சனி, ஜனவரி 24, 2009

அகப்பாடல்களில் புறச் செய்திகள்


சங்க இலக்கியம் அகம் புறம் என்ற இரு பாடுபொருள்களை உடையது ஆகும். அகம் என்பது மனதின் அக நிகழ்வாகிய காதலை மையப்படுத்துவதாகும். புறம் என்பது புறத்தில் வெளிப்படுவதாகிய பெருமைக்கு உரிய செயல்களை மையமிட்டதாகும்.அகம் என்பதற்கு ''போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன் தானே அறிதலின் அகம் '' (தொல்காப்பியம் இளம்பூரணர் உரை 3) என உரைகாணுகின்றார் இளம்பூரணர். அகப் பொருள் என்பது அனுபவிப்பனுக்கே பயன் தரத்தக்கது என்ற நிலையில் இவ்விளக்கம் ஏற்படையது.இருப்பினும் அகப்பாடல்களில் அனுபவிப்பவன் தம்மை அல்லது அனுபவிப்பை அளிப்பவரை அடையாளம் காட்டிவிடக் கூடாது. அதனையே தொல்காப்பிய நூற்பா சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப் பெறாஅர்' என்று வரையறை செய்கின்றது.சுட்டி ஒருவர் பெயரோ அவரின் மரபுப் பெயரோ வெளிப்பட்டு விட்டால் அகப்பாடலாக அது இருந்தாலும் புறப்பாடலாகவே கொள்ளப்படும் என்பது அறிஞர் முடிபு. நெடுநல்வாடை நல்ல அகப்பாடல் எனினும் அதனுள் இருக்கும் பாண்டிய மரபை உணர்த்தும் வேப்பிலை இடமபெற்றுவிட்டபோது அது அகத்தைக் கடந்துவிட்ட புற நூலாகக் கருதப்படுவிடுகின்றது.அதுபோல புறநானூற்றில் ஒரு சில பாடல்கள் தன்மையால் அகமாக இருந்தாலும் அதன் தன் வெளிப்பாட்டுத் திறத்தால் புறமாகக் கொண்டுத் தொகுக்கப் பெற்றுள்ளன.
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்என்னைக்கு நாடு இஃது அன்மையானும்ஆடு ஆடு என்ப ஒருசா ரோரேஆடு அன்று என்ப ஒருசா ரோரேநல்ல பல்லோர் இரு நன் மொழியேஅம் சிலம்ப ஒலிப்ப ஓடி எம் இல்முழாஅரைப் போந்தைப் பொருந்தி நின்றுயான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே (புறம் 85)
என்பது புறநானூற்றில் தொகுக்கப் பெற்றுள்ள ஒரு பாடல் ஆகும். இப்பாடல் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளியைப் பாடிய பாடலாகும். இப்பாடலைப் பாடியவர் பெயரோ அல்லது அதன் புறத்தன்மையோ தெரியாமல் மறைத்து வைத்துவிட்டால் இது நல்ல அகப்பாடலாவே இருக்கும். இப்பாடலில் தலைவன் பெயர் சுட்டப் படவில்லை. அவன் தலைவன் எனவே விளிக்கப்படுகிறான். இது அகமரபு. ஆனால் அந்த அகமரபிற்குள் இருக்கும் தன்னை வெளிப்படுத்தும் தன்மை அகத்தின் பொதுமையை ஒழித்துவிடுகிறது.
காதல் என்ற உணர்வினை வெளியிடும் பாடல்கள் அக்காதலுக்கு உரியவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் நிற்கும்போது அவை உலகப் பொதுமையைப் பெற்றுவிடுகின்றன. மேற்சொன்ன பாடல் உலகப் பொதுமைக்கு இடம் தராமல் தன் அனுபவ வெளிப்பாடாக மட்டும் அமைந்து விடுகின்றது. எனவே இதனை அகப்பாடலாக ஆக்காமல் புறத்திணைப் பாடலாக்கிக் கைக்கிளை என்ற துறையைத் தொகுப்பித்தவர்கள் தந்துத் தொகுத்துள்ளனர்.
இவ்வாறு அகத்தில் புறமும் புறத்தில் அகமும் மாறி மாறிப் புகும் போக்குகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. அகத்தின் எல்லை கடக்கும் போது ஒரு பாடல் புறமாகிவிடும். புறத்தின் பக்கம் சென்றுவிடாமல் புறச் செய்திகளை உவமைகள் வாயிலாக நிகழ்வகளாக அகப்பாடல்களில் காட்டப் பெறும் பொழுது இவ்வெல்லை கடக்கப்படுவதில்லை. அகப்பாடலுக்குக் கூடுதல் வளமும் ஏற்பட்டுவிடுகின்றது.
இக்கட்டுரை அகப்பாடல்களில் காணப்பெறும் சில புறச் செய்திகளை முழுமைத் தன்மையுடன் ஆராய்கின்றது. ஒட்டுமொத்த அகப்பாடல்களையும் அணுகும்போது ஒரு சில புறச் செய்திகள் முழுமை பெறுகின்றன. இவ்வாறு முழுமை பெறும் செய்திகளில் இரண்டு குறிக்கத்தக்கனவாக இக்கட்டுரைக்குள் காட்டமுடிகின்றது. ஒரு செய்தி நாலூர்க் கோசர் பற்றியது. மற்றது ஆட்டனத்தி பற்றியது. இதனுடன் இக்கட்டுரைக்கு வலிமை சேர்க்க முல்லைப்பாட்டில் காணப்படும் புறச் செய்திகளும் கையாளப்படுகின்றன.
நாலூர்க் கோசர்இவர்களைப் பற்றிய செய்தி குறுந்தொகையிலும் அகநானூற்றிலும் முழுமைபட கிடைக்கின்றன. நாலூர்க் கோசர் என்பவர்கள் வீரக்குடியினர் ஆவர். இவர்கள் நான்கு ஊர்களில் வாழ்ந்து வந்துள்ளனர். மோகூர் பழையனின் அவையத்தில் இவர்கள் இடம் பெற்றிருந்ததாகக் கருதுவர். இவர்கள் தன் குலப் பெண்ணைக் கொன்ற நன்னனை வஞ்சம் தீர்த்தவர்கள் ஆவர்.
நன்னன்வென்வேல்இசை நல் ஈகைக் களிறு வீசு வண்மகிழ்பாரத்துத் தலைவன் ஆர நன்னன்ஏழில் நெடுவரைப் பாழிச்சிலம்பில்களிமயிற் கலாவத்தன்ன தோளே ( அகம் 152)
என்ற நிலையில் நன்னனின் கொடைவளமும் அவன் நாட்டில் உள்ள மயிலின் சிறப்பும் இவ்வகப்பாடலில் எடுத்துரைக்கப்படுகிறது. மயில் தோகை போன்ற வளைந்த சுருண்ட கூந்தலை உடையவள் தலைவி என்பதைப் பாராட்ட வந்த பரணர் நன்னன் பற்றிய செய்தியையும் உடன் இயைத்துச் சொல்கிறார்.
இதே பரணர் குறுந்தொகைப் பாடலில் நன்னனின் செயல் ஒன்றில் குறை காணுகின்றார்.மண்ணிய சென்ற ஔநுதல் அரிவைபனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பிற்குஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறைபொன்செய்பாவை கொடுப்பவும் கொள்ளான்பெண்கொலை பரிந்த நன்னன் போலவரையா நிலத்துச் செலீஇயரோ அன்னை!ஒருநாள் நகை முக விருந்தினன் வந்தெனபகைமுக ஊரின் துஞ்சலோ இவள் (குறுந் 292) (குறிஞ்சி) (பரணர்)
என்ற இப்பாடலில் நன்னன் தீமை விவரிக்கப்படுகிறது. அவன் பெண்ணுக்குத் தீமை செய்ததுபோல தலைவியின் தாய் தலைவனைச் சந்திக்கவிடாது இரவும் பகலும் விழிப்புடன் இருப்பதாக இப்பாடல் தாயைக் குறைகூறுகின்றது. தாயைக் குறை கூறினாலும் அவளின் நல்லுள்ளம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதே போல உலகம் நன்னனைப் பழி சொன்னாலும் நன்னன் தாயுள்ளம் கொண்டவன் என்பதால் இங்குத் தாய்க்கு அவன் உவமையாக்கப் பெற்றுள்ளான்.
இப்பெண் செய்த தவறு பின்வருமாறு. அவள் கோசர் குடியினள். அப்பெண் ஒருமுறை ஆற்றில் குளிக்கச் செல்லும்போது நன்னன் வளர்த்து வைத்திருந்த நெடுநாள் வாழவைக்கும் மாமரத்தின் பிஞ்சொன்று எதிர்படுகிறது. அதனை அவள் எடுத்து உண்டுவிடுகிறாள். அதன் உண்மை வலிமை தெரியாது என்ற போதிலும் இவளின் இச்செய்கை நன்னனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாத்திரம் அவளைக் கொலை செய்யும் அளவிற்குச் செல்லுகின்றது.
இதனைக் கேள்விப்பட்ட கோசர்கள் அப்பெண்ணைக் காக்க எண்ணுகின்றனர். எண்பத்தொரு களிறுகளுடன் பொன்னால் செய்யப் பெற்ற பாவை ஒன்றையும் அவர்கள் அளிக்கின்றனர். இருப்பினும் அவற்றை மறுத்து அந்நன்னன் அப்பெண்ணைக் கொன்றுவிடுகிறான். இதுவே நன்னன் செய்த கொடுமையகின்றது.
இக்கொடுமைக்குத் தக்க பதிலடியைக் கோசர்கள் தருகின்றனர். இவர்கள் பற்றிப் பல பாடல்களில் செய்திகள் காணப்படுகின்றன.
கோசர்கள் நியமம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்கள். அவ்வூர் கடல் போன்ற ஆராவாரத்தினை உடையது. புது வருவாயினையும் உடையது. இரும்பால் செய்யப்பட்ட படைக்கலன்கள் உண்டாக்கிய வடுக்களை உடைய முகத்தினைக் கொண்ட அஞ்சாமையையுடைய கோசர்கள் வாழ்வது. இத்தகைய ஊரினைத் தந்தாலும் அவளின் பெற்றோர் தன்மகளைத் தாரார் என்ற பொருள்பட ஒரு பாடல் அகநானூற்றில் உள்ளது.
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர்இரும்பு இடம் படுத்த வடுவடை முகத்தர்கருங்கட் கோசர் நியமம் ஆயினும்உறும் எனக்கொள்குநர் அல்லர்நறுநுதல் அரிவை பாசிழை விலையே (அகம் 90. மதுரை மருதன் இளநாகன் நெய்தல்)இக்கோசர்கள் அஃதை என்ற மன்னனுக்குப் போரின்போது உதவி பரிந்துள்ளனர் என்பது கல்லாடனார் பாடிய மற்றொரு அகநானூற்றுப்பாடல் வழி தெரியவருகிறது.
மாவீசு வண்மகிழ் அஃதைப்போற்றிகாப்ப கை நிறுத்த பல் வேல் கோசர்( பாலை கல்லாடனார் அகம் 113)
இவ்வகையில் கோசர் என்ற இனத்தார் வீரமிக்கவர்கள் என்பது அகப்பாடல்கள் வழி தெரியவருகிறது.
பரணர் பாடிய குறுந்தொகைப்பாடல் இதன் அடுத்த நிகழ்வு வளர்ச்சியை எடுத்துரைப்பதாக உள்ளது.
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீஅழியல் வாழி தோழி நன்னன்நறுமா கொன்று ஞாட்பில் போக்கியஒன்று மொழிக் கோசர்போலவன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.(குறுந்தொகை 73 பரணர் குறிஞ்சி)
பெண் கொலை புரிந்த நன்னனைப் பழிவாங்க சூழ்ச்சி செய்தனர் கோசர்கள். இந்நிழ்ச்சி வெற்றி பெற்றதன் விளைவு நன்னன் இறந்து பட்டான். அவனின் இறப்பு பரணருக்கு வருத்தத்தைத் தந்துள்ளது. அதனால் இச்சூழ்ச்சித் திறத்தைக் கேலி செய்யும் வண்ணம் தலைவி பாடுவதாக இப்பாடலை அவர் பாடியுள்ளார்.
கோசர்கள் தன் இனப் பெண்ணைக் கொலை புரிந்ததற்காக நன்னனைப் பழிவாங்க ஒரு சூழ்ச்சியைச்செய்தனர். அந்தச் சூழ்ச்சி சில பாடல் மகளிரை அஃதை என்ற மன்னனிடம் அனுப்பகின்றனர். அவர்களுக்கு அம்மன்னன் நிறைய யானைகளையும் பரிசுப் பொருள்களையும் தருகின்றான். அவ்வாறு பெறப்பட்ட யானைகளைக் கோசர்கள் நன்னனின் காவல் மரமான மாமரத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்கின்றனர். இவ்யானைகள் அந்த மாமரத்தை வேரொடு சாய்த்து விடுகின்றன. இதனால் கோபமுற்ற நன்னன் உடனே போர் தொடுக்க அப்போரில் அவன் உயிர் விடுகின்றான்.
மாம்பிஞ்சு ஒன்றைத் தின்ற பெண்ணுக்குக் கொலை தண்டனை என்றால் மாமரத்தை அழித்த எங்களுக்கு என்ன தண்டனை என்பதே கோசர்கள் ஏற்படுத்திய சூழ்ச்சியாகும்.
இக்கோசர்களைப் பெற்றிய குறிப்ப புறநானூற்றில் ' வென்வேல் இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார் இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் பெரு மரக்கம்பம் போல (புறம் 169) ' என்ற பாடல் வழி அறியமுடிகிறது. இப்பாடல் வழி கோசர்கள் வேல் வீசி படைக்கலம் கற்பர் என்பது மட்டுமே தெரியவருகிறது. ஆனால் அகப்பாடல்கள் வழி அவர்களின் முழு நிலையையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.இக்கோசர்களும் ஒரு பெண்ணால் அழிந்தனர். அது பெற்றிய செய்தி அகநானூற்றில் கிடைக்கின்றது. அன்னி மிஞிலி என்ற பெண் கோசர்களை வென்ற நிகழ்வு உவமையாக அகப்பாடலில் இடம் பெறுகின்றது. அன்னி மிஞிலிக்கு கோசர் மறைந்தது மகிழ்வைத் தந்ததைப் போல தலைவிக்குத் தலைவன் இன்பம் அளித்தான் எனப் பரணர் பாடுகிறார்.
பரணர் நன்னனின் அன்பை அறிந்தவர். அவன் அழிவின் போது அழுதவர். அவனை அழித்தவர்கள் சூதால் இறந்து பட்டபோது அவர் பெரிதும் மகிழ்ந்துள்ளார். இதன் காரணமாக அவ்வழிவை அவர் அகப்பாடலில் உவமையாக்கி மகிழ்ந்துள்ளார்.
''பாசிலை அமனற் பயறு ஆ புக்கெனவாய்மொழிக் கோசர் நவைத்த சிறுமையின்கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்சினத்தின் கொண்ட படிவம் மாறாள்மறம் கெழு தானைக் கொள்ள குறும்பியன்செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறியஅன்னி மிஞிலி போல மெய்ம்மலிந்துஆனா உவகையேம் ஆயினெம்'' ( அகம் குறிஞ்சி பரணர் 262) இப்பாடலில் பசு ஒன்று கோசர்தம் தட்டைப்பயிறு விளைந்த நிலத்தில் மேய்ந்துவிட அப்பசுவின் சொந்தக்காரனான அன்னிமிஞிலி என்ற பெண்ணின் தந்தையைக் கண்களைக் குத்திக் கோசர்கள் குருடாக்கி விடுகின்றனர். இக்கொடுமையைக் கண்ட அன்னி மிஞிலி திதியன் குறும்பியன் ஆகியோருக்குக் கூறி பகையை ஏற்படுத்தி கோசரை வெல்கிறாள். அதுவரை அவள் கலத்தில் உண்ணா நோன்பும் தூய ஆடை உடுக்கா நோன்பும் நோற்றுவந்தாள். அவளின் மகிழ்வு தலைவியின் மகிழ்விற்கு ஒப்பாக்கப்படுகிறது.
இவ்வாறு கோசர் நன்னன் அன்னிமிஞிலி திதியன் குறும்பியன் போன்ற மன்னர்களின் புறச் செயல்கள் இப்பாடல்களின் பின்னணியில் அகப்பாடல்களில் நின்று வரலாற்றுச் செய்திகளை அறிவிக்கின்றன என்பது எண்ணத்தக்கது.
ஆட்டனத்தி ஆதிமந்திஆதி மந்தி கரிகாலனின்மகள். ஆட்டனத்தி என்பவன் ஆடுதல் தொழில் தெரிந்தவன். இவனை ஆற்றுவௌளம் கொண்டு செல்லும் போது மருதி என்பவள் அதனைக் காட்டி ஆதிமந்திக்கு உண்மையை அறிவிக்கிறாள். அந்த உதவி செய்ததாலே பெருமை பெற்ற அவளைப் போல மழை பொழிந்தது என்று பரணர் ஓர் உவமை வாயிலாக அகப்பாடலில் ஆட்டனத்தியை நினைவு படுத்துகின்றார்.
முழவு முகம் புலராக் கலிகொள் ஆங்கண்கழாஅர்ப பெருந்துறை விழவின் ஆடும்ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவ மொய்ம்பின்ஆட்டனத்தி நலன் நயந்து உரைஇதாழ் இருங் கதுபின் காவிரி வவ்வலின்மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்தஆதி மந்தி காதலற் காட்டிபடுகடல்பக்க பாடல் சால் சிறப்பின்மருதி அன்ன மாண்பகழ் புறீஇயர்சென்மோ வாழி தோழி பல்நாள்உரவு உரும் ஏறொடு மயங்கிஇரவுப் பெயல் பொழிந்த ஈர்ந்தண் ஆறே.( பரணர் அகநானூறு 222 குறிஞ்சி)
இப்பாடலில் மருதியின் பகழ் எடுத்துக்காட்டப்படுகிறது. அகம் 76 135 236 ஆம் பாடல்களிலும் இதே செய்தியைப் பரணர் பதிய வைக்கின்றார். குறுந்தொகையில் ஆதிமந்தியே தன் அனுபவமாக பாடியப் பாடல் ஒன்றும் உள்ளது.
மள்ளர் குழீஇய விழவினானும்மகளிர் தழீஇய துணங்கையானும்யாண்டும் காணேன் மாண் தக்கோனையானும் ஓர் ஆடுகள மகளே என்கைக்கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்ந்தபீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே (குறுந்தொகை மருதம் ஆதிமந்தி 31)
இவ்வகையில் அகப்பாடல்களில் தொட்ட தொட்ட இடமெல்லாம் புறச் செய்திகள் நின்று வளமை சேர்க்கின்றன.பத்துப்பாட்டில் உள்ள முல்லைப்பாட்டும் பல புறச் செய்திகளை உள்ளடக்கி உள்ளது. முல்லைக்குப் புறனான வஞ்சிப் போரை அதன் காட்சிகளை அப்போர்களத்து உள்ளோரை எனப் பலரை அது காட்டுகின்றது. விரிச்சி கேட்டல் என்ற புறத்துறையும் அதனுள் கிடக்கின்றது.
'' சேண் நாறு பிடவமொடு பைம் பதல் எருக்கிவேட்டும் பழை அருப்பம் மாட்டிஇடு முட் பரிசை ஏமுற வளைஇபடு நீர்ப பணரியின் பரந்த பாடிஉவலைக் வுரை ஒபுகிய தெருவில்கவலை முற்றம் காவல் நின்றதேம் படு கவள சிறுகண் யானைஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்தவயல்விளை இன்குளகு உண்ணாதுநுதல்துடைத்து''(அடி 2534)என்று போர்ப்பாசறைக் காட்சி காட்டப்படுகிறது.'' எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்உடம்பின் உரைக்கும் உரையா நாவின்படம் பகு மிலேச்சர் உழையர் ஆகமண்ட அமர் நசையொடு கண்படை புறாஅதுஎடுத்து எறி எஃகம் பாய்தலின் பண் வுர்ந்துபிடிக்கணம் மறந்த வேழம்பாம்ப பதைப்பன்ன பருஉக் கை துமியத்தேம் பாய் கண்ணி நம் வலம் திருத்திச்சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்தோல்துமிபவைந் நுனைப் பகழி முழ்கலின் செவி சாய்த்துஉண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கைமுடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்துபகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்''(அடி 64 73)என்று அரசனின் நிலையும் அரச சுற்றத்தின் நிலையும் முல்லைப்பாட்டுள் எடுத்துக்காட்டப்படுகிறது. இத்தகைய காட்சி நயம் புறம் பாடும் நூல்களுள் கூட இல்லை என்பது தெளிவுஇவ்வாறு பல்வேறு நிலைகளில் புறச் செய்திகள் அகப்பாடல்களில் அமைந்துச் சிறப்பினை மிகுவிக்கின்றன .

1 கருத்து:

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்பு நண்பர் திரு.மு.பழனியப்பன் அவர்களுக்கு

உங்கள் சங்கப்பாடல்களில்
முல்லைப்பாட்டின்
முழு எழில்க‌ண்டேன்.
த‌மிழ்ச்சொல் ஒவ்வொன்றும்
இர‌ண்டாயிர‌ம் ஆண்டுக‌ள்
நீள‌த்தையும் தாண்டிய‌
நுண்ணிய‌ தூரிகை காட்டும்
எழில்ந‌ல‌ம் அது.
புதிய‌ த‌லைமுறை
"இது என்ன‌ ஹீப்ருவா? கிரேக்க‌மா?
புரிய‌வில்லையே?"
என‌ அந்நிய‌ப்ப‌ட்டுவிடும்
ந‌ம் பைந்த‌மிழிலிருந்து!
அதை த‌விர்க்க‌
இது போன்ற‌
உங்க‌ள் த‌மிழ்ப்ப‌ணி
மேலும் மேலும் ஓங்க‌ட்டும்.

பாராட்டுக‌ளுட‌ன்
ருத்ரா (இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)
< epsivan@gmail.com >