முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
முன்னுரை
பாரதியாரைப்
பரப்புவதில் பல நிறுவனங்கள் முன்னிற்கின்றன.
தனி மனிதர்கள், அரசு சாரா அமைப்புகள், அரசு சார்ந்த அமைப்புகள் என அனைத்துத் தரப்பினராலும்
முன்மொழியப் பெறுபவனாக பாரதியார் இருக்கிறார். அவரின் கருத்துகள், கொள்கைள், முழக்கங்கள்,
கொள்கைகள் அனைத்தும் சமுதாய முன்னேற்றத்திற்கானவை.
காலந்தோறும் பாரதியின் சிந்தனைகள் தமிழர்க்கு
உணர்வூட்டுவன. ஒவ்வொரு நாளும் பாரதியின் தேவை இந்தச் சமுதாயத்திற்கு அவசியமாகின்றது.
தரணி போற்றும்
தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழுக்கான தமிழர்க்கான
பலமுன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. தாய்த் தமிழைக் கற்கவும் ஆராயவும் தனித்த நிறுவனமாக
அதுசெயல்பட்டுவருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை நெடிய தமிழ்ச் சிந்தனை
மரபுடையது. தொடர்ந்து மாணவர்களைத் தரமான தமிழைப் பயிற்றுவித்து வருகிறது. இத்துறையில்
நடைபெறும் அறக்கட்டளைப் பொழிவுகள் வலிவும் பொலிவும் மிக்கன. அவற்றை நேர்பட அமைத்து
அவற்றின் சாரங்களை அச்சு வடிவிலும் கொணர்வது சிறப்பிற்குரியது.
மகாகவி பாரதியார்
நினைவு நூற்றாண்டு விழா கருதி தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறையில் நிறுவப் பெற்றுள்ள
அறக்கட்டளையின் சார்பில் இவ்வாண்டு 5-3-2026
அன்று பாரதியின் தராசு என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வாய்ப்பு அமைந்தது.
பாரதியின்
தராசு பாரதியாரின் பாண்டிச்சேரி (புதுச் சேரி) வாழ்வினை மையமிட்டு அமைந்த கற்பனை விவாதப்
படைப்பு. இதனுள் நுழைய வேண்டுமானால் பாரதியாரின் வாழ்வனுபவங்கள், கவிதைகள், கட்டுரைகள்
ஆகியவற்றை நுகர்ந்து அதன்பின் நுழைவது பல சிக்கல்களை தீர்க்கும். பலபுதிய வெளிச்சங்களைத்
தரும். அவ்வகையில் அறக்கட்டளைப் பொழிவினை பாரதியாரின்
வாழ்வனுபவங்கள், பாரதியாரின் தராசு அனுபவங்கள்
ஆகியவற்றை ஆய்ந்து வெளிப்படுத்தும் முறையில் இவ்வறக்கட்டளைப் பொழிவின் எழுத்துப் பதிவு படைக்கப்பெற்றுள்ளது.
முதல் கட்டுரை
பாரதியாரைப் பற்றிய அவருடன் அவர் வாழ்வில் இணைந்து பழகிய மனைவி, மகள்கள், அக்கம் பக்கம் வாழ்ந்த பெண்கள் ஆகியோரின் பதிவுகளை
அடிப்படையாக வைத்து பாரதியின் பெண்கள் பெண்தன்மையுடன் எழுதிய பாரதி அனுபவங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
இரண்டாம்
கட்டுரை பாரதியாரின் தராசு பற்றிய மதிப்பீட்டை வழங்குகிறது. இதனை சிந்தனை செய்ய உதவிய
தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ . தேவி அவர்களுக்கும், தமிழ்த்துறைப்
பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கும் எனது நன்றி.
பல்கலைக்கழகத்
துணைவேந்தர் உள்ளிட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பதிவாளர்கள் ஆகியோரும் எனது நன்றி.
இவ்வறக்கட்டளைப் பொழிவின்போது இருந்து கேடட அவையோர் பாரதியார் பற்றிய கருத்துகளை இனிதாய்க் கேட்டமை
மிக்க மனநிறைவைத் தந்தது. அம்மன நிறைவு தந்த மகிழ்ச்சியா் இந்த எழுத்து முயற்சி வெற்றி கரமாக அமைந்தது. இதனைத்
தமிழுலகம் ஏற்று மகிழட்டும். பாரதி புகழ் பரவட்டும்.
அன்புடன்
மு.பழனியப்பன்
பாரதியின் பெண்கள்
தமிழ் இலக்கியப்
பரப்பில் குறிக்கத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
பாரிதியாரின் கவிதைகள், உரைநடைகள், புதினம், வசனகவிதைகள், காவியங்கள், இதழ் பங்களிப்புகள்
அனைத்தும் தமிழுக்குப் புதுமை சேர்த்தன. பாரதியாரின்
பெண்ணுரிமைக் கருத்துகள் அவரின் பாடல்களிலும், உரைநடையிலும் வெளிப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தின் பெண்ணடிமைப் போக்கினை மாற்ற உதவின. பாரதியாரின் படைப்பு இயக்கம் தமிழ்ச் சமுதாயம் பெண்ணுரிமை
பெற்று விளங்க உதவியது. அவரால் பெண்கள் நலம் பெற்றதும், பெண்களால் அவர் வாழ்வுச் செய்திகள்
நலம்பெற்று வெளிப்பட்டதும் வேறு ஒருவருக்கும் கிடைக்காத பாரதியாருக்கு மட்டுமே கிடைத்த சீர்மையாகும்.
பாரதியாரின்
துணைவி செல்லம்மாள் பாரதி, பாரதியாரின் மகள்கள் தங்கம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, பாரதியாருடன்
புதுச்சேரியில் உடன் வாழ்ந்த மண்டயம்
சீனிவாசாச்சாரியார் மகள் யதுகிரி, பாரதியாரின்
பேத்தி விஜய பாரதி ஆகியோர் பாரதியாரைப் பற்றியும் அவரின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் பற்றியும்
எழுதியுள்ள பக்கங்கள் பாரதியாருக்கு மட்டுமே கிடைத்த பெண்ணிலக்கியங்கள் ஆகும். பாரதியார் பெண்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும்
என்று எடுத்த முன் முயற்சிகள் அவரது இல்லத்துப் பெண்களாலேயே வெற்றியை நோக்கிக் கொண்டு செலுத்தப்பெற்றுள்ள நிலைப்பாடு
அவரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்குக் கிடைத்த
பெருவெற்றியாகும்.
தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம்
செல்லம்மாள் எழுதிய
தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் என்ற நூல் பாரதியார் வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
இந்நூல் பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள்
பாரதியுடன் செலலம்மாள் திருநெல்வேலி கைலாசபுரத்தில் இருந்த காலத்தில் எழுதப்பெற்றுள்ளது.
இது செல்லம்மாள் பாரதியால் எழுதப்பெற்றது என்பதை விட சொல்லப்பெற்றது என்பதே பொருத்தம்
ஆகும்.
செல்லம்மாள் பாரதி சொல்லச் சொல்ல அதனைக் கேட்டு கேட்டுத் தங்கம்மாள் பாரதி செல்லம்மாள்
சொன்னது போலவே எழுதியது என்பதே சரியாகும். குறிப்பாக இது வாய்மொழி இலக்கியம். ஒரு பெண் தன் கணவனைப் பற்றி தன் மகளிடம் பகிர்ந்து
கொண்ட செய்தி என்ற அடிப்படையில் முழுக்க முழுக்க இது பெண் படைத்த பெண்ணிலக்கியமாக விளங்குகிறது.
இந்நூல் முதல் பதிப்பில் சுத்தானந்த பார்தியாரின் முன்னுரையுடன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டு
வெளிவந்தது. அதில் அவர் ‘‘ பெண்ணுலகிற்குத்
தாம் சொல்ல வேண்டியது, செய்து காட்ட வேண்டியதெல்லாம் பாரதியார் இதோ நம்முன் இருக்கும்
இந்த அம்மையார் மூலமே நிறைவேற்றினார்’’ என்று
குறிப்பிடுகிறார். பாரதியின் பெண்கள் சம உரிமை
பெற்றவர்கள் என்பதற்கு நேரடி சாட்சி செல்லம்மாள் பாரதியாவார்.
செல்லம்மாள்
பாரதி எழுதிய இந்நூல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டு
மீண்டும் இரண்டாம் பதிப்பாக வருகிறது. அப்போது பாரதியின் மகள் தங்கம்மாள் பாரதி முன்னுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் ‘‘ பாரதியார் சரித்திரத்துக்கு முகவுரை தேவையில்லை. அவர் தமிழ்நாட்டு மகாகவிகளில்
ஒருவரென்பது நாடறிந்த செய்தி. ஆனால் அவர் உயிரோடிருக்கும்போது, ஜனங்கள் அவரைப் பயன்படுத்திக்
கொள்ளாதது போலவே, அவர் மறைந்த பிறகும் அவரது உண்மையான வரலாறுகளை மக்கள் அறிந்துகொள்ள
முடியாமலே இருக்கிறார்கள். அவரைப் பற்றித் தவறான விஷயங்களும் கற்பனைக் குறிப்புகளும் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் வருகின்றன. பொது ஜனங்கள் அவைகளை நம்பி விடுகிறார்கள். ஒருவர்
மேலும் நான் குறை கூறவில்லை. சரியான சரித்திரம் இதுவரை வெளிவராதபடியால் இந்தத் தவறுகள்
ஏற்பட்டன. இந்தப் புத்தகத்தில் உண்மையான சம்பங்களே வெளியாகி இருக்கின்றன. பாரதியாரின்
அத்தையிடம் நான் நேரில் கேட்டவை. என் தந்தையாரின் சரித்திரத்தை என் தாயரே கூறுவுதுபோல
எழுதியிருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் உண்டு. பாரதியாரைப் பற்றித் தவறான குறிப்புகளை
என் தாயார் படிக்கும்போதெல்லாம். மனம் புண்ணாகி ‘‘ஐயோ! உண்மையான செய்திகளைத் தமிழரின் காதுக்கு எட்டச்
செய்வது எப்படி? ’’ என்று ஏங்குவார். ’’[1]
என்று குறிப்பிடுகிறார்.
இந்த முன்னுரை
வழியாக செல்லம்மாள் பாரதி சொல்லச் சொல்ல செய்திகளை உள்வாங்கி செல்லாம்மாவின் போக்கில்
தங்கம்மாள் பாரதி எழுதிய நூல் தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் என்பது தெரியவருகிறது.
மேலும் பாரதி பற்றிய தவறான கருத்துகள் மக்களிடம் பரப்பப்படுவதைத் தடுக்கவும். அவற்றின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தப்பட வேண்டியதன்
அவசியம் காரணமாகவும் இந்நூல் எழுதப்பெற்றதாக
அறியமுடிகின்றது.
இந்நூலில்
பல அரிய செய்திகள் வெளியிடப் பெற்றுள்ளன. விவாகம் என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் செல்லம்மாவிற்கும் பாரதிக்கும்
நடைபெற்ற திருமண நிகழ்வு குறித்து விவரிக்கப்பெறுகிறது.
பாரதி செல்லம்மா திருமண நினைவுகள்
‘‘பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினை முடிந்தது.
அப்பொழுது எனக்கு வயது ஏழு…. கல்யாணம் மிகச்
சிறப்பாக நடந்தது. நான்கு நாட்களும் ஊர்வலம்…. பாரதியாருக்குப் பால்ய விவாகத்தில் அவ்வளவாக பிரியமில்லாவிடினும் ரசிக்கத் தகுந்த கேளிக்கைகள் மிகுதியாயிருந்தமையால் விவாகத்தில் உற்சாகமாகவே காணப்பட்டார்.
‘‘அக்காலத்தில்
விவாகம் முடிந்தவுடன் கணவன் மனைவி பேசுவதில்லை. கணவனைக் கண்டால் ஓடி ஒளிய வேண்டும். பாரதியார் மட்டும் இதற்கு விதிவிலக்காக
நடக்க வேண்டும் என்பார். எல்லோருக்கும் எதிரில்
தேடக் கிடையாத சொன்னமே உயிர்ச்
சித்திரமே மட அன்னமே அரோ
சிக்குது பால் தயிர் அன்னமே பொரு
சிலை வேள் கணை கொலை வேல்
என விரி மார்பினில் நடுவே தொளை
செய்வது கண்டிலை இன்னமே என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே
கன்னத்தினில் குயில் சத்தமே கேட்கக்
கன்றுது பார் என்றன் சித்தமே மயக்
கம் செய்யுதே காமப் பித்தமே உடல்
கனல் ஏறிய மெழுகு ஆயினது இனியாகிலும் அடி பாதகி
கட்டி அணைத்து ஒரு முத்தமே தந்தால்
கைதொழுவேன் உன்னை நித்தமே
என்று என்னைப் பார்த்துக் காதல் பாட்டுக்கள் பாடுவார். நான்
நாணத்தினால் உடம்பு குன்றி எல்லாரையும் போல்
சாதாரணமாக ஒரு கணவன் கிடைக்காமல் நமக்கென்று இப்படி ஓர் அபூர்வமாக கணவர் வந்து வாய்க்க வேண்டுமா
என்று எண்ணித் துன்புறுவேன்.
கிராமத்தில்
பழகிய ஒன்றும் தெரியாத ஏழு வயது சிறுமிக்குக் கவிஞர்களின் காதல் ரச அனுபவம் எப்படிப்
புரியும்’’[2]
என்று செல்லாம்மாள் தன் திருமண நிகழ்வுகள் குறித்து நினைவு
கூர்கிறார்.
மேற்கண்ட
தொடர்களில் செல்லம்மா என்ற பெண்ணின் பெண் அனுபவத் தன்மை வெளிப்பட்டுள்ளது. பெண் எழுத்து வெளிப்பட்டு நிற்கிறது.
குறிப்பாக
எங்களுக்கு மணவினை முடிந்தது என்ற தொடர் பாரதியின்
சரித்திரத்தைச் செல்லம்மாள் ஆற்றொழுக்காகத் தன்
வெளிப்பாட்டில் கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் சாதாரணமாக ஒரு
கணவன் கிடைக்காமல் நமக்கென்று ஓர் அபூர்வமாக
கணவர் வாய்க்க வேண்டுமா ’’ என்ற தொடரில் அவரிள்
கணவர் குறித்த மதிப்பீடு கருதத்தக்கது. அபூர்வமான கணவன் என்ற நிலையில் பார்தியை அவர்
உளம் கொண்டுள்ளார் என்பதை இங்குப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பாரதியார் செல்லம்மாவை
நோக்கிப் பாடிய பாடல் அ்ண்ணாமலை ரெட்டியார்
எழுதிய காவடிச் சிந்தில் இடம்பெறும் பாடலாகும். இந்தப் பாடலை நிலைனவில் வைத்திருப்பதும்
பாரதி அதைத்தான் பாடினார் என்று நினைவில் கொள்வதும் அவரின் பசுமையான திருமண நிகழ்வு நினைவுகளுக்குச் சிறந்த
சான்றுகள். ஒன்றும் தெரியாத எழு வயது சிறுமிக்குப் புரிந்திருக்கிறது பாரதி அபூர்வ
கணவன் என்று.
காதலி செல்லம்மா
பாரதியாருக்கும் செல்லம்மாவிற்கும் திருமணம் முடிகிறது. பாரதியாரின் தந்தை இறப்பு,
காசிக்குப் பாரதி செல்லுதல், அங்குத் தங்கிக் கற்றல் என்று அடுத்தடுத்து பாரதியாரின்
வாழ்வில் மாற்றங்களைத் தரும் நிகழ்வுகள் நடக்கின்றன. பாரதி காசியில் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளின்
உண்மைத் தன்மையைத் தரும் ஆவணமாக செல்லம்மாள் பாரதியின் நூல் அமைகின்றது.
பாரதி தன்
தலைமுடி களைந்து மீசை வைத்து, தலைப்பாகை அணிந்து தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்ட
நிலையில் அதனை அவரின் மாமா ஏற்றுக் கொள்ளாத நிலையையும், பாரதியின் பசி கருதி அவர் தங்கியிருந்த
மாடிக்கு உணவினைக் கொண்டு சென்ற அத்தையின செயலையும் செல்லம்மாள் பாரதி இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
திருவாதிரைக்குத்
தேவாரம் திருவாசகம் பாடுபவர் வராத நிலையில் காசியில் அவரது மாமாவின் கட்டுப்பாட்டில்
இருக்கும் சிவமடத்தில் பக்திப் பாடல்களை இராகமுடன் பாடி மாமாவின் பாராட்டைப் பெற்று
அவரின் கோபம் தணித்த நிலையையும் செல்லம்மாள் பதிவு செய்துள்ளார்.
காசியில் பாரதி விடுதலைக்கான புரட்சித் திட்டங்களில் பங்கெடுப்பதாக
செல்லம்மாளுக்கு ஓர் உறவினர் வாயிலாக தகவல் நேரில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயமுற்ற
செல்லம்மாள் தன் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் செல்லம்மாவின் நினைவில்
இருந்தபடி இந்த நூலில் பதிவு செய்யப்படுகிறது.
உ
சேமம். கடையம்
அநேக நமஸ்காரம். கடையத்தில் எல்லோரும் சேமம். இங்கு நம்ப விசுவநாத
அத்திம்பேர் வந்திருக்கார். அவர் என்கிட்ட ஒரு சமாசாரம் சொன்னார். நீங்கள் ஏதோ தேச சுதந்திர விஷயமாய்ப் பாடுபடுவதாகச் சொன்னார்.
அதுக்காக ஏதோ ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம். சட்டத்துக்கு விரோதமாக இருந்தால்
தீவாந்திரத்திற்குக் கொண்டுபோய் விடுவாளாம்.
எனக்கு இதையெல்லாம் கேட்க பயமாயிருக்கு. அதனால் நான் சொல்றதை ஒரு பொருட்டாய்
மதிச்சுப் புறப்பட்டு வந்துவிடுங்கள். உங்களை
மன்றாடிக் கெஞ்சுகிறேன். இதற்குமேல் நான் என்ன சொல்ல? உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால்
புறப்பட்டு வந்துவிடுங்கள். எந்த நிமிஷத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று
எப்போதும் தவித்துக் கொண்டிருக்கிறேன். கெடுதல் ஒன்றும் ஏற்படக் கூடாது என்று ஸ்வாமியை
வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
செல்லம்மா[3]
என்ற இந்தக் கடிதத் தொடர்களில் பாரதி மீது செல்லம்மாள் கொண்டிருந்த
பற்று, பாசம் ஆகியவற்றை உணரமுடிகின்றது. இதற்குப் பதில் எழுதிய பாரதியார் கடிதத்தை
‘‘எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு’’ என்று தொடங்குகிறார்.
காதலுக்குப்
பின் திருமணம், திருமணத்திற்கு பின் காதல் இல்லை என்ற சாதாரண நிலைகளைக் கடந்து பாரதி
திருமணத்திற்குப் பின் மனைவியைக் காதலியாகக் கண்ட உன்னத நிலை இங்கு கண்டு கொள்ளத்தக்கது. மேலும் ‘‘நீ இந்த மாதிரி
கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து
வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன். உனதன்பன் சி.சுப்பிரமணிய பாரதி’’[4]
என்று கவலைக்கு மருந்தாகத் தமிழ் அமையும் என்று பாரதி சுட்டிக்காட்டிச் செல்லம்மாளுக்குப்
பதில் எழுதுகிறார்.
பாரதியின் உடை அலங்காரம்
பாரதியார் ஆடை அணிவதில் பெருவிருப்பம் உடையவர். இதுபற்றி
ஒருநிகழ்வைச் செல்லம்மா குறிப்பிடுகிறார். ‘‘ பாரதியாருக்கு அப்போது மிக அழகாகச் சிங்காரித்துக்
கொண்டு உலாவுவதில் பிரியம் அதிகம்….. எத்தனைதான் பணமில்லாவிட்டாலும் ஆடை மட்டும்
எப்பொழுதும் புதியதுதான் அணிவார். அந்திய காலத்தில் உயிர் பிரிவதற்குச் சிலமணி
நேரத்திற்கு முன்கூட ஷர்ட்டு கோட்டுக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு தலைப்பாகையைச் செம்மையாகக்
கட்டிக்கொள்வதில் ஈடுபட்டிருந்தார். இப்போது
சில இடங்களில் பாரதி தினத்தன்று அவருடைய அன்பர்கள் கூடி விழாக் கொண்டாடும் தருணங்களில்
‘‘ஐயோ! நம் கவிஞர் பெருமான் கிழிசல் கோட்டு அணிந்து தோளில் அந்தக் கந்தலை மறைக்க இரண்டு
ஊசிகள் (சேப்டி பின்கள் ) குத்திக் கொண்டிருந்தார். என்னே வறுமையின் கொடுமை!’’ என்று
பேசி வருகிறார்கள். ஊசி அணிந்திருந்ததின் உண்மைக் காரணம் அதுவன்று. ராணுவ அதிகாரிகள்,
கப்பல் உத்தியோகஸ்தர்கள் முதலியோர் தம் சின்னங்களைத் தெரிவிக்கத் தோளில் பல நிறங்களில்
பட்டைகளும் மார்பில் பல நூல்களினால் பூக்கள் மாதிரி வேலை செய்த சட்டையும் அணிவதைப்
போலத் தாம் ‘‘பாரத ராணியின் உண்மையான தளகர்த்தன்
’’ என்பதைக் குறிப்பதற்காகவே அவ்விதம் அணிவதாகச் சொல்லுவார். அப்போது கதரும், தேசீய
சின்னமான சர்க்காவும் ஏற்படாததால் இப்படிச் செய்துவந்தார்’’ [5]
என்ற கருத்து பாரதியார் குறித்த பொய்களை விலக்கி
உண்மையை விளங்க வைக்கும்.
மேற்கண்ட தொடரில் பெண் அனுபவம், பெண் சொல்முறை முதலியன தெற்றென
வெளிப்பட்டு பாரதியாரின் செல்லம்மா எழுதிய எழுத்துகள் பெண்படைப்பிலக்கிய அடையாளமாகத்
திகழ்கிறது.
இவ்வாறு பாரதியின் செல்லம்மா எழுதிய பாரதியின் சரித்திரம் பாரதியின் பெண்ணுரிமைக்கு இலக்கணமாகவும், பெண் உலகம் பாரதிக்கு செய்த நன்றிக் கடப்பாாகவும்
விளங்கிப் பெருமை சேர்க்கிறது.
தங்கம்மாள் பாரதி
எழுதிய பாரதியும் கவிதையும்
பாரதியார்
பாடிய பல பாடல்களில் உண்மைச் சூழல்களைத் தங்கம்மாள் பாரதி வெளிப்படுத்தி எழுதிய நூல்
பாரதியும் கவிதையும் என்பதாகும். இதனைக் காரைக்குடியில்
இருந்து புதுமைப் பதிப்பகம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் நாள் வெளியிட்டுள்ளது. இந்நூல் வருகின்ற
பாரதமும் போகின்ற பாரதமும் என்ற தலைப்பில் பாரதியாரால் எழுதப்பெற்ற பாடல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் எழுதப்பெற்ற நிலையை
எடுத்துரைக்கிறது. புதுச்சேரியில் வாழ்ந்த
ஒருவரின் மகனுக்குப் பேய் பிடித்து விட்டதாக அனைவரும் கருதினர். இதன் காரணமாக அந்த
இளைஞன் பல அடாத செயல்களைச் செய்து அனைவரையும்
பயமுறுத்தி வந்தான். அவனைப் பாரதியிடம் அழைத்து வருகிறார்கள். பாரதி சில நாள்கள் அந்த
இளைஞனின் நடவடிக்கைகளைப் பார்த்து அவனுக்கு திருநீறு அணிவித்தார். இதனால் எந்த மாற்றமும்
ஏற்படவில்லை. அப்போது அந்த இளைஞனின் தந்தையார்
இப்படியெல்லாம் செய்வதால் பேய் விலகாது. அதனை போ, போ, போ என்று சொல்லி விரட்ட வேண்டும் என்றார்.
அந்த நேரத்தில் பாடப்பெற்ற பாடல்
வலிமையற்ற
தோளினாய் போ போ போ
மார்பி
லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி
லாமுகத்தினாய் போ போ போ
பொறி
யிழந்த விழியினாய் போ போ போ
ஔங்யி
ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி
ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி
டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை
யென்றும் வேண்டுவாய் போ போ போ
என்ற பாடல் பிறந்த உண்மைச் சூழலைத் தங்கம்மாள் பாரதி தருகிறார்.
பாரதியார்
மற்றும் அவரின் குடும்பத்தார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது பல இன்னல்கள் எதிர்ப்பட்டாலும்
பாரதியாரின் கவிதையாற்றல் அவற்றை அவர்கள் எதிர்
கொள்ளச்செய்து மகிழ்வோடு வாழ வைத்தது என்பது உண்மையாகும். இதனைத் தங்கம்மாள் பாரதியும்
பதிவு செய்துள்ளார்.
‘‘புதுவையில்
பன்னிரண்டு வருஷம் அக்ஞாதவாச்த்திற்கும் எங்களுக்கு
சௌகரியமாய் அமைந்த வீடு ஈசுவரன் தருமராஜர் கோயில் வீதியில் உள்ள சபாபதிச் செட்டியாரின் வீடு.
அந்த வீட்டு மாடியறையில் இப்பொழுதும் பராசக்தி களிநடம் புரிவாள் என்பது என் நம்பிக்கை.
நினைத்துப் பார்த்தால் துக்கம் தொண்டையை அடைக்கிறது.
ஆனந்தம் கண்ணீராய் ஓடுகிறது. மனம் ஸ்தம்பித்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் கவிவாணி தந்தையின்
வாக்கினின்றும் புதிய அழகுடன் தோன்றி எங்களை மகிழ்விப்பாள். என் மனம் ஒரு வித சஞ்சலமின்றி
விடுதலை பெற்றிருந்து சுகமடைந்தது அங்குதான்.
வானம்பாடியைப் போல மனம் உற்சாகத்தோடு சங்கீத
வானில் வட்டமிடும். தந்தையின் கவிதை என்னை ( 12 வயதுதான்அப்போது) முற்றும் துறந்த ஒரு
யோகியைப் போலாக்கியது ’’[6]
என்று குறிப்பிடும் நிலையில் தங்கம்மாள் பாரதியின் வழியாக பாரதியாரின் கவிதை செய் திறத்தை அறிந்து
கொள்ளமுடிகின்றது.
மேலும் புதுச்சேரியில்
பாரதியார் வாழ்ந்த வீடு சபாபதி செட்டியார் என்பவரின் சொந்தவீடாகும். இதில் பாரதியார்
குடியிருந்து வந்தார். வீட்டின் உரிமையளாரான சபாபதி செட்டியார் அடிக்கடி பாரதியாரிடம் வந்து வாடகை கேட்டு நிற்பதும்
பாரதியார் அந்த காலத்தில் ஏதேனும் பாடல்கள் பாடி அவரை மகிழ்விப்பதும் இதன் மூலமாக அவர்
வாடகையைப் பற்றிக் கருதாமல் செல்வதும் நடந்து வரும் வழக்கம். இதனால் இந்தச் செட்டியாருக்கு
விளக்கெண்ணெய்ச் செட்டியார் என்ற பெயரே அமைந்தது. இவரை அவ்வாறே பாரதியார் அழைப்பார்.
‘சபாபதிக்கு
வேறு தெய்வம் சமானமாகுமா?
தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?
என்ற சோமசுந்தர பாரதியாரின்
சிறந்த பாடலடிகளைச் சற்று மாற்றி பாரதியார் ‘‘புதுவை சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா?” என்று பாடுகிறார். இதில் செட்டியாரிடம் பொறுமைக்
குணம் வரவேண்டும் என்றும் பாடுகிறார். ‘‘அபாரமான அருளுடைமையினால் அடக்கிச் சினந்தன்னை
அன்பினை மேற் கொண்டான் -புதுவை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’’ என்று பாரதியார்
பாடலைத் தொடர்ந்து பாடுகிறார். இவ்வகையில் பாரதியார் பற்றிய பல அரிய தகவல்களை அவரின்
பாடல்கள் எழுந்த உண்மைச் சூழலை விளக்கும் வகையில் தங்கம்மாள் பாரதி பாரதியும் கவிதையும்
என்ற நூலை எழுதியுள்ளார்.
சகுந்தலா பாரதியின்
என் தந்தை
பாரதியாரின்
மற்றொரு மகள் சகுந்தலா பாரதி. இவர் திருமணமாகி
வெளிநாடடில் மலேசியாவில் வசித்து வந்தார்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டு நடைபெற்ற பாரதி விழாவினை வானொலி வாயிலாகக்
கேட்டு அதனை முன்னிலைப் படுத்தி தன் தந்தையாரின் உடனான அனுபவங்களை ‘‘ என் தந்தை ’’
என்ற நூலாக வெளியிட்டுள்ளார். அதில்
பாரதியாருக்கும் தனக்குமான வாழ்வனுபவங்களை
அவர் பகிர்ந்துள்ளார்.
‘‘எனக்குப் பொழுது போவதற்காக எண்ணற்ற கதைகள் சொல்லுவார்.
தமிழ்க்கதைகள் முடிந்துவிடும். பஞ்சதந்திரம் மற்றும் சம்ஸ்கிருதக் கதைகள், ‘லாபோந்தேன்’ எழுதிய ஃபிரெஞ்சுக் கதைகள், அவைகளும்
முடிந்து விடும். புதிய புதிய கதைகள், அப்போதைக்கப்போது கற்பனை செய்து கூடச் சொல்வார்.
நட்சத்திரக் கதைகள், கடலலைக் கதைகள் எனப்பலப்பல.
சாதாரணமாக, குழந்தைகளுக்குத் தாய் தந்தையரிடம் மிக்க அன்பு
இருக்கத்தான் செய்யும். ஆனால், நான் அவரிடம் கொண்டிருந்த அன்பு, மதிப்பு, பக்தி எல்லையற்றவை.
‘அண்ணன் ஒருவனை அன்றியே, புவியத்தனைக்கும் தலையாயினோம், என்னும் எண்ணம் மனதிடைக் கொண்டவன்’ என்று பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனனை
அவர் வர்ணிப்பதைப் போல, எனக்கு அவர் எது கூறினாலும் என்ன சொன்னாலும் வேதவாக்கு என்ற
நம்பிக்கை.
எனக்குத் தந்தையிடம் மிக்க சலுகை உண்டு. அதனால், ஒரு நாள்,
என் தாயார் சொல்லியதைக் கேளாமல் மறுத்துரைத்தேன். அவர் உடனே ‘தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே
பாப்பா’ என்று பாடினார். நான் செய்ய வேண்டியதற்
கெல்லாம் ஒரு பாட்டு இப்பொழுது எழுதிக் கொடு என்று கேட்டேன். உடனே ‘பாப்பா பாட்டு’
எழுதிக் கொடுத்தார்’’ என்ற நிலையில் பாப்பா பாட்டு எழுந்ததை அறியமுடிகின்றது.
சகுந்தலா பாரதி தன் தந்தை பாரதியாரின் வாழ்விறுதி
நாட்களை இந்நூலில் விவரித்துள்ள முறைமை பல
உண்மைகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.
‘‘காலை நேரத்தில் சில சமயம் என் தந்தை பார்த்தஸாரதி கோயிலுக்குப்
போவார். அங்கு வாசல் மண்டபத்தில் கட்டியிருக்கும் யானைக்குப் பழம் வாங்கிக் கொடுப்பார்.
பின் அதனுடன் விளையாட்டாகச் சிறிது வார்த்தையாடிவிட்டு வருவது வழக்கம். சில நாளாகக்
கோயில் பக்கம் போகாதிருந்த என் தந்தை ஒரு நாள் வழக்கம்போல யானைக்குப் பழம் கொடுக்கப்
போனார். யானைக்கு மதம் பிடித்திருந்ததால் நான்கு கால்களும் சங்கிலி போட்டுக் கட்டப்
பட்டிருந்தது. ஜனங்கள் கம்பி வேலிக்குப் புறம்பே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
என் தந்தை உள்ளே சென்றபோது அவரை யாரும் தடுக்கவில்லை போலும்! வழக்கம்போல வாழைப்பழத்தை
யானையின் அருகில் சென்று கொடுத்தார். துதிக்கையை நீட்டிப் பழத்தை வாங்கிய யானை, பின்
அவரைத் துதிக்கையால் கீழே வீழ்த்தி விட்டது. யானையின் நான்கு கால்களுக்குமிடையில் விழுந்து
விட்டார்.
கீழே பாறாங்கல் பரவிய தரை. என் தந்தை எழுந்திருக்கவில்லை.
முகத்தினின்றும் இரத்தம் பெருக்கெடுத்து விட்டது. யானை, தன் நண்பனுக்குத் தீங்கிழத்து
விட்டோமே என்ற பச்சாதாபத்துடன் தன் பிழையை உணர்ந்தது போல, அசையாமல் நின்று விட்டது.
அது தன் காலை ஒருமுறை அசைத்திருக்குமானால் அத்துடன் ‘பாரதியார்’ கதை முடிந்திருக்கும். சுற்றி நிற்கும் ஜனங்கள் திகைத்து
விட்டார்கள். உள்ளே நுழைந்து அவரைத் தூக்க ஒருவருக்கும் தைரியம் இல்லை.
அந்த வேளையில் எங்கிருந்தோ வந்தான், குவளைக் கண்ணன். தன்
உயிரைத் திரணமாக மதித்து, உள்ளே குதித்து, என் தந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
பின்னர்க் கேட்க வேண்டுமா? ஜனங்கள் அவரைத் தாங்கிய வண்ணம் கோயில் வாசல் மண்டபத்திற்குக்
கொண்டு வந்தார்கள். எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியாருக்கு விஷயம்
எட்டியது. அவர் ஓடி வந்து ஒரு வண்டியில் என் தந்தையைப் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்குக்
கொண்டு போனார். குவளைக் கண்ணனும் கூடவே போனான்.
ஸ்ரீநிவாசாச்சாரியார் பெண் ரெங்காள் என்பவள் எங்கள் வீட்டிற்கு
ஓடிவந்தாள். சகுந்தலா! அப்பாவை ஆனை அடிச்சுடுத்து என்று அழுது கொண்டே கத்தினாள். கடவுளே!
அந்த ஒரு நிமிஷம் என் உள்ளம் இருந்த நிலையை எதற்கு ஒப்பிடுவேன்? – அப்பாவை ஆனை அடிச்சுடுத்து
– ரெங்காவுடன் பார்த்தஸாரதி கோயில் வாயிலுக்கு ஓடினேன். அதற்குள் அவரை ஆஸ்பத்திரிக்குக்
கொண்டு போய்விட்டார்கள். எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாது, என்ன செய்வது?
திருவல்லிக்கேணியில், விக்டோரியா ஹாஸ்டலில் என் தாயாரின்
இளைய சகோதரர் வசித்து வந்தார். அவரைப் போய் அழைத்து வருவதற்காக விக்டோரியா ஹாஸ்டலுக்குப்
போய்ச் சேர்ந்தேன். அங்கு அவர் குடியிருந்த அறை நெம்பர் தெரியாது. ஒருவாறு தேடிக் கண்டுபிடித்து
அவரிடம் செய்தியைத் தெரிவித்தேன். ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போயிருப்பார்கள்
என நினைத்து அவர் அங்கு சென்றார். பின்பு நான் வீடு திரும்பி வந்தபோது என் தந்தையை
வீட்டுக்குக் கொணர்ந்து விட்டிருந்தார்கள். மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால்
ஏற்பட்ட காயம். தலையில் நல்ல பலமான அடி. நல்ல காலமாக அவரது பெரிய தலைப்பாகையிருந்தபடியால்
தலை தப்பிற்று.
என் தந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லையெனக் கேட்டு என் மனம்
ஒருவாறு ஆறுதல் அடைந்தது. காயங்கள் சிறிது குணமடைந்து அவர் திரும்ப வேலைக்குச் செல்லப்
பல நாள்களாயின’’ என்ற விவரிப்பு பாரதியாரின் இறுதி நாட்களைக் கண்முன் நிறுத்துவனவாகும்.
இவ்வாறு சகுந்தலா பாரதியின் என் தந்தை என்ற நூல் பாரதியாரைப்
பற்றிய பல உண்மைத் தகவல்களை அளிக்க வல்லதாக உள்ளது.
யதுகிரி அம்மாள் எழுதிய பாரதியார் நினைவுகள்
புதுச்சேரியில்
பாரதியார் வழ்ந்த காலத்தில் அவரது வீட்டின் அருகில் மண்டயம் சீனிவாச்சாரியார் வாழ்ந்து
வந்தார். அவரின் மகள் யதுகிரி. இவள் பாரதியாருடனும், அவரது குடும்பத்தாருடனும் நன்கு
பழகியவர். அவர் பாரதியாருடன் தனக்கான வாழ்வனுபவத்தைப் பாரதியார் நினைவுகள் என்ற நூலாக
எழுதியுள்ளார். இதனை அமுத நிலையம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்பதாம் ஆண்டு
வெளியிட்டுள்ளது.
இந்நூலில்
பாரதியார் பற்றித் தனது கருத்தாக நூலின் நிறைவுப் பகுதியில் யதுகிரி அம்மாள் பின்வரும்
நிலையில் குறிப்பிடுகிறார். ‘‘ பாதியாரை எப்போதும் தன்னை அறியாததோர் சக்தி தூண்டும். அவர் பாடும்போது கவிதை தங்கு தடையில்லாமல்
கோவையாக வந்து் கொட்டும். தாம் செய்த கவிதைகளைக் கண்டு சில சமயம் தாமே அதிசயப்படுவார் அவர். பதம், நடை, இலக்கணம், எதுகை,
மோனை என்பவைகளைத் தேடித் தேடி அமைக்கும் கஷ்டம்
அவருக்கு இருக்கவில்லை. அவர் ஒரு வரகவி
பாரதியார்
பல சமயம் தம்மைத் தாமே பல கேள்விகள் கேட்டுக்கொள்வார்.
சிலவேளை நான் கூட அதைக் கண்டு பிரமிப்பது உண்டு.
வேறு சமயங்களில் ‘‘சமுத்திரக் கரையில் யாரோடு பேசினீர் ?’’ என்றால் ‘‘பராசக்தியோடு ,கடலோடு’’ என்று சிரிப்பார். அப்போதெல்லாம் எனக்கு அவர் வார்த்தையின் பொருள் தெரியாது. ஒரு சிறந்த கவிதை வெளிவரவேண்டுமானால்
மனிதன் எவ்வளவு தவம் செய்ய வேண்டும். மனத்தை எப்படிப் பக்குவம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு பாரதி சிறந்த உதாரண புருஷர்.’’[7]
என்ற யதுகிரி அம்மாளின் குறிப்பு பாரதி பற்றிய விமர்சனமாக அமைகின்றது.
யதுகிரி
அம்மாளும் பாரதியின் பெண்கள் என்ற வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். இவரின் வழியாக பாரதியின்
வாழ்வின் நிகழ்வகளைப் பெண்தன்மையுடன் அறிந்து கொள்ளமுடிகின்றது.
சகுந்தலா பாரதியின் மகள் விஜய பாரதி எழுதிய சி. சுப்பிரமணிய
பாரதி
சகுந்தலா
பாரதியின் மகள் விஜய பாரதி என்பவர் சி. சுப்பிரமணிய பாரதி என்ற தலைப்பில் நூல் ஒன்று
எழுதியுள்ளார். இது இந்திய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பாக ஆயிரத்துத்
தொள்ளாயிரத்து எழுபத்தியிரண்டாம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது.
இதில் பாரதியாரின் வாழ்க்கை, அவரின் கொள்கைகள், அவரின் கவிதைக்கலை ஆகியன ஆராயப்பெற்றுள்ளன.
‘‘பாரதியைப்
பொறுத்தவரை வாழ்க்கையும் இலக்கியமும் தனித்தனியாக இருக்கவில்லை. கவிதை அவருக்கு வாழ்க்கையின்
சாராம்சமாகவும், வாழ்க்கை, கவிதையாகவும் இருந்தது. கவிதையின் கொள்கைகளில் மூழ்கிய ஒரு
கவிஞரைப் பார்ப்பது அரிது. அவருக்கு வாழ்க்கையும் கவிதையும் ஒரு பொதுவான அடையாளத்தில்
இணைகிறது. பாரதி வாழ்க்கையை ஒரு ரசமாகக் கருதினார். அவரது கூற்றுப்படி அனைத்து உலக
அனுபவங்களும்- உணர்ச்சி, அறிவுசார் அல்லது ஆன்மீகம்-பல்வேறு ரசங்களால் ஆனது, மற்றும்
இதனால், சுவாரஸ்யம். பாரதி தனது கட்டுரை ஒன்றில் பிரிவைக் குறிப்பிடுகிறார். உலக அனுபவங்கள்
ஒன்பது விதமான ரஸங்களாக உள்ளன ஒரே ஒரு ரசத்தின் தயாரிப்புகள், 'சக்தியின் வடிவம்' அல்லது
'மகிழ்ச்சி'. அவருக்கு அனைத்து வாழ்க்கையின் அனுபவங்கள் விரும்பத்தக்க அனுபவங்களாக
இருந்தன:’’[8]
என்ற கருத்து ஏற்கத்தக்கது.
விஜயா பாரதி
பாரதியின் அரசியல் , இலக்கியவியல் சார்ந்த
செய்திகளைத் தன் நூலில் மதிப்பீடு செய்துள்ளார்.
இவ்வாறு
பாரதியுடன் அவர் காலத்தில் உடன் வாழ்ந்த பெண்கள்
பாரதியை அனுபவித்த வாழ்வனுபவங்களை நூல்களாக
வெளிப்படுத்தியுள்ளார். இவ்வகையில் பாரதிக்கு அமைந்த அவரின் வாழ்வுத் தொடர்புடைய பெண்கள்
அனைவருக்கும் அவர் ஒரு லட்சியப் புருஷராக விளங்கியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
பாரதியின் தராசு
மகாகவி பாரதியார்
புதுச்சேரியில் வாழ்ந்த பத்தாண்டு கால வாழ்க்கை இலக்கியமானதாகவும், இலக்கியப் படைப்பாக்கம்
மிக்கதாகவும் விளங்கியது. ஆங்கிலேய ஆட்சியினரால்
சிறைபிடிக்கப்படும் நிலையில் அதில் இருந்துத் தப்பிக்க பாரதியார் பிரெஞ்சு இந்தியப்
பகுதியான புதுச்சேரிக்கு வந்து சேர்கிறார். தன் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு இடம்
பெயர்ந்த நிலையில் தன் வாழ்விற்கான பொருளாதாரத்தைப் பாரதி தேடிக் கொள்ள வேண்டியவராக
இருந்தார். அவரின் வாழ்வில் குடியிருக்கும்
வீட்டுக்கு வாடகை தருவதில் கூட பொருளாதாரச் சிக்கல் இருந்தது. இந்திய விடுதலை, படைப்புகளைப்
படைத்தல், சமுதாயத்துடன் உறவாடல் போன்றவற்றுடன் பாரதியார் தன் வாழ்வினை நகர்த்த பெரு
முயற்சிகளை மேற்கொள்கிறார்.
சித்தக்கடலில் பாரதியாரின் புதுச்சேரி நிலை
பாரதியார்
சித்தக்கடல் என்ற ஒரு சிறு தொகுப்பில் நாள் தோறும் தன் வாழ்வனுபவங்களை எழுதி வந்தார். இதில்
‘‘பராசக்தீ
இந்த உலகத்தின் ஆத்மா நீ.
உனக்கு
அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா நாள்தோறும் உன்மீது பாட்டுப்பாடுகிறேன். நான்
கேட்கும் வரங்களை யெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?
முதலாவது,
எனக்கு என்மீது வெற்றி வரவேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய்
விட்டது. இரண்டு மாதக் காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பது
போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை இருவருக்கும். உறக்கம் நேரே வரவில்லை — இருவருக்கும்.
எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ, உன்னை நம்பித்தானிருந்தோம். நீ கடைசியாகக்
காப்பாற்றினாய். உன்னை வாழ்த்துகிறேன்.
கடன்காரர்
தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம்,
குழப்பம்— தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!
பராசக்தீ,
ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து,
தொல்லை யில்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான்
எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன்.
உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட்பெருமையும்
உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்யவேண்டும்.
தாயே—என்னைக்
கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக்கொண் டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும்
யோசனை செய்துகொண்டிருந்தால்— உன்னை எப்படிப் பாடுவேன்?
மனைவியைப்
பிரிந்து செல்லும்படி சொல்வதில் பயனில்லை. அவளும் உனது சரணையே நம்பி, என்னுடன் எப்போதும்
வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிலே கிடைக்கும் புகழில் பங்கு பெற்று மேன்மையுற விரும்புகிறாள்.
இயன்றவரை உண்மையோடுதான் இருக்கிறாள். அவளையும் நீ ஸம்ரக்ஷணை செய்ய வேண்டும்.
அவளுக்கு
நோயின்மை, கல்வி, கவலை யின்மை பக்தி, ஞானம் முதலிய சோபனங்களெல்லாம் ஏற்படுத்திக்கொடுக்க
வேண்டும்.
குழந்தையை
உனது குழந்தையாகக் கருதி, இவ்வுலகத்தில் நீடித்துப் புகழுடன் வாழும்படி திருவருள் செய்ய
வேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.
எனது
குடும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சி புரியும் தொழில் என்னைக்
சேர்ந்தது தாயே, ஸம்மதந்தானா ?
மஹா
சக்தி — என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதை யூற்று ஏற்படுத்திக்கொடு.’’ [9] என்று
எழுதியுள்ளார்.
தன்
வாழ்வில் நாள்தோறும் உப்புக்கும் அரிசிக்கும் யோசனை செய்து கொண்டிருக்கும் நிலை பாரதியாருக்குப்
புதுச்சேரியில் அமைந்திருந்ததை மேற்காட்டிய
குறிப்பு தெளிவாகக் காட்டுகின்றது.
இந்த
நிலையில் பாரதியார் இவற்றைக் கடந்து பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, போன்ற முத்திரைப்
படைப்புகளைப் படைப்பதற்கான களம் காலம் புதுச்சேரியில் அமைந்தது சிறப்பாகும். மேலும்
புதுச்சேரியில் இருந்து கொண்டு பத்திரிக்கைகளில் எழுதுவதற்கான வாய்ப்புகளையும் பாரதியார்
பெறுகிறார்.
சுதேச
மித்திரனில் அரசியல் கலக்காத உரைநடைப் படைப்பினை அவர் எழுத வாய்ப்பு அமைகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை
வெளியிட அவர் தகுந்த ஒரு உரைநடையைத் தேர்கிறார்.
அதற்கு
அவருக்குக் கிடைத்த தராசு என்ற மகுடம். பாரதியார் ஒரு பலசரக்குக் கடை வைப்பதாகவும்
அங்குள்ள தராசு மாயத் தராசு எல்லாப் பொருள்களையும் அது சரியாக நிறுத்து நீதி தரும்
என்பதையும் மையமாக வைத்து அவர் தனித்த உரைநடைப் படைப்பினை வடிவமைத்துக் கொள்கிறார்.
தராசு
தராசு என்று தலைப்பிட்டுப் பாரதியார் எழுதிய உரைநடை வடிவம் விவாதப் போக்கினை முன்வைப்பது. எப்பொருள்
குறித்தும் விவாதித்து முடிவு சொல்லும் போக்கில் அதன் நடை அமைக்கப்பெற்றிருந்தது. காளிதாசனாக , பாரதியாக, தராசு கடை அய்யராக பாரதியார் இதனுள் இடம்பெறுகிறார்.
தராசினைச் சந்திக்க வழக்கறிஞர்கள், சேட்டுகள், இளைஞர்கள், கவிராயர்கள் நாளும் வருகிறார்கள். அவர்கள் பல வினாக்களை எழுப்புகிறார்கள். அவ்வினாக்களுக்குத்
தன் போக்கில் தராசு பதில் அளிக்கிறது.
சுதேச மித்திரன்
இதழில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பதினைந்து முதல்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினெட்டு வரை தராசு என்ற தலைப்பில் எழுதப்பெற்ற
விவாத புனைவு உரைநடை வடிவம் இதுவாகும்.
இதில் பாரதியார்
பேசப்படும் பொருள், தீர்வு சொல்லும் தராசு ஆகியவற்றில் இருந்து விலகித் தனியாக
தானாக நிற்கிறார். அதாவது படைப்பாளன் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லாதது போல நின்று கொண்டு
எல்லாவற்றையும் தன் படைப்பாற்றலால் விவாதிக்க
வைக்கிறான். படைப்பிற்கும் படைப்பாளனுக்குமான இடைவெளி,அந்நியத் தன்மை இவற்றுடன் தராசு
கட்டுரைகள் எழுதப்பெற்றுள்ளன.
சித்தக்
கடலில் இவ்வாறு படைப்பாளன் வேறு படைப்பு வேறு என்ற நிலையில் பாரதியாரின் படைப்பனுபவம் செயல்பட்டதைத் தெளிவாக உணரமுடிகின்றது.
‘‘பாரதியினுடைய
மன நடைகளை நான் எழுதப் போகிறேன். நான் வேறு. அவன் வேறு. நான் தூய அறிவு. அவன் ஆணவத்திலே
கட்டுண்ட சிறு ஐந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை
எழுத அவன் லஜ்ஜைப்படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட்டாக்காதபடி அருள் செய்ய வேண்டும்.
எழுது. பராசக்தியின் புகழ்ச்சிகளை எழுது. அடா! பாரதீ, அதைக்
காட்டிலும் உயர்ந்த தொழில் இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை. பராசக்தி வாழ்க. அவள் இந்த
அகில உலகத்துக்கு ஆதாரம். அகிலம் நமக்கு மூன்று வகையாகத் தெரிகிறது.— ஜடம், உயிர்,
அறிவு — என. இவை தம்முட் கலந்தன. அறிவுலகத்திலே பல படிகள் இருப்பதாக யோகிகள் நிச்சயித்திருக்கிறார்கள்.’’[10]
என்ற தொடர்களில் பாரதியின் மனநடை, நான் என்ற இருவேறுநிலைகளில் படைப்பினைச் செயலாற்றுபவர்
பாரதி என்பதை உணரமுடிகின்றது.
‘‘நானெனும் பொய்யை நடத்துவோன்
நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள்
அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய்
விளங்குமுதற்சோதி நான்’’ [11]
என்று ‘‘நான்’’ என்பதாக
நின்று பாரதியார் கவிதைகளையும் படைத்தளித்துள்ளார்.
‘‘தான் பணியாற்றிய
‘சுதேசமித்திரன்’ இதழில் வாசகர்களுடன் ஒரு இயல்பான விவாதக் களத்தை அமைக்க விரும்பிய மகாகவி
பாரதி, அதற்காக உருவாக்கிய பகுதியே தராசுக் கடை. இதில் நாட்டு நடப்பு, சமய விழிப்புணர்வு,
மொழிப் பற்று, லேசாக எட்டிப் பார்க்கும் அரசியல் – எல்லாமே பேசப்படும். காளிதாசனுடன்
(வேறு யார், பாரதியே தான்) அமர்ந்திருக்கும் தராசு, நாட்டு நடப்பை எடைபோட்டு தனது கருத்தைச்
சொல்லும்’’[12]
என்பது தராசு பற்றிய விமர்சனமாகும்.
‘‘தராசு’’
பற்றிய அறிமுகத்தில் பாரதியார் நகைச்சுவை சொட்ட சொட்ட எழுதுகிறார். ‘‘ இவ்வுலகமேஈசனுடைய
'விளையாட்டு." உல கத்தை அறிய வேண்டுமானால் விளையாட் டுப்பழக்கமும் வேண்டும். எழுதும்
விஷ யங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலா மென்ற யோசனை உண்டாயிற்று. பலவிதமான செய்திகளையும்
கலந்து பேச நேரிடுமாதலால் "பலசரக்குக் கடை' என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது
விளையாட்டாக முடியு மாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் .ஒரு செட்டியாருக்கும் சினேகம்;
அவரைப்போல் நாம் ஒரு பலசரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படுமென்று கருதி
அந்த மகுடத்தை விலக்கினேன். ....."தராசு என்று பொதுப்படையாகப் பெயர்வைத்திருக்..
கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும்; எல்லாச் செட்டியாருக்கும் இதனால்
உதவி யுண்டு. எந்தச் செட்டியாரும் நம்மிடம் மனஸ்தாபங்கொள்ள இடமிராது.”[13]
என்ற தராசின் முன்னுரை புனைவிற்கும், இயல்பிற்கும் இடையே எழுதப்பெற்றுள்ளது.
தராசின் இயல்புகள்
தராசு சில
சிறப்பியல்புகளைக் கொண்டதாகப் பாரதியார் படைக்கப்பெற்றுள்ளது. ‘‘தராசு என்பது தர்க்க
சிந்தாந்தம். ஒரு கட்சி சொல்லி அதற்குப் பிரதி கட்சி சொல்லி அங்கு தீர்ப்புக் காணுவதே தராசின் நோக்கம்’’[14]
என்று தராசின் நோக்கம் குறித்து உரைக்கிறார்
பாரதியார்.
"இங்கு
நீடித்த விலைமதிப்புள்ள ஸாமான் மாத்திரமே நிறுக்கப்படும். விரைவிலே அழிந்துபோகக்கூடிய,
விலை குறைந்த ஸாமான்கள் நிறுக்கப் படமாட்டா"
என்று பாரதியார் சிறந்த பொருள்கள் குறித்த விவாதங்களையே தராசு விவாதிக்கும் என்று எழுதி விளம்பரப் பலகையைப் பாரதியார் வைத்திருந்தார்.
இது குறித்தும்
தராசிடம் விவாதிக்கப்பெற்றது. பலசரக்குக் கடைக்கு
வந்த ஒரு சேட்டு தாராசிடம் விலை மதிப்புள்ள
விலை மதிப்பற்ற சாமான்கள் குறித்து விவாதித்தார்.
இந்த விளம்பரத்தைப் படித்துவிட்டு, ஜிந்தாமியான் ஸேட் என்னிடத்தில்
வந்து, "உமது வியாபாரத்திலே கொள்கைகளும், சிந்தனைகளும், மனோ தர்மங்களுந்தானே
சரக்கு? இதில், நீண்ட மதிப்புள்ள வஸ்துவென்றும், விரைவில் அழிந்து போகக்கூடிய வஸ்துவென்றும்
பிரிப்பததெப்படி? மனதைப் பற்றிய விஷயமெல்லாம் நீடித்ததுதானே? " என்றுகேட்டார்
"அறிவுத் துணிவுகள், தர்மக் கொள்கைகள் இவற்றிலும் பொன்னைப்போலே
நீடித்து நிற்பனவும், வெற்றிலையைப் போலே விரைவில் அழிவனவும், ஓட்டாஞ்சல்லி போலே பயனற்றனவும்
உண்டு”என்றேன்’’[15]
என்னும் இவ்விவாதத்தில் தராசு நிறுக்கும் பொருள் பற்றிப் பாரதியார் தெளிவு படுத்துகிறார்.
தராசின் சொந்த வியாபாரம்
பாரதியார்
நடத்திவரும் தராசுக் கடையில் அவரின் சொந்த
வியாபாரம் நன்னிலைக்கு வருமா என்றே ஒரு விவாதம் கேட்கப்பெறுகிறது.
‘‘தராசே,,
நம்முடைய சொந்த வியாபாரம் நன்றாக நடப்பதற்கு 'வழியென்ன? என்று கேட்டேன்.
தராசு
கலகலவென்று நகைத்துப் பின்வருமா று சொல்லலாயிற்நு
ஆஹா,
காளிதாஸா, நல்ல கேள்வி கேட்டாய். இதை எப்போது கேட்கப் போகிருயென்று நான் தராசு பல தினங்களாக ஆவலுடன் எதிர்பார்த்து இருந்ேதன்... உன் வசத்திலே குறுங்குறு
மஹாரிஷி என்னை ஒப்பு விக்கும்போது என்ன வார்த்.தை சொன்னார். ஞாபகம் இருக்கிறதா?”
காளிதாசன்
:-- ஆம், தராசே, நன்றாக ஞாபக மிருக்கறது.’’ கேளாய் காளிதாஸா, தெய்வ ஆராய்ச்சி ஒன்றையே
உனது வாழ்க்கையின் முதற்காரியமாக வைத்துக்கொள்ள வேண்டும். லெளகிகக் தொழிலொன்று சேர்ந்தால்
தான் யோக சித்தி விரைவாகக்' கைகூடுமாதலால், உனக்கு லெளகிகத் கொழிலாக இந்தத் தராசு வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க
இருக்கிறேன். இதன் மூலமாக உன்னுடை இஹலோக தர்மங்கள்
நேரே கிறைவேறும். உனக்கு சக்தி துணை ; உன்னைக் சார்ந்த உலகத்திற்கு இந்தத் தராசு நல்ல உதவி; இவை இரண்டையும் தவிர, மூன்றாவது
கரரியத்தில் புத்தி செலுத்தக்கூடாது. உனக்கு நன்மை யுண்டாகும்' என்று சொனனார்.”
தராசு :--’’ நீ அந்தப்படி செய்து வருகிறாயா ? *”
காளிதாசன் :-- சதக
என்னால் இயன் றவரை செய்து வருகிறேன்.”
தராசு: ஞாபகமில்லாமல் பேசுகிறாய். இரண்டு மாதத்திற்கு
முன் ஒரு முறை பட்டு வியாபாரம் தொடங்கலாமென்று யோசனை செய்தாய், அதற்கு முன்னே ஒருநாள்,
ரத்ன வியாபாரத்திலே புத்தி செலுத்தினாய். . மனிதன் செல்வம் தேடுவ தற்குப் பல உபாயங்கள்
செய்வது நியாயந்தான். ஆனால் ௮வனவன் தகுதிக்குரிய வழிகளிலே
செல்லவேண்டும். , ஒரு' முயற்சியைக் கைக்கொண்டால் பிறகு வெற்றியுண்டாகும் வரை எப்போதும் அதிலேயே கண்ணும் கருத்துமாகப்
பாடுபடவேண்டும்... பல ' மரங்கண்ட தச்சன் 'ஒருமரமும் வெட்டமாட்டான்?
காளிதாஸன்
:- நீ சொல்வது சரிதான். ஏதோ. மறதியினால் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் படி
நேரிட்டது. மறுபடி. தராசு வியாபாரத்தையே ஒரே . உறுதியுடன்... நடத்த வேண்டுமென்று
மனோ நிச்சயம். செய்துவிட்டேன்.. அதை ஓங்கச்
செய்வதற்கு வழி சொல்லு
தராசு:- இந்த வியாபாரத்தின் மகிமையை நீயே சில 'சமயங்களில்
மற்க்துவிடுகிறாய்.. எட்டும். இரண்டும்
என்ன?” நீலப் போர்வை -வாங்கலாமா; பச்சைப் போர்வை வாங்கலாமா” என்பவை போன்ற அற்பக்
கேள்விகள் கேட்போரைச்' சில சமயங்களில் - அழைத்துக்கொண்டு வருகிறாய். இப்படி அற்ப
விசாரணைக் கெல்லாம் இடங்கொடுத்தால் நம் கடையின்
பெயர் கெட்டுப் போகாதா? மேலும் அறிவுத் தராசு
போட்டு உலக வாழ்க்கையின் விதிகளையும் கிரமங்களையும் நிறுத்துப் பார்ப்பதே உனது தொழில் என்பதை மறந்து வேறு முயற்சிகளிலே சிந்தை செலுத்துகிறாய்’’[16]
என்று
பாரதியாரின் தராசு வியாபரத்தைப் பற்றி தராசு மதிப்பீடு செய்கிறது. இதுவும் ஒரு புதுமையான அனுபவம் ஆகும். தன் நிலை
பற்றித் தானே விவாதிக்கும் போக்கு சிறந்த நடுநிலைப் போக்காகும்.
இவ்வாறு
தராசு என்பது விவாதங்களைத் தீர்த்து நல்லதொரு முடிவை உலகின் நடப்பினுக்குச் சொல்லும்
முறையில் நடை போட்டு வந்துள்ளது.
எந்த வகை மருத்துவம்
சிறந்தது
தராசுக்
கடையில் முதலாவதாக எடுத்துகக் கொள்ளப் பெற்ற விவாதம் ஐரோப்பிய மருத்துவம் சிறந்ததா? நாட்டு வைத்தியம் சிறந்ததா என்பதாகும்.
ஐரோப்பிய
மருத்துவம் அறிவியல் நடத்தப்படுவது. உள்ளுறுப்புகள், நுண் உயிரிகள் போன்றவற்றின் அடிப்படையில்
நடத்தப்படுவது. நாட்டு வைத்தியத்தால் மக்கள் பிழைப்பது ஆச்சரியமே் அன்றி வேறில்லை என்று ஒரு பக்க விவாதம் அமைகிறது
நாட்டு வைத்தியம்
தேசத்து சரீர நிலைக்கு அணுகுணமாகும். இதி்ல் இந்த தேசம் சம்பந்தப்பட்ட நிலையில் ஐரோப்பிய வைத்தியத்தைக் காட்டிலும் நாட்டு வைத்தியத்திற்கு அதிக திறனுண்டு என்று எதிர் பக்க விவாதம் அமைகிறது.
பாரதியார் அமைத்த தராசு இரண்டு பக்க விவாதங்களைக் கேட்டு, ஒரு யோகீஸ்வரர் சொன்னதை வதை்து ஒரு முடிவினை அறிவிக்கிறது.
‘‘ஒருவனுக்கு
வியாதிகள் வராதபடி. தடுத்துக்கொள்வது நலம், தன்னை மீறி வந்தால்--நல்லக் காற்று,
நல்ல நீர், நல்ல வெளிச்சம், சுத்தமான உணவு
.இயன்றவரை சரீர உழைப்பு, மனோதைரியம், ஸந்தோஷம் -- இவற்றால் பெரும்'பான்மையான நோய்கள்
"இயற்கையிலேயே சொஸ்தமாய்விடும், வைத்தியர் அவசியமென்ற நிலைக்கு வந்து “விட்டால்
பிறகு தெய்வ. பலமுள்ளவர்கள் . நிச்சயமாகப் பிழைப்பார்கள். சாகத்தான் வேண்டுமென்று
தீர்ந்தால், அயல்காட்டு மருந்தினால் சாவதைக் காட்டிலும், நாட்டு முறைப்படி சாவது
நல்லது.’’[17]
என்பது தராசு தரும் முடிவாகும். இதனோடு நாட்டு வைத்தியர்கள்
ஐரோப்பிய வைத்திய முறையைத் தமிழில் எங்களுக்குச் சொல்லித்தந்தால் நாங்களும் அதனை மேற்கொள்வோம்
என்றும் தராசிடம் நாட்டு மருத்துவர்கள் முறையிடுகிறார்கள்.
இது தற்காலத்திற்கும் பொருந்தும். நாட்டு மருத்துவர்கள் ஐரோப்பிய மருத்துவ முறைகளைக்
கற்பதற்கான வாய்ப்பு அமைய தமிழில் மருத்துவ அறிவியல் நூல்கள் வெளிவரவேண்டும் என்ற நிலை
மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
தாகூரின் கவிதை மொழிபெயர்ப்பு
ரவீந்திர
நாத் தாகூரின் கவிதையை மொழி பெயர்ப்பது பற்றிய விவாதம் ஒன்று தராசுக் கடைக்கு வந்து
சேரகிறது. ஒரு கவிராயர் தாராசிடம்
‘‘ எங்கே மனத்தில் அச்சமில்லை. தலை நிமிர்ந்து நிற்கிது.எங்கே அறிவுக்குக் கட்டில்லை.
எங்கே மனிதவுலகம் சிறிய வீட்டுச் சுவர்களால் துண்டு துண்டாகப்
பிரிவுபாடாதிருக்கின்றது.
எங்கே உண்மையின்
ஆழத்தில் இருந்து சொற்கள் நேரே புறப்படுகின்றன
எங்கே ஓய்வில்லாத முயற்சி பரிபூரணத் தன்மையை நோக்கிய கை நீட்டுகிறது
எங்கே மதியாகிய
தெளிந்த வாய்க்கால் செத்த வழக்கம் என்ற கொடிய
பாலையின் மணிலே மடியாது நீங்குகிறது.
எங்கே
மேன்மேலும் விரிகின்ற கருத்திலும் செய்கையிலும் அறிவு மூண்டு
செல்லும்படி
நீ நடத்துகிறாய்;
அமரஸ்தானமாகிய அந்த ஸ்வதந்த்ர நிலையில், ஹே பிதா,
எனது தேசம்
கண்விழித்திடுக."
குறிப்பு :- அமரஸ்தானம்—தேவலோகம் ; ஸ்வதந்த்ரம் விடுதலை
; பிதா-
கடவுள்.
என்ற கவிதை மொழிபெயர்ப்பைக்
கவிராயர் சொல்லவும், தராசு ‘‘"மொழி பெயர்பிலே பிழையில்லை. ஆனாலும், இன்னும் சிறிது
சுலபமான நடையில் இருக்கலாம்' என்று தராசு சொல்லிற்று.[18]
என்பதாகக் கவிதை மொழிபெயர்ப்பினை மதிப்பிடுகிறது
தராசு.
அறிவியல் குறித்த
மதிப்பீடு
அறிவியல் துறை பற்றிய மதிப்பீடு ஒன்றும்
தராசு பகுதியில் விவாதிக்கப்படுகிறது.
‘ஐரோப்பிய இயற்கை நூலுக்கு இங்கிலீஷ் பாஷையில்
ஸயன்ஸ் என்று
பெயர்.
"ஐரோப்பிய
இயற்கை நூல்" என்று தனியாக ஒரு சாஸ்திர முண்டா?
அப்படியில்லை.அந்த
சாஸ்திரத்திலே நம்மைக் காட்டிலும் அவர்கள் அதிகத் தேர்ச்சி யடைந்திருக் கிறார்கள்.
அதிலே என்ன பயன் உண்டாகிறது?
புதிய
விழி உண்டாகிறது.
புதிய
விழி என்பதென்ன?
பூமண்டலத்தையும்
ஸர்வத்தையும் பற்றிய புதிய அறிவு.
நமது
பூர்வீகர்களுக்கு இல்லாத அறிவு இப் போது சாத்தியப்படுமா?
அதைப்பற்றிய
பேச்சில்லை.
நமக்கு
இதுவரை இல்லாத அறிவு இப்போது சாத்தியப்படுமோ?
''முற்படுக;
எழுக என்றது தராசு’’[19]
இவ்வாறு அறிவியல், கலை
போன்ற அனைத்துத் துறைகளிலும் தேர்ந்த அறிவு முடிவு காணும் திறன் தராசுக்கு இருந்திருக்கிறது.
புதுக்கோட்டை ராஜா, ஆஸ்திரேலியப் பெண் திருமணம்
புதுக்கோட்டையை
ஆண்ட தொண்டைமான் மரபில் மார்த்தாண்ட பைரவத்
தொண்டைமான் என்ற அரசர் திறங்கள் பல பெற்று ஆட்சி புரிந்துவந்தார். அவர் தனக்கு இணையான
பெண் கிடைக்கவில்லை என்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மோலி என்ற பெண்ணைத் திருமணம்
செய்து கொண்டார். அவர் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வந்த நிலையில் புதுக்கோட்டை
சமஸ்தான மக்கள் அவரை மகிழ்வுடன் வரவேற்றனர். அந்த வரவேற்பில் அந்த புதுக்கோட்டை ராஜா
‘‘'என்
குடிகளே, எனது பத்தினிக்கு நீங்கள் செய்த ராஜோபசாரத் தால் என்ன விளங்குகிறது? என்னையும்,எனது
ராஜ்யத்தையும் பற்றிய ஸகல விஷயங்களிலேயும் நீங்கள் எனது தீர்மானத்தை பக்தி விசுவாசத்துடன்
ஏற்றுக் கொள்ளத்தயாராக இருக்கிறீர்களென்பது தெளிவாகிறது. என்னையும் எனது ராணியையும்
வரவேற்பதில் நீங்கள் செய்த ஆனந்த கோஷங்களினால் என்ன தெரி கிறது? வைதிக ஆசாரங்களுக்கு
விரோதமாகத் தோன்றக்கூடிய செய்கைகளிலே கூட நீங்கள் சிறிதேனும் திகைப்பில்லாமல் என்னிடம்
ராஐ பக்தி செலுத்துவீர்களென்று தெரிகிறது. சில வருஷங்களாக எனது விவாகத்தைப் பற்றி ஆழ்ந்த
சிந்தனை செய்துகொண்டு வந்தேன். இன்னவிதமான பத்தினி இருந்தால் தான் நமக்குக் குடும்ப
சந்தோஷமும், ராஜ்ய பாரத்திலே உதவியும் உண்டாகுமென்பதைப் ற்றி என்னுடைய பயிற்சியிலிருந்தும்,
யாத்திரை களிலிருந்தும் எனக்குச் சில விசேஷ அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தன. நமது ஜன
ஸமூஹம் இப்ப திருக்கும் நிலைமையில் நான் விரும்பிய குணங்களுடைய ஸ்திரீ நமக்குள் அகப்படுவது
சாத்தியமில்லை யென்று கண்டேன். இதற்காக சுதேசிய அபிமானத்தின் வெளித்தோற்றத்தைக் கொஞ்சம்
இழந்து விடுதல் அவசியமென்றும் நிச்சயித்தேன். சுதேசிய அபிமானத்தின் வெளித்தோற்றம் என்று
சொல்லுகிறேன். ஏனென்றால் எத்தனையோ அன்னிய தேசங்களிலே பிறந்தாலும் தாம் ஸ்வீகாரம் செய்து
கொண்டதேசத்தாருடன் பரிபூர்ணமாக ஒற்றுமைப் பட்டுப்போவதை நாம் அறிவோம். இத்தனை காலம்
கழித்துக் கடைசியாக எனது அபீஷ்டங்களுக்கு இணங்கிய பத்தினியை எனக்கு ஈசன் அருள் செய்
திருக்கிறார். எங்களிருவருடைய ஆட்சியிலே இந்த ராஜ்யம் முன்னைக்காட்டிலும் அதிக க்ஷேமத்துடனும்
ஸந்தோஷத்துடனும் இருக்குமென் று நம்புகிறேன்’’ என்று தன் திருமணத்தின் நியாயத்தை மன்னர் உரைக்கிறார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தராசு. மன்னரின்
ஆஸ்திரேலியப் பெண் திருமணத்தை மதிப்பீடு செய்கிறது. நாட்டுப் பெண்களைப் பற்றி மன்னர் குறைத்து மதிப்பிட்டு
இருப்பதாகவும், அகல்யா பாயி,
பரோடா மாகராணி போன்றவர்கள் இருக்கும்போது அரசர் வெளிநாட்டுப் பெண்ணைத் தேர்வு செய்திருப்பது
சரியல்ல என்பது தராசின் மதிப்பீடு ஆகும்.
பட்டாளத்தில் சேர்வது
பற்றிய விவாதம்
வாசு தேவ
ராவ் என்ற வாலிபன் தராசிடம் வந்து இளையஞர்கள் தன்னெழுச்சியாக இராணுவத்தில் சேர்வதைப் பற்றிய விவாதத்தைக் கிளப்பினார்.
மேலும் தான் இராணுவத்தில் சேரலாமா வேண்டாமா என்று வினாவையும் தராசிடம் தொடுத்தார்.
‘‘''தேசத்துக்குச்
சண்டைபோடக்கூடிய வீரனாக உன்னைப்பார்க்கும்போது தோன்றவில்லை. சண்டை யிலேசேர்கிறவன் இத்தனை
ஆராய்ச்சியும், பரியாலோனையும், கன்ஸல்டேஷனும் நடத்தமாட்டான்.படீ லென்றுபோய்ச் சேர்ந்துவிடுவான்
" என்று தராசு சொல்லிற்று. "என்னை நீ போலீஸ்காரனென்று நினைக்கிறாயா? என்றுவாஸு
தேவன்கேட்டான். ''நான் அப்படிச்சொல்லவில்லை" என்றது தராசு. "நான் போய்வரலாமா?"
என்றுவாஸு தேவன் கேட்டான். ''போய்வா" என்றது தராசு. அவன் போன பிறகு தரரசு என்னிடம்
சொல்லு கிறது:- " இவன் உளவு பார்க்க வந்தவன். சந்தேக மில்லை.பட்டாளத்தில் சேர்ந்து
தேசத்தைக் காப் பாற்றக்கூடிய யோக்யதை யுடையவன் இத்தனை வீண் பேச்சுப் பேசமாட்டான். அவனுக்கு
இத்தனை கர்வமிராது."[20]
என்று வந்தவரின் நோக்கத்தைத் தெற்றென வெளிப்படுத்துகிறது
தராசு.
சுதந்திரம் எப்போது
தராசிடம்
வந்த ஒருவர் சுதந்திரம் எப்போது கிடைக்கும்
என்று கேட்டு ஒரு விவாதத்தைத் தொடங்குகிறார்.
வக்கீல்:
" நமது தேசத்துக்காருண்ய கவர்ன் மெண்டார் நமக்கு எப்போது
ஸ்வராஜ்யம்
கொடுப் பார்கள்?"
தராசு
: ஒவ்வொரு கிராமத்திலும் ஜனத் தலைவர் பள்ளிக்கூடங்கள் வைத்து, தேச பாஷை களிலே புதிய
படிப்புச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தால், உடனே கொடுத்துவிடுவார்கள்."
வக்கீல்:
" அது எப்போது முடியும்?
தராசு
"நீர்போய் நான்கு கிராமங்களில் நான்சொல்லியபடி பள்ளிக்கூடங்கள் ஏற்பாடுசெய்து
விட்டுப் பிறகு வந்து கேளும், சொல்லுகிறேன்.’’[21] என்று
தராசு கல்வியினால் சுதந்திரம் கிடைக்கும் என்று மொழிகிறது.
மறு ஜென்மம் உண்டா என்ற விவாதம்
இதனைத் தொடர்ந்து மறு பிறவி பற்றிய விவாதம்
ஒன்றை மேற்சொன்னவரே கிளப்புகிறார். இதற்குப்
பதிலை நகைச்சுவையாகச் சொல்கிறது தராசு.
தராசு: " (மறு ஜென்மம் )உண்டு. மனோதைரியமில்லாதபேடி
கள் புழுக்களாகப் பிறப்பார்கள். பிறர் துன்பங்களை அறியாமல் தமதின்பத்தை விரும்பினோர்
பன்றிகளா கப் பிறப்பார்கள். சொந்த பாஷை கற்றுக்கொள்ளா தவர் குரங்குகளாகப் பிறப்பார்கள்.
சோம்பேறிகள் எருமைகளாகப் பிறப்பார்கள்.அநீதி செய்வோர் தேளாகப் பிறப்பார்கள். பிறரை
அடிமைப்படுத்து வோர் வண்ணான் கழுதைகளாகப் பிறப்பார்கள். ஸ்திரீ களை இமிசை செய்வோர்
நபும்ஸகராகப் பிறப்பார்கள். ஸமத்துவத்தை மறுப்போர் நொண்டிகளாகப் பிறப் பார்கள். கருணையில்லாதவர்
குருடராகவும், தமது கல்வியைப் பிறருக்குக் கற்றுக் கொடாதவர் ஊமை களாகவும், அச்சமுடையோர்
ஆந்தைகளாகவும் பிறப்பார்கள். மறு ஜன்மம் வரையிலே கூடப் போக வேண்டாம். இந்த ஜன்மத்திலேயே
பாவி, கோழை முதலியவர்கள் தாழ்ந்த ஐந்துக்களாக இருப்பதை அவர்களுடைய அந்தக்கரணத்திலே
பார்க்கலாம்.' '[22]
என்று இப்பிறவியில் இன்ன தீமைகள் செய்தவர்கள்
அதற்கேற்ப அடுத்த பிறவிகளாகப் பிறப்பர் என்று தராசு உரைக்கிறது.
இழந்து போள இளமையை மீண்டு்ம் பெற என்ன வழி
நிலையில்லாதது
அழகு, இளமை. தராசிடம் இழந்த இளமை, அழகை மீண்டும்
பெற வழி கேட்கப்படுகிறது.
‘‘ஒருவருஷம்
மனத்திலும் சரீரத்திலும் பிரமசரிய விரதத்தை அனுசரிக்கவேண்டும்.காலை யில் ஸ்நானம்செய்ய
வேண்டும். கைகால்கள் உழைக்க வேண்டும். யௌவனமுடைய பிள்ளைகளுடன் ஸஹ வாஸம் செய்ய வேண்டும்.
பயத்தைவிட வேண்டும். மனோதைரியம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் தெய்வ பக்தி உண்டாக்கிக்
கொள்ளவேண்டும். பிறரைத் தாழ்வாக நினைக்கலாகாது. புதிய புதிய கல்விகள் கற்கவேண்டும்."[23]
என்று யோசனை கூறப்படுகிறது.
பாரதிதாசன் வருகை
பாரதியாரைக்
காண பாரதிதாசன் வருகை தந்த நிகழ்வையும் தராசு விவரிக்கின்றது.
‘‘
எனக்குக்
கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி
பெற முயற்சிசெய்து வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்"
என்று கவிராயர் சொன்னார்.
"இதுவரை
பாடின பாட்டுண்டானால் சொல் லும்" என்று தராசுகேட்டது."
இதுவரை
நாற்பது அல்லது ஐம்பது அடி களுக்குமேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை"
என்றுசொல்லிக் கவிராயர் விழித்தார்.
"மாதிரி சொல்லும்" என்றது தராசு.
புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.
காளை
யொருவன் கவிச்சுவையைக் – கரை
காண நினைத்த' முழு நினைப்பில் — அம்மை
தோளசைத்
தங்கு நடம்புரிவாள் - இவன்
தொல்லறி
வாளர் திறம்பெறுவான்.
ஆ
! எங்கெங்கு காணினும் சக்தியடா ! – தம்பி
ஏழு கடலவள் மேனியடா!.
தங்கும்
வெளியினிற் கோடியண்டம் — எங்கள்
தாயின்கைப் பந்தென வோடுமடா !
கங்குலில்
ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை
செய்தது கேட்டதுண்டோ ?
மங்கை
நகைத்த ஒலியதுவாம் - அவள்
வாயிற்
குறுநகை மின்னலடா !"
தராசு கேட்டது:-
" புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்
கவிராயர் : " இன்னும்
படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்." தராசு: " சரிதான், ஆரம்பம்
குற்றமில்லை. விடாமுயற்சியும் தெய்வ பக்தியும்,
அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமை ஏறும்
என்று தராசு
அவரை வரவேற்று வாழ்த்துகிறது.
இந்நேரத்தில் ஒரு துணிக்கடை சேட்டும் வருகிறார். இவரும் தன்
வியாபாரம் பெருக வழி கேட்கிறார். அதற்குத் தராசு நாட்டுத் துணி நல்லது. அதனை வாங்கி
விற்பனை செய் என்று வாழ்த்துகிறார். அப்போது துணிக்கும் கவிதைக்குமான இரட்டுற மொழிதல்
நடையில் தராசு உரையை வழங்கியது.
‘‘"
உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக்காட்டிலும்
புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டி லும் தொழிலருமைமேல். காசிப்பட்டுப்போலே
பட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவ னுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய
வேண்டும். "மல்" நெசவு கூடாது."மஸ்லின் " நீடித்து நிற்காது. பாட்டிலே
வலிமை,தெளிவு, மேன்மை,ஆழம், நேமை இத்தனையு மிருக்க வேண் டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ்சேர்த்தால்
குற்ற மில்லை.சேராமலிருந்தால் விசேஷம்."[24]
என்ற பகுதி தராசின் தனித்த நடைக்குச் சான்று.
மேற்சொன்னவற்றைக்
கேட்ட கவிராயர் தராசை நோக்கி நீயே குரு என்று
சரணடைகிறார்.தராசு எப்போதும் வாழ்த்துவது போல் எழுக நீ புலவன் என்று கவிராயரை வாழ்த்துகிறது.
இதில் இடம்பெறும் கவிராயர் பாரதிதாசன் ஆவார்.
மகாத்மா காந்தியின் போதனைகள் பற்றிய விவாதம்
சென்னையில்
மகாத்மா காந்தியடிகள் பேசிய கூட்டமொன்றில்
அவரின் பல கொள்கைகள் எடுத்துரைக்கப்பெற்றதாகவும் அதனைக் கேட்டு வந்த இளைஞன் ஒருவன்
அதனைத் தாராசிடம் தந்து மதிப்பிடச் சொல்வதாகவும் ஒரு கட்டுரை தராசுப் பகுதியில் அமைகிறது.
இதில் காந்தியடிகள்
உணர்த்தியதாக சத்ய விரதம், அகிம்சா விரதம்,
பிரமசரியம், நாக்கைக் கட்டுதல், உடைமை மறுத்தல்,
சுதேசியம், பயமின்மை, தீண்டல் (தீண்டாமை),
தேச பாஷை, தொழிற்பெருமை, தெய்வ பக்தி போன்ற கருத்துகள் கட்டுரையில் தரப்பெறுகின்றன.
இந்தக் கொள்கைகள் குறித்த மதிப்பீடும் வைக்கப்பெற்றுள்ளது. இந்த மதிப்பீடு தராசின்
உ்ண்மையான மதிப்பீடாக அமைகிறது.
‘‘தராசு
சொல்லலாயிற்று:-
"ஸ்ரீமான்
காந்தி நல்ல மனுஷர்.
"'அவர்
சொல்லுகிற ஸத்ய விரதம், அஹிம்ஸை, உடைமை மறுத்தல், பயமின்மை- இந்த நான்கும் உத்தம தர்மங்கள்-
இவற்றை எல்லோரும் இயன்ற வரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத்
திருப்பி அடிக்கக்கூடா தென்றுசொல்லுதல் பிழை. "சுதேசியம், ஜாதி ஸமத்துவம், தேசபாஷைப்
பயிற்சி,தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்துகொள்ள வேண்டும். இல்லா
விட்டால் நமது தேசம் அழிந்துபோய்விடும்’. "நாக்கைக்
கட்டுதல், பிரமசரியம், இவையிரண்டையும் செல்வர்கள், இடையிடையே அனுஷ்டித்தால் அவர்களுக்கு
நன்மை யுண்டாகும். ஏழைகளுக்கு இந்தஉபதேசம் அவசியமில்லை.அவர்களுக்கு நாக்கை ஏற்கனவே
கட்டித்தான் வைத்திருக்கிறது. பிரமசரியத்தை ஜாதி முழுமைக்கும் ஸ்ரீ காந்தி தர்மமென்று
உபதேசம் செய்யவில்லை. அந்த வேலை செய்தால் தேசத்தில் சீக்கிரம் மனிதரில்லாமல் போய்விடும்.
''காந்தி பதினோரு விரதம் சொன்னார்.நான் பன்னிரண்டாவது விரதமொன்று சொல்லுகிறேன். அது
யாதெனில் - எப்பாடுபட்டும் பொருள்தேடு; இவ் வுலகத்திலே உயர்ந்த நிலைபெறு.' இப்பன்னிரண்டாவது
விரதத்தை தேசமுழுதும் அனுஷ்டிக்க வேண்டும்’[25]
என்று காந்தியின் கொள்கைகளைப் பாரதி தராசு வழியாக விமர்சிக்கிறார்.
அன்னி பெசண்ட் அம்மையார் செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடு
அன்னிபெசண்ட
அம்மையார் இந்திய விடுதலைக்கான முயற்சிகளைச்
செய்துவருகிறார். அவரை ஆங்கில அரசாங்கம் சிறை செய்கிறது. இந்நிலையில் இது குறித்தும்
தராசு முழங்குகிறது.
" தராசு ராஜாங்க விஷயத்தை கவனியாது. சண்டை முடிகிற
வரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது. சண்டை
பெரிது ; நம்முடைய கடை ஸாதாரணம்; ராஜாங்கவிசாரணைகளோ மிகவும் கடுமை. ஆதலால் அனிபெஸண்டின்
ராஜாங்கக் கொள்கையை நாம் நிர்ணயிக்க இடமில்லாவிடினும், அவள் சரியான ஹிந்து ஆதலால் நம்முடைய
ஸகோதரி என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம். ஹிந்து மதத்தை அவள் போற்றுகிறாள். அதனால் அவளுடைய
ஜன்மம் கடைத்தேறும். வேதம் என்றுசொன் னால் பாவம் போகும். பகவத் கீதையை நம்புகிறவர்
கள் யாராயினும் அவர்கள் நமக்கு சகோதரரே தியாஸபி', ஹோம் ரூல் '- இரண்டுக்கும் சம்பந்த
மில்லை; அதுவேறு, இதுவேறு. ஹிந்துக்கள் அனி பெஸண்டுக்கு நன்றிகூற வேண்டும். தமக்குத்தாமே
உதவி செய்துகொள்ள வேண்டும்."[26] என்று அரசியலை அரசியல் கலக்காமல்
தராசு விமர்சிக்கிறது. இவ்வாறு பாரதியாரின் தராசு என்ற கற்பனை கலந்த விவாதப்
போக்குடைய படைப்பு புதுமையான வடிவம் உடையதாகவும்
, சமுதாய விமர்சனம் மிக்கதாகவும், விவாதங்களின் அடிப்படையில் உண்மை அறிவைத் தருவதாகவும்
பாரதியாரால் எழுதப்பெற்றுள்ளன. கவிதைகள், கட்டுரைகள்
என்ற வடிவங்களைத் தாண்டி உரைநடையில் பல புதிய உத்திமுறைகைளைப் பாரதியார் புகுத்தியவர்
என்பது இத்தராசு விமர்சனங்களால் தெரியவருகிறது.
[1] செல்லம்மாள்
பாரதி, தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம், தங்கம்மாள் பாரதியின் முன்னுரை, ப.
[2] செல்லம்மாள்
பாரதி, தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம், ப. 9
[3] மேலது ப. 24
[4] மேலது ப. 25
[5] மேலது ப. 20
[6] தங்கம்மாள் பாரதி,
பாரதியும் கவிதையும், பக். 58
[7] யதுகிரி அம்மாள், பாரதி நினைவுகள், ப. 152
[9]
பாரதியார், சித்தக்கடல், ப.1
[10]
பாரதியார், சித்தக்கடல், ப. 86
[11]
பாரதியார், ஞானப்பாடல் ப. 13
[12]
https://porulputhithu.com/2023/06/17/bharathi-s-column-writing-tharasu-saekkizhaan/
[13]
பாரதியார், தராசு முன்னுரை
[14]
பாரதியார் தராசு, ப. 76
[15] மேலது, ப. 33
[16]
மேலது ப. 74
[17]
மேலது ப. 6
[18]
மேலது ப. 15
[19]
மேலது ப. 18
[20]
மேலது, ப. 26
[21]
மேலது. ப. 28
[22]
மேலது ப. 29
[23]
மேலது, ப. 81
[24]
மேலது ப 50
[25]
மேலது ப. 69
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக