண்ணோட்டம், அச்சம்,பொய்யுரை, அன்புமிக உடைமை, கடுந்தண்டம் ஆகியவையும், இவை போன்றன பிறவம் இவ்வுலகத்தே அறநெறியில் செயறபடும் அரசாணைச் சக்கரத்தைத் தடுக்கும் தீங்குகள் ஆகும். அத் தீங்குகள் நீங்க நற்செயல்கள் புரிந்து, கடலம் காடும் பயன்கள் பலவற்றை நல்க, மக்கள் பிறரை வருத்தாமலும் பிறர் பொருட்களை விரும்பாமலும், குற்றமற்ற அறிவினராய் நன்றாக நடந்து தம் துணைவியரைப் பிரியாமல் பலர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு நோயில்லாமல் முதுமையடைந்த உடலோடு நெடுங்காலம் ஆட்சி புரிந்த வலியவர்கள் சேரர்கள் என்பதை இப்பாடலடிகள் காட்டுகின்றன.

முடிவுகள்

சேரர் வரலாற்றினை அறிந்து கொள்ளப் பெரிதும் துணைபுரிவது பதிற்றுப்பத்து ஆகும். பதிற்றுப்பத்து கடைச்சங்க கால நூலாகும். அச்சங்க காலத்தில் சேரநாட்டை அரசு புரிந்த பத்து சேர மன்னர்களை அவர்களின் கொடை, வீரச் சிறப்பினை பதிற்றுப்பத்து எடுத்துரைக்கின்றது. இப்பதிற்றுப்பத்தின் பதிகங்கள் மிக முக்கியமான செய்திகளை வழங்குகின்றன.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பரம்பரையினர் அறுவராக அமைகின்றனர். உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற அறுவரும் சேரநாட்டைத் தொடர்ந்து ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனின் மகனான கோக்கோதை மார்பன் என்பவன் ஆட்சி புரிந்துள்ளான்.

இதில் உதியன் சேரலாதன் மகன் இமயவரம்பன் ஆவான். இவன் போரில் இறக்க இவனின் தம்பி பல்யானை செல் கெழுகுட்டுவன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தான். இவன் துறவு மேற்கொண்டு காடு சென்ற நிலையில் இமயவரம்பனின் மூத்தமகன் அதாவது இமயவரம்பனுக்கும் பதுமன் தேவிக்கும் பிறந்த களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் ஆட்சிப் பொறுப்பேற்கிறான். இவனுக்குப் பின்பு இமயவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணைக்கும் பிறந்த மகன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் அரசேற்கிறான். இவனுக்குப் பின்பு இமயவரம்பனுக்கும் பதுமன் தேவிக்கும் பிறந்த இளைய மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சி ஏற்கிறான். இவனுக்குப் பின்பு கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனின் மகன் கோக்கோதை மார்பன் அரசேற்கிறான். இவ்வாறு இமயவரம்பனின் பரம்பரை சேரநாட்டை ஆண்டுவந்துள்ளது.

இவர்களின் காலத்தை ஓரளவிற்கு வரலாற்று ஆசிரியர்கள் காட்டியுள்ளனர்.

1. உதியஞ் சேரலாதன் – கி.பி.45 முதல் -70 வரை
2.இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி71முதல் -129 வரை
3. பல்யானை செல்கெழு குட்டுவன் – கி.பி80 முதல் 105 வரை
4. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி106 முதல் -130 வரை
5. சேரன் செங்குட்டுவன் – கி.பி 131 முதல் -186 வரை
6. ஆடுகோட்பாட்டு சேரலாதன் – கி.பி187 முதல் – 225 வரை
7. குட்டுவன் கோதை – ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் காலத்தை ஒட்டியும்
அதன் பிறகும்

என்று வரலாற்று ஆசிரியர்கள் கால வரையறை செய்கின்றனர்.

சேரர்கள் இமயவம் வரை சென்று வில் பொறியை அங்குப் பொறித்தவர்கள் ஆவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனும் இமயம் வரை சென்று வந்தவர்கள் என்று அறியவருகிறது.

இவர்கள் காலத்தில் பல தலைநகரங்கள் சேரநாட்டில் இருந்துள்ளது. ஆங்காங்கே சேரனின் தொடர்புடையோர் அதனை ஆண்டுவந்துள்ளனர். ஆட்சி என்பது நேரிய முறையில் நடந்துள்ளது.

கொடைத்திறமும், வீரமும் சான்ற குடியினராக சேரர் குடி விளங்கியுள்ளது. இவர்கள் புலவர்களுக்கு வரையாது வழங்கியமையைப் பதிற்றுப்பத்தின் பதிகங்கள்வழி அறியமுடிகின்றது.

சான்றாதாரங்கள்

[1]பதிற்றுப்பத்துஇரண்டாம்பத்துபதிகம்அடிகள் 1-3

[2]மேலது

[3]கழாஅத்தலையார், புறநானுறுபாடல் 62 அடிகள் 6-7

[4]மேலது, புறநானூறுபாடல் 368 அடிகள் 15-19

[5]மாமூலனார், அகநானூறு, பாடல் 127 அடிகள் 3-12

[6]குமட்டூர்கண்ணனார், பதிற்றுப்பத்து, இரண்டாம்பத்துபாடல் 13,அடிகள் 10-13

[7]மாமூலனார், அகநானூறு, பாடல்எண் 347, அடிகள் 3-5

[8]பதிற்றுப்பத்துமூன்றாம்பத்து, பதிகம்அடி -1

[9]பாலைக்கௌதமனார், மூன்றாம்பத்து, பாடல் 21, அடி31-38

[10]இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், நடுகல்காதை, அடி 135-146

[11]பதிற்றுப்பத்துநான்காம்பத்து, பதிகம்அடிகள் 1-4

[12]காப்பியாற்றுக்காப்பியனார், பதிற்றுப்பத்து, நான்காம்பத்து,பாடல் 39 அடி 13-17

[13]கல்லாடனார், அகநானூறு, பாடல்எண் 199, அடிகள் 19-24

[14]பதிற்றுப்பத்துஐந்தாம்பத்து, பதிகம், அடிகள் 1-3

[15]மயிலைசீனிவேங்கடசாமி, ஆய்வுக்களஞ்சியம் 1 , பக். 414

[16]கோனாட்டுஎறிச்சலூர்மாடலன்மதுரைக்குமரனார், புறநானூறுபாடல் 54

[17]பொய்கையார், புறநானூறு, பாடல்எண் 49 அடிகள் 1-5

[18]நக்கீரர், அகநானூறு, பாடல்எண் 346 அடி 23-29

[19]இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்,நடுகல்காதை, அடிகள் 115-120

[20]பரணர், அகநானூறு, பாடல்எண் 212 அடிகள் 16-20

[21]பதிற்றுப்பத்துஆறாம்பத்துபதிகம், அடிகள் 1-2

[22]காக்கைப்பாடினியார்நச்செள்ளையார், பதிற்றுப்பத்து, ஆறாம்பத்து, பாடல் 52 அடிகள் 14- 24

[23]ஔவைதுரைசாமிபிள்ளை, சேரமன்னர்வரலாறு,ப. 21

[24]மயிலைசீனிவேங்கடசாமி, பண்டைத்தமிழகவரலாறு, சேரர், சோழர், பாண்டியர், ப. 19

[25]பாலைக்கௌதமனார், பதிற்றுப்பத்துஇரண்டாம்பத்து, பாடல்எண் 22 அடிகள் 15-16

[26]பாலைக்கௌதமனார், பதிற்றுப்பத்து, இரண்டாம்பத்து, பாடல்எண் 22அடிகள்1-11

கருத்துகள் இல்லை: