சனி, அக்டோபர் 17, 2020

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 2 முனைவர் மு.பழனியப்பன்

 

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 2



தற்காலத் தமிழ்ச்சமுதாயமும் அது எதிர்நோக்கியுள்ள சவால்களும், அதற்கான தீர்வுகளும்

தமிழ்மொழி, தொன்மைச் சிறப்பும், தனித்தன்மையும், இலக்கிய இலக்கண வளமையும் கொண்ட மொழியாக இருந்தாலும் தற்காலத்தில் தமிழைப் புறக்கணிக்கும் தமிழர்கள் பலர் இருப்பதைக் காணமுடிகின்றது. இதன் காரணமாகத் தமிழின் வளர்ச்சி தடைபட்டு வருகின்றது என்பது வருத்தத்திற்கு உரிய செய்தியாகும்.

இப்போக்கு, பண்டிதமணியார் காலத்திலும் இருந்துள்ளது. இந்நி்லையைப் போக்கத் தமிழ் நலிவுறும் வேளைகளில் அதன் வளர்ச்சியைச் செம்மைப்படுத்தும் நற்பணிகளில் தமிழர்கள் ஈடுபடவேண்டும் என்று பண்டிதமணியார் வேண்டுகோளும் எச்சரிக்கையும் வைக்கின்றார். அவ்வரிகள் இன்றைய சமுதாயத்திற்கும் வேண்டுவனவாகும்.

‘‘இ்ம்(தமிழ்) மொழியை முறையாகப் பயில்வாருஞ் சிலரே. பயிற்றுக் கல்லூரிகளும் சிலவே. நம் அரசினர் மொழியாகிய ஆங்கிலத்தால் நெருக்குண்டு இது தன்னுருக் கரந்து அங்குமிங்குஞ் சிறிது உறைவிடம் பெற்று ஒல்கியிருக்கின்றது. போற்றுவாரின்மையால் வேற்றிடம் பெயர்தற்கும் வழியில்லை. ஆர்வமிக்குப் பயில முயல்வாரும் பொருள் வருவாயைக் கருதிப் பின்வாங்குகின்றனர். பொருள் வருவாயைப் பொருட்படுத்தாத தகுதியுடையார்க்கு இதன் கண் விருப்பமுண்டாதல் அரிதாகின்றது. இளைஞர் சிலர் காலத்தின் விரைவிற்கேற்றவாறு ஒரு நூலையேனும் அழுந்தியாராயாமல் நுனிப்புல் மேய்ந்து இக்கால நாகரிகத்திற்கு ஒத்த வண்ணம் எங்கணும் உலாவித் திரியும் பத்திரிக்கைகளில் வெளிப்படும் சில கட்டுரைளைப் பயின்று, அம்மட்டில் தம் கல்வி முற்றியதாக நினைத்துத் தாமும் அம்முறையில் காலம் கழிக்க எண்ணுகின்றனர்.

பண்டைக் காலம் போலக் கற்றுவல்ல பெரும் புலவர்கட்கு முற்றூட்டாக நிலம், பொருள் முதலியன கொடுத்துப் பேணும் புலவலரும் இலர். ஆராவராமின்றி அறிவு விளக்கங் கருதிக் கல்விப் பயின்று அடக்கம் மேற்கொண்டொழுகுவாரைப் பெருமைப் படுத்துவாரும் சுருங்கினர். போலிப்பயிற்சியும், போலியறிவும், அப்போலியறிவுடையாரைப் பாராட்டுதலுமே எங்கணும் மல்கின.’’ (மேலது, ப.23) என்ற பண்டிதமணியாரின் கருத்து இன்றைய தமிழ் மொழியின் நிலைக்கு அப்படியே பொருந்துவதாக உள்ளது. தமிழ் படிப்பாரின் எதிர்காலம், அவர் தம் அறிவுத்திறம் ஆகியவற்றை மதிப்பிட்டு வெளிப்படுத்தும் உண்மை வரிகள் இவை.

தமிழின், தமிழ்ப்படிப்பின், தமிழைக் கற்பவரின் தகுதிகளை மேம்படுத்த வேண்டிய செயல்களையும் பண்டிதமணி உரைத்திருப்பது அவரின் தமிழ் உயர்வு எண்ணத்திற்கு உரைகல்லாக விளங்குகின்றது. தமிழ் வளர மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி, பதிப்பு, உரையெழுதுதல் போன்ற செயல்களில் தமிழ்ப்புலவர்கள் ஈடுபடவேண்டும் என்று கருதுகின்றார் பண்டிதமணி.

மொழி பெயர்ப்பு

சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர் என்று மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க தமிழ் மக்களை வேண்டியவர் பாரதியார். அவர்காலத்திலும் அவரைத் தொடர்ந்து வந்த புலவர்கள் காலத்திலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் தேவை உணரப்பெற்றிருந்தது. பண்டிதமணியாரும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வரவேற்பவர். பாரதியார், பண்டிதமணியார் இருவரும் பிறந்த ஆண்டும் ஒன்றே. இருவரின் நூற்றாண்டு விழாவும் ஒரே நேரத்தில் கொண்டாடப் பெற்றன. பண்டிதமணியார் பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழுக்கு அளித்தவர். அவரின் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை, அதன் வழி தமிழ் வளரும் பெற்றியைப் பின்வரும் கருத்துகள் உணர்த்துகின்றன.

‘‘உலகத்து வழங்கும் பல மொழிகளிலும் உள்ள அரிய பல் கலைகளெல்லாம் தமிழ் மொழியில் வரல் வேண்டும். ஆங்கில மொழியிலும், வடமொழியிலுமிருந்து மொழி பெயர்க்க வேண்டிய நூல்கள் பலவுள்ளன. உயிர்த் தொகுதிகளைப் பற்றியனவும் மற்றை நிலையிற் பொருள்களைப் பற்றியனவாகவுமாகிய நூல்களுள் இரசாயணம் முதலிய செயற்குப் பயன்படும் நூல்களும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

வடமொழியினின்று மொழி பெயர்க்க வேண்டிய மூல நூல்கள் பலவுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் தேசத்தாராற் பிரமாண நூல்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இருக்கு முதலிய வேதங்களும், அவற்றின் முடி பொருளாக விளங்கும் உபநிடதங்களும், தமிழ் நிலத்தார் வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பு நூல்களாகவுள்ள ஆகமங்களும் ஆகிய இன்னோரன்ன மூல நூல்கள் எத்துனை ஆயிரம் ஆண்டுகளாகியும் இன்னுந் தமிழிற் செவ்விய முறையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவரவில்லை. … தெளிவான தமிழ் உரைநடையிற் பல்வகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவை வெளிவரல் வேண்டும்’’ (மேலது, ப. 27) என்பது அவரின் கருத்து – தமிழுக்கு ஆக்கம் தருவதன நல்ல இன்றியமையாத பிற மொழி நூல்களின் மொழிபெயர்ப்புகள் என்பதை அறிவிப்பதாக உள்ளது.

ஆராய்ச்சி

தமிழில் ஆராய்ச்சித் துறை என்பது பண்டிதமணியார் காலத்தில் முறையாகத் துவக்கம் பெற ஆரம்பித்தது. ஆராய்ச்சி பற்றிய அவரின் தெளிவான கருத்துரைகள் தமிழாய்வின் தரத்தை உயர்த்துவனவாக உள்ளன.

‘‘சிறந்த பண்டைத் தமிழ் நூல்களைச் செவ்வனம் ஆராய்ந்து அவற்றிற் பொதிந்து கிடக்கும் நுண்பொருள்களைத் தொகுத்துப் பல ஆராய்ச்சி நூல்கள் வெளிப்படுத்த வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு, மதிநுட்ப நூலோடுடைய புலவர் பெருமக்களின் ஆராய்ச்சி உரைகளால் வெளிப்படும் அத்துணை வேற்று நெறிகளால் ஆகாது.’’ (மேலது, ப. 27) என்ற கருத்து ஆராய்ச்சியின் தேவையை வெளிப்படுத்துவதாக உள்ளது.தமிழ் மொழியில் ஆராய்ச்சியை வரவேற்றவர் பண்டிதமணி; தானும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் என்பதும் கருதத்தக்கது.

பதிப்புப் பணி

பதிப்புப் பணி என்பது ஆய்விற்கு உதவும் மற்றொரு துறையாகும். இத்துறையின் தேவையும் பண்டிதமணியார் காலத்தில் உணரப்பெற்றிருந்தது. அது குறித்தும் அவர் கருத்துரைத்துள்ளார்.

‘‘நம் பண்டையோர் போலத் திருந்திய முறையில் செய்யுள் நூல்கள் பலவற்றை அவ்வாற்றலுடையோர் வெளியிடல் வேண்டும்’’ (மேலது, ப.27) என்ற இக்கருத்தில் செய்யுள் நூல்களின்மீதும், அந்நூல்களைப் பதிப்பிப்பது மூலமும் தமிழுக்குத் தொண்டாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார் பண்டிதமணி.

தக்க புலவர்களால் செய்யப்பெற்ற செய்யுள் நூல்கள் சிறந்தவை என்பது பண்டிதமணியாரின் கருத்தாகும். அதற்கு உரிய காரணங்கள் இரண்டு என்கிறார் அவர்.

1. ஒரு செய்தியைப் புலமுடையார் உள்ளங் கொள்ளுங்கால் அது செய்யுண் முகமாகக் கேட்கப்படுதல் போல் வழக்குச் சொல் முகமாகக் கேட்கப்படுதல் இன்பம் பயவாது. நீண்ட நாள் மறவாமல் உளங்கோடற்கும் இயலாது.

2. கூறப்படும் பொருள் சிறந்ததாக இருப்பினுங் கூறுவோன் புலவன் அல்லனேல் அது பிறர் நெஞ்சில் தங்கி இன்புறுத்தலாற்றாது. (மேலது, ப.28)

இக்கருத்துக்களால் செய்யுள் பகுதிகள்மக்கள் மனதில் எளிதில் நினைவையும், உள்ளப் பதிவையும் பெறும் வல்லமை பெற்றன என்றும் தக்க புலவர்களால் தக்க சொற்களைக் கொண்டு செய்யுள்கள் புனையப்படுவதால் அவற்றின் தகுதி மேம்பட்டது என்பதும் தெரியவருகின்றது.
காலந்தோறும் நல்ல செய்யுள் நூல்கள் பதிப்பிக்கப்பெறவேண்டும் என்பதையே இக்கருத்துகள் வாயிலாகப் பண்டிதமணி அறிவிக்கின்றார். இப்பணியும் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பணியாகும்.

உரையெழுதுதல்

உரையெழுதுவதும் தமிழாய்வின் மற்றொரு திறமாகும். இதனையும் தமிழ் நூல்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் பண்டிதமணியார்.

‘‘பழைய சிறந்த நூல்களுள் உரையெழுதப்படாதவைகட்கெல்லாம் உரை வரைதலையும் மேற்கொள்ளல் வேண்டும். நூலாசிரியரின் அரிய கருத்துகளையெல்லாம் உரையாளர் உதவியாலே உலகம் உணர்ந்து இன்புறுகின்றது. பேருபகாரிகளாகிய உரையாசிரியர்களின் உதவி இல்லையாயின் பண்டை உயர் நூல்களாம் கருவூலங்களில் தொகுத்துவைத்த விலைவரம்பில்லாப் பொருண்மணிக் குவியல்களை யாம் எங்ஙனம் பெறுதல் கூடும்?’’ என்ற பண்டிதமணியாரின் கருத்து உரைநூல்களின் மேன்மையினையும் உரையாசிரியர்களின் ஒப்பற்ற பணியையும் எடுத்துரைப்பனவாகஉள்ளன..

இவ்வகையில் இந்நான்கையும், தமிழ்த்தொண்டாகக் காட்டும் பண்டிதமணியார் இந்நான்கு இன்றியமையாப் பணிகளையும் தன் காலத்தில் அவரே செய்து நிறைந்தார் என்பதும் கருதத்தக்கது.

இவ்வரிய செயல்களுடன் தமிழ் மொழி வளர்க்கும் நிறுவனங்களைத் தோற்றுவிப்பது என்பதும் தமிழ் வளரத் தேவையான முக்கியமான ஒன்று என்பதைப் பண்டிதமணியார் தெளிவுபட எடுத்துரைக்கின்றார். மேற்காட்டிய சவால்களுக்கு இது ஒன்றே தீர்வு என்பது அவரின் நிலைத்த கருத்து.

‘‘இற்றைநாள் வழங்கும் நிலம் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு சிறந்த கல்லூரி தமிழ் நாட்டின் நடுவண் நீர் நில வளங்கள் நிறைந்த அகன்ற இடத்தில், ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருங்கிருந்து, கல்வியை உயர்ந்த நோக்கங்களோடு பயிற்றவும் பயிலவுந் தக்க முறையில் நிலைபெறவேண்டும். இம்மை நலம் பெறுவதற்குரிய மருத்துவம், தொழிற்கல்வி முதலிய பயிற்சிகளும் உடன் நிகழ்தல் இன்றியமையாததாகும். அக்கல்லூரியின் உறுப்புகளாகப் பல நிலையங்களமைத்து அவற்றால் தமிழுக்கு வேண்டற்பாலனவாகிய பிறமொழி நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டும், புதிய உண்மை ஆராய்ச்சிகள் செய்யப்பட்டும். பல நூலுரைகள் வெளிவரல் வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இதுகாறும் நிறுவப்பட்டனவும், இனி நிறுவப் பெறுவனவுமாகிய பல கல்வி நிலையங்களெல்லாம் அத்மிழ்ப் பெருங்கல்லூரிக்குக் கிளைகளாக அமைதல் வேண்டும்’’ (மேலது, ப.55) என்ற பண்டிதமணியாரின் கனவு என்றைக்கு நிறைவேறப்போகிறதோ என்ற ஏக்கம் இதனைப் படிப்பவர் அனைவரது நெஞ்சிலும் இடம்பெற்றுவிடும்.

தற்காலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் கூட பண்டிதமணியார் சொல்லும் பேரெல்லையில் சிற்சில பகுதிகளையே நிறைவேற்றும் நிலையில் மட்டுமே பணியாற்றியுள்ளன. இவ்வுண்மையைத் திறந்த மனதுடன் கல்வியாளர்கள் ஒத்துக்கொள்ள வேண்டியதுதுான். இந்நிலையில் பண்டி்தமணி கண்ட கனவு விரைவில் நிறைவேற அவரின் சிந்தனைகள் பலபட பரவ வேண்டும். அவ்வாறு பரவினால், அவை ஒரு நாள் செயல்வடிவம் பெற்றுவிடும் என்று நம்பிக்கை கொள்வோம்.

இதற்கெல்லாம் மேலாக தாய்மொழி வழிக் கல்வியைப் பண்டிதமணி வரவேற்கின்றார். அதுவே தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆக்கம் தரும் என்கின்றார்.

‘‘விழுப்பஞ் சார்ந்த கல்வியை, எந்நிலத்தில், எம்மொழி வழங்கப்படுகின்றதோ, அந்நிலத்தில் வாழும் மக்கள் அம்மொழி மூலமாகவே முதற்கட் பயிலவேண்டும். அதுவே அந்நிலத்து மக்கட்குத் தாய்மொழியாகும். ஒரு குழந்தை பிறந்து மொழி பயிலுங்கால் அதன் தாயால் முதற்கண் பயிற்றப்படும் மொழி யாது? அதுவே தாய்மொழி என்று கோடல் பொருந்தும். அன்னை வாயிலாக் கேட்டு மழலை மொழிந்து, தேறிய பின்னரே அக்குழந்தை அப்பனாலும், ஆசிரியனாலும், வரிவடிவிற் பயிற்றப்பட்டு, அறிவு விரிவெய்தப்பெறும்.. அன்னையார் அருளொடு சுரக்கும் இனிய பாலை உண்ணுங் குழவிப் பருவத்தில் அவராற் பயிற்றப்பட்டுப் பயிலும் சிறப்புப் பற்றியன்றே இ்ம்மொழி பால்வாய்ப் பசுந்தமிழ் என்று பாராட்டப்பெறுகின்றது. மழவிளம் பருவத்திற் பயிற்றப்படுதல் குறித்தே இதனைப் பசுந்தமிழ் என்றார் போலும். இயற்கையும் அன்னதே. இதனால் நம் உடல் பாலுண்டு, வளரும் பருவந்தொட்டே உடற்கண் உறையும் உயிர் தன் குணமாகிய அறிவைச் செந்தமிழ்த் தெய்வமொழிப் பயிற்சி வாயிலாக வளர்த்துத் திகழும் உண்மை நமக்குப் புலனாகின்றது’’ (மேலது.ப.11) என்று தாய்மொழிவழிக் கல்வியைச் சிறப்பிக்கின்றார் பண்டிதமணி. ஆனால் அதனை விடுத்துத் தற்காலத் தமிழகம் நெடுந்தூரம்வந்துவிட்டது.

தற்காலத் தமிழ்ச் சமுதாயம் தாய்மொழிக் கல்வியில் இருந்து மாறிவிட்டாலும், தாய்மொழித் தமிழையாவது மறந்துவிடாமல் பேசியாவது காக்குமா என்ற ஐயம் ஏற்படும் இவ்வேளையில் தமிழ் மொழியைக் காக்கப் பண்டிதமணியாரின் பின்வரும் பொன் வரிகள் உதவுகின்றன.

‘‘ஒரு நாடு தனக்குரிய மொழிமைய ஆக்கமுற ஓம்பிப் பாதுகாத்தலன்றித் தான் சிறந்த நிலை எய்துதல் அரிதாம். மொழி வளர்ச்சி கொண்டே அது வழங்கும் நாட்டின் நலத்தை உணரலாம். எந்த நாடு தன் மொழிச்சுவையை உணர்தலிற் பின்னடைகின்றதோ, அது மற்றை எல்லா வளங்களானும் பிற்படடதாகும். ஆதலின் தமிழ்ச்செல்வர்களும் தமிழ்ப் புலவர்களும் விழிப்புடையராய் நின்று நம் உடைமையை விளக்கமுறப் பேணல்வேண்டும்’’(மேலது,ப.55) என்ற தமிழ் மொழியைத் , தாய் மொழியைக் காக்கும் அரண் மிக்க வரிகள் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும் பொது இடங்களிலும் எழுதி வைக்கப்படவேண்டிய உணர்ச்சி மிக்க வரிகளாகும்.

இவ்வகையில் தமிழ் தன்னிலை தாழாமல் விளக்கமுற ஆக்கமான நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் செய்தளித்த பெரும் புலவர் பண்டிதமணியார் ஆவார். அவரின் தமிழார்வம் சுயம்புவானது. அவரே அவருக்குள் ஏற்படுத்திக்கொண்டது. அவரின் உள் எழுந்த தமிழ்க்கனல் அவர் வாழ்ந்தவரை அவருள் எழுச்சியையும் தமிழுக்கு ஏற்றத்தையும் அளித்தன என்றால் அது மிகையாகாது. இத்தகைய சான்றோர்களின் தமிழ்வாழ்வைத் திரும்பத் திரும்பத் திருத்தமுடன் வெளிப்படுத்துவதன் வாயிலாக, தமிழ்ச்சமுதாயம் அறியச் செய்வதன் வாயிலாக தமிழ்மொழிக்கும், தமிழ்ச்சமுதாயத்திற்கும் புதிய மறுமலர்ச்சி தோன்றும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: