செவ்வாய், நவம்பர் 10, 2026

ஐந்தெழுத்தால் ஆறுசொலி ஏழ்கடத்தி எட்டில் ஏற்றுவிக்கும் ஐயன் சிவஞான பாலய சுவாமிகள்

 


ஐந்தெழுத்தால்  ஆறுசொலி  ஏழ்கடத்தி எட்டில் ஏற்றுவிக்கும் ஐயன்

சிவஞான பாலய சுவாமிகள்

 
                                                                        முனைவர் மு.பழனியப்பன்

                                                                        இணைப் பேராசிரியர்

                                                                        அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

                                                                        திருவாடானை 623407

                                                                        இராமநாதபுர மாவட்டம்

                                                                        9442913985

                                                                        muppalam2006@gmail.com

கட்டுரையின் சுருக்கம் (ஆங்கிலத்தில் )

English Summary of the Essay
The core essence of the provided Tamil article is summarized below: [1]
  • Introduction to the Adheenam: The Mailam Bommapuram Adheenam is a revered spiritual seat focused on guiding people towards the path of righteousness, where scholars and poets traditionally gathered to foster Tamil literature, devotion, and liberation. [1]
  • The Poet and His Work: Panruti Mani Subramaniya Iyer, an esteemed poet of this lineage, composed several literary works dedicated to the foundational seer, Adi Sivagnana Balaya Swamigal. One of his notable creations is the Sivagnana Balaya Desikendra Swamigal Uyir Varucca Maalai. [1]
  • Literary Structure: The book utilizes the sequence of the twelve Tamil soul/vowel letters (Uyir Ezhuthukkal: அ to ஔ) to sequentially extol the spiritual glories and virtues of Sivagnana Balaya Swamigal, reinforcing that souls must seek his grace as an ultimate companion. [1]
  • Alphabetical Themes (Abridged):
    • அ (A) to ஈ (Ee): Describes the Swamigal as the divine incarnation worshipped by Brahma, Vishnu, and Indra; highlights the tradition of Linga Dharanam (wearing the Shiva Lingam); notes that Tamil king Sivaprakasar was his disciple; and praises him for granting spiritual wealth far superior to the material wealth of Kubera.
    • உ (U) to ஏ (Ea): Details his power to detach devotees from worldly desires (land, gold, women); celebrates his absolute devotion to Lord Murugan at the Mailam hill; and establishes his lineage's origin from the sacred Aarathiya clan.
    • ஐ (Ai): Functions as a numerical wordplay (Enn Alankaram), depicting how he teaches the five-letter mantra (Na-Ma-Shi-Va-Ya), explains the six-faced nature of Shiva/Murugan, helps transcend the seven oceans/births, and grants the eight mystical powers (Ashta Siddhis).
    • ஒ (O) to ஔ (Au): Narrates the local legend of Sage Bala Siddhar, who raised Valli and Deivayanai as daughters before Lord Murugan arrived in disguise to marry them. It concludes by stating that only those who destroy the sin of jealousy (Oviyam) can attain the ultimate state of Anga Linga union. [1]
  • Conclusion: The text intricately maps Veerasaiva traditions—such as the Ittalinga, saffron robes, and sacred ash—to demonstrate how this continuous line of twenty spiritual heads (Adheenakarthas) has kept the flame of wisdom alive at Mailam Bommapuram. [1]


மயிலம் பொம்மபுர ஆதீனம் மக்களை நல்வழிப் படுத்தும் ஞான பீடமாகும். இவ்வாதீனத்தில் கற்றோரும், நல்லோரும், புலவர்களும் ஒருங்கிருந்து தமிழையும் பக்தியையும் முக்தியையும் வளர்த்தனர். இவ்வாதீனத்தின் புலவர் வரிசையில் ஒருவராக விளங்குபவர்  பண்ணுருட்டி மணி  சுப்பிரமணிய அய்யர் ஆவார்.  இவர் ஆதி சிவஞான பாலய சுவாமிகள் குறித்து பல இலக்கியங்களைப் படைத்தளித்துள்ளார். அவற்றுள் ஒன்று சிவஞான பாலய தேசிகேந்திர சுவாமிகள் உயிர் வருக்க மாலை என்பதாகும்.  இதில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டிலும் தொடங்கும்படியான சொற்களை முன்வைத்து வரிசைப்படி சிவஞான பாலய சுவாமிகளின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கிறார் மணி- சுப்பிரமணிய அய்யர்.

            உயிர்கள் உண்மை வழியில் பயணித்து ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட  அருள்வழி காட்டியவர் சிவஞான பாலய சுவாமிகள் ஆவார். அவரைப் போற்ற உயிர் எழுத்துகளை முன்வைத்து எழுதியிருப்பதன் வழியாக உயிர்கள் அவரை தம் துணையாகக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இந்நூல் உயிர்க்கு உறுதுணையாக அமைகின்றது. பொம்மாபுரி பொருந்தும்  சிவஞானச் செம்மல்  தாள்மலர்க்கு துதி செப்பிடும் வகையில் இந்நூல் பாடப்பெற்றுள்ளதாகக் காப்புச் செய்யுள் இதன் நோக்கத்தை எடுத்துரைக்கின்றது.

அ

            அலரவனும் அலையவனும் ஆயிரம் நயனவனும் நலமுற முப்போதும் தொழும் நாயகம்  என்று முதல் பாடல் ‘அ’ என்ற உயிர் எழுத்தில் தொடங்குகிறது.  பிரம்மாவும், விஷ்ணுவும், இந்திரனும்  தொழும் கயிலை அண்ணல்  உலக உய்ய சிவஞான பாலய  சுவாமிகளாக உலகில் தோன்றினார்  என்று முதல் பாடல்  சுவாமிகளின் தோற்றம் பற்றி உரைக்கின்றது.

ஆ

            ஆவணத்தைக் காட்டி  நம்பி ஆரூரனை அடிமை கொண்ட செய்தியைக் கொண்டு அடுத்த பாடல் தொடங்குகிறது. சிவபெருமான் ஆவணத்தைக் காட்டிச் சுந்தரரை அடிமைகொண்டதுபோல, உயிர்களைச் சுத்தப்படுத்தி  தாரணம் எனப்படும் இலிங்க தாரணம் செய்வித்து முக்தி நிலைக்கு அருளும் ஞானவடிவாக விளங்குபவர் சிவஞான பாலய தேசிக சுவாமிகள் ஆவார்  என்று இரண்டாம் பாடல் குறிக்கிறது. இங்கு வீரசைவ மரபாகிய இலிங்க தாரணம் சுட்டப்பெற்றுள்ளது.

இ

            இலங்கிடும் சீர்ச் சிவபிரகாசத் தமிழ் வேந்து ஏத்தும் ஒருநல வடிவாக அடுத்த பாடல் சிவஞான பாலய சுவாமிகளைக் குறிக்கிறது. அவரே ஞான நெறி சொற்றிடும் நாயகமணியாவார் என்றும் உறுதிபட இப்பாடல் மொழிகின்றது. இப்பாடலில் செந்தமிழ் வல்ல சிவப்பிரகாசர்  சுவாமிகளின் சீடராக விளங்கிய தன்மை அறியவருகிறது.

ஈ

            ஈகைச் செயலால்  குபேரனை வென்ற கருணையைப் பெற்றவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று இப்பாடல் கருத்துரைக்கிறது. குபேரன் செல்வம் மட்டுமே தர வல்லவன். ஆனால் சிவஞான பாலய சுவாமிகள் ஞானச் செல்வம் உட்பட அனைத்தையும் ஈகை புரியும் அண்ணல் என்று இப்பாடல் குபேரனை விடச் சிறந்தவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று குறிக்கின்றது. அடியார் மலங்களைப் போக்கி ஞானம் அருளும் ஈகைத்திறம் உடையவர் சிவஞான பாலய சுவாமிகள் ஆவார்.

உ

    உற்ற பெரும் அடியார்களின் மண், பொன்,பெண் ஆசைகளை நீக்குபவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று அடுத்தபாடல் அடியார் மலங்களைப் பட்டியலிட்டு அதனைப் போக்கும் தன்மையராக சுவாமிகளைக் காட்டுகின்றது. கற்றவர்கள் சூழ்ந்து தினம் கழிறடு நல் துதியினில் பற்று கொள்ளும் சுவாமிகள் வேறு எதன் மீது பற்று இல்லாதவர் என்பதையும் இப்பாடல் சுட்டுகிறது.

ஊ

     ஊங்குசிலம்பு என்று மயிலமலையைக் குறித்துத் தொடங்குகிறது அடுத்தபாடல். மயிலைமலை ஒரு முருகன் தாள் துணையில் பற்று கொண்டு  என்று நிரந்தமான ஞானத்திற்கு உரியரவராக விளங்குபவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று இப்பாடல் போற்றி செய்கின்றது. மேல்பாடல் தமிழ்ப் பற்றினை விளக்கியது. இப்பாடல் முருக பற்றினைக் காட்டுகிறது.

எ

            எண்ணரும் சீர் இலைவடிவேல் இறைவன் முருகன் புகழ் கொண்டு இப்பாடல் தொடங்குகிறது. சிவபெருமானையும் முருகனையும்  ஒருங்கே எண்ணி  வாழும் இனிமையவர் சிவஞான பாலய சுவாமிகள். அவர் புண்ணியன், கண்ணியன், பொம்மபுர தேவன் என்று இப்பாடல் பெருமை பேசுகிறது.

ஏ

            ஏதமில் ஆராத்திய குலத்தீபம் என்று சிவஞான பாலய சுவாமிகளை ஏ என்ற உயிர்எழுத்தில் தொடங்கும்பாடல் அடையாளம் காட்டுகிறது. வீரசைவத்தில் ஆராத்தியராக விளங்குபவர்கள் ஐவர் ஆவர். அவர்கள் சிவலிங்கத்தில் பிறந்தவர்கள். கயிலாயத்தில் இருந்த சங்கு கன்னர் கடலில் தோன்றியவர். கடலும் சிவவடிவம். அப்பு. எனவே சிவஞான பாலய தேசிக பரம்பரையும் சிவலிங்கத்தில் தோன்றிய ஆராத்திய குலப் பெருமை உடையது என்கிறார் மணி அய்யர். மேலும் கோதறு சிற்கனலிங்கம், கண்டி, திருநீறு, கோல், கல் ஆடை ஆகிய அமைப்புடன் திகழ்பவர் சிவஞான பாலய சுவாமிகள் என்று அவரின் தோற்றத்தையும் படிப்பவர் கண் முன் நிறுத்துகிறார் புலவர்.

ஐ

            ஐந்தவித்த என்று தொடங்கும் பாடல் எண்ணலங்காரமாக விளங்குகிறது. ஐந்து புலன்களின் ஆசைகளை அழித்த பெரியவர்கள் சிவஞான பாலய சுவாமிகளின் அடியினைப் பணிவார்கள். அவர்களுக்கு ஐந்து எழுத்தினைச் சொல்லி நல்வழி காட்டுபவர் சிவஞான பாலய சுவாமிகள். மேலும்  அவர்களுக்கு ஆறு முக இயல்பையும் அவர் எடுத்துரைப்பார். ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்திசோயசாதம் , அதோமுகம் ஆகிய ஆறுமுக இயல்பினைக் காட்டுபவர் சிவஞானி.  ஏழ் கடத்தி என்று  ஏழு பொருள்களைக் கடத்தியவர் என்றும் சிறப்பிக்கப்பெறுகிறது. இந்த ஏழ் என்பது பல பொருள்களைக் குறிப்பதாக உள்ளது. ஏழ் என்பது கடல்கள், லோகங்கள், பிறவிகள் எனப்பலவற்றையும் குறிப்பதாக உள்ளது. மேலும் ராகு கேது ஆகிய துணைக் கோள்கள் தவிர்த்து ஏழு கோள்களையும் கடத்தி நிற்பதாகவும் கொள்ள இடமளிக்கிறது. எட்டில் ஐயன் முந்துறு நன்னிலை அருளும் என்ற தொடர் வழியாக அட்டமா சித்திகள் அருள்பவர் என்றும் சிவஞான பாலய சுவாமிகளின் அருள்தன்மை தெரியவருகிறது. இவ்வாறு எண் அலங்காரமாக இப்பாடல் சிவஞான பாலய சுவாமிகளின் பெருமைகளைப்  பேசுகின்றது.

ஒ

            ஒளியிழையீர் என்று தொடங்கும் இப்பாடலில் வள்ளி தெய்வயானை ஆகியோர் பால சித்தரின் மக்களாகத் தோன்றிய நிலை விளக்கம் பெறுகிறது. பாலசித்தர் முருகப்பெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிகிறார். முருகன் காட்சி அளிக்காது காலம் நீட்டுகிறார். இதனால் வருத்தமடைந்த வள்ளி தெய்வானையர்  பால சித்தரைக் காண வருகின்றனர். அவர்களைத் தம் மகள்களாக வளர்க்கிறார் பாலசித்தர்.  தேவியரைத் தேடி முருகன் வேடன் வடிவில் பாலசித்தர் ஆசிரமத்திற்கு வருகிறான்.  சித்தர் அவ்வேடனைத் தடுக்க அவன் முருகனாகக் காட்சி தந்து அருள் புரிகிறான். வள்ளி தெய்வானையை மணக்கிறான். இவ்வகையில் முருக அருள் பெற்றவர் பால சித்தர். இதனை இப்பாடல் வழி எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

ஓ

            ஓதரு நல் உற்றிடம் என்று இப்பாடல் தொடங்குகிறது.  சாதகர், சாரணர் தாள் பணியும் பெருமையர் சிவஞானி. கள்ளிப்பாலையே உணவாக உண்டவர் சிவஞானி. தீத அகற்றுபவர் சிவஞான பாலய தேசிக சுவாமிகள் ஆவார்.

ஔ

            ஔவியம் என்ற பொறாமையை அழித்தவர்க்கே அங்க லிங்க நிலை வாய்க்கும் என்று வழிகாட்டியவர் சிவஞான பாலய சுவாமிகள். கடல் ஒலிக்கும் பொம்மையர் பாளையத்தில் வீற்றிருப்பவர் சிவஞான பாலய சுவாமிகள் ஆவார்.

            இவ்வாறு உயிர் எழுத்துகளால் உயிர்கள் சிவஞான பாலய சுவாமிகளின் பெருமையை, வள்ளல்தன்மையை அறிந்து கொள்ள வைக்கிறது இவ்வுயிர் வருக்க மாலை. உயிர்களின் தன்மையையும் அவற்றின் மலங்களையும்  இப்பனுவல் எடுத்துரைத்துள்ளது. உயிர்கள் பொன் பொருள் மண், பெண் ஆசை உடையன. பொறாமை உடையன. மலங்களைப் பெற்றன. அவற்றைச் சுத்தப்படுத்தி லிங்க தாரணம் செய்து ஞான வழிக்கு அருளும் நற்குரு சற்குரு  சிவஞான பாலய சுவாமிகள் என்று இந்நூல் உறுதி பட மொழிகின்றது.

            மேலும் இட்டலிங்கம், காவியாடை, மந்திரக் கோல், திருநீறு  ஆகியன பாலய தேசிக சுவாமிகளின் வடிவம் என்பதைக் காட்டி அந்நெறியில் ஞானப் பரம்பரை வளர்ந்து வரும் நிலையையும் இப்பாடல்கள் காட்டி நிற்கின்றன.

            மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் பழமையை, பெருமையை. ஞானத் தன்மையை விளக்குவது இந்நூல். இருபது ஆதீனகர்த்தர்கள் இறைவழியைக் காட்ட மயிலம் பொம்மபுரத்தில் வீற்றிருந்த வீற்றிருக்கும் பெருமைய இந்நூல் வழி உணரமுடிகின்றது.

கருத்துகள் இல்லை: