காலந்தோறும் தமிழ் மொழியின் எல்லை என்பது அதன் இலக்கிய வளத்தால் பெருகிக் கொண்டே உள்ளது. தமிழ்மொழியின் ஒவ்வொரு காலத்திலும் பல புலவர்களால் இலக்கியங்கள் பற்பல படைத்து வருவதால் அதன் எல்லை வளர்ந்து கொண்டே வந்திருக்கின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கால எல்லையில் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் அரசியல், சமய, உரிமை நெருக்கடிகள் ஆங்கிலேய ஆதிக்கத்தினால் ஏற்பட்டபோதும் அதனையும் தாண்டி தமிழ் வளர்ந்தது என்றால் அதற்குக் காரணம் அக்காலக் கட்டத்தில் வாழ்ந்த தமிழ் வளர்த்த சான்றோர்கள் இயற்றிய நூல்களும், செய்த பணிகளும்தான் காரணங்கள் ஆகும். இவர்களின் தமிழ்ப்பணி காரணமாக தமிழும் வளர்ந்தது. தமிழகத்திற்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளும், சமய நெருக்கடிகளும் மெல்ல மெல்ல விலகித் தமிழ்ச் சமுதாயமும் வளருவதாயிற்று. இதைவிட முக்கிய மாற்றம் வேற்றுச் சமயம் பரப்ப வந்தவர்களும் தமிழின்பால் பற்று கொண்டு அதனை வளர்க்கும் பணியில் ஈடுபட்டதுதான். இவ்வகையில் தமிழின் வளர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குக் குறிக்கத்தக்க இடம் உண்டு. இந்நூற்றாண்டில் தமிழையும், தமிழரின் பழமையான சமயமான சைவத்தையும் காத்த பெரும்புலவர்களுள் ஒருவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் ஆவார்.
தமிழின்மீதும் சைவத்தின் மீதும் ஆறாத பற்றுக் கொண்டவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார்.இவர் தமிழையும் சைவத்தையும் தன் இரு கண்களாகப் போற்றியவர்; வளர்த்தவர், காத்தவர் பண்டிதமணியார். பேச்சுரைகளாலும், எழுத்தோவியங்களாலும் தமிழ் மொழிக்குப் பெருமை தானாக வந்து சேர்ந்தது.
வடமொழி கற்றுணர்ந்தவரான இவர் தமிழுக்கு வடமொழியின் அரிய இலக்கியங்களை மொழிபெயர்த்து அளித்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்ப்பணி செய்ய அண்ணாமலை அரசரால் முயன்று கொணரப்பெற்றவர். அரசரின் நல்லெண்ணத்தை நிறைவேற்றும் வண்ணம் இவர் தமிழ் ஆய்வும், தமிழ்க்கல்வியும் மேன்மைபட அண்ணாமலை நகரில் நாளும் உழைத்தார். இவர் தன் தன்னிகரற்ற தமிழ்த்தொண்டு காரணமாக, முதுபெரும்புலவர், மகாமகோபாத்தியாய, பண்டிதமணி, சைவ சித்தாந்த வித்தகர் போன்ற பட்டங்கள் வழங்கப்பெற்றுப் பெருமைப்படுத்தப்பட்டார்.
ஊன்றுகோல் என்பது இவரின் அடையாளமாகும். இளம் பிள்ளை வாதத்தால் இவரின் இடது காலும், இடது கையும்,இவரின் இளமைப் பருவத்தின்போதே வலிமை குன்றியது. இதன் காரணமாக ஊன்றுகோலின் துணைகொண்டே இவர் நடந்து வந்தார். இவர் வாழ்வின் இயக்கத்திற்கு ஊன்றுகோல் இவருக்கு உதவியதுபோல, தமிழுக்கும் இவர் ஊன்றுகோலாய் விளங்கி அது தத்தளித்த காலத்தில் தாங்கிப் பிடித்தார்.
தமி்ழ்மொழி மேல் இவர் கொண்டிருந்த பற்று அளவிடற்கரியது. தம் நூல்களில் அவர் கொண்டுள்ள தமிழார்வம் பாராட்டத்தக்கது. இளம் வயதில் முயன்று ஆர்வத்தின் காரணமாகத் தானாகத் தமிழ்க் கல்வியை இவர் கற்றுக்கொண்டார்.இவர் கொண்ட தமிழார்வம் இவர் வாழ்நாளின் முதல் பகுதியில் தொடங்கியது போலவே வாழ்வின் நிறைவுவரை மாறாமல் இருந்துள்ளது. தமிழ்க் கல்வி குறித்தும், தமிழ் வளர்ச்சி குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ள கருத்துகள் அவர் கொண்டுள்ள தமிழார்வத்தை விளக்குவனவாக உள்ளன.
தமிழ் மொழியின் உயர்தன்மை குறித்து அவர் பலபட கருத்துரைக்கின்றார். தமிழ்மொழி தொன்மை வாய்ந்தது; ஐவகை இலக்கணம் கொண்டது; அகமாந்தர் கூற்றுகளுக்கு வரையறை வழங்கியது; அதிகமான இலக்கண இலக்கிய நூல்களை உடையது; வட மொழியிலிருந்து வேறானது, தனித்துவமானது என்பன பண்டிதமணியார் தமிழ்மொழியினிடத்தில் கண்ட உயர்வுகளாகும். இவர் கருதிய தமிழின் இவ்வுயர்வுகளைக் காரண காரியத் தொடர்புடன் தக்க சான்றுகளுடன் தம் நூல்களில் இவர் விளக்கியுள்ளார்.
தமிழின் தொன்மை
தமிழ் மொழி, தொன்மை சார்ந்தது என்பதைத் தமிழில் வழங்கும் தொன்மம் ஒன்றினைக் கொண்டுப் பண்டிதமணி நிறுவுகின்றார். ‘‘ஒரு பற்றுக்கோடின்றி அருவுருவாகி நிற்கும் தத்துவங் கடந்த பழம் பொருளாகிய இறைவன், மக்கள் ஆண், பெண்களாக இயைந்து இன்ப நுகர்ச்சியில் தலைப்படும் பொருட்டு அருள்வழி உருக்கொண்டு பொற்கோட்டிமயத்தின் கண் மலைமகளை வேட்ட ஞான்று, அமரர் முதலியோரனைவரும் ஆங்கு ஒருங்குத் தொக்கராகத் தென்பால் உயர்ந்து வடபால் தாழ்ந்தமையின், அது கண்டு அப்பெரியோன், நிலப்பரப்பின் சமனிலை குறித்துக் குறுமுனியை நோக்கிப் பொதியிற்கு ஏகென, அம்முனிவர் பெருமான் முழுமுதற்பிரானை வணங்கி, ‘‘ஐயனே! தெற்கணுள்ளார் தமிழ் மொழி வல்லவரன்றே, அவருவப்ப யான் அம்மொழிப் பயிற்சியிற் பீடுபெறுதல் எங்ஙனம்?’’ என வேண்ட, இறைவன் அதுகாலைக் குடமுனிக்குத் தமிழறிவுறுத்தாரென்பது கந்தபுராணக் கதை. இப்புராண வரலாற்றை நம்புவார்க்குத் தமிழின் தொன்மையைப் பற்றி விரித்துரைத்தல் மிகையே’’ (உரைநடைக்கோவை, பகுதி.2. ப.14) என்று தொன்மத்தைக் காட்டித் தமிழின் தொன்மையை அளவிடுகிறார் பண்டிதமணி. இதன்வழி தமிழ் தொன்மைநலம் சான்றது என்ற கருத்திற்கு அவர் வளம் சேர்க்கிறார்.
தமிழில் ஐவகை இலக்கணம்
தமிழ் ஐவகை இலக்கணம் கொண்ட மொழியாகும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐவகைக்கும் இலக்கணம் வகுத்த மொழி தமிழ் ஆகும். இவற்றுள் பொருள் இலக்கணத்திற்கு வரையப்பெற்ற இலக்கணம் உலக மொழிகளில் எவற்றிற்கும் இல்லாதது என்பது தமிழுக்கே கிடைத்த தனித்த சிறப்பாகும்.
‘‘ஒரு மொழிக்கு இலக்கணம் காணப்புகும் ஆசிரியர் அம்மொழிக்கண் உள்ள எழுத்து,சொல் என்னும் இவற்றையே ஆராய்ந்துத் தூய்மைப்படுத்துவர். இவ்வியல்பு பிறமொழி இயனூலார் யாவர்க்கும் ஒத்ததாகும். நம் செந்தமிழ்த் தெய்வ மொழியின் இயன் முதனூல் ஆசிரியரோ மொழியாளர் எல்லார்க்கும் பொதுவாகிய எழுத்து, சொற்களின் ஆராய்ச்சிகளோடு அமையாது, சொல் கருவியாக உணரப்படும் பொருளாராய்ச்சியிற் பெரிதும் தலைப்பட்டு அப்பொருளைக் கூரறிவாளர் எத்துணைப் பாகுபாடு செய்து உணர விரும்புவரோ அத்துணைப் பகுப்புகளும் அமைய மக்களின் ஒழுகலாற்றையும் பிற இயங்கியல் நிலையியற் பொருள்களின் தன்மைகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.’’ (மேலது ப.12)என்ற இப்பகுதியில் பொருள் இலக்கணத்தை விளக்கும் பண்டிதமணியாரின் வரிகள் கூர்ந்து நோக்கத்தக்கவை. ‘‘சொல் கருவியாக உணரப்படும் பொருள்’’ என்ற அவரின் பொருளிலக்கணத்திற்கான விளக்கம் தமிழுலகம் அறிய வேண்டுவது. பொருளதிகாரம் பாடுபொருளுக்கான இலக்கணம் எனக் குறிப்பதைவிட சொற்களைக் கருவியாகக் கொண்டு படைப்பாளன் உணர்த்த விரும்பும் பொருள் என்று கொள்ளுவது மிகவும் பொருந்துவதாகும்.
பொருள் இலக்கணம் என்பது மக்கள் வாழ்க்கையோடு, மற்ற உயிர்ப்பொருட்களின் வாழ்க்கையும் இயைத்து உரைக்கும் தன்மையது என்பது பொருள் இலக்கணத்தின் மற்றொரு சிறப்பு எனக் கருதுகிறார் பண்டிதமணி.
‘‘மக்கள் ஒழுகலாற்றைத் திறம்பட நுனித்துணர்ந்து பலபட விரித்துரைத்தலோடு மற்றை உயிர்த்தொகுதிகளின் இயற்கைகளையும், நிலையியற் பொருளாய மரம் முதலியவற்றின் இயல்புகளையும்,நிலப்பகுதிகளின் பான்மைகளையும் மற்றை இயற்கைப்பொருள்களின் தன்மைகளையும் ஆராய்ந்துணர்வார்க்குப் புலப்படும்படி கூறியிருக்கும் திட்பநுட்பம், வேறுமொழி இயல் நூலார்க்கு இல்லாததொன்றாம்’’ (மேலது,ப.12) என்ற பண்டிதமணியாரின் கருத்து, பொருள் இலக்கணம் உயிர்த்தொகுதிகள் அனைத்திற்குமான இலக்கணம் என்பதைச் சுட்டுவதாக உள்ளது. பொருள் இலக்கணத்தின் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதாகவும் விளங்குகின்றது.
எழுத்து,சொல், யாப்பு, அணி ஆகியன வடமொழி இலக்கண நூலோர்களால் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. எனினும் இவ்விலக்கணங்களைத் தாண்டித் தமிழுக்கு மட்டுமே உரியது பொருள் இலக்கணம் ஆகும். இப்பொருள் இலக்கணத்தின் வலிமையும், இப்பொருள் இலக்கணம் சார்ந்து எழுந்த இலக்கியங்களின் பொலிவும் தமிழ் மொழிக்கு உலக மொழிகள் அனைத்தையும் வென்று, அவற்றுக்கிடையில் தனித்த இடம்பெறச் செய்கின்றது என்றால் அது மிகையாகாது.
அகமாந்தர் கூற்றுகளுக்கான வரையறை
பொருள் இலக்கணத்தில் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், பாணன், பரத்தை போன்ற பல பாத்திரங்கள் இடம்பெறும். இப்பாத்திரங்கள் எவ்வளவில் தன் பேச்சுரைகளைப் பேசலாம், எவ்வளவில் பேசக் கூடாது என்பதற்கான வரையறைகள் இலக்கண ஆசிரியர்களால் வகுக்கப்பெற்றுள்ளன.
இக்கூற்றுக் கட்டுப்பாடு என்பது மொழியின் நாகரீகத்தையும், பாத்திரங்களின் பேச்சு எல்லைகளையும் வகுத்துக்காட்டுவன. இப்பாங்குத் தமிழ் மொழிக்கு அதன் இலக்கிய இலக்கண வரம்பிற்குப் பெருமை சேர்ப்பது என்று கருதுகிறார் பண்டிதமணியார்.
‘‘அகப்பொருள் இயல்புகளை அறத்தினின்றும் பிறழாதெடுத்து நயம்பட உரைக்கும் அழகு தமிழ்மொழிக்கே சிறந்ததாகும். தலைவன்,தலைவி, பாங்கன், பாங்கி, செவிலி, நற்றாய் முதலியோர் இன்ன, இன்ன இடங்களில் இவ்விவ் வண்ணம் உரையாடக் கடவரென்று வரையறுத்தமுறை பெரிதும் இன்புறற்பாலது.’’ (மேலது, ப.21)என்ற அவரின் கருத்து தமிழ் இலக்கியத்தின் தனித்த பெருமையாகக் கொள்ளத்தக்கது. இவ்வழியில் தமிழின் தனித்தன்மைகளுள் ஒன்றாக கூற்றுமுறை என்பதைப் பண்டிதமணியார் காட்டுகின்றார்.
இலக்கண இலக்கிய நூல்களின் பெருக்கம்
மதிப்பு வாய்ந்த இலக்கண இலக்கியங்கள் பலவற்றைக் கொண்டது தமிழ்மொழி. இத்தகு வளமை கருதியே தற்போது தமிழுக்கு செம்மொழித்தகுதி வழங்கப்பெற்றுள்ளது. பண்டிதமணி தமிழின் வளமைக்குரிய பல இலக்கண இலக்கியங்களைப் பட்டியலிட்டு அதன் செம்மொழித் தன்மைக்கு வழிவகுத்தவர் ஆவார்.
‘‘ஒரு மொழிக்குச் சிறப்பு அதன்கண் அமைந்துள்ள சிறந்த இலக்கியம், இலக்கணம், சமயம் முதலியவை பற்றிய நூற்பரப்புகளானும், பிறிதொன்றன் சார்பு வேண்டாது புலவர் கருதும் எத்தகைய அரும்பொருள்களையும் வழங்குவதற்குரிய சொற்களுடைமையானும், பிறவற்றானுமாம். இன்னோரன்ன சிறப்புக்களில் நம் தமிழ்மொழி யாதுங் குறைவுடையதன்று’’ (மேலது, ப. 14) என்ற பண்டிதமணியாரின் கருத்து தமிழ் மொழியின் இலக்கியச் செழுமையையும், சொற்பெருக்க வளத்தையும் எடுத்துரைப்பதாகும்.
‘‘செந்தமிழ் மொழியாம் நறுநீர்த் தடாகத்திற் பற்பல கிளை நூல்களாம் கொடி, இலை, அரும்பு, மலர் முதலியன கிளைத்தெழுதற்கு முதலாகவுள்ளதும், மொழியின் தன்மையை வரம்பிட்டு உரைக்கும் இயல் முதல் நூலுமாகிய தொல்காப்பியம் என்னும் மூலமும், அதன்கட்டோன்றி எழில் பெற விளங்குவதும், இன்னும் காலக்கூறு எத்துணை கழியினும் உலக நிலையும் மக்கள் ஒழுகலாறும் இன்ன படியாக இருத்தல் வேண்டுமென்று புதிய புதிய எண்ணங்களை மேற்கொண்டு ஆராய்வார்க்கெல்லாம் சிந்தாமணிபோல் நீதிப் பொருள்களை வழங்குவதும் நுண்பொருளாம் நறுமணம் மிக்கதுமாகிய பீடுசால் திருக்குறள் என்னும் தாமரை மலரும், அம்மலர்க்கண்ணே ததும்பி வழிவதும், விலை வரம்பில்லா மாணிக்கம் போன்ற சொன்மணிகளானும் உள்நோக்கி உளம் நெகிழ்ந்து ஆராய்வார்க்கு ‘எனை நான் என்பதறியேன்’’ என்றபடி அவர் தம் நிலையும் மறக்கச்செய்யும் பொருளொளிகளானும், கல்லையும் கரைக்கும் இசை நலத்தானும் சிறந்து திகழ்வதும் படித்தல், கேட்டல் முகமாகத் தன்னை உண்பாரைத் தான் உண்டு அன்புருவாக்கிச் சிவநெறிக்கட் செலுத்திப் பேரின்பப் பெருவாழ்வுறுத்துவதும் ஆகிய திருவாசகம் என்னும் தேனும் கைவரப்பெற்றத் தமிழ்ச்செல்வர்ககு யாதும் குறையின்று’’ (மேலது,ப. 20) என்ற இவரின் வாசகம் தமிழ் நூல்களில் காலத்தால் அழியாத பெருமை பெற்ற நூல்களைத் தொட்டுக் காட்டுவதாகவும் உள்ளது. அதே நேரத்தில் இவர் உள்ளம் நிறைந்த இவரின் விருப்பத்திற்கு உகந்த நூல்களைக் காட்டுவதாகவும் உள்ளது.
இக்கருத்தினை அடிப்படையாக வைத்து, தமிழில் இவருக்கு மிகவும் பிடித்தன தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம் என்பன என்பதை உணரமுடிகின்றது, இத்தலையாய நூல்களால் தமிழ் இலக்கியம் தலைசிறந்து நிற்கின்றது என இவர் கணிக்கின்றார். இந்நூல்கள் தவிர இவர் அளிக்கும் தமிழ் நூல்களின் பட்டியல் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. இவரின் அறிவுத் திறம் அந்நூல்களில் சென்றுள்ளது என்பதை அறிவிப்பதாகவும் உள்ளது.
‘‘கடல்கோள் முதலியவற்றாற் செற்றன போக, எஞ்சிய சங்க நூல்கள் பலவுள்ளன. தமிழின் இயற்கைச் சுவை நலம் ததும்பித் திகழும் பத்துப்பாட்டு, அகம், புறம், கலித்தொகை முதலிய சங்கத்துச் சான்றோர் இலக்கியங்களும், எம்மொழியினும் இத்துணைத திட்ப நுட்பங்களமைய யாத்த ஒரு நூலும் உளதோவென்று ஆராய்வாளர்கள் வியப்புறும் வண்ணம் தமிழ் நிலத்தார் தவப்பயானக எழுந்த திருக்குறளை முதலாகவுடைய நீதிநூல் இலக்கியங்களும், பாடுவோர்க்கும் கேட்போர்க்கும் இறைவன் றிருவடிப்பேற்றை விளைவித்து அன்புமயமாய் நின்று உள்ளுருகச் செய்யும் தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய அருட்பாடல்களும், காப்பியச் சுவைநலம் கனிந்தொழுகும் சிலப்பதிகாரம், சிந்தாமணி முதலியனவும், இறைவன்றிருவருள் நலத்தை அள்ளி உண்டு இன்புற்ற முறையையும், உலகியல் நிலைகளை வரம்பிட்டு அழுகு பெற உரைக்கும் பெற்றியையும் முறையே கொண்டு வெளிப்போந்த சைவ வைணவ இலக்கியங்களான பெரிய புராணம், கம்பராமாயணம் முதலியனவும், சிவாநுவபச் செல்வர்களாகிய மெய்கண்டதேவர் முதலயோர்களால் அளவை நுன்முறையில் வைத்துப் பொருள் வரையறை செய்து அருளிச் செய்யப்பட்ட சிவஞானபோதம், சிவஞான சித்தி, திருமந்திரம் முதலிய சமய நூல்களும் சிவஞான முனிவரர், குமரகுருபர அடிகள் முதலியோர் அருளிய இனிய நூற்றொகைகளும் பிறவும் இதன்கண் உள்ளன… இலக்கண நூல்களுள் எழுத்து முதலிய ஐந்து இயல்களையும் முற்ற உரைப்பனவும், அவற்றுள் ஒன்றிரண்டே நுதலுவனவுமாகிய தொல்காப்பியம், இறையனாரகப் பொருள், நன்னூல் முதலிய பலவுமுள்ளன…இனி நூல்களின் உண்மைக் கருத்துகளைத் தம் மதி நுட்பத்தாற் கண்டு உரைவரைந்த ஆசிரியர்களின் பெருமையை என்னென்பேன்! இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார்முதலிய ஆசிரியர்களின் திறமையைத் தனித்தனி விரிக்கப் புகின் மிக விரியும்….பிற்காலத்தே பொதியில் சாரலில் தென்றமிழ் நாடு செய்த தவப்பயனாகத் தோன்றிய மாதவச் சிவஞான முனிவரின் மாட்சிமை கூறும் தரத்தன்று. அம்முனிவர் பெருமான் வடமொழி, தென்மொழிகளிலுள்ள இலக்கியம், இலக்கணம், அருக்கம், சமயம் முதலிய நூற்பரவைகளைத் தேக்கமுற உண்டு நூலியற்றல், உரை வரைதல், பிறர் புரைபட யாத்த நூலுரைகளின் குற்றம் கண்டு விலக்கல் முதலிய எல்லாக் கல்வித் துறைகளிலும் ஒப்புயர்வின்றி விளங்கிய தமிழ்ப்பெரும் தலைமணி என்பதும் சைவ சமய முதனூற் பேருரையாசிரியர் என்பதும் இத்தமிழுலகம் அறிந்தனவே. அவர்கள் வரம்பிட்டுரைத்த தொல்காப்பியச் சூத்திரவிருத்தி முதலியனவும், சிவஞானபோதச் சிற்றுரை, பேருரை முதலியனவும் தமிழ்ப்புவலர்களாலும் சைவசமய பெருமக்களாலும் தலைமேற் கொண்டு போற்றற் பாலனவாம்’’. (மேலது, 17,18,19 ஆகிய பக்கங்களின் சுருக்கம்)
மேற்காட்டிய கருத்துகள் வாயிலாக தமிழ்மொழி இலக்கண இலக்கியங்களில் சிறந்தனவாகப் பண்டிதமணியாரின் கருதுவனவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது, இப்பெருமை பெற்ற இலக்கியங்கள் தவிர, கிடைத்தன தவிர, கிடைக்காத நிலையில் பெருமளளவில் இலக்கணங்களும், நாடக நூல்களும், இலக்கியங்களும் உள்ளன என்றும் பண்டிதமணியார் கருதுகிறார்.
‘‘இங்குக் கூறிய நூலுரைகளின் பெயர்களும், சுருக்கம் பற்றி இவ்வாறு கூறப்பட்டன. ஈண்டு கூறப்படாத பிற நூலுரைகளைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் உள்ள என் மதிப்பு ஒரு சிறிதுங் குறைந்ததன்று’’ என்ற கருத்தும்
‘‘உருக்கரந்த நூல்களினின்றுஞ் சிதறுண்டு அங்குமிங்குங் காணப்படும் சில செய்யுட்களைப் பார்க்குங்கால், முழுவுருவமும் கிடைக்கப் பெறாமை தமிழரின் தவக்குறையென்றே இரங்க வேண்டிதாயிற்று.’’ ( மேலது,ப.18) என்ற கருத்தும் அவர் உள்ளத்தில் தமிழின் பால்,தமிழின் இலக்கியங்களின் பால் உள்ள சிறப்புகளையும் அவை கிடைக்காமல் போனதால் ஏற்பட்ட ஏக்கங்களையும் எடுத்துரைப்பனவாக உள்ளன.
தமிழில் முற்றும் கிடைத்த நூல்களே சிறப்பு தருகின்றன என்றாலும், கிடைக்காத நூல்களும், சிறிதே கிடைத்த நூல்களும் முற்றும் கிடைக்கப்பெற்றால் தமிழின் பெருமை இன்னும் கூடும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே பண்டிதமணியாரின் மேற்சுட்டிய இரு கருத்துகளாகும். தமிழின் நூற்பெருக்கம் அதன் பெருமைக்குக் காரணம் என்பதை இவற்றின்வழி உணரமுடிகின்றது.
தமிழின் தனித்துவமும், வடமொழியின்று வேறுபடுதலும்
பண்டிதமணியார் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர். எனவே இவர் தமிழின் தனித்தன்மையையும், வடமொழியில் இருந்து தமிழ் வேறுபட்டுத் தனித்து விளங்குவதையும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் குறிக்கின்றார்.
‘‘சுவையுடைமை அவ்வம் மொழிகளில் தனித்த நிலையிற் காணப்படுதல் போற் கலப்பிற் காணப்படுதல் அரிது. ஒரு மொழியிற் சொல்வளம் பயின்று சுவை நிலைகண்டுணர்வார்க்கு அதன் தனிநிலையிற் போலப் பிறமொழிக் கலப்பில் அத்துனை இன்பம் உண்டாகாதென்பது உண்மை அநுபவமுடையார் எல்லார்க்கும் ஒத்ததாகும். இதனால் வடசொற்களை நேர்ந்தவாறு தமிழில் புகுத்தல் முறையன்றென்பது தெளிவாம். ஒரு சில வடசொற்கலப்பு உண்மை பற்றித் தமிழ்மொழியை வட மொழியினின்றும் தோன்றியதென்றல் பொருந்தாததொன்றாகும்’’ (மேலது,ப. 15) என்ற இக்கருத்தால் தமிழின் தனித்தன்மையைப் புலப்படுத்துகின்றார் பண்டிதமணி.
வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேற்றுமைகளையும் பண்டிதமணி தன் இருமொழிப்புலமை அறிவின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்.
1. வடமொழியில் தமிழிற் போலத் திணை பாலுணர்த்தும் வினை விகுதிகள் இல்லை. … பால் வகுப்புத் தமிழிற் பொருளைப் பற்றியும், வடமொழியிற் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண்மகனைப் பற்றி வருஞ் சொற்களெல்லாம் ஆண்பாலாகவும். பெண்மகளைப் பற்றி வருவனவெல்லாம் பெண்பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வரையறை யில்லை. மாறுபட்டு வரும். சொல் நோக்கியதாகலின், மனைவியைப் பற்றிய ‘பாரியை’ என்னுஞ் சொல் பெண்பாலாகவும், ‘தாரம்’ ஆண்பாலாகவும் ‘களத்திரம்’ என்னுஞ் சொல் நபுஞ்சகப் பாலாகவும் வருதல் காண்க.
2. வடமொழியில் ஒருமை, இருமை, பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமையல்லாதனவெல்லாம் பன்மையே
3. திணைப்பாகுபாடு, குறிப்பு வினைமுற்று முதலியன தமிழுக்கே உரியன.
என்ற இவ்வேறுபாடுகளைப் பண்டிதமணியார் மொழிந்து தமிழின் பெருமை வடமொழியினின்று வேறுபட்டமைவது என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றார்.
இவற்றின் காரணமாகத் தமிழை நேசிப்பவராக, தமிழார்வம் மிக்கவராக, தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் சேர்ப்பவராகப் பண்டிதமணியார் விளங்கியுள்ளார் என்பது தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக