நல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ்மக்கள்
பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன்
சொல்லால் அமுதை வெற்றிடுவோன் சோம லக்கு மணன்வாழ்க’’
என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘‘சோம.லெ’’ எனப்படும் சோம.லட்சுமணன் அவர்களைப் பாராட்டுகிறார். இப்பாடலில் பயண இலக்கிய முன்னோடியாக விளங்கியவர் சோம. லெ. என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ‘‘பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என் நண்பன்” என்று கவிமணி தன் நண்பனாக செந்தமிழ் வளர்ப்பவராக சோம .லெ அவர்களைக் காணுகிறார். சோம.லெ அவர்களுக்கும் செந்தமிழுக்கும் நீங்காத தொடர்பு உண்டு. அவர் எழுதிய செட்டிநாடும் செந்தமிழும் என்ற நூல் நகரத்தார்தம் தமிழ்ப்பணிகளை இனிய தமிழில் கணியன் பூங்குன்றனார் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரையான கால எல்லையில் விவரிப்பதாக உள்ளது. இதே நூலின் தடத்தில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்னான காலத்தை எழுதுவதற்கான களம் விரிந்து கிடக்கிறது.
தனி ஒரு மனிதராக உண்மையைத் தேடி, தகவல்களைச் சேகரித்து, அரிய பயண கட்டுரைகளை, இதழியல் செய்திகளை, அறிஞர் நிகழ்வுகளை எழுதியவர் சோம. லெ. இவர் நூல்கள் எழுதுவதற்கு முன்பாகக் களத்திற்கே சென்று ஆய்வு மேற்கொள்ளுபவர். மேலும் தகவல்களைச் சிறு சிறு பைகளாகத் தொகுத்துச் சேமிப்பவர். அந்த அந்தப் பைகளை எடுத்தால் அவற்றில் இருந்து துறைதோறும் புத்தகங்கள் விரியும் என்ற அளவில் வகுத்தும் தொகுத்தும் எழுதும் மாண்பினர்.
நெற்குப்பையில் வாழ்ந்த பெரி. சோமசுந்தரம் செட்டியார், நாச்சம்மை ஆச்சியின் மகனாகப் பிறந்த இவர் தன்னூரான நெற்குப்பையில் நூலகக் கட்டிடத்தில் சிலையாகக் கொலுவிருக்கிறார். இவரின் மகன் சோமசுந்தரம் தன் தந்தையார் பெயரில் ஒரு நூலகத்தை அமைத்து அதில் அரசு கிளை நூலகம் இயங்க வாய்ப்பளித்துள்ளார். நெற்குப்பையின் நல்லூரணிக் கரையினில் அது ஊருணி நீர் நிறைந்த தர்மமாக விளங்கி வருகிறது.
சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளதாரப் பட்டப்படிப்பினைப் படித்த இவர், இதழியல் படிப்பினை மும்பை ஹாரிமன் கல்லூரியில் பயின்றார். சிறிது காலம் வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் அதன் பிறகு வணிகம் செய்ய பர்மா சென்றார். அப்போதுதான் உலகம் சுற்றும் ஆசை இவருக்கு ஏற்பட்டது. இங்கிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா, ஹவாய், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயண அனுபவங்களைக் கொண்டு பல பயண அனுபவ நூல்களை அவர் வரைந்தார்.
இவர் எழுதிய நூல்கள் மொத்தம் எண்பத்தைந்து ஆகும். இவற்றில் நாற்பத்தியிரண்டு நூல்கள் பயண இலக்கியம் சார்ந்தவை. உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே. செட்டியாரின் எழுத்தில் ஈர்க்கப்பெற்ற இவர் அவரின் வழியில் பல பயண நூல்களை வரைந்தார். ஏ.கே.செட்டியாரின் ‘அமெரிக்க நாட்டில்” என்ற நூலே இவரைப் பயணங்கள் செய்ய, பயண நூல்கள் எழுத ஆற்றுப்படுத்தியது.
அமெரிக்காவைப் பார், ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம், உலக நாடுகள் வரிசை என்ற தொடராக பத்து நூல்கள் (கனடா, சுவீடன், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளைப் பற்றிய பயண நூல்கள்), ஆப்பிரிக்க நாடுகள் வரிசை என்ற தொடராகப் பன்னிரு நூல்கள் (ஐக்கிய அரபுக் குடியரசு, ஆப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகள் பற்றிய பயண இலக்கியம்), உலக நாடுகள், பர்மா, இமயம் முதல் குமரி வரை, என் பிரயாண நினைவுகள், நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் போன்ற பல பயண நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
இவரின் பயண நூல்களில் எழுதப்படும் நாட்டின் தொழில்வளர்ச்சி, வணிக நிலை, கல்வி மேம்பாடு, வேளாண் நுட்பங்கள், உணவு – பழக்க வழக்கம், பண்பாடு, இதழியல் துறை, வங்கித்துறை போன்ற பல வகை சார்ந்த செய்திகள் குறிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இவர் நாடுகளை வெறும் நாடுகாண் காதையாகக் காணாமல் நாட்டின் உள்ளும் புறமுமாக கண்டுள்ளார் என்பது தெரியவருகிறது.
தமிழகத்தின் பத்து மாவட்டங்கள் பற்றி இவர் எழுதிய நூல்கள் மாவட்ட ஆவணங்களாக விளங்குகின்றன. ‘நமது தலைநகரம்’ என்ற நூலும் தலைநகர் பற்றி பல தகவல்களை வழங்குகிறது.
இவரின் தொகுப்பாக வெளிவந்துள்ள கும்பாபிடேக மலர்கள் கருத்துப்பெட்டகங்கள் என்றே சொல்லத்தக்கன. அந்த அளவில் நிறைய செய்திகைளக் கொண்டு இவரால் பல மலர்கள் தொகுக்கப்பெற்றன. சோம.லெ தொகுத்த மலர் என்பது கணம் குறையாதது. மணம் மாறாதது. வரலாற்றைப் பதிந்து தரும் ஆவணம் என்றால் மிகையாகாது. திருவண்ணாமலை, இராமேசுவரம் போன்ற ஆலயக் குடநீராட்டுகளின் போது இவரே தொகுப்பாசிரியராக விளங்கி அம்மலர்களைச் சிறப்புட தயாரித்தளித்தார்.
பண்டிதமணி பற்றிய இவரின் வாழ்க்கை வரலாற்று நூல் குறிக்கத்தக்க ஒன்றாகும். தமிழக முதல்வராக விளங்கிய ஓ.பி. இராமசாமி செட்டியார் பற்றிய இவரின் வாழ்க்கை வரலாற்று நூலும் எண்ணத்தக்கது.
இவரின் ‘வளரும் தமிழ்’, ‘செட்டிநாடும் செந்தமிழும்’ ஆகிய நூல்கள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவுபவை. இதனடிப்படையில் பல்வேறு ஆராய்ச்சிக் களங்களை உருவாக்கிக் கொள்ள இயலும். நகரத்தாரியல் ஆய்விற்குத் தக்க ஆவணம் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற நூல்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் பற்றி முதன் முதலில் நூல் எழுதி வெளியிட்ட பெருமை இவரையே சாரும். மொழியியல் பற்றிய இவரின் நூலும் அத்துறையின் முன்னோடி நூலாக விளங்குகிறது.
இவர் இந்திய அரசின் மத்திய நிறுவனமான சாகித்திய அகாதமிக்காக 1901 முதல் 1952 வரையான கால எல்லையில் வெளிவந்த தமிழ் நூல்களின் தொகுப்பினைத் தொகுத்தளித்துள்ளார். இது குறிக்கத்தக்க தேடல் ஆகும். தேசிய புத்தக நிறுவனம், வரலாற்று ஆய்வு இந்தியக் கழகம் போன்ற நிறுவனங்கள் இவரின் பங்களிப்பால் சிறந்தன.
இவரின் கடித இலக்கியம் குறிக்கத்தக்க ஒன்று. இவர் தன் மகன் சோமசுந்தரத்திற்கு எழுதிய கடிதங்கள் குறிக்கத்தக்கன. அவரின் கடித இலக்கியத்திற்கு ஒரு சான்று. ‘‘உனக்கென்று ஒரு நற்பெயரை மற்றவர்களிடம் உருவாக்கிக் கொள்வது கடினம். உருவாக்கிய பிறகு அதைப் பாதுகாப்பது இன்னும் கடினம். கடின உழைப்பு, நேர்மை, அறிவுடைமை மூலம் வாழ்வில் உயர்வதுதான் முக்கியம்.’’ (வெற்றியுர் சுந்தரம், நகரத்தார் பெருமை) என்ற கடிதக் குறிப்பு அனைவருக்கும் வாழ்க்கை இலக்கணத்தைக் கற்றுத்தருகிறது.
சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் போன்றவற்றின் ஆட்சிக்குழுவில் இவர் அங்கம் வகித்தார். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலராகவும் இவர் பணியாற்றியுள்ளார். செட்டிநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் கருத்தரங்கப் பொறுப்பாளராகவும் இவர் செயல்பட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆய்வாளராகவும் இவர் விளங்கினார். தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
இவர் தன் காலத்தில் தன் முன்னோர்கள் வாழ்ந்த தொன்மை இடமான மேலூர்க்கு அருகில் உள்ள கீழ வளவு என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள கொடுக்கம்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் சோமசுந்தர விநாயகருக்கு ஒரு கோவிலை அமைத்தார். இது இவரின் பக்திச்சிறப்பையும் முன்னோர் வழி போற்றலையும் காட்டுவதாக உள்ளது.
இவர் தன் காலத்தில் தன் முன்னோர்கள் வாழ்ந்த தொன்மை இடமான மேலூர்க்கு அருகில் உள்ள கீழ வளவு என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள கொடுக்கம்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் சோமசுந்தர விநாயகருக்கு ஒரு கோவிலை அமைத்தார். இது இவரின் பக்திச்சிறப்பையும் முன்னோர் வழி போற்றலையும் காட்டுவதாக உள்ளது.
இவ்வாறு பற்பல பணிகளை ஆற்றிய இவருக்கு நான்கு பெண்மக்கள், ஒரு மகன். இனிய இல்லறம் பேணிய இவர் சென்னையில் தன் இறுதிக் காலத்தைக் கழித்தார். அமெரிக்காவில் இருக்கும் தன் மகனுக்குக் கடிதம் ஒன்றை எழுதி அதனை அஞ்சலகத்தில் சேர்த்துவிட்டுச் சேர்ந்தவர் இவரின் எழுத்துப்பணிகள் என்றும் நிலைத்துநிற்க அமரரானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக