குன்றக்குடி வளர் சண்முகநாதன் வருகைப் பாமாலை
முனைவர்
மு.பழனியப்பன்
அன்பே தவமாய்
அடியார்க்கு அடியாராய்
ஆன்மீகத்து ஒளியாய்
கோயில்களுக்கு அரணாய்
எளிமையின் இலக்கணமாய்
இனிய தமிழின் ஒலிப் பெருக்காய்
விளங்குகின்ற நம் அடிகளார் பெருமகனார்
வணங்க வந்த முருகா! வருக! வருக!
கவித் தேன் கொண்டு
கந்தன் புகழ் பாட வந்த
அருமைக் கவிஞர்கள் அறுவர்
வணங்க வந்த இளைய வள்ளலே!
இனிமையாய் வருக! வருக!
அடையாக நெடுங்கதவம்
கொண்ட குன்றக்குடி மடத்திற்கு வருக
குறள் மணம் பரப்பும் குன்றக்குடி மடத்திற்கு வருக!
அறமனச் செம்மல்கள் உன் வருகையால்
பாராட்டு பெறுகிறார்கள்
கல்வியில் சிறந்த மாணவர்கள்
பாராட்டு பெறுகிறார்கள்
உன் வருகை திருக்கோலம்
உன் வருகை விழாக் கோலம்
உன் வருகை எழில் கோலம்
உன் வருகை வளமார் வாழ்க்கை
குன்றக்குடி குமரா! குறைகள் தீர்க்க வருக!
வருடம்தோறும் வைகாசி விசாகத்தில்
வந்தருளும் தேவே! வசந்த மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில் அசதி நீங்க வருக!
ஆறுமுகப் பெருமானே! ஏறுமயில் வாகனனே!
வள்ளி தெய்வானை துணைகளுக்கும்
மயில் வாகனம் தந்து நிற்கும் கருணைக் கோவே!
எங்கும் இல்லாத அதிசயமாய்
மயில் வாகனம் தந்த
குன்றக்குடி அதிசயமே வருக!
மகிழ்வோடு மருதிருவர் வணங்கிய திருவே!
தவத்திரு அடிகளார் மனம் முழுதாகிய கோவே!
பச்சை சாற்றி உனை வணங்கும்
வைகாசி விசாக நாளில்
பெருங்கருணை கொண்டு எங்களைக் காப்பாய்!
ஆறுமுகக் கடவுளே
உன் ஒவ்வொரு முகமும்
ஒவ்வொரு படைவீடாகும்.
ஒவ்வொரு படைவீட்டிலும்
அளவின்றிப் பெருகும் பக்தர் கூட்டம்.
இந்திரன் வணங்கிய சுவாமி மலைதனில்
ஆரோக்கியம் தருவான்
நக்கீரர் வணங்கிய திருப்பரங்குன்றம்
நமக்கான உறவுகளை நாளும் பெருக்குவான்
அருணகிரி பாடிய பழனி மலையாண்டவன்
ஞானத்தை நாளும் நல்குவான்
குமரகுருபரர் பாடிய செந்தூர் செந்தில் நாதன்
பாதுகாப்பாய் நமக்கு அமைவான்
பாம்பன் சுவாமிகள் பாடிய திருத்தணி நாதன்
ஆளுமையை நாளும் அருள்வான்
வாரியார் வணங்கிய சோலைமலை
பொருள் வளம் கூட்டுவான்
ஆறுபடைவீடும் ஆறுமுகமும்
ஒன்றாய் ஒருங்கே அமைந்த
குன்றக்குடி சண்முகநாதன் அனைத்தும் அருள்வான்.
ஆறுபடை வீட்டு அருளும் உருவும்
ஆக நின்றவன் குன்றக்குடி குமரன்
குன்றக்குடி குமரா! குறைகள் தீர்க்க வருக!
பன்னிரு கரங்களால்
பற்பல தொழில்கள் புரியும் அழகா!
உலகில் அன்பும் அமைதியும்
நிலவ அருள்வாய்!
ஒரு கரத்தால் உலக
அமைதி செய்வாய்
இரண்டாம் கரத்தால் அமைதி ஒப்பந்தங்களை ஏற்க வைப்பாய்
மூன்றாம் கரத்தால் தங்கத்தின் விலையைக் குறைப்பாய்
நான்காம் கரத்தால் வெள்ளியின் விலையைக் குறைப்பாய்
ஐந்தாம் கரத்தால் எரிபொருள் வளத்தைக் காப்பாய்
ஆறாம் கரத்தால் நாளும் உயரும் பெட்ரோல் விலை நிறுத்துவாய்
ஏழாம் கரத்தால் அமெரிக்க மண்ணில் அமைதி பெருக்குவாய்
எட்டாம் கரத்தால் ஈரான் நாட்டைக் காப்பாய்
ஒன்பதாம் கரத்தால் கடல்வழி காப்பாய்! கப்பல்கள் காப்பாய்!
பத்தாம் கரத்தால் புதிய அரசை வழிநடத்துவாய்
பதினொன்றாம் கரத்தால் பெண்களைக் குழந்தைகளைப் பாதுகாப்பாய்
பன்னிரண்டாம் கரத்தால்
உண்மை காப்பாய்
உன் கரங்களுக்கு
நாங்கள் தரும் இனிய வேலைகள் இவை.
ஒரு கையில் சக்தி வேல்
ஒரு கையில் வச்சிரம்
ஒரு கையில் அம்பு
ஒரு கையில் அங்குசம்
ஒரு கையில் சக்கரம்
ஒரு கையில் வில்
ஒரு கையில் தாமரை
ஒருகையில் மணி
ஒரு கையில் மழு
ஒரு கையில் தண்டாயுதம்
அபய கரம்
வரதக் கரம்
பன்னிரு கரங்களும் பாங்காய்த் தொழில் ஆற்றும்
பச்சை சார்த்தி உனை வணங்குவோம்
பசுமை காப்பாய் பால முருகா வருக!
ஆறுமுகம்
பன்னிரு கரமும்
இரு தாளும் கொண்ட செல்வா!
மயிலின் மீது அமர்ந்த குன்றக்குடி குமரா!
உன் இரு தாள்கள்
எங்கள் மனம் மீது எழுந்தருளட்டும்
மனம் மீது நடனம் புரியட்டும்
நாளும் வருக முருகா! நம்பிக்கை தருக முருகா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக