செவ்வாய், நவம்பர் 10, 2026

தொடர் கருத்தரங்க தமிழ்ப் பணியாற்றும் மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம்

 

மனித குலம் முன்னேற  சிந்தனைகள், எண்ணங்கள், கருத்துகள் அவசியம். தனி மனிதச் சிந்தனை வளம், எண்ண ஆற்றல், கருத்துச் செறிவு  சமுதாயத்தை நாட்டை உலகத்தை உயர்த்துகிறது. எனவே மொழிகள்தோறும், துறைகள்தோறும் கருத்தரங்குகள்  எழுவதை ஒட்டி மனித குலம் முன்னேற்றத்தை எட்ட முடிகின்றது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. நிறுவனங்கள் நடத்துகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நடத்துகின்றன. தனி மனிதராக தொடர்ந்து வெள்ளி விழா காணும் அளவிற்கு காலத்திற்கு ஏற்ற பொருண்மைகளில் கருத்தரங்குகளை நடத்தி வரும் சாதனையாளர் வேல் கார்த்திகேயன் ஆவார். மயிலம் பரிமளவேல்  தமிழ் உயராய்வு மையம் என்ற அமைப்பின் கீழ் அவர் தனி மனிதராக அயராது, தளராது, தவறாது தமிழ்ப்பணி ஆற்றிவருகிறார். தமிழகத்தில் நிறுவனங்கள் பல கருத்தரங்குகளை நடத்தி வந்தாலும்  அவை ஒரு கட்டத்தில் தொடருவதில்லை.  ஆனால் மயிலம் பரிமளவேல்  தமிழ் உயராய்வு நிறுவனம்  தொடர்ந்து கருத்தரங்குகளை உரிய காலத்தில்  கருத்தரங்கத் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்து நடத்தி வருவது பெருமைக்குரியது.  கட்டுரையின் தரம், தொகுப்புகளின் தரம், கருத்தரங்க நிகழ்முறை ஆகியவற்றில் தனித்த கவனம் செலுத்தி நடத்தப்படும் மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம்  தமிழ்க்கருத்தரங்கத் தளத்தின் மணிமுடியாகத் திகழும் நிறுவனமாக நிலை பெற்றுள்ளது.

தன் சொந்தப் பணத்தை ஆண்டு தோறும்  செலவழித்து கருத்தரங்கினை கவனமுடன் நடத்தி வரும்  முனைவர் வேல் கார்த்திகேயன் அவர்கள் உழைப்பு, தியாகம், தமிழுணர்வு  பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவரின் குடு்ம்பம் அவரின் உடன் பிறந்தார்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருந்து இப்பணி சிறக்கப் பாடுபட்டு வருகின்றனர்.

            அறிஞர் அண்ணா படைப்புகள்,  செம்மொழி இலக்கியங்கள், வைணவ இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என்று பல்வேறு தமிழ்த் துறைகளில் கருத்தரங்குகளை நடத்தி ஒவ்வொரு கருத்தரங்கின்போதும் மூன்றுக்கு மேற்பட்ட ஆய்வுத் தொகுதிகளை வழங்கி தன்னையும் வளர்த்து தான் சார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை வளர்த்து வரும் பணியை மயிலம் பரிமளவேல் தமிழ் உயராய்வு மையம் செய்துவருகிறது. தன்னலம் கருதாத தமிழ்ப் பணி இது. நாளும் தழைக்கட்டும்.

கருத்துகள் இல்லை: