சனி, மார்ச் 26, 2011

பெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளிவீதியார்பாடல்கள்




சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் பெண்கள் குறிக்கத்தக்க இடத்தை வகித்துள்ளனர். சங்ககாலப் பெண்களில் அகப்பாடல்களை மட்டும் பாடியவர் என்ற பெருமைக்கும், பிற பெண்பால் புலவராலும் அறியப்பெற்றவர் என்ற பெருமைக்கும் உரியவராக விளங்குபவர் வெள்ளிவீதியார் ஆவார். இவர் பாடியனவாகப் பதிமுன்று பாடல்கள் சங்க இலக்கியப் பகுதியில் கிடைக்கின்றன. அகநானூற்றில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் எட்டு பாடல்களும், நற்றிணையில் முன்று பாடல்களும் ஆக பதிமுன்று பாடல்கள் இவர் பாடியனவாகக் கிடைக்கின்றன.

இவற்றில் நான்கு பாடல்கள் பாலைத்திணை சார்ந்தவை. முன்று பாடல்கள் குறிஞ்சித் திணை சார்ந்தவை. மருதத்திணை, நெய்தல் திணை ஆகியவற்றுக்கு இரண்டு பாடல்கள் வீதம் பாடப் பெற்றுள்ளன. இவர் பாடாத திணை முல்லைத் திணை மட்டுமே ஆகும். இதற்கும் அடிப்படையான காரணம் உண்டு. முல்லைத்திணை பெரும்பாலும் கற்பு வாழ்க்கை சார்ந்தது. இக்கற்பு வாழ்வினைப் பெறாதவர் வெள்ளிவீதியார் என்பதன் காரணமாக இத்திணை விடுக்கப் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

இவர் பாடிய பாடல்களில் பலவற்றைக் காமம் மிக்க கழிபடர் கிளவி என்று துறைக் குறிப்பாளர்கள் துறை வகுத்துள்ளனர். இவர் பாடிய நற்றிணையின் முன்று பாடல்களும் காமம் மிக்கக் கழிபடர் கிளவித் துறை சார்ந்தனவாக உள்ளன. இவரின் காதல் நிறைவேறாமையின் வெளிப்பாடு இவரின் பல பாடல்களிலும் இவர் பற்றி பிறர் பாடிய பாடல் குறிப்புகள் வாயிலாகவும் தெரிய வருகிறது.

இவ்வகைப்பட்ட பாடல்களைப் பாடியுள்ள வெள்ளிவீதியாரின் பாடல்கள் பெண்ணிய உளவியல்படி சிந்திக்கத் தக்கனவாக உள்ளன. இவ்வழியில் சித்திக்கின்றபோது இதுவரை வெள்ளிவீதியார் பாடல்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெற வேண்டியனவாக உள்ளன.


பெண்ணிய உளவியல் ஓர் அறிமுகம்
பெண்ணிய உளவியல் என்பது பெண் மனதை மையமாக வைத்து, அவளின் நடத்தைகளை எடுத்தறிவிப்பது ஆகும். பெண்களாலேயே உணரப்படும் பெண் மன இயல்புகள் பற்றிய கூறுகளை உட்கொண்டிருப்பது பெண்ணிய உளவியல் ஆகும். இது பற்றிய மேரை நாட்டார் விளக்கங்கள் பின்வருமாறு.

"பெண்ணிய உளவியல் என்பது சமுகக்கட்டமைப்பினையும், பால் வேறுபாட்டினையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயும் உளவியல் அமைப்பாகும். வரலாற்று அடிப்படையில் ஆண்பால் சார்புடைய உளவியலில் பிறந்ததாக இது இருந்தாலும், இந்தக் கூறு ஆண்களின் உளவியல் சிந்தனைகளில் இருந்தும், அவர்கள் உருவாக்கிய உருக்களில் இருந்தும் தனிப்பட்டு பெண்கள் பற்றிய உளவியல் ஆய்வுகளைத் தொடங்குவதாக உள்ளது.

பெண்ணிய உளவில் என்பது பெண்களுக்கான சரிசமமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான தனித்த அழுத்தத்தைத் ஏற்படுத்தித் தருகின்றது

மேற்காட்டிய இரண்டு கருத்துக்களும் பெண்ணிய உளவியலின் நோக்கங்கள் பற்றி விளங்கிக் கொள்ள உதவுகின்றன. ஆண் சிந்தனை வயப்பட்ட உளவியல் பகுதியைப் பெண் வழிப்பட்டதாக மாற்ற எழுந்ததுவே பெண்ணிய உளவியல் ஆகும்.

இதனை முதன் முதலாக உருவாக்கிய உளவியலாளர் பிராய்டின் உளவியல் பள்ளியின் வழிவந்த நியோ பிராய்டியன் எனப்படும் காரென் ஹார்னி என்ற பெண்ணியலாளர் ஆவார். இவரே பிராய்டு பெண் உளவியல் பற்றிக் கூறிய அடிப்படைக் கருத்தான ஆண் குறி இழப்புப் பொறாமை என்பதற்கு மாற்றாக வோப் என்வி எனப்படும் கருப்பை இழப்புப் பொறாமை(றடிஅ நஎல) என்பதனைக் கொண்டு வந்தவர்.

அதாவது பெண் குழந்தையானது இளவயதில் தனக்கு ஆண்குறி இல்லையே என்ற எண்ணத்தின் காரணமாகப் பொறாமைப்பட்டு அதன் காரணமாக உளவியல் அடிப்படையில் தயக்கம் பெறுவதாக பிராய்டு கருதினார். ஆனால் பெண்ணியல் உளவியல் அறிஞர்கள் ஆணுக்கும் இழப்பு, பொறமை ஆகியன இருக்கின்றன. அந்தப் பொறாமையின் காரணமாகவே பெண்களை ஆண்கள் அடிமையாக்க முற்படுகிறார்கள் என்று கருத்துரைத்தனர்.

குறிப்பாக ஆணுக்கு மார்பக இழப்புப் பொறாமை, கருப்பை இழப்புப் பொறாமை, பெண்குறி இன்மைப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை போன்ற பல பொறாமைகள் இருப்பதன் காரணமாக அவர்களுக்குள் பாதிப்பு ஏற்படுகின்றது என்று பெண்ணியலாளர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாகப் பெண்களை அவர்கள் அடக்கி வைக்க முற்படுகின்றனர் என்பது இவர்கள் கண்டறிந்த முடிவாகும்.

ஹார்னி கரென் இது பற்றிக் கூடுதல் விளக்கம் தருகிறார். கருப்பை பொறாமை, பெண்குறிப் பொறாமை ஆகிய சொற்கள் பெண்ணிய உளவியல் சார்புடையனவாகும். இயற்கையாக ஆணுக்குப் பெண் மீது வெளிப்படுத்தமுடியாத அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக அவளது உயிரியல் இயக்கங்களான மகப்பேறு, மகப்பேற்றுக்கான தயாரிப்பு முயற்சிகள், பாலூட்டல் போன்றன குறித்த அச்சங்கள் ஆண்களிடம் ஏற்படாமை கருதி ஒரு புதிர்த்தன்மையை அவை ஆண்களுக்குள் ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக பெண்களை அடக்கி வைக்கவும், ஆண்கள் தங்களின் இருப்பை, தங்களின் பெயர்களை முன்வைக்கவும் ஆன செயல்பாடுகளில் கவனம் செலுத்துகின்றனர். என்ற இக்குறிப்பின் வழியாக பெண்கள் அடக்கப்பட்டதற்கான முக்கியக் கூற்றினைப் பெண்ணிய உளவியல் அறிந்து சொன்னது.

குறிப்பாகப் படைத்தல் என்ற தொழில் உயிரியல் அடிப்படையில் பெண்களின் தனித்த இயல்பாக உள்ளது. இந்த உயிர்ப் படைப்பாற்றல் அவர்களின் இலக்கியப் படைப்பாக்கத் திறனிற்கும் முல காரணியாக உள்ளது.

ஆனால் உயிரியல் அடிப்படையில் வெளித் தோன்றும் வகையில் படைப்புத் தொழிலைச் செய்யும் பெண்களை இலக்கியப் படைப்பாக்கத்தில் ஆண்கள் பின்தள்ளி விடுகின்றனர். ஆண்கள் அதிக அளவில் இலக்கியப் படைப்பாக்கத்தில் ஈடுபடுவதும், ஈடுபட்டதும், பெண்களைப் படைப்பாக்கத்தில் இறங்கவிடாமல் புறவேலைகளை அதிகப்படுத்துவதுமான முயற்சிகளும் இப்பின்தள்ளுதலின் அடையாளங்கள் ஆகும்.

மேலும் பெண்கள் உயிர்ப் படைப்பாக்கத்திற்கான தனி வாய்ப்பைப் பெற்றிருப்பதாலும் அவர்களின் படைப்பாக்க முயற்சி அதனுடன் சமப்படுத்தப்பட்டு விடுகிறது. இவ்வகையில் பெண்களின் படைப்பாக்க முயற்சிகளை புரிந்து கொள்ள பெண்ணிய உளவியல் உதவி செய்கின்றனது.

குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் உயிர்ப்படைப்பாக்கத்தினை எட்டாத பெண்களே இலக்கியப் படைப்பாக்கங்களை அதிகம் புனைய முன்வந்துள்ளனர். ஔவையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தி, பெருங்கோழியூர் நாய்கன் மகள் நக்கண்ணையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் போன்ற பெண்களின் வாழ்வில் குழந்தைப் பிறப்பு என்பது அறவே இல்லாமல் இருப்பதையும் எண்ணிப் பார்க்கையில் இக்கருத்துச் சரியென மெய்ப்படும்.

வெள்ளிவீதியார் அகவாழ்வில் காதல் தோல்வியைச் சந்தித்தவர் என்பது அவர் குறித்த ஔவையாரின் பதிவு வாயிலாகவும், வெள்ளிவீதியாரின் பதிவு வாயிலாகவும் அறியப் பெறுகின்றன.

நெறிபடு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளிவீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே (அகநானூறு : 147:8)

என்ற ஔவையாரின் அகநானூற்றுப் பாடலின் வாயிலாக வெள்ளிவீதியார் காதலனைத் தேடி அலைந்தமை தெரிய வருகின்றது.

மேலும் வெள்ளிவீதியாரின் பின்வரும் பாடலில் அவர் ஆதிமந்தியைப் போலக் காதலனைத் தேடி அலைந்ததாக ஒரு குறிப்பு காணப்படுகிறது.

ஆதிமந்தி போலப் பேதுற்று
அலந்தனென் உழல்வென் கொல்லோ
(அகநானூறு 5: 1415)

மேலும் இவரது குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இச்சாயலில் உள்ளது.

நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலில் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே( குறுந்தொகை 30)

என்ற இப்பாடலின் வாயிலாக வெள்ளிவீதியாரின் அகவாழ்க்கை பற்றிய செய்திகள் தெரியவருகின்றன.

வெள்ளிவீதியார் தன் அகவாழ்வில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இதற்கு அடிப்படைக் காரணம் தலைவனைச் சேராமையே ஆகும். தலைவன் ஏன் வெள்ளிவீதியாரைச் சந்திக்க மறுத்தான். அவரைத் திருமணம் செய்ய ஏன் மறுத்தான் இதுபோன்ற பல கேள்விகள் இப்பாடல்களின் பின்னணியில் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பெண்ணிய உளவியல் அடிப்படையில் பதிலைத் தரவேண்டியுள்ளது. வெள்ளிவீதியார் என்ற பெண் உயிர்ப் படைப்பாக்க இயல்புகளையும், இலக்கியப் படைப்பாக்க இயல்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக அவரிடம் இருக்கும் கூடுதல் தகுதிகள் வெள்ளிவீதியாரால் விரும்பப்பட்ட தலைவனுக்கு ஒரு விதமான ஐயத்தை, அச்சத்தை, அதாவது தனக்கு இப்பெண் அடங்கி நடப்பாளா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதன் காரணமாக அத்தலைவன் இவரை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று முடிய முடிகின்றது. இதற்குப் பல சான்றுகளும் இவர்தம் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. அவை பற்றிச் சிந்திக்கும் களமாக அடுத்த பகுதிகள் அமைகின்றன.

காதலின் முதல் நிலை
தலைவனைக் கண்ட தலைவி ஒருத்தி புன்னகைக்கிறாள். இந்தக் காதல் குறிப்பினை உணர்ந்த தலைவனும் அவளுடன் காதல் கனிகின்றான். சிறிது நாளில் தலைவியின் காதலைப் புறக்கணித்து விடுகிறான். இதன் காரணமாகத் தலைவி வருத்தமடைகிறாள்.

அவள் தலைவனுக்குக் காதல் குறிப்புரைத்த பற்களைப் பார்த்து பற்களே நீங்கள் பாலை நிலத்தின் வழியில் செல்லும் யானையின் தந்தங்கள் கல்லில் பட்டு முனை மழுங்கி அழகொழிந்து காணப்படுவதைப் போல ஆவீர்கள் என்று கூறுகிறாள். மேலும் தலைவனின் காதல் தலைவியின் உள்ளத்துள் பாணர்கள் பச்சை மீன்களைப் பிடித்துச் சுமந்து செல்லும் மண்டை எனப்படும் பாத்திரத்தில் நீங்காது மீன் வாசனை இருப்பதுபோல நீடித்து இருக்கிறது. இது எமக்குப் புலவியைத் தருகிறது. மேலும் தலைவனையும் பெற இயலவில்லை. எம் உயிரும் அழிந்து போகப்போகிறது என்று இப்பாடல் பொருளுணர்த்துகிறது.

இந்த உவமைக் குறிப்பு சற்று நினைக்கத்தக்கதாகும். பெண்களின் உணவறிவை இப்பாடல் எடுத்துரைப்பதாக உள்ளது. இப்பாடல் வழியாக வெள்ளிவீதியாரின் மனநிலையையும் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

எமக்கும் பெரும்புலவாகி, எம்உயிர் என்பன போன்ற தன்மைப் பன்மைச் சொற்கள் படைப்பாளரையும் உளப்படுத்துவனவாகும். எனவே இங்குக் காட்டப்படும் தலைவி நாடகப் பாங்கில் கற்பனையாகவும், உலகியல் வழக்கில் வெள்ளிவீதியாரைக் குறிப்பதாகவும் உள்ளதை உணரமுடிகின்றது. இப்பாடல் பின்வருமாறு.

சுரம்செல் யானைக் கல்லுறு கோட்டின்
தெற்றென இரீஇயரோ ஐய மற்று யாம்
நும்மொடு நக்க வால்வெள் எயிறே
பாணர் பசுமீன் செறிந்த மண்டைபோல
எமக்கும் பெரும் புலவு ஆகி
நும்மும் பெற்றேஎம் இறீஇயர் எம்உயிரே (குறுந்தொகை 169)

காதலின் வளர்ச்சி
சிரிப்பில் மலர்ந்த காதல் இரவுக் குறிச் சந்திப்பில் வளர்ச்சி பெறுகிறது. தலைவன் பல இடர்களைக் கடந்துத் தலைவியைச் சந்திக்க வருகிறான். ஆனால் நிலவு வெளிப்பாடு காரணமாக தலைவியும் தலைவனும் சந்திக்க இயலவில்லை. தலைவி வருத்தம் மிகக் கொள்கிறாள்.

ஆறுகள் மழைநீராலும், தேன் பொழிவாலும் நிறைந்து ஓடுகின்றன. இவற்றில் பாம்புகளும் இழையும். மலைக் குகை ஒன்றில் யானையால் தாக்கப் பெற்ற ஆண்புலி ஒன்று கிடக்க அதனைக் காக்கும் வண்ணமாகப் பெண்புலி குகையின் வாயிலில் தங்கிக் கிடக்கும் வழியாக அந்த வழி உள்ளது. இம்மலை வழியில் தலைவன் வேல் ஒன்றேந்தித் தலைவியைச் சந்திக்க வருகிறான். அவனின் சந்திப்பு நிகழாவிட்டால் நான் வாழமாட்டேன். நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்று இப்பொழுது யான் வாழலேனே:(அகநானூறு 362 : 910) என்ற இப்பாடலடியில் உள்ள யான் என்ற தன்மைக் குறிப்பு கருதத்தக்கது. இது படைப்பாளரின் உளத்தையும் சுட்டுவது என்பது முன்னரே சுட்டப் பெற்றதாகும்.

இச்சூழலில் தலைவனின் காதல் வளம் பெற்றது. என்றபோதும் அது நிறைவடையவில்லை.

தலைவன் இல்லாப் பொழுதுகளில் வருத்த மிகுதி
தலைவனின் அன்பு வயப்பட்ட தலைவி அவனின் அருகாமை வேண்டி நிற்கிறாள். அது கிடைத்த பாடில்லை. அவனுடன் இருந்த மாலைப் பொழுதையும், அவனுடன் இல்லாத மாலைப் பொழுதையும் அவள் எண்ணிப் பார்க்கிறாள். அணிகூட்டும் மாலையோ அறிவேன், மன்னே மாலை நிலம்பரந்தன்ன புண்கணோடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே ( குறுந்தொகை 386: 46) மகிழ்வான மாலையை அறிந்தவள் தனிமைத் துயரால் வருத்தப்படும் மாலைப் பொழுதை வெறுக்கிறாள்.

இதுபோன்று இரவில் தலைவன் துணையின்றி தலைவி அழுகிறாள். தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டிப் பொருள் தேடிப்பிரிகின்றான். அவன் சென்றதன் காரணமாக அலர் எழுந்தது. இது ஆதிமந்தியின் அல்லலுற்ற நிலையை ஒத்திருந்தது. வானவரம்பனின் படையினர் வரவால் தூங்காது உள்ள ஊர் மக்களைப் போல நானும் உறங்காமல் உள்ளேன் என்று தலைவி கலங்குகிறாள். (அகநானூறு 45)

இவ்வாறு தலைவனின் பிரிவு தலைவியாகிய வெள்ளிவீதியாருக்குத் துன்பத்தைத் தந்துள்ளது. பிரிந்த தலைவன் கடைசிவரை வராது ஒழிந்தான்.

காமவேகம்
வாராது ஒழிந்த தலைவன் தந்த காதல் நோய் தலைவிக்கு காமத்தை விளைவித்தது. இதனைத் தாங்க இயலாது அவள் தவிக்கின்றாள். இந்த அடிப்படையில் வெள்ளிவீதியாரின் பல பாடல்கள் அமைந்துள்ளன. காம வேகத்தை வெளிப்படுத்தும் தன்மை பெண்களுக்குப் பெரும்பாலும் இல்லை என்ற பொதுக் குறிப்பை இப்பாடல்கள் பொய்யாக்குகின்றன.

வெள்ளிவீதியார் பாடல்களில் கூற்று நிலையில் பல தடுமாற்றங்கள் நிலவுகின்றன. பின்வரும் பாடல் தலைவன் கூற்றாகப் பெரும்பாலும் பல உரையாளர்களால் இனம் காணப்பட்டது. அது பிறழ உணரப்பட்டதாகும்.

இடிக்கும் கேளீர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமண் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல்போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே
( குறுந்தொகை 58)

இப்பாடல் தலைவன் கூற்றாகப் பலரால் இனம் காணப் பெற்றது. இப்பாடலைத் தலைவன் கூற்றாகக் கொள்ளுதலைவிட தலைவி கூற்றாகக் கொள்ளுதல் பொருத்தமாகவும் வெள்ளிவீதியார் தம் ஏனைய பாடல்களோடு இசைந்தும் அமையும் என்று கருதுகிறார் தாயம்மாள் அறவாணனர். அவரின் கருத்தே கட்டுரையாளருக்கும் ஏற்புடையதாகும்.

இப்பாடலில் தலைவியின் காம வேகம் அதிகரிக்க அதனை இடித்துரைக்கின்றனர் உறவினர்கள். இருப்பினும் அவள் காம வேதனைப்படுகிறாள். காய்ந்த கல் பரப்பில் வைக்கப் பெற்ற வெண்ணெய் வெப்பத்தால் உருகி ஓடும்போது கையில்லாத ஊமண் ஒருவனால் எப்படித் தடுக்க முடியாதோ அதுபோல் காமத்தைத் தலைவியால் தடுக்க இயலவில்லையாம். இவ்வுவமைப் பகுதியில் கையாளப் பெற்றுள்ள வெண்ணெய் உவமை பல வகை ஒப்புமை உடையதாகும்.

பெண்ணின் காமத்தைத் தடுத்து நிறுத்துவதாக நாணம் விளங்குகின்றது. இருப்பினும் அந்நாணமும் தோற்றுப் போய்விடும் அளவிற்குத் தலைவியின் காதல் பெருகுகிறது.

அளிதோ தானே நாணம் நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே இனியே
வான்புங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறைத்
தீம்புனல் நெரிதர வீந்து உக்கா அங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதர கைநில்லாதே (குறுந்தொகை 149)

என்ற பாடலில் வெள்ளத்தினைக் கட்டுப் படுத்தும் கரையில் உள்ள கரும்புகளும் மிகு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுபோல காமமானது நாணத்தையும் புறந்தள்ளிக் கொண்டு போய்விடுமோ என்று கலங்குகிறாள் தலைவி. காமத்தின் அளவு கைநில்லாத அளவிற்கு உள்ளதாக இத்தலைவி கருதுகிறாள். ஏறக்குறைய வெள்ளிவீதியாரின் நிலையும் இதுவேயாகும்.

யாமம் உய்யாமை நின்றன்று
காமம் பெரிதே களைஞரோ இலரே
(நற்றிணை 335, 1011)

என்ற பாடலடிகள் யாமப் பொழுதில் பெருகும் காமத்தைப் பற்றிய குறிப்பைக் கொண்டுள்ளது. பெண் காமம் பெரிது. அதனை முற்றாகக் களைபவர் யாரும் இல்லை என்பதைக் குறிப்பதாக இப்பாடலடிகள் விளங்குகின்றன.

அன்றில் பறவைகளின் கூச்சல், யாழ் ஒலி போன்றன காம வேதனையை மிகுவிப்பனவாக இப்பாடலில் சுட்டப் படுகின்றன. இப்பாடலிலும் என்புறம் நரலும் என்ற நிலையில் தன்மைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இதுவும் வெள்ளிவீதியாரின் அகவாழ்வு வெளிப்பாடு என்பதற்கு இக்குறிப்பு சான்று நல்கும்.

உலகினர் இரவில் நிலவின்பம் தூய்க்கின்றனர். பிரிவால் வாடும் தலைவி மட்டும் அழுது கொண்டு நிற்கிறாள்.

யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு
கனைஇருங் கங்குலும் கண்படை இலனே
அதனால் என்னொடு பொரும்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொரும்கொல் என்அவலம் உறு நெஞ்சே
(நற்றிணை 348:710)

என்ற இப்பாடலில் வளையிழந்து அவலமுறும் தலைவியின் காட்சி இடம் பெறுகிறது. தன்னோடு உலகு பொருந்தாமையையும், உலகோடு தான் பொருந்தாமையையும் தலைவி இப்பாடலில் எடுத்துரைக்கிறாள்.

பெண்ணிய நிலையில் ஆண்மைய உலகிற்கும், பெண்ணுக்கும் உள்ள முரண்பாட்டைத் தெற்றெனக் காட்டுவதாக மேற்கண்ட பாடலின் அடிகள் விளங்குகின்றன.

குருகின் தூது
காதலால் அதன் தோல்வியால் தலைவனை அடையமுடியாத தலைவி தன் துயரத்தைச் சொல்லிடக் குருகினைத் தூதாக அனுப்புகிறாள். உலகத்தோடு பகை வந்துவிட்டபின் அஃறிணைப் பொருள்களை மட்டுமே நம்ப இயலும். அந்த அளவில் இந்தப் பாடல் முக்கியமானதாகும்.

என் ஊருக்கு வந்துபோகும் சிறு வெள்ளாங்குருகே! என்நிலையை என்தலைவனிடம் கூறுக என்பதே இப்பாடலின் பொருள். கழனி நல்ஊர் மகிழ்நர்க்குஎன் இழைநெகிழ் பருவரல் செப்பாதோயே (நற்றிணை 70) என்று விளிக்கிறாள் தலைவி.

இவ்வகையில் பல நிலைகளில் துயருற்ற வெள்ளிவீதியாரால் படைக்கப் பெற்ற தலைவியின் பாடல்கள், அல்லது வெள்ளிவீதியார் தம் தன்னனுவப் பாடல்கள் பல செய்திகளை உணர்த்துகின்றன.

1. தலைவி காதல் வயப்பட்டுப் பின் காமத்தின் அளவைத் தாங்க முடியாதவளாக உள்ளாள்
2. அவளை மணக்கப் பொருள் தேடிப் போனத் தலைவன் திரும்ப தலைவியை நோக்கி வந்தானில்லை.
3. தலைவியைக் கண்டும், இரவுக் குறியில் தன் காதலை வளப்படுத்தியும் வந்த அவனின் அன்பு இல்லாமையால் தலைவி பெரிதும் வருத்தமுற்றுள்ளாள். உடல் அளவிலும், மனஅளவிலும் அவளின் வருத்தம் அதிகரித்துள்ளது.
4. ஊரும் இதனை அலராக உணர்த்தியது. இதன் காரணமாக ஊரின் மீது தலைவி பகை கொண்டாள். ஊரும் அவள் மீது பகை கொண்டது.
5. இதனைத் தீர்க்க இயலாமல் தலைவி அஃறிணைப் பொருள்களைத் தூதாக விட்டுள்ளாள்
6. வெள்ளிவீதியார் பாடல்களில் பல தன்மைக் குறிப்புகள் காணப்படுவதால் அவை படைப்பாளரின் சொந்த அனுபவ வெளிப்பாடு எனக் கொள்வதில் தவறில்லை.



இவை இப்பாடல்கள் தரும் பொதுக் கருத்துக்கள் ஆகும். இக்கருத்துக்கள் வழியாகத் தலைவன் தலைவியின் காம இயல்பு கண்டும், கேளீர் கண்டும் இது போன்ற பல இடர்பாடுகள் கண்டும் அவளை மணக்க முன்வரவில்லை என்பது தெரியவருகிறது. இதன் காரணமாக வெள்ளிவீதியாரின் தலைவி அல்லது வெள்ளிவீதியார் பெரிதும் பாதிக்கப் பெற்றுள்ளாள்/ர். அவன் வராமைக்குக் காரணம் என்ன என்பது தெளிவிக்கப் பட வேண்டும்.

இதற்கு வெள்ளிவீதியார் தரும் பதில் பின்வரும் பாடலாகும். இப்பாடல் பெண்ணிய உளவியல்படியான பெண்குறிப் பொறாமை சார்ந்த பாடலாகும். ஆணுக்குப் பெண்ணின் குறி மீதான சில புதிர்களும், அச்சமும் நிலவின என்பது ஒரு புறம். பெண்களுக்குத் தங்களின் புற அடையாளங்கள் மீதான பெருமைத்தன்மை இருந்துள்ளது என்பது மறுபுறம். இந்த மறுபுறத்தை இப்பாடல் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என்மாமைக் கவினே.
( குறுந்தொகை, 27)

பசு மாடு பால்தரத் தக்கது. அப்பசுமாட்டின் பால் கலத்திலும் சேர்க்கப்படாது, கன்றுக் குட்டியாலும் உண்ணப்படாது வீணே நிலத்திற்கு செல்வதாகக் கொண்டால் அதனால் யாருக்கும் பயன் விளையாது. அது போல வரிகள் கொண்டு விளங்குகின்ற, மாந்தளிர் போன்ற பரப்பினையும் அழகினையும் உடைய அல்குல் பசலை நோயால் அதன் கவினை அழிந்தது என்பது பாடலின் பொருளாகும்.

பெண்ணிய உளவியல் கருதும் பெண்குறிப் பொறாமை என்பது இதனுள் விளங்குகிறது. பெண்களின் குறி பற்றிய தெளிவான வெளிப்பாடாக இது அமைகிறது. இதனின் அழகு குலைவது பற்றியதான விவரங்கள் இப்பாடலில் அமைந்துள்ளன. பெண்ணுக்குத் தன் உடல் கூற்றின் மேல் ஏற்பட வேண்டிய அழகுணர்ச்சியை இது காட்டுகின்றது.

மேலும் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் புகட்டல் குறித்தும் ஆண்களுக்குப் புதிர் ஏற்பட்டுள்ளது. இப்புதிர்த் தன்மை இப்பாடலில் பால் என்னும் உவமையாக வெளிப்பட்டுள்ளதை உணரவேண்டும். பால் தருவது பசுமாடு. அது பெண் வகைப்பட்டது. அதே சூழல் வாய்ந்த பெண்ணின் வளமையையும் இது குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே பெண்ணியலாளர்கள் கருதும் கருப்பை பொறாமை, தாய்ப்பால் அளிக்கும் பொறாமை, பெண்குறிப் பொறாமை ஆகியனவற்றைச் சுமந்ததாக இந்தப் பாடல் விளங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

பெரும்பாலும் தற்கால தமிழ்ச் சொல் வழக்குகளில் ஒரு ஆண் மற்றொரு ஆணைத் திட்ட முற்படும்போது தேவையில்லாமல் பெண் அவயங்களைப் பற்றி, குறிப்பாக அவளின் குறி பற்றிய இழி சொற்கள் இடம் பெறுகின்றன. இவை ஆணுக்கு உள்ள பெண் குறி பற்றிய பயத்தைப் புதிரை வெளிப்படுத்துவதே ஆகும்.

இதுபோன்றதொரு அச்சம், அதன் வகையில் தோன்றிய பெண் அடங்குவாளா மாட்டாளா என்ற ஐயம் வெள்ளிவீதியாரைக் காதலித்த தலைவனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். குழந்தையைப் படைக்கும் வல்லமையைப் பெற்ற பெண், இலக்கியத்தைப் படைக்கும் வல்லமையைப் பெற்ற பெண், அலரால் உலகால் புறக்கணிக்கப்பட்ட பெண் ஆகிய சூழல்களைக் கொண்டவளைத் தனக்குக் கீழ் இருக்கச் செய்வது இயலாத செயல் என்று கருதியே அத்தலைவன் வெள்ளிவீதியாரின் காதலைப் புறக்கணித்திருக்க வேண்டும்.

குறிப்பாக காதல் தோல்வி பெற்ற ஆண்கள் அது பற்றிய சிந்தனையைப் பெரும்பாலும் பலரறிய வெளிப்படுத்துவர். பெண்கள் அப்படிச் செய்வது இல்லை. ஆனால் இங்குக் காதல் தோல்வி ஏற்பட்ட பெண் ஒருத்தி தன்னைப் பற்றி வெளிப்படுத்தியிருப்பது தமிழ்க் களத்தில் புதுமை வாய்ந்ததே ஆகும்.

வெள்ளிவீதியாரின் பாடல்களை பெண்ணிய உளவியல் கண்ணோட்டத்துடன் காணுகையில் இத்தகைய புதிய செய்திகளுக்கு அவை இடம் தருகின்றன என்பது வியப்பளிக்கின்றது.

முடிவுகள்
1. பெண்ணிய உளவியல் நிலையில் ஆண்களுக்குச் சில பொறாமைகள் இயற்கையாகப் பெண்கள் குறித்து அமைந்துள்ளன. பெண்களின் உடல் வெளிப்பாடுகளான, உயிரியல் தோற்றங்களான தாய்மைப்பேறு, பால்கொடுத்தல் போன்றன ஆண்களுக்குப் புரியாத தன்மையை ஏற்படுத்தி நிற்கின்றன.
2. பெண்கள் தன் உடல் பற்றி அவற்றின் இயல்புகள் பற்றிப் பெருமைப் பட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு வெள்ளிவீதியார் பாடல்கள் சான்று பகர்கின்றன.
3. தலைவன் ஒருவன் காதலித்த காதலியைப் புறக்கணிப்பதற்கு அவளின் உடல் குறித்தான புரிதல் இன்மையும், அவளின் அகம் பற்றிய புரிதல் இல்லாமையும், இவை கருதித் தோற்றமும் அச்சமும் காரணமாக அமையலாம்.

பயன் கொண்ட நூல்கள்
1. ஔவை நடராசன், புலமைச் செவ்வியர், தி பார்க்கர் சென்னை 14.
2. சுப்பிரமணியன். ச.வே., சங்கஇலக்கியம், முன்று தொகுதிகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010
3. தாயம்மாள் அறவாணன், மகடுஉ முன்னிலை, பச்சைப் பசேல், சென்னை, 29 2004
4. நாகராசன். வி. (உரையாசிரியர்), குறுந்தொகை, என்சிபிஎச், சென்னை, 2004
5. இணைய தளம்: விக்கிப்பீடியா தகவல் களஞ்சியம்.

3 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

Followers Widget not available.
Please register my mail id:
rathnavel_n@yahoo.co.in
Kindly send your future blogs to my mail id.
Thanks.
N.Rathnavel.

Keezhappatti சொன்னது…

மிக அருமையாக உள்ளது...எனக்கு உங்களுடைய இடுகைகள் தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

keezhappatti.blogspot.com