செவ்வாய், நவம்பர் 10, 2026

கருத்தரங்கச் செம்மல் முனைவர் வேல். கார்த்திகேயன்.


           


மயிலம்  முருகன் இருக்கும் இடம்.  தமிழ் இருக்கும் இடம். கருத்தரங்க அறிஞர் வேல் கார்த்திகேயன் வாழும் இடம்.  தன்னிகரற்றத் தமிழை மயிலத்தில் கற்று, இந்திய மாநிலங்களில் தமிழ்ச் செல்வத்தைப் பரப்பி வருபவர் நண்பர் வேல் கார்த்திகேயன்.  திருநாவுக்கரசர் பாடல்களில் தோய்ந்தவர். ஆய்ந்தவர். சிவப்பிரகாசரில் கரைந்தவர். கனிந்தவர். இனிய சொற்பொழிவாளர்.  சிறந்த கருத்தரங்குகளை நடத்தி வரும்  ஆற்றல் வாய்ந்தவர்.  சென்னையில் வளர்ந்தாலும், ஜெயதேவன் அய்யாவின்  ஆசிரியத் தகைமையால் உருவானாலும் இன்று புதுச்சேரியின் தமிழாய்  மலர்ந்து செழிப்பவர்.

            மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையத்தின் இயக்குநர்.  தாய், தந்தை , தமிழ் , கருத்தரங்கு என்று வாழ்ந்தவர்.  கருத்தரங்குகளை நடத்துவதிலும் அவற்றிற்கு உரிய பொருண்மைகளைத் தேர்வதிலும்  நூலாக்கம் செய்வதிலும் இவரின் பாணி தனித்துவமானது. எளிமை, நேரத்தி, ஆழம் கொண்ட கட்டுரைகளைத் தொகுக்க வல்லவர் இவர்.

            காஞ்சி மாமுனிவர்  உயராய்வு மையத்தின்  தமிழ்ப் பணிகளில் இவரின் பணி குறிக்கத்தக்கது.  அயல் மாநில ஆய்வேட்டுப் புறத்தேர்வாளர்களின் பெயர்ப் பட்டியலில் இவரின் பெயர் இடம் பெறாத பல்கலைக்கழக  தேர்வுப் பட்டியல் இருக்காது. தகவல்தொடர்பிலும்,  நட்பு பாராட்டுவதிலும், உரிமையோடு பழகுவதிலும் இவருக்கு இணை  யாருமில்லை. நண்பர்கள், தோழர்கள்  அனைவரையும் உயர்த்தி தன்னையும் காத்து  தமிழையும் காத்து நிற்பவர்.  இவரின் தமிழ் பணி சிறக்கட்டும்.

 

கருத்துகள் இல்லை: