ஞாயிறு, நவம்பர் 27, 2022

மன்னரைச் சேர்ந்தொழுகல் – பகுதி-3 முனைவர் மு.பழனியப்பன் Jul 16, 2022

 

siragu mannar

அறிவுரை 5 வேண்டுவ வேட்பச் சொல்லல் வேண்டும்.

தக்க காலம் பார்த்து, ஆட்சியாளரின் குறிப்பு அறிந்து வெறுப்பு தராத செய்திகளையும், ஆட்சியாளர் விரும்பும் செய்திகளையும் அவர் விரும்பிக் கேட்கும் வண்ணம் ஆட்சியாளர்களைச் சார்ந்து வாழ்வோர் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லாதவற்றையும், அவர் விரும்பிக் கேட்கும் வண்ணம் சொல்லும் வல்லமை சார்ந்து ஒழுகுபவர்களுக்கு வேண்டும். இதனை,

குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல். (696)

என்ற குறள் வெளிப்படுத்துகின்றது.

அறிவுரை -6 பயன் தராதவற்றை வேந்தன் விரும்பினாலும் சொல்லல் கூடாது

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.(697)

என்ற குறள் ஆட்சியாளரிடம் அவரைச் சார்ந்தோர் எதனைச் சொல்லவேண்டும் எதனைச் சொல்லக் கூடாது என்பதைக் காட்டுவதாக உள்ளது. ஆட்சியாளர்களிடம் அவர்கள் விரும்புவனவற்றை மட்டுமே சொல்லவேண்டும். பயனில்லாதவற்றை அவர்களே கேட்டாலும் சொல்லுதல் கூடாது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். பயனிலாதவற்றைச் சொல்லி ஆட்சியாளர்களைத் திசை திரும்ப வைத்துவிட்டால் ஆட்சி பாழாகிவிடும்.

பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தவறான நேரத்தில் தவறான தகவலைப் பொற்கொல்லன் சொன்ன காரணத்தால் கோவலனின் உயிர் பறிக்கப்படுகிறது. கண்ணகி தன் கணவனை இழக்கிறாள். மதுரை தீ கொள்கிறது. பாண்டியன் உயிர் துறக்கிறான். எனவே ஆட்சியாளரைச் சார்ந்து ஒழுகுபவர்கள் பயன் தராதவற்றை, ஆட்சியாளர்களுக்கு இழுக்கு தருவனவற்றை ஆட்சியாளர்களிடம் சொல்லுதல் கூடாது என்பது மிக முக்கியமாகக் கடைபிடிக்கவேண்டிய கருத்தாகும்.

முன்குறளில் அரசன் விரும்புவனவற்றை மன்னரைச் சேர்ந்தொழுகுவோர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார் வள்ளுவர். இதன் காரணமாக அரசன் வேண்டுவன பயனில்லாதனவாக, அறமற்றனவாக இருந்தால் அவற்றை அவன் விரும்பிக் கேட்பான் என்று சொல்லுதல் கூடாது என்பதை இக்குறளில் தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.

அறிவுரை -7 மன்னரைச் சேர்ந்தொழுகுவோர் மன்னரை விட வயதிலும் அறிவிலும், அனுபவத்திலும் சிறந்தவர் என்ற நிலையை வெளிப்படுத்துதல் கூடாது

ஆட்சியாளர்களுடன் சுற்றமாக உள்ளோர் வயதில் ஆட்சியாளரை விட இளையவராக இருந்தாலும், முதுமையானவராக இருந்தாலும் அதனை அதாவது அந்த இளமையின் தன்மையை, முதுமையின் தன்மையை வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டும். ஆட்சியாளருக்குத் தன்னைவிட தன்னைச் சார்ந்து ஒழுகுபவர்கள் இளமையைப் பெற்றிருக்கிறார்கள், முதுமையால் அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றிவிடா வண்ணம் ஒழுக வேண்டும். எவ்விதத்திலும் ஆட்சியாளர்களுக்கு இழுக்கு வந்துவிடாவண்ணம் ஆட்சியாளரைச் சார்ந்தோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆட்சியாளர்கள் தனக்கு உறவினராக அமைந்த நிலையில் அவரை இன்ன முறையினர் என்று கருதி தாழ்வாகவே உயர்வாகவே எண்ணிப் பேசவும் கூடாது.

தமிழ்ப்புலவர் ஒட்டக் கூத்தர் மூன்று சோழ மன்னர்களின் காலத்திலும் அதாவது மூன்று தலைமுறையினர் காலத்திலும் வாழ்ந்தவர். அவர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கள், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று அரசர்கள் காலத்திலும் வாழ்ந்தவர். விக்கிரம சோழன் காலத்தில் குலோத்துங்கனும், குலோத்துங்க சோழன் காலத்தில் இராசராசனும் இளையோர்களாக இருந்திருப்பர். இருப்பினும் ஒட்டக் கூத்தர் தம்மை விட அரசர்கள் இளையவர்கள் என்றாலும் அவர்களை இளையவர்களாகக் கருதாமல் அவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக ஆக்கி அவர்கள் மீது உலாக்கள் பாடி மூவர் உலா பாடிப் பெருமை பெற்றார். இதன் காரணமாக ஆட்சியாளர்கள் இளமையானவர்கள் என்றாலும் அவர்களின் பெருமைக்கு ஊறு வராமல் அவரைச் சார்ந்தோர் காத்த நிலைப்பாடு தெரியவருகிறது.

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். (698)

என்பது மன்னரைச் சார்ந்து ஒழுகுபவர்களுக்குப் பெரிதும் தேவைப்படும் கருத்தாகும்.

கரிகால் வளவன் இளையவன். அவனுக்குத் துணையாக இருந்த இரும்பிடர்த்தலையர் வயதால் முதிர்ந்தவர். அம்முதியவர் இளையவரான கரிகால் பெருவளத்தானின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வளம் பெற வைத்தார். இளையவர் என்று இகழாமல் கரிகால் வளவனை இரும்பிடர்த்தலையர் போற்றிக் காத்தலாகிய ஒழுக்கத்தை நன்கு செய்து நற்பெயர் பெற்றார்.

அறிவுரை 8 கொளப் பெற்றோம் என்று எண்ணி கொள்ளாதன செய்தல் கூடாது.

ஆட்சியளார் தன்னுடைய சுற்றத்தார் என்பதால் எதையும் செய்யலாம் என்ற கர்வ நிலைப்பாடு ஆட்சியாளரைச் சார்ந்தவர்களுக்கு வந்துவிடக் கூடாது. அவ்வாறு வந்து விட்டால் அந்நினைப்பு ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும் கேடுகளை விளைவிக்கும். ஆட்சியாளர்கள் விரும்பாதனவற்றை என்றைக்கும் ஆட்சியாளர்களைச் சார்ந்தோர் செய்யாது காத்துக்கொள்ள வேண்டும். இவ்வறிவுரையை

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குற்ற காட்சி யவர்.(699)

என்ற குறள் காட்டுகின்றது. இற்றைக் காலத்தில் பெண்கள் தலைமைப் பதவிக்கு வந்தாலும் அவரைச் சார்ந்த ஆண்களே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் போக்கினைக் காணமுடிகிறது. இதன் காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுவதையும் அறியமுடிகிறது. எனவே ஆட்சியானது ஆட்சியாளர்களேயே ஆளப்படவேண்டும். அவர்களுக்குப் பதிலிகளாக யாரும் மாறிவிடக் கூடாது.

அறிவுரை -9

மேற்சொன்ன அறிவுரையை வள்ளுவர் மீண்டும் வலியுறுத்தி இவ்வதிகாரத்தின் நிறைவுக் குறளைப் படைக்கிறார்.

பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். (700)

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எமக்கு பழமையான நட்புடையவர்கள் என்று எண்ணத்தில, பண்பு அல்லாதனவற்றை ஆட்சியாளரைச் சார்ந்தோர் செய்தல் கூடாது. இது பெரிய கேட்டினைத் தரும் என்கிறார் வள்ளுவர்.

கம்பரின் மகன் அம்பிகாவதி. மிகச் சிறந்த கவிஞன். அவன் மன்னன் மகள் அமராவதியைக் காதலித்தான். இதனை அறிந்த மன்னன் கோபமுற்று இதனைத் தடுக்க எண்ணினான். கம்பரையும், அம்பிகாபதியையும் அழைந்து ஒருநாள் அரண்மனையில் விருந்து வைத்தான். அவ்விருந்தில் அமராவதி உணவினைப் பரிமாரினாள். அப்போது காதல் மேம்பட அமராவதி குறித்து அம்பிகாவதி பாடல் பாடுகிறான். அதனை அறிந்த கம்பர் அவன் பாடிய பாடலின் பின் இரண்டு அடிகளை வேறு வகையில் பாடி அரசனின் கோபத்தை, சந்தேகத்தைத் தீர்த்தார்.

அதன் பின்னும் பழைமையை நினைக்காமல் அம்பிகாவதி அமராவதி காதல் தொடர அம்பிகாவதி உயிர்ச் சேதம் செய்யப்பட்டான். பழமை கருதி பண்பு அலாதன செய்ததால் அம்பிகாவதி உயிர் போயிற்று. இதன் காரணமாக பழமையை எண்ணி பண்புடன் வாழ வேண்டும். அரசனின் சுற்றத்தார் பழமையைக் கருதாமல் பண்புகள் அல்லாதன செய்வதால் துன்பப்பட நேரிடும் என்பதற்குக் கம்பரின் மகன் வாழ்க்கை சான்றாகிறது.

திருவள்ளுவர் காலத்திற்குச் சற்றொப்ப தோன்றிய பழமொழி நானூறு நூலிலும் மன்னரைச் சார்ந்து ஓழுகுபவர்களுக்கான அறிவுரைகள் சொல்லப்பெற்றுள்ளன.

கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்? (பழமொழி நானூறு 266)

என்ற பாடலில் மன்னரைச் சார்ந்து ஒழுகுபவர்கள் சோம்பலின்றி சொன்ன பணிகளைச்செய்து முடிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது. மன்னரோடு கூட்டு பெற்று வாழ்வோர் ஏவிய வினைகளை மடி கருதி அதாவது சோம்பல் கருதிச் செய்யாமல் விட்டுவிட்டால் என்னாவது என்று இந்தப் பாடல் அறிவுறுத்துகின்றது. மன்னரால் கூட்டுண்டு வாழ்வோர் என்பதை விட வள்ளுவர் தந்த மன்னரைச் சார்ந்து ஒழுகுபவர் என்ற பெயர் பொருத்தமுடையதாக விளங்குகிறது.

மனிதகுலம் மேம்பட தக்க ஒரு தலைவன், அவன் கீழ் பணியாற்றும் சோம்பலில்லா பணியாளர்கள், தலைவனுக்கு வழி சொல்லத் தக்க ஆலோசகர்கள், அவர்கள் வழங்கும் தக்க ஆலோசனைகள் பெரிதும் தேவை என்பதை மன்னரைச் சேர்ந்தொழுகல் என்ற அதிகாரம் தந்து நிற்கின்றது. இதன்படி நடக்கும் நிலையில் நல்ல நிர்வாகத்தை மனித குலம் பெறும் என்பதில் ஐயமில்லை.

மன்னரைச் சார்ந்து ஒழுகுபவர்களுக்கான பற்பல அறிவுரைகளை வழங்கும் பகுதியாக மன்னரைச் சேர்ந்தொழுகல் என்ற குறள் பகுப்பு விளங்குகின்றது. மன்னராட்சியானாலும் மக்களாட்சியானாலும் அவர்களைச் சார்ந்து வாழ்வோர் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர். இவ்வெச்சரிக்கையோடு செயல்படாவிட்டால் ஆட்சி கெடும். ஆட்சியாளரும் கெடுவர். ஆட்சியாளரைச் சார்ந்தோரும் கெடுவர். ஆட்சி அமைப்பே சீர் குலைந்து விடும். எனவே தகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆட்சி அதிகாரத்தில் இருப்போருடன் அவர்களைச் சார்ந்து வாழ்வோர் வாழ வேண்டி உள்ளது. இதன்படி நடக்க நல்லாட்சி நாளும் நடக்கும் என்று வள்ளுவர் வழி காட்டுகிறார்.

அரசரை விட்டு நீங்காமலும், மிக நெருங்காமலும் அன்பும் அச்சமும் கொண்டு அவரோடு அமைந்தொழுக வேண்டும். அவர்க்குரிய சிறந்த போகங்களைத் தாம் நுகர்ந்து கொள்ள விரும்பக் கூடாது. தம்மை மன்னன் விரும்பிப் பாதுகாக்கும் வண்ணம் பிழைகள் ஏதும் தம்மை அணுகாமல் மன்னரைச் சேர்ந்தொழுகுபவர்கள் வாழ வேண்டும். அவர் அருகில் இருக்கும் நிலையில் நகை, வீண் உரையாடல் போன்றனவற்றைச் செய்யக் கூடாது. அவருடன் உரையாடுபவர் என்ன உரையாடினார்கள் என்று வற்புறுத்தி மன்னரிடம் கேட்கக் கூடாது. மன்னரே சொல்லும்வரை பொறுமை காக்க வேண்டும். தாம் கருதியதை அவர் குறிப்பறிந்து அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும். பயனில்லாதவற்றை, அறமற்றவற்றை மன்னரிடம் சொல்லுதல் கூடாது. பருவத்தால் சிறியவராக மன்னர் இருந்தாலும் அவரைப் பெரியவராகக் கருதி மன்னரைச் சேர்ந்தொழுகுபவர்கள் வாழ வேண்டும். பழையம் என்று கருதி பண்பற்றவற்றைச் செய்தல் கூடாது. கேடு வராது காப்பதே மன்னரைச் சேர்ந்தொழுகுவார் கடமை என்று இவ்வதிகாரத்தில் உரைக்கிறார் வள்ளுவர்.

கருத்துகள் இல்லை: