புதன், மே 13, 2020

காந்தியடிகளின் கல்விக் கோட்பாடு


siragu agimsai1
காந்தியடிகள் கல்வி பற்றியும் தீவிரக் கருத்துடையவராக இருந்துள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். பயிற்றுமொழி பற்றிய அவரின் கருத்துகள் வரவேற்கத்தக்கன.
அந்நிய மொழி வழிக் கல்வி மூளைக் களைப்பை விளைவித்துள்ளது. அதன் சுமை நமது குழந்தைகளின் நரம்புணர்வுகளை அளவுக்கு மீறிப் பாதிக்கிறது. சிறார்கள் பாடங்களை உருபோட்டுத் திணித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவர்களைப் போலித்தனத்திற்கு உட்படுத்துகிறது. சுயமாகச் சிந்திக்கவோ செயல்படவோ அவர்கள் தகுதியற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். இவற்றின் மொத்த விளைவாக அவர்களால் த்hம் பெறும் அறிவைத் தமது குடும்பத்திற்கோ மக்களுக்கோ வடித்து வழங்க இயலாதவர்களாகி விட்டனர். அந்நிய மொழி வழிக் கல்வி என்பது குழந்தைகளைத் தமது சொந்த நாட்டிலேயே நடைமுறையில் அந்நியர்களாக்கி விட்டது என்று காந்தியடிகள் பயிற்று மொழி பற்றிக் கருத்துரைத்துள்ளார். தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருக்குமானால் புதிய மாற்றுக்கல்வி முறையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவருவேன் என்று காந்தியடிகள் பேசியுள்ளார்.
மாணவர்கள் பற்றிய அவரின் கருத்தும் குறிக்கத்தக்கது. நன்னடத்தை என்பதைச் சுண்ணாம்பையும் கல்லையும் வைத்துக் கட்டமுடியாது. உங்கள் சொந்த முயற்சியினாலேயே அதனை மேற்கொள்ளமுடியுமே தவிரப் பிறர் உதவியால் அல்ல. கல்லூரி முதல்வரோ, பேராசிரியரோ புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து நன்னடத்தையை உங்களுக்கு வழங்கமுடியாது. ஆசிரியர்களின் வாழ்க்கை புத்தகமே குணநலன்களைப் புகட்டும் வகையில் அமையப் பெற வேண்டும். பார்க்கப் போனால், குணப்பண்புகள் உங்கள் உள்ளங்களிலிருந்து ஊற்றெடுக்க வேண்டும்.
உங்களுடைய அறிவுத்திறன், படிப்பு, புலமை யாவற்றையும் தராசின் ஒரு தட்டில் வையுங்கள். மற்றொரு தட்டில் உண்மையையும் மனத்தூய்மையையும் வைத்துப் பாரத்தால் பிந்தைய தட்டுதான் முந்தையதை விட நிறை கூடுதலாக இருக்கும். ஒழுக்கக் கேடு எனும் விஷவாயு பள்ளி செல்லும் நமது சிறார்களிடம் பரவிவிட்டது. மறைமுகமான தொற்று நோய் போன்று அது அவர்களைச் சூறையாடி வருகிறது. இவ்வாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் காந்தியடிகள் அவர்களுக்குச் சில கட்டளைகளை வகுத்துள்ளார்.
1.    மாணவர்கள் கல்வி கற்றவர்கள். ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்.
2.    அரசியல் சார்ந்த வேலை நிறுத்தங்களில் அவர்கள் கலந்து: கொள்ளக் கூடாது. அவர்களுக்கு அரசியல் தலைவர்கள்மீது ஈடுபாடு இருக்கலாம். அந்த ஈடுபாடு அந்தத் தலைவரின் நல்ல பண்புகளைப் பின்பற்றுதலாக இருக்கவேண்டும்.
3.    கைத்nதாழில்களை அவர்கள் கற்கவேண்டும். நூற்பு முறையிலும் அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.
4.    வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அவர்கள் உள் நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களாக அவற்றை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். எப்போதும் கதர் அணியவேண்டும்.
5.    தேசியச் சின்னங்களுக்கு மதிப்பளித்து அவற்றை முறைப்படி அணிந்து கொள்ள வேண்டும்.
6.    தீண்டாமை, வகுப்புவாதம் போன்றவற்றிற்குக் கொஞ்சமேனும் இடம்nகாடுத்துவிடக் கூடாது. பிற சமயத்தாருடன் உறவினர்களாகப் பழக வேண்டும்.
7.    மருத்துவ உதவி செய்யவேண்டும். தன் கிராமச் சுகாதாரம் பேண வேண்டும். மற்ற கிராமங்களுக்குச் சுகாதாரம் பேணும் தன்மையிலும்செயல்பட வேண்டும்.
8.    தேசிய மொழியைக் கற்கவேண்டும்.
9.    தாம் கற்றுக்கொண்டவற்றைத் தாய்மொழியில் ஆக்கி மக்களுக்குப் பரப்ப வேண்டும்.
10.    ரகசியமாக எதையும் செய்ய வேண்டாம். அக ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். அகிம்சை கைக்கொண்டு கலவரங்களை ஒடுக்க வேண்டும்.
11.    சக மாணவிகளிடம் இழை பிழையாத நேர்மையுடன் பழக வேண்டும்.
இவை போன்ற கட்டளைகளைக் காந்தி மாணவர்களுக்கு வழங்குகிறார். மாணவர்களைச் சமுதாயத்தின் நலம் காப்பவர்களாக அவர் கருதுகிறார். மேலும் மாணவர்கள் தங்கள் விடுமுறைக்காலங்களைப் பொழுது போக்காமல்
1.    அறியாமை அகற்றப் பகல் பள்ளிகள் நடத்தலாம்.
2.    கிராமத் தூய்மை மேற்கொள்ளலாம்
3.    மக்களுக்குப் புவியியல், வரலாறு, சமுதாயவியல் பற்றிப் பாடம் நடத்தலாம்.
4.    ஆன்மிக ஈடுபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
5.    எளிய பிரார்த்தனை, பக்திப் பாடல்கள் போன்றவற்றில் ஈடுபடலாம்.
6.    புள்ளிவிபரங்கள் சேகரித்து நாட்டிற்கு உதவலாம்.
7.    மருத்துவச் சேவை, தூய்மைச் சேவை ஆற்றலாம்
இவ்வாறு மாணவர்கள் சமுதாய நலனில் அக்கறை கொள்ளக் காந்தியடிகள் வேண்டுகிறார். இன்றைய மாணவர்கள் தகுதி மிக்கவர்கள். சக்தி மிக்கவர்கள். காந்தியடிகள் சொன்ன வழியில் நடந்தால் இந்தியாவை உலகம் போற்றும்.

கருத்துகள் இல்லை: