வெள்ளி, டிசம்பர் 08, 2006

தமிழன் (கி . மு . 2, கி . பி . 20)



ஒரு குறிப்பிட்ட குமுகாயத்தின் முற்கால நிலையையும், பிற்காலநிலையையும் ஒப்பீட்டறிவது என்பது எளிதான செயல் அன்று. அதற்கு அக்குமுகாயத்தின் வரலாறு, பண்பாடு, நாகரீகம் இலக்கியம் போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தி ஆராய வேண்டும். இவ்வனைத்துத் துறைகளையும் அறிந்த, துறைபோகிய ஒருவர், மேற்கண்ட இருநிலைகளையும் ஒப்பீட்டு ஆராய்கையில் அக்குமுகாயத்தின் எழுச்சி, வீழ்ச்சி தெரியவரும்.

பாவாணர் வரலாறு, மொழியியல், பண்பாடு, நாகரீகம், இலக்கியம் முதலான பல்துறையறிவு கொண்ட பெருமகனார். அவர் அக்காலத் தமிழனையும், இக்காலத் தமிழனையும் இணைத்துக் கவிதை ஒன்றைப் படைத்துள்ளார். அக்கவிதையுள் கி . மு . 2000 தமிழனையும், கி . பி . 2000 தமிழனையும் கண்டுள்ளார். அக்கவிதை அவரின் நெறிகளைக் கூறுவதாகவும், இக்காலத் தமிழனை எழுச்சிபெறச் செய்வதாகவும் உள்ளது.
பாவாணர் படைத்தளித்துள்ள உரைவிருந்தான திருக்குறள் தமிழ்மரபுரையின் பின்னிணைப்பின் இறுதியில் திருவள்ளுவர் ஈராயிரவாண்டை விழாச் செய்தி என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. இக்கவிதையில் கி. மு. 2000 தமிழரான வள்ளுவரை முன்வைத்து தி (கி) . பி . 2000 தமிழனுக்குப் பல சொல்லி மகிழ்ந்துள்ளார் பாவாணர்.
திருவள்ளுவர் காலம் கி . மு . 2- ஆம் நூற்றாண்டென்று கொள்வதே பொருத்தமாம என வள்ளுவரின் காலத்தை, தமிழ்மரபுரையின் முன்னுரையில் வரையறை செய்கின்றார் பாவாணர். எனவே கி. மு. 2000 முதல் கி. பி. 2000 வரையான நீண்ட வரலாறு கொண்ட தமிழன், அக்குறிப்பிட்ட காலத்தில் பல ஏற்றங்களையும், தாழ்ச்சிகளையும், மாற்றங்களையும், ஏமாற்றங்களையும் கண்டிருக்கக்கூடும். அவற்றை மதிப்பீடு செய்யும் வண்ணமாக பாவணரின் இக்கவிதை அமைந்திருப்பதை எண்ணுகையில் அவரின் முக்கால அறிவு புலனாகின்றது.
நூற்றியெட்டு வரிகளைக் கொண்டு, நேரிசை ஆசிரியப்பா யாப்பில், யாக்கப் பெற்ற இக்கவிதை கூறவரும் இன்றியமையாக் கருத்து இது தமிழகமே, இதில் தலை தமிழே என்பதாகும்.
தமிழனின்பழம் பெருமை.
தமிழினத்தீரே எனத் தொடங்கும் இக்விதையின் முதற்பகுதி, தமிழனின் பழம்பெருமையை நிலைநாட்டுவதாக உள்ளது.
முதற்றனித் தாய்மொழி வளர்த்தனர் யாரே
பல்துறை இலக்கியம் பாவினி யன்றபின்
பொருளிலக் கணமும் புணர்ந்தவர் யாரே
முத்தமிழ் எனவே இயலிசைக் கூத்துடன்
ஒத்த மடிமொழி யுணர்த்தினர் யாரே
சோவென் அரண்மேற் சொல்லரும் பல்பொறிக்
காவல் முதன்முதற் கண்டாற் யாரேஸஸ்ராஸ்ரா (8-14)
எனத் தொடரும் இவ்வரிகள் பாவணர் முதன்முதலாகக் கண்டறிந்து உலகிற்கு எடுத்துரைத்த தமிழனின் பெருமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தனித் தாய்மொழி அரணிடத்து பொறி கண்டமை முதலானவை தமிழனின் தலையாய கண்டுபிடிப்பு என்பது பாவணரின் உயிர்க்கருத்துகளாகும்.
சிவனியம் மாலியம் எனுமிரு மதங்¢களும்
செந்தமி ழோரே கண்ட நெறியாம் (46-47)
என்று இடைக்காலத்தமிழனின் வளர்ச்சியையும் காட்டி, நவீனகாலத் தமிழனை விண்கலம் ஏவச்சொல்லி, அவனைப் பின்வருமாறு பாவாணர் தட்டி எழுப்புகின்றார்.
உங்களைப் போன்றே உடலும் உறுப்பும்
உள்ள அமெரிக்கர் வெள்ளிடை நீந்தி
திங்¢கள் சென்று திரும்பினர் பன்முறை
....
முதன்முதல் பொறிவினை முகிழ்த்தனர் நும்முனோர்
மதிநீர் முதற் சென்றிருத்தல் வேண்டும் (50-56)
அமெரிக்கருக்கு முன்பே தமிழர் பொறிவினை முகிழ்த்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி, ஏன் செயலாற்ற மறந்தாய் மறுத்தாய் தமிழா எனக் கேள்விக் கேட்டு தமிழன் உயரத் தக்கவினை புரிகின்றார் பாவாணர்.
தமிழன் உயர்வு விரிவாகப் பேசப்படும் இக்கவிதையில், அவன் ஏன் தாழ்விற்கு உள்ளானான் என்பதும் காட்டப்பெற்றுள்ளது.
தமிழன் தாழ்விற்குக் காரணம்.
தமிழன் தாழ்விற்கு முக்கிய காரணம் அவன் ஆரிய அடிமையாகத் திகழ்வதே என ஆணித்தரமாக இக்கவிதையில் பாவாணர் எடுத்துரைக்கின்றார்.
பகுத்தறிவைப் பயன்படுத்தாது வைத்தே
மதவியற் பித்தமும் மடவியற் கொடையும்
பழங்குடிப் பிறப்பொடு பேதமை யூட்ட
நிலத்தே வரென்னும் நெடும்பொய் நம்பி
அடிமைப் பட்டும், மிடிமைப் பட்டும்
அஃறிணை யாயினிர் (20-25)
இவ்வரிகளில் வரலாற்றுச் செய்தியொன்றைச் சான்றாக்குகின்றார் பாவாணர். அன்று ... மூவேந்தரே, ஆரிய உவச்சனை நிலத்தேவனென்று நம்பி நெடுஞ்¢சான்கடையாய் விழுந்து வணங்கியபோது அவர் கட்டளை வழிநிற்கும் பேதைக்குடிகள் எங்ஙனம் மீறி நடக்க வொண்ணும் என்று மூவேந்தரின் அந்தணப்பணிவை குறைகூறி, அன்றிலிருந்து தொடங்கிய அந்தணர் ஆளுகை இன்னும் குறைந்தபாடில்லை என வருந்துகின்றனர். ஆ,ங்கிலேயரை விட, அந்தணரே தமிழர்க்கு அதிகம் தீங்குபுரிந்தவர்கள் என்பது அன்னாரின் கருத்து.
ஆங்கிலராட்சிக் காலத்தில் எங்ஙனம் ஓர் ஆங்கிலேயனைக் காணினும் ஆயிரக்கணக்கான இந்தியர் அல்லது தமிழர் அஞ்சியடங்கி நின்றனரோ, அங்ஙனமே ஆரியனைக் கண்ட போதும் நின்றனர். இம்மையில் உடலை மட்டும் தாக்கிய ஆங்கில மாந்தன் அதிகாரம் அத்துனை வல்லமையுள்ளதெனின் இம்மையிலும், மறுமையிலும், உடம்பையும் ஆதனையும் (ஆன்மாவையும்) ஒருங்கே தாக்கும் நிலத்தேவன் எத்துணை வல்லமையுள்ளதாயிருக்கும் என்ற கருத்தை உள்வாங்கிப் பின்வரும் வரிகள் உருவாகியுள்ளன.
பிரித்தானியத்தினும், பிராமணீயம்
பன்மடி கொடிதே, பகரவுங்கொடிதே
முன்ன தொருவ னுடலையே பிணித்தது
பின்னதோ பிறங்கடை யுளத்தையும் பிணிக்கும் (88-91)
இதன் மூலம் பிராமண ஆதிக்கத்தை வன்மையாகப் பாவாணர் கண்டித்துள்ளார். ஆரியர்களே முதல், இடைச் சங்க நூல்களைத் தமது மொழியாக்கிய பின் ஒழித்தனர் என்பதும் அவரது கருத்தாகும்.
முதலிரு கழக நூல்கள் எதுவும்
இதுபோது உண்டோ ஏனிலை ஆய்மின்
ஆரிய மொழியில் அனைத்து மொழிபெயர்த்தபின்
அருந்தமிழ் முதநூல் அழியுண்டவே (28-31)
என்ற இக்கருத்து இன்னும் ஆராய்தற்குரியதாகும்.
சூத்திரர் என்று தமிழரை ஆரியர் வீழ்த்திய சூழ்ச்சியையும் சொல்லி, தமிழர் தாழ்விற்குக் காரணங்களைக் காட்டிய பாவாணர் அவற்றிலிருந்து மீளவும் வழி சொல்கின்றார். அதற்காக வள்ளுவரை முன்நிறுத்தியுள்ளார்.
வள்ளுவரும், வாழும் தமிழரும்
ஆரியர்கள் நூல்கள் வருணபேதத்தினை முன்வைத்து வேதங்களைச் செய்ய, அதனை மறுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனமுழங்கி வள்ளுவர் திருக்குறளினைச் செய்தார். அவர் வாழ்ந்து ஈராயிரம் ஆண்டு கடந்தபின்னும் கூட தமிழன் வருணபேதத்தை விடவில்லை. மாறாக சாதிகளின் எண்ணிக்கை, பிரிவை, சாதிச்சங்கங்களின் திறப்பினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றான். அதனை
திருவள்ளு வராயிர வாண்டைப்
பெருவிளம் பரமாய்ப் பேணிக் கொண்டாடினீர்
அதனா லெதும்பய னானது முண்டோ
எள்ளளவும் அவர் சொல்லேற்றீரோ
பிறப்பொடு தொடுத்த குலப்பிரி வினையாற்
கூண்டுள் விலங்குகள் போன்றடை பட்டே
ஒற்றுமை குலைந்தும் உரனை யிழந்தும்
இனவுணர் வழிந்து, மொழியுயர் வின்றிச்
சிறுமை நிலையிற் பெருமை கொண்டீர் (57-65)
என இழித்துப்பேசுகின்றார் பாவாணர். கி . மு . 2000 ல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என பேசிய தமிழன், கி . பி . 2000 உயிர்க்கொரு சாதி காண்பது, சாதி அடிப்படையில் கட்சி வளர்ப்பது மிகப்பெரிய தாழ்வல்லவா இதனை மாற்ற இனி மேலாவது தமிழன் முயல்வானாள என்ற பாவாணரின் சிந்தனை வலம்வரின் தமிழகம் எழும். வள்ளுவத்தமிழரும், வாழும்தமிழரும் ஒன்றாவர்.
தமிழன் உயர வழிகள்
தாழ்வுகளை மட்டும் சுட்டிச் செல்வது அனைவராலும் இயலும். ஆனால் அவற்றிலிருந்து மீளும் வழிகூற அறிஞர்களால் மட்டுமே இயலும். பாவாணர் தமிழன் மீண்டெழ பின்வரும் வழிகளை இக்கவிதையுள் எடுத்துரைக்கின்றார். புத்தாயிரத்தின் புதிய ஆரம்பத்தில் கால்பதித்துள்ள நம் தமிழர் இதனை ஏற்றால் ஏற்றம் பெறலாம்.
1) எஞ்¢சியிருப்பது செஞ்சொல் தமிழே
அதனை யேனும் அழியாது காப்பீர் (26-27)
2) ஆரியமென்னும் பூரிய மொழியை
அகற்றித் தமிழை அரியணை ஏற்றுவீர் (40-41)
3) கோயில் வழிபாடும் கொண்டாடு மணமும்
வாயில் மொழி தமிழ்வழங்குதல் வேண்டும் (42-43)
4) என்ன பெயரும் இன் தமிழாக்கிக்
கன்னித் தமிழின் கற்பைக் காமின் (48-49)
5) ஒன்றே குலம் உடன்பிறப்பனை வரும்
நிலத்தேவ ரென்றொரு குலத்தோரிங்கில்லை(70-71)
6) குடிமதிப்பிலும் பிற குறிப்புகளிலும்
தமிழன் என்றே தன்குலம் குறிக்க (72-73)
என்ற இத்தமிழாணைகளை இன்றைய தமிழர் ஏற்பாரானால் உலக முதண்மை பெற இயலும். இவற்றுள் எக்கருத்தும், ஏற்க முடியாததல்ல. ஆற்ற முடியாததுமல்ல. ஆற்றி வெற்றிபெற முடியாததுமல்ல. இவற்றினை ஏற்று நடத்திட உறுதி வேண்டும். அந்த உறுதி உடனே வந்திடக்கூடியதல்ல. அனைத்துத் தமிழரும் அறிந்து ஒன்று கூடினால், ஒரே சிந்தனையில் களமிறங்கினால் போதும். வெற்றி கிட்டிடும். இதனைச் சாதிக்க ஓரினமாகத் தமிழர் கூடி, ஒரே சிந்தனை என்னும் ஒருகுடையின் கீழ் வந்திட்டால் பசி , பிணி, பகை நீங்கி தமிழ் ஆட்சி பெறும்,; தமிழன் உடலாலும், உள்ளத்தாலும் இருதிற ஆட்சி பெறுவான் எனக் கருதுகின்றார் பாவாணர். அத்தகைய தமிழ் உலகிற்கு வாழ்த்து கூறுவதாக இக்கவிதை முடிவு பெறுகின்றது.
ஓரினமாகி உலகத்துயர்க
பசியும் பிணியும் பகையும் நீங்கி
இருதிற உடமை ஆட்சியும்
ஒருகுடை நீழல் ஓங்குக உலகே
இக்கவிதையின் மூலம் பாவாணரின் ஆய்வறிவுடன் கூடிய கவிப்புலமையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இதனை அவரின் தமிழ்நெறிகள் அடங்கிய பெட்டகமாக தமிழ்உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.
muppalam2003@yahoo.co.in
palaniappan

1 கருத்து:

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

நல்ல கட்டுரை...!

பாவாணாடின் எழுத்துக்களை நானும் படிப்பவன் !
நன்றி !


பாராட்டுக்கள் !