பாவேந்தர் பாரதிதாசன் இசைத்தமிழ்த் தொகுப்புக்களை அவ்வப்போது படைத்துத் தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளார். இசையமுது, இளைஞர் இலக்கியம், தேனருவி முதலான படைப்புக்கள் அவரின் தமிழிசைக் கொடைகள் ஆகும்.
தமிழிசை கருதி படைக்கப்பெற்ற பாடல்தொகுப்புக்களுள் ஒன்றான தேனருவி 1956 ஆம் ஆண்டு வெளிவந்தாகும். இக்காலகட்டம் தமிழ் நாட்டின் மிக முக்கியமான காலகட்டமாகும். 1953 ல் மொழிவாரி மாநில அமைப்பில் தெலுங்கு தேசம் உருவானது. இதன்பின் கர்நாடகம், கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் உருவாகத் தொடங்கின. மேலும் திருவிதாங்கூர் பகுதியின் பிடியில் இருந்த சில பகுதிகள் இணைந்து தமிழகத்தின் குமரி மாவட்டம் ஆயின. இச்சூழலில் 1956 ஆம் ஆண்டு இப்போதைய எல்லையுடைய தமிழகம் உருவாக்கப்பட்டது.
மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்தபின், அம்மாநில மக்களுக்கே மாநில உரிமைகள் அனைத்தும் உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. தமிழகத்திலிருந்து பிரிந்தது தெலுங்குதேசம் என்பதால் அம்மாநில மொழியான தெலுங்கு தமிழகத்தில் இசையில் ஏற்றம் பெற்றிருப்பதை பலரும் மறுத்து தமிழிசையை முன்னேற்றத் தலைப்பட்டனர். பாவேந்தரும் தமிழிசைக்காகத் தமிழன்னையிடம் விண்ணப்பம் செய்கின்றார்.
“புகன்றிடும் எனக்கும் கேட்கும் தமிழர்க்கும்
புரியாத் தெலுங்கில் நான் பாடுதல் வேண்டுமாம்
தகுந்தமிழ்ி; தன்னிலோர் தமிழ்மகன் தமிழில்
தமிழ்நாடில் பாடுவதை மறந்திட வேண்டுமாம்
விண்ணப்பம் கேள்; என் தமிழிசையே- தாயே!
விண்ணப்பம் கேள்” (பக். 3)
இப்பாடலடிகளில் தமிழ்நாட்டில் தமிழிசையைக் கொணரும் முயற்சி சுடடிக்காட்டப் பெற்றுள்ளது. இதே காலச்சூழலில், தஞ்சைப் பண்டிதர் மு. ஆபிரகாம், மதுரை நாதசுரமேதை பொன்னுச்சாமிப்பிள்ளை, விபுலானந்தர், இசையணிகலம். எஸ். இராமநாதர், கு. கோதண்டபாணியார் முதலானோர் தமிழிசையை ஆய்ந்து முன்னேற்ற உதவினர். பாவாணரும் தமிழிசைக்கு ஊக்கமூட்டினார். அவர் கர்நாடக இசையைத் தமிழிசையே என மொழிந்தார்.
'கூவும் இனிய குயிலே
குமரிநிலத் தென்னிசையே
மேவு கருநாடகமாய்
மிளிர்கின்றதெனக் கூவா '
(பாவாணர். இசைத்தமிழ்க் கலம்பகம். ப.61)
என்பது பாவாணரின் இசைப்பாடல். இவ்வாறு தமிழிசை காக்கப்படவேண்டிய சூழலில் பாவேந்தர் தேனருவி தொகுப்பைப் படைத்துள்ளார்.
இத்தொகுப்பில் குடும்பப்பெண்களின் துயரம், துயருற்ற மகளிர் என்ற தலைப்பில் சுட்டப்பெற்றுள்ளது. ’’இக்காலம் மகளிரின் எழுச்சிக்காலமாகவும் விளங்கியது. பெண்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் எழுந்தன. கல்வியின் விரிவாக்கமும், சமூக விழிப்பின் விளைவும் மகளிர் நிலையில் மாற்றம் எழத் தூண்டின. மகளிர் கல்விப் பயனைப் பெறும்நிலை சிறிது சிறிதாக விரிவடைந்தது. ஆசிரியைப்பணி, அலுவலகப்பணி, மருத்துவப்பணி முதலியவற்றிற்குச் செல்வோரின் எண்ணிக்கை பெருகியது. வெளித்தொடர்பும் விரிவடைந்ததுப் பொது வாழ்விலும் பங்கு கொண்டனர். பெண்களின் உரிமைக்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன’’(தமிழக வரலாறும் பண்பாடும். ப. 575) என பாரதிதாசன் வாழ்ந்த காலப் பெண்கள் நிலையை செல்லம் எடுத்துக்காட்டுகின்றார். இக்கருத்தின் அடிப்படையில் பெண்களின் விழிப்புணர்வு காலமாகவும் 1950 காலப்பகுதி விளங்கியுள்ளது என்பது தெரியவருகின்றது. இவ்வாறு விழிப்புணர்வு கொண்ட பெண்கள் கூட்டம் ஒருபுறம் உருவானபோதும் பெண்களின் குடும்பத்துயரங்கள் குறைந்தபாடில்லை. பெண்களின் குடும்பத் துயரங்களை அவர்களாக வெளியிடவும் முயற்சித்தனர். ஆண்படைப்பாளர்கள் சிலரும் தம் படைப்புக்களில் குடும்பப் பெண்களின் துயரத்தை வெளியிட முயற்சித்தனர். அவ்வகையில் பாவேந்தரும் தேனருவி தொகுதியில் பெண்களின் துயரத்தைப் பாடல்கள் வடிவில் பதிவு செய்துள்ளார்.
மேற்சொன்னவற்றால் தேனருவி தொகுப்பு-பெண்ணுரிமை, தமிழின் இசை இனிமை கருதி பாடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இதனால் தமிழக வரலாற்றுப் பின்புலத்தில் இத்தொகுப்பு பெறும் இடம் சிறப்பிற்குரியதாகின்றது.
பெண்களின் துயரம்.
குடும்பப் பெண்கள், பல துயரங்களை எதிர்கொள்ளுகின்றனர். அவற்றைக் காணும் படைப்பாள உள்ளங்கள் அவர்களுக்காக குரல்தருகின்றன. அத்தை ஒருத்தியிடம் மருமகள் படும்பாட்டை பாவேந்தர் பின்வருமாறு விவரிக்கின்றார்.
’’குற்றம் ஒன்றுமே செய்யாதபோதும்
கூந்தலைப்பற்றி இழுத்தார்- அத்தை
குப்புறத் தள்ளி மிதித்தார்.
முத்தம் கொடுக்க அத்தான் எனைத்தாவும்
முகத்திற் புண்கண்டு துடிக்கும்- அத்தை
அடித்தார் என்றால் என்ன நடக்கும்’’ (ப. 21)
என மருமகள் படும்பாடு பாவேந்தர் கைவண்ணத்தில் துயர்தரும் இசைப்பாடலாக வெளிப்பட்டுள்ளது. இப்பாடலில் மகனின் செயலற்ற போக்கும், மருமகளின் அவலநிலையும், அத்தையின் அடாதசெயலும் கண்முன் கவிதையாய் விரிகின்றன. கணவன் இருக்கும் சூழலிலே மனைவி படும் துயரம் இதுவென்றால், கணவன் இழந்த கைம்பெண்ணின் நிலை யாது என எண்ணிப்பார்க்கத் துயரம் கூடும். அவற்றையும் பாவேந்தர் இசைத்தமிழில் பாடுகின்றார்.
’’ஆடாத அரங்கானேன்
அன்பினில்லை என்பதனால்
சூடாத மலரானேன்.
தமிழற்ற நாடானேன்
தலையற்ற உடலானேன்.
கமழ்வற்ற பொழிலானேன்
காதலன் இல்லாததினால்
சூடாத மலரானேன்.’‘(ப.20)
என்ற பாடலிலும்,
’’காதலர்க்கு நான் வேம்பானேன்
காண அஞ்சுமோர் பாம்பானேன்- நான்
தீதுசிறிதும் செய்தறியேன் இன்று
தீராப்பழியை நான் சுமந்தேன்
அன்பு வாழ்வை மறந்தாரே-
அறத்தின் மேன்மை இகழ்ந்தாரே- இந்தத்
துன்ப வாழ்க்கை எனக்கேனோ-
என் துணைவரை இனி அடைவேனோ’’(ப.20)
என்ற பாடலிலும்
’’மீளா விடைபெற்று
விட்டு மறைந்தீரோ அத்தானே
ஆளான நாள் முதல்
அன்பு மறவாத அத்தானே
தோளோடு நீங்காத
தோளும் பிரிந்ததோ அத்தானே’’ (ப.21)
என்ற பாடலிலும் கணவனை இழந்த மனைவியின் ஓலத்தைக் கேட்கலாம். இப்பாடல்கள் ஒப்பாரியின் சாயலைப்பெற்றுத் தமிழிசையின் வருத்த மெட்டுபாட்டிகு உரியாதாகின்றன.
கணவனை இழந்தப் பெண்களின் அவலநிலையின் உச்சப்பகுதியாக மற்றொருபாடல் அமைகிறது. கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தியை அடைய ஒரு கயவன் முயல்கின்றான். அவனிடம்...
‘‘ஆளில்லாத வேளையில் வந்தீர்
அடுக்காத சொல் அடுக்கு கின்றீர்
தாளமுடியுமா சொல்வீர் நீவிர்
சற்றே வெளியில் செல்வீர் செல்வீர்
ஆளில்லாத. . . . . .
... ... ...
சமயம் சாய்ந்தன சாதி மறைந்தன
சாயா மடமைகள் சாய்ந்தன ஆயினும்
அமையும் மாதர்க்குத் தொல்லை கொடுத்திடும்
ஆடவர் மட்டும் ஒழிய வில்லையே
ஆளில்லாத. . . . . . (ப.22)
என ஒரு பெண் முறைகேட்கிறாள்.
இவளின் நிலைகண்டு பதறிய பாவேந்தர், அடுத்த அடிகளில் அவளுக்கு ஒரு தீர்வைச் சுட்டுகின்றார்.
’’தமி பெண்களின் படை ஒன்று வேண்டும்
தக்கைகள் உள்ளத்தைத் திருத்த வேண்டும்
உமியல்ல மாதர் வலக்கை -தீயர்
உயிரை இடிக்கும் உலக்கை- ஐயா
ஆளில்லாத. . . . . .
(மேலது)
என்ற இத்தீர்வு பெண்களுக்குத் தைரியம் ஊட்டுவதாக உள்ளது. வலக்கை, உலக்கை என அடுக்குமொழியால் பெண்களின் அவலத்திற்கு நல்ல தீர்வைப் பாவேந்தர் முன்வைக்கின்றார். தமிழ்ப்பெண்களின் படை உருவாக்கப் பாடிய பாவேந்தரின் திறம் இற்றைக்கும் தேவையானது.
விதவைப்பெண்கள் விதவைகளாய் இருப்பதால் தானே இத்துயரம் என எண்ணிய பாவேந்தர், அவர்களுககு மறுமணம் நடக்கக் கருத்துரு தருகின்றார்.
’’மறுமணம் புரிவதால் வராதொரு கேடும்
மறுமணமிலாத பெண் கெடுவதும் கூடும்
குறைபாட்டைத் திரைபோட்டு மறைத்திட வேண்டாம்
கூறினேன் நீ இதை எண்ணிட வேண்டும்’’ (ப. 23)
என்ற அவரின் உதவி மொழிகள் பெண்களுக்கு உதவி புரிவன.
இதன்மூலம் தேனருவி தொகுதி, தமிழிசை மேன்மைக்காக, தக்க சூழலில் பாடப்பட்டுள்ளது என்பது தெரியவருகின்றது. மேலும் தமிழிசையின் வருத்த மெய்ப்பாட்டிற்கு இலக்கியம் தர, பெண்களின் வருத்தங்களை முன்வைத்து, துயருற்ற பெண்கள் என்ற பகுதியைப் பாவேந்தர் பாடியுள்ளார் என்பது தெளிவு.
----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக