சனி, ஜனவரி 28, 2017

தனித்தமிழும் இனித்தமிழும்



newsletter-nov-26-3
தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ஒலித்தூய்மை கொண்டுத் தமிழைக் கண்ணெனக் காப்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
தற்காலத்தின் பேச்சு வழக்கு அதிகமாக அயல் மொழி கலப்புடையதாக உள்ளது. பேச்சு மொழி சார்ந்து எழுதப்படும் படைப்பியலக்கியங்களிலும் அயல்மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும் வேறு வேறு என்ற நிலையை எய்திவிட்டால் பேச்சுத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எழுத்துத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எனவே பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் ஒன்றைஒன்று அதிக அளவில் சார்ந்தே இயங்கவேண்டும். செய்யுள் நடை, வழக்கு நடை ஆகிய இரண்டு நடைகள் தொன்று தொட்டே வந்துகொண்டுள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டும் இருந்துள்ளன. செய்யுள் நடையில் திசைச் சொற்கள் குறைவு. வழக்கு நடையில் திசைச் சொற்கள் கலப்பது ஏற்கத்தக்கது. கொடுந்தமிழைத் தாண்டி, வழக்குத் தமிழைத்தாண்டி செய்யுள் நடை இன்னமும் நிலைத்து நிற்கிறது. அன்றைக்கு எழுதிய சிலப்பதிகாரம் இன்றைக்கும் புரிகிறது என்றால் எழுத்துநடைத் தமிழ் உயரிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது என்றே பொருள்.
Siragu-ellaam-kodukkum-tamil1
இந்நிலையில் தமிழின் தூய்மையைக் காத்தல் வேண்டும் என்றால் பேச்சுத்தமிழில் அயல்மொழி வழக்குகளைக் குறைக்கவேண்டும். நல்ல தமிழ் பேசப்பட வேண்டும். நல்ல தமிழில் எழுதப்பட வேண்டும் திரையிசைப்பாடல்களில் அளவுக்கதிகமான ஆங்கிலக் கலப்பு, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பேச்சுமொழியில் அளவுக்கு அதிகமான அயல் மொழிக் கலப்பு. தொலைக்காட்சித்தமிழில், வானொலித்தமிழில், திரைத்தமிழில் அயல்மொழிக் கலப்பு அதிகம்.
தமிழில் வார்த்தைகள் குறைவல்ல. தமிழைப் படிப்பவர்கள் குறைவு. தமிழில் படிப்பவர்கள் குறைவு. தமிழைத் தமிழாகக் கற்காதவர்கள் ஒலிபரப்பு நிலையங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு நடத்த தமிழ் தன்னை வதைத்துக்கொள்கிறது. தமிங்கிலிஷ் வளருகிறது, தமிழ் தேய்கிறது. எனவே மக்கள் தளத்தில் இயங்குபவர்கள், ஊடகங்களில் இயங்குபவர்கள் நிச்சயமாக தமிழ் படிக்க ஓராண்டு நல்ல தமிழ் கற்பிக்கும் சான்றிதழ்க் கல்வியை அரசு உடனே துவங்கவேண்டும். அதனைப் படித்த பின்பே ஊடகத்துறையில் நுழைய இயலும் என்று சட்டம் வகுக்கப்பட வேண்டும்.
vigneshwaran urai2
தமிழ்வழிக் கல்வி – இது ஏற்க முடியாத கல்வி முறையாக இன்றைக்கு ஆகிவிட்டது. தமிழாசிரியர்கள் ஆங்கிலத்தில் ஒரு பாடம் எடுக்க வேண்டும் என்ற கட்டளை பல்வேறு உலகப் பல்கலைக்கழகங்களில் இன்றைய தேவையாக இருக்கிறது. அவ்வாய்ப்புகளுக்குச் சிலர் செல்லட்டும். பலரும் தமிழை நல்ல தமிழாகப் படிக்கட்டும்.
தமிழ் படிக்க வரும் மாணவர்கள் எந்த பட்டப்படிப்பிலும் இடம் கிடைக்காதவர்களாக தமிழுக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நல்ல பட்டப்படிப்பில் சேருவோர்கள் தமிழை விரும்பா நிலை இருக்கிறது. இந்த நிலை மாற தமிழ் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழ் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ் படித்தவர்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
தமிழ் தாய்மொழி. அது இல்லாமல் தமிழர் இல்லை. ஆனால் அதனை மறந்து வீட்டிலும் தமிழ் பேசுவதைக் குறைத்துக் கொண்டுவருகிறது தமிழ்க் குடும்பங்கள். இந்நிலை மாறவேண்டுமானால் மீண்டும் ஒரு புத்தெழுச்சி உருவாக வேண்டும். இங்குள்ள தமிழர் எல்லோரும் நன்னிலை எய்தும் நாள் எந்நாளோ!

கருத்துகள் இல்லை: