பழனி பாத யாத்திரையில் காவடிப் பாடல்களும் அவற்றின் கலைநயமும்
முனைவர் மு. பழனியப்பன்
நகரத்தார்கள் நானூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பழனி நடையாத்திரையை இன்றுவரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். காரைக்குடிக்கு அருகில் உள்ள குன்றக்குடியில் இருந்து பழநி மலைக்கு தை மாதத்தில் ஏறக்குறைய ஆறு நாட்கள் நடைபயணமாக நடந்து சென்று பழனி முருகனைக் காண்பது என்பது இந்த யாத்திரையின் முறை ஆகும். அரண்மனைப் பொங்கல் குழு, கண்டனூர் குழு, நெற்குப்பை குழு ஆகிய மூன்று குழுக்கள் மிக முக்கியமான குழுக்களாக இந்நடையாத்திரையில் விளங்குகின்றன. இக்குழுக்கள் காவடிகள் கட்டிச் செல்வதன் காரணமாக இந்நடையாத்திரையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
நகரத்தார்களின் முன்னோர்கள் உப்பு வணிகம் கருதி பழனிக்குச் செல்லும்போது கிடைத்த வருவாய்ப் பெருக்கம் காரணமாக இந்நடையாத்திரையைத் துவங்கியுள்ளனர். இக்குழுக்களுக்கு முன்னணியில் சாமியடிகளும், வேல் தாங்கியவர்களும் செல்ல அவர்களுக்குப் பின்பாக காவடி அன்பர்கள் செல்கின்றனர். நிறைவாக வரும் காவடி பச்சைக் காவடி என்று பெயர். இக்காவடி ஓர் எடுத்துக்காட்டுக்குச் சொல்ல வேண்டுமானால் தொடர்வண்டிகளில் காணப்படும் நிறைவுப் பெட்டி (கார்டு பெட்டி) போன்றது. இப்பச்சைக் காவடியே காவடிகள் அனைத்தையும் உள்ளடக்கி நிறைவாக வரும் காவடியாகும். இக்காவடி வருகிறதா என்று பார்த்துவிட்டால் அனைத்துக் காவடிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்துவிட்டன என்று பொருள்.
இக்குழுவினர்கள் தவிர ஊர்தோறும் பழனி பாதயாத்திரை அன்பர்கள் ஏறக்குறைய இரண்டு மாத காலமாக கடுமையான விரதம் இருந்து நடத்தும் யாத்திரை இதுவாகும். பாத யாத்திரை செல்பவர்கள் அசைவ உணவு தவிர்க்க வேண்டும். கழுத்தில் மாலை அணியவேண்டும். நாளும் முருனைப் பணியவேண்டும். இறப்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது. கட்டாயமாகப் பாத அணிகள் (செருப்பு) அணியக் கூடாது என்றெல்லாம் இந்நடையாத்திரையின் விரதம் அமைந்திருக்கிறது. இவற்றையும் சேர்த்துக் காவடி செலுத்துபவர்களுக்கு இன்னும் பல விரதங்கள் இருக்கின்றன. காவடியை ஒரு முறை கட்டி பழனி மலைக்கு ஒருவர் செல்ல முயற்சி எடுத்துச் சென்றுவிட்டார் என்றால் அவர் தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகக் காவடி செலுத்த வேண்டும் என்பது மரபாகி விடுகின்றது.
மேலும் காவடி செலுத்துபவர் தன் காவடியில் உள்ள சர்க்கைரையைக் கவனமாகப் பாதுகாத்து பழனி மலையில் உள்ள முருகனுக்கு பஞ்சாமிர்தமாக அதனை அபிடேகத்துக்கு அளிக்கவேண்டும். பழனியிலிருந்து பஞ்சாமிர்தத்தைச் சுமந்து வந்து, வீட்டிற்குக்கொண்டு வரவேண்டும். ஏறக்குறைய ஒரு மாதகால இடைவெளி கொண்ட இந்த நடையாத்திரை கடுமையான பயணமுடையது. ஒன்று கூடி முருகனை வழிபடுவது. நடையாத்திரையின்போது நடையின் சுமை தெரியாமல் இருக்க முருகமந்திரங்கள், பாடல்கள் பாடப்பெறுகின்றன. அப்பாடல்கள் தனக்கென தனித்த நடை உடையன. பாடல்கள் கால்கள் நடக்கும் பாத யாத்திரை இடைவெளிக்குத் தக்கவாறு அமைக்கப்பெற்றுள்ளன. மென்மையான இசை கொண்ட எளிமையான சொற்கள் அடங்கிய பாடல்களாக இவை அமைகின்றன. கண்ணதாசன், சௌந்திரா கைலாசம் போன்ற பிரபல கவிஞர்கள் பாடிய பாடல்களும் இதனுள் இடம்பெறுகின்றன. இவை தவிர, பெயரறியாதவர்கள் தயாரித்த பாடல்களும் இப்பாடல்களில் அடங்கும். பாடலோடு அமையாமல் காவடி சுமப்பவர் அந்தப் பாடலில் பங்கேற்கும் வண்ணம் சிறு சிறு சொற்களை அவர்கள் சொல்லும் நிலையில் பாடல்கள் அமைக்கப்படும். இதன்மூலம் நடப்பவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படுகிறது. பழனியை நெருங்க நெருங்கப் பாடலில் வேகம் கூடும். படிப்பவரின் ஆர்வம் கூடும். இப்படிப்பட்ட பாடல்கள் காவடிப்பாடல்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. இவை பல தாள்களில் எழுதப்பெற்று பதிவாகியுள்ளன. பல இணைய தளங்களில் பதிவாகியுள்ளன. பஜனை.காம் என்ற தளம் இக்காவடிப்பாடல்களின் தொகுப்பு தளமாக விளங்குகிறது. இத்தளத்தில் பாடல்கள் பாடப்பெற்றும், பதியப்பெற்றும் நல்ல தொகுப்பாக உள்ளது. இத்தளத்தின் வழியாகப் பழனிப் பாடல்களை, பாடிய பாடகர்களை, கவிஞர்களை அறிந்து கொள்ளமுடிகின்றது. கு. சே. ராமசாமி, அரு. சோ, சேவுகன் செட்டி, குறள் இலக்குவம், சித. சம்பந்தம், எஸ். எம். அழகப்பன், வாசன்ஸ் காபி எஸ். எம் . அழகப்பன், மா. கண்ணப்பன் அருண் வீரப்பா, அழகு சுந்தரம், அழகு திருநாவிற்கரசு, இராகவன், இளை. சரவணன், கமலா பழனியப்பன், கண்ணதாசன். அர.சிங்காரவடிவேலன், கண்ணதாசன், மீனவர், சொ. சொ. மீ. சுந்தரம், முத்துக்கருப்பாயி சபாரத்தினம், லெ. சுப்பிரமணியன், வள்ளியம்மை, வி. ஆர் பழனியப்பன், விக்னேஷ் முத்தையா, வீ, ஆர். சுப்பையா, லெ. சக்திக்குமார், வெங்கட் கணேசன் போன்றோர் பழனி பாதயாத்திரைப் பாடல்களின் ஆசிரியர்களாக அறியப்பெறுகின்றனர். இவர்கள் தவிர பெயரறியாதாவர்கள் பலர் உண்டு. ஆண்டாண்டு தோறும் பழனி நடையாத்திரை மலர்கள் வெளியிடப்பெறுகின்றன. இவற்றில் பற்பல கவிதைகள், பாடல்கள் இடம்பெறுகின்றன. இதனோடு இப்பாடல்களை மரபு சார்ந்து பாடும் கலைஞர்கள் குறிக்கத்தக்கவர்கள். கால்நடைப் பயணத்தின் போது இக்காவடிப் பாடல்கள் பாடப்படுகின்றன என்றாலும், காவடிகள் புறப்படுமுன் வீடுகளில் நடத்தப்படும் பூசைகளில் இக்காவடிப் பாடல்கள் பாடப்படுகின்றன. இதன் காரணமாக இப்பாடல்கள் கலைவடிவத்தைப் பெறுகின்றன. அரசி. பழனியப்பன், அருண்வீரப்பா, அழகம்மை ஆச்சி, அழகுசுந்தரம், அருளிசைமணி நாகப்பன், வி, ஆர் பழனியப்பன், எஸ்.வி சண்முகம், வள்ளியம்மை, நா. வள்ளியப்பன், லெட்சுமணன் சக்திக்குமார், ஆர்காட் லெட்சுமணன், லெ. சுப்பிரமணியன், ராம்தேவ், மீனாட்சி ஆச்சி, முத்துக்கருப்பாயி சபா ரத்தினம், மீனாட்சி சுந்தரம், என்.கே. பழனியப்பன், சொர்ணா, சித. சிதம்பரம், சாமிநாதன், அழகு சுந்தரம், இராஜா வெள்ளையப்பன், கருப்பஞ்செட்டி (பழம்நீ), சிட்டாள், ஏ. ஆர். சுப்பிரமணியன், சொர்ணவல்லி என்ற அகிலா, லெ. சக்திகுமார், லெட்சுமணன் (பழம்நீ), அழகம்மை ஆச்சி, இராகவன், இளைய பெருமாள், லெ. சோமசுந்தரம், எம். சோமசுந்தரம், செல்வ கணேஷ் போன்ற பலர் இக்காவடிப்பாடல்களைக் மரபிசையில் பாடி வருகின்றனர். இவர்கள் தவிர இன்னும் பலர் உள்ளனர். தற்போதைய நிலையில் இக்கலைஞர்கள் அறிமுகமாகின்றனர். பழனி பாத யாத்திரையின்போது மிகவும் சிறப்புமிக்க ஒரு பாடல் என்றால் அது “ஆடுக ஊஞ்சல் ஆடுகவே” என்ற பாடலாகும். இப்பாடல் வேல் வடிவில் இருக்கும் முருகப்பெருமானை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் போது பாடப்படும், பாடப்படுகிறது. ஊஞ்சலில் முருகன் ஆட, ஆட பாத யாத்திரை பக்தர்களின் கால் நோவு குறையும் என்று நிலையில் இப்பாடல் முக்கியத்துவம் பெறுகின்றது. இதுதவிர, பல பாடல்கள் உள்ளன. சக்தி, சிவன், திருமால், கருப்பர் போன்ற பல கடவுளர்களை வணங்கும்படியான பாடல்களும் காவடிப் பாடல்களாகப் பாடப்படுகின்றன. ஆளுயரம் அரிவாளாம், அதுக்கேத்த கம்பீரமாம், காலிலே முள்ளுச் செருப்பாம் கருப்பனுக்கே தனிச்சிறப்பாம். வராரய்யா வாராரு, கருப்பரிங்கே வாராரு, வாராரய்யா வாராரு, கருப்பரிங்கே வாராரு. என்ற பாடல் கருப்பர் குறித்துப் பாடப்படும் பாடலாகும். இப்பாடலில் உள்ள “வாராரய்யா வராரு” என்ற ஈரடிகள் காவடி சுமப்பவர்களால் பின்பற்றிப் பாடப்படும் அடிகளாகும். இவ்வடிகளைப் பாடுபவர் பாட, மற்றவர்கள் நினைவில் கொண்டு பாடும் முறையில் எளிமையும், இனிமையும் ஓசை ஒழுங்கும் கொண்டு இப்பாடல்கள் புனையப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள் தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள் - முருகன் சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள் காலமெல்லம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள் முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள் என்ற பாடல் முருகனைப் பற்றிய பாடலாகும். வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல் நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல் தேவியவள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல் குழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல் பாலகனின் கைவேல் பாவவினை தீர்க்கும் வேல் கந்தன் கதிர்வேல் கவலைகளைப் போக்கும் வேல் என்னும் பாடல், வேலை வழிபடும் பாடலாகும். இதன் முதலடி திரும்பத் திரும்பப் பாடப்படுவதாகவும், காவடி சுமப்பவர்கள் சொல்லி இப்பாடலில் பங்குபெறுவதாகவும் அமைகின்றது. இவை போன்று எளிய சொற்கள், திரும்பச் சொல்வதற்கு ஏற்று மெட்டுகள் கொண்டு இப்பாடல்கள் பாடப்படுகின்றன. இப்பாடல்களை, இவற்றின் கலை நயத்தை, இப்பாடல்களுடன் இணைந்த வழிபாட்டு முறைகளை ஆராய்வதற்கான களம் நிறைய உள்ளது. இதனை ஆய்வாளர் கவனத்தில் கொண்டு ஆராய முற்படலாம் என்ற நிலையில் இக்கட்டுரை இக்கலையை அறிமுகம் செய்யும் கட்டுரையாக அமைகின்றது.
thamks to muthukamalam
|
ஞாயிறு, மே 15, 2016
பழனி பாத யாத்திரையில் காவடிப் பாடல்களும் அவற்றின் கலைநயமும் - முனைவர் மு. பழனியப்பன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக