சனி, மே 17, 2025

திருப்பூவனம் காசிகாந்த சுவாமிகள் வரலாறு

 

திருப்பூவனம் காசிகாநந்த சுவாமிகள் வரலாறு


 

கோவிலூர்  மடலாயத்தின் வேதாந்த மரபு தமிழகத்தின் ஊர் தோறும் பரவி வந்துள்ளது. சிதம்பரம்,  திருவண்ணாமலை  இந்தத் தெய்வீக நகரங்களில் வேதாந்த மரபு செழித்ததுபோலவே திருப்பூவனத்திலும் செழித்தது. தேவகோட்டையைச் சார்ந்த காசி என்றழைக்கப்பெற்ற காளியப்பன்  என்ற இயற்பெயர்  கொண்ட காசிகாநந்த சுவாமிகள்  திருப்பூவனத்தில் மடம் அமைத்து வேதாந்த நூல்கள் பலவற்றை இயற்றியும் மொழி பெயர்த்தும் ஆற்றிய பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை.

தேவகோட்டையில் மாத்தூர் திருக்கோயிலைச் சார்ந்த மணலூர் பிரிவில பெரியணன் என்ற பெரியார் வாழ்ந்து வந்தார். அவரின் குமாரர் இராமசாமி ஆவார். இவர் பொருள் சிறப்பும், பக்திச் சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்றவர். இவரின் மனைவி உமையம்பிகை அம்மையாரும் இவரின் கருத்துக்கு ஏற்ப இசைந்து இல்லறம் நடத்தியவர். இவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் இருந்தும் மகப்பேறு வாய்க்கப் பெறவில்லை. இது பெரும் குறையாக அவர்களுக்கு அமைந்தது.

ஒருநாள் இவர்களின் இல்லம் நாடி வந்த சிவனடியார் ஒருவர் இவர்களின் இல்லற நல்லறத்தைக் கண்டு இவர்களைப் பாராட்டினார்.  தங்கள் இல்லத்திற்கு வந்து தங்கிய சிவனடியாரைக் கடவுளாகவேப் போற்றி இவர்கள் வணங்கினார். அவர் இவர்களுக்கு உமையம்பிகை அருளால் மகப்பேறு உண்டாகும் என்று நல்வாக்கு அருளினார்.

சில நாள்களில் உமையம்பிகையாருக்குத் திருவயிறு வாய்க்கப் பெற்றது. நான்கு குழந்தைகள் இவர்களின் குலம் விளங்கப் பிறந்தனர்.  அவர்களுக்குப் பெரியணன், பழனியப்பன், காளியப்பன், விசாலாட்சி என்று பெயரிட்டு வளர்த்தனர். இவர்களுள் காளியப்பன் காசி என்றும் அழைக்கப்பெற்றார். இவரே ஞானம் தேடி கோவிலூர் அடைந்து வீரசேகர ஞான தேசிகரைப் பணிந்து காசிகாந்த சுவாமிகளாகப் பின்னாளில் அறியப் பெற்றார்.

காளியப்பன் என்ற பெயர் முன்னர் சிவனடியார் சொல்லிய வண்ணம், தேவி உபாசனையால் பிறந்தவராகக் கருதப் பெற்று காளியின் திருப்பெயரைப் பெற்றார். இவர் மற்ற குழந்தைகளைவிட ஞானத் தேடல் உள்ளவராக விளங்கினார்.

      திண்ணைப் பள்ளியில் கற்பிக்கும் பாடங்களை விரைவில் கற்றுத் தேர்ந்தார். உலக நீதிகளில் அதிக ஈர்ப்பு செலுத்தினார். குளக்கரைகளில் தம் காலத்தைக் கழித்து வந்தார்.  குளித்தின் கரை அடுக்குகளில் உள்ள வெண்மை நிறக் கற்கள் எல்லாம் இவருக்குச் சிவலிங்கமாகத் தோன்றின. அவற்றை வழிபடுவது இவரின் வழக்கமாக இருந்தது.

      இந்நிலையில் காளியப்பரைப் பர்மாவிற்குத் தொழில் நிமித்தமாகச் சென்று வர குடும்பத்தார் பணித்தனர். தன் பத்து வயதில் பர்மாவிற்கு வணிகம் செய்ய இவர் சென்றார். அங்கு பர்மிய மொழி, இந்துஸ்தானி (இந்தி) ஆகிய மொழிகளை விரைவில் இவர் கற்றுக்கொண்டார். இம்மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவராக இவர் விளங்கினார்.

      பர்மாவில் இருந்த காலத்தில் இவருக்கு ஞானத் தேடல் அதிகமானது. அதனால் தாய்நாட்டிற்குத் திரும்பி, தனக்கு ஞானம் நல்கும் குருபிரானைத் தேடினார். பற்பல இடங்ளில் தேடித் தெளிந்து கோவிலூர் வந்து சேர்ந்தார். கோவிலூர் வேதாந்த மடத்தில் குருபிரான சீர் வளர் சீர் வீரசேகர ஞான தேசிக சுவாமிகள் அருளாட்சி செய்து வந்தார். அவரைக் காளியப்பன் வணங்கித் தொழுதார். இவரின் திருமுகப்பொலிவு கண்ட ஞான தேசிகர் இவரை ஆதரிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஆதரித்துத் தனது தொண்டர் குழாத்துள் ஒருவராக்கி வேதாந்தப் பாடம் சொல்லி வந்தார்.

      மூன்று மாதங்கள் இவ்வாறு அருள்பாடம் நடைபெற்றது. அதற்குள் ஞானக் கடலில் பல்வகை முத்துக்களை அள்ளி அவர் கோர்த்துக் கொண்டார். இந்நேரத்தில் தேனிப்பட்டியைச் சார்ந்த அண்ணாமலை சுவாமிகள் காசிப் பயணம் மேற்கொண்டார். அவருக்கு இந்தி தெரிந்த ஒருவர் வழித்துணைக்குத் தேவைப்பட்டார். அதற்குத் தக்கவராகக் காளியப்பர் கொள்ளப்பெற்று அண்ணாமலை சுவாமிகளுடன் காசிப் பயணம் மேற்கொண்டார். இடையிடையே பல திருக்கோயில்களையும் தரிசித்து தெய்வ அனுபவம் பெற்றார்.

      தேனிப்பட்டி சுவாமிகள் காசியில் சில மாதங்கள் தங்க நோக்கம் கொண்ட நிலையில் காளியப்பர் கோவிலூர் நினைவில் இருந்த காரணத்தால் ஊர் திரும்பினார். சில காலம் சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடத்தில் தங்கியிருந்து நாளும் நடராசப் பெருமானைத் தொழுதார். அதன்பின் கோவிலூர் வந்து வேதாந்தப் படிப்பினைத் தொடர்ந்தார். வேதாந்த நூல்கள் அனைத்தையும் கற்றார்.

      மேலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்று அங்கு தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். வேதாந்தப் படிப்பும் தொடர்ந்தது. தக்க நேரத்தில் வீரசேகர ஞான தேசிகர் இவருக்கு சந்நியாசம் அளித்து காசிகாநந்தர் என்ற அருட்பெயரை வழங்கினார்.

      காசிகாந்த சுவாமிகள்  வேதாந்தம் அறிய மீளவும் காசிப் பயணம் மேற்கொள்ளச் சித்தமானார். பலரின் உதவியுடன் காசிக்குச் சென்று அங்கு வடமொழி நூல்கடல்களைக் கற்று உணர அவரின் உள்ளம் அவா கொண்டது.

      காசியில்  வியாகரணம், தர்க்கம், யோகம், சாங்கியம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை  போன்ற பிரிவுகள் சார்ந்த நூல்கள் பலவற்றை வடமொழியிலேயே  காசிகாநந்தர் கற்றுத் தேர்ந்தார்.

      பல நூல்களை இந்தி, மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் இருந்து மொழிபெயர்த்து அளித்தார்.  பல வேதாந்த நூல்களுக்கு நல்லுரை நல்கினார். பல நூல்களைப் பதிப்பித்தார். பல நூல்களை ஆக்கினார். இவரே வேதாந்த உலகில் அதிக அளவில் நூல் தொகுதிகளை வெளியிட்டவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆனார்.

      இவர் 1930 ஆம் ஆண்டில் திருப்பூவனத்திற்கு வருகை புரிந்து அங்கேயே மடம் அமைத்து தவ வாழ்வு மேற்கொண்டு நிறைவாழ்வு பெற்றார்.

கருத்துகள் இல்லை: