காரைக்குடியில் மார்ச் 21 இல் கம்பன் திருவிழா தொடக்கம்
By காரைக்குடி
First Published : 16 March 2016 05:31 AM IST
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில், இந்தாண்டுக்கான கம்பன் திருவிழா கல்லுக்கட்டிப் பகுதியில் உள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் மார்ச் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், மார்ச் 24ஆம் தேதி நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலிலும் நடைபெற உள்ளதாக, காரைக்குடி கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது: மார்ச் 21ஆம் தேதி மாலை 5 மணியளவில், கம்பன் திருவிழா தொடங்குகிறது.
விழாவில், தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ. சகாயம் தலைமை வகிக்கிறார்.
கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றுப் பேசுகிறார்.
பேராசிரியர் தி.மு. அப்துல் காதர் தொடக்க உரையாற்றுகிறார். இசைத் தமிழறிஞர் அரிமளம் சு. பத்மநாபன் எழுதிய கம்பனில் இசைத் தமிழ் என்ற நூலை, மதுரை தியாகராஜர் கல்லூரிச் செயலர் ஹரி தியாகராஜன் வெளியிடுகிறார்.
பொன் விழா கொண்டாடிய புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் வி.பி. சிவக்கொழுந்துவுக்கு கம்ப வள்ளல் விருதை, மதுரை கம்பன் கழகத் துணைத் தலைவர் சங்கர சீத்தாராமன் வழங்கிப் பேசுகிறார். கோவை கம்பன் கழகத் துணைச் செயலர் க. முருகேசன் எழுதிய தெய்வமும் மகனும் என்ற நூலையும், பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய காரைக்குடியில் ஜீவா என்ற நூலையும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் த. ராமலிங்கம் வெளியிடுகிறார்.
கம்பன் கழகம் சார்பில், அந்தமான் தீவில் வரும் ஏப்ரல் மாதம் கூட்டப்படவுள்ள மூன்றாம் உலகத் தமிழ் கருத்தரங்கத்துக்கான செய்தி விழா மடலை, செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநரும், நமது செட்டிநாடு இதழ் புரவலருமான ராஜாமணி முத்துக்கணேசன் வெளியிடுகிறார்.
கோவிலூர் ஆதீனகர்த்தர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகளுக்கு அவரது கல்விப் பணிகளைப் பாராட்டி, கம்பன் அடிப்பொடி விருதை மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம் வழங்கிப் பேசுகிறார்.
இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கவிஞர் வள்ளி முத்தையா பரிசு வழங்குகிறார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், எம். கவிதா தமிழிசை வழங்குகிறார்.
தொடர்ந்து, பேராசிரியர் த. ராமலிங்கம் கம்பனில் மறக்க முடியாதது என்ற தலைப்பிலும், கம்பனில் மறக்கக் கூடாதது என்ற தலைப்பில் பழ. கருப்பையாவும் பேசுகின்றனர்.
தமிழ் வெள்ளம் என்ற பொருளில் நடைபெறும் கவியரங்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடக்கி வைத்துப் பேசுகிறார். இதில், சொற்கடல்
என்ற தலைப்பில் கவிதாயினி ருக்மணி பன்னீர்செல்வமும், சுவை ஊற்று என்ற தலைப்பில் கவிதாயினி சல்மாவும் கவிதை வழங்குகின்றனர்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு வெளிப்படுகின்றார் என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதற்கு, நடுவராக நெல்லைக் கண்ணன் செயல்படுகிறார்.
நாட்டரசன்கோட்டையில் கம்பன் அருட்கோயிலில் நடைபெறும் நான்காம் நாள் நிகழ்ச்சியில், லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ராதா ஜானகிராமன் ஆகியோர் மலர் வணக்கம் பாடுகின்றனர், டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தலைமை வகித்துப் பேசுகிறார்.
திருச்சி கலைக் காவரிக் குழுவினர் கம்பன் அருட்கவி ஐந்து வழங்குகின்றனர்.
விழாவில், கண. சுந்தர் வரவேற்றுப் பேசுகிறார். கம்பன் கலை நகைச்சுவை என்ற தலைப்பில் முனைவர் இளசை சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
முடிவில், பேராசிரியர் மு. பழனியப்பன் நன்றி கூறுகிறார் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக