செவ்வாய், நவம்பர் 10, 2026

முதற்பொருளே முதன்மைப் பாடுபொருள்

 

முதற்பொருளே முதன்மைப் பாடுபொருள்



முனைவர் மு.பழனியப்பன்

முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமயம்

 

தமிழ் இலக்கியம் நீண்ட நெடிய பரப்புடையது. பல்வேறு புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மையக்கருத்தினை முன்வைத்து இலக்கியப் படைப்புகள் படைத்தளிக்கப்பெற்றுள்ளன. படைப்புகள் பல்வேறாக அமைந்தாலும்  படைப்புகளின் பாடுபொருள் குறிப்பிட்ட ஒரு சில மையங்களை முன்வைத்து அமைந்திருப்பது தமிழ் இலக்கியத்திற்கான சிறப்பாகும்.

பொருள் இலக்கணம் தமிழின் பாடுபொருள் இலக்கணம்

            தமிழின் தனித்த சிறப்பு இலக்கணமான பொருள் இலக்கணம் என்பது பாடுபொருள் இலக்கணம் ஆகும்.  இலக்கியமாக எதனை ஆக்குவது, எப்படி ஆக்குவது என்ற வினாக்களுக்கு உரிய விடைகள் பொருள் இலக்கண மரபில் அமைந்துள்ளன.

            "எழுத்து இலக்கணமும் சொல் இலக்கணமும் மொழியின் வடிவத்தை (Form) நெறிப்படுத்த, பொருள் இலக்கணமோ இலக்கியத்தின் உள்ளடக்கத்தை (Content) நெறிப்படுத்துகிறது"1 என்று கருதுகிறார் க. வெள்ளைவாரணனார்.

            "பொருள் இலக்கணம் என்பது தமிழ் மக்களின் வாழ்க்கையையும், அவ்வாழ்க்கையை இலக்கியமாக வடிக்கும் கலை நெறியையும் கூறும் பாடுபொருள் இலக்கணமாகும்" என்று வரையறுக்கிறார். தொல்காப்பியப் பொருளதிகாரம் என்பது வெறும் ஒழுக்க விதிகளை மட்டும் கூறாமல், ஒரு புலவன் தன் செய்யுளில் எவற்றை எல்லாம் பாடுபொருளாக (Subject matter) அமைக்க வேண்டும் என்பதற்கான 'இலக்கியக் கோட்பாடு”2 என்கிறார் ச. வையாபுரிப்பிள்ளை.

            ”உலக மொழிகளில் சொற்களின் இலக்கணத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை விட, தமிழ் மொழியில் 'சொற்களைக் கொண்டு பாடப்படும் பொருளுக்கு' (பாடுபொருளுக்கு) அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதுவே பொருள் இலக்கணமாக வளர்ந்தது”3 என்கிறார் அ.மு. பரமசிவானந்தம்.

            இந்த மூன்று கருத்துகளின்படி தமிழின் பொருள் இலக்கணம் என்பது பாடுபொருள் இலக்கணம்  என்பது உறுதியாகின்றது. அது மனித வாழ்வியலுக்கான இலக்கணமும் ஆகின்றது.  உலக மொழிகளில் அதற்கான இலக்கணம் என்பது  ஒலிகள், சொற்கள்,  தொடர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று முறைப்படுத்தும். குறிப்பாக மொழியின் வடிவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆனால் தமிழில் பொருள் இலக்கணம் என்பது  வாழ்வின் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது.  மொழியின் கட்டமைப்பினைத் தாண்டி மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும்  என்பதை வரையறுக்கும் இலக்கணமாக தமிழின் பொருள் இலக்கணம் அமைந்துள்ளது.

முதற்பொருள்

            ‘‘முதலெனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே”4  என்று முதற்பொருளுக்கான இலக்கணத்தை வகுக்கிறது தொல்காப்பியம்.  தமிழ் இலக்கியப் பரப்பில் நிலம் சார்ந்த பாடுபொருள் தொடர்ந்து அடிக்கருத்தாகக் கொள்ளப் பெற்றுள்ளது. முதற்பொருளின் மற்றொரு பகுப்பான காலம் என்பதும் பாடுபொருளின் துணைநிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.  நிலம் என்பதே பாடுபொருள் தன்மைக்கு முக்கியமான மையமாகக் கொள்ளப்பெற்றுள்ளது.

சங்க காலத்தில் முதற்பொருள்

            சங்ககாலத்தில் அக இலக்கியங்கள் ஐவகை நிலங்களின் அடிப்படையிலும், சிறுபொழுது, பெரும்பொழுது என்ற காலவகைப்பாட்டின் அடிப்படையிலும்  பாடல்கள் எழுதப்பெற்றுள்ளன.  தொல்காப்பியரின் கருத்துப்படி புற இலக்கியங்களும் அக இலக்கியங்களைப் போல  அக மரபிற்கு ஏற்ற நிலையில் புறத் திணைகளையும்  ஐவகை நிலங்களுக்கு ஏற்ப புறத்திணைகள் அமைக்கப்பெற்றுள்ளன.

            சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தும் நிலம் சார்ந்த இலக்கியங்கள் ஆகும். கைக்கிளை, பெருந்திணைப்பாடல்கள் மட்டும் நிலமற்ற பாடல்களாக விளங்குகின்றன.

காப்பியங்களில் நிலம்

            ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம்  படைப்பு நோக்கமாக மூவகை நெறிகளைக் கொண்டிருந்தாலும் அதன் பகுப்பு புகார், மதுரை, வஞ்சி ஆகியன நிலம் சார் பகுப்புகள் ஆகும். மணிமேகலையும் புகாரில் தொடங்கிக் காஞ்சியில் நடக்கின்றது. சீவக சிந்தாமணியில், சீவகனும் நாடுகள்தோறும் நகர்ந்து அரசாட்சியைக் கைக்கொள்கிறான். வளையாபதியின் களம் புகார். குண்டலகேசி இராசகிருகம் என்ற களத்தைக் கொண்டது.  பின்னர் எழுந்த கம்பராமாயணம்,  வில்லிபாரதம் ஆகியனவும் நாடுபிடி சண்டைகளின் தொடர்ச்சியே ஆகும். தேம்பாவணி தற்போதைய இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளில் நடைபெற்றாலும் தமிழ் நிலப் பின்னணியிலேயே அவை பாடப்பெற்றுள்ளன. மக்கா மதீனா நகரங்களைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைக் காட்சிப் படுத்துகிறது சீறாப்புராணம். இவ்வாறு காப்பிய களம் நிலச்சார்பினைப் பெற்று பாடுபொருள் மையமாகின்றது.

பக்தி இலக்கிய காலத்தில் நிலம்

            பக்தி இலக்கியங்களில் தலைநிற்கும் தேவாரம் தலமுறை சார்ந்தது. இருநூற்று எழுபத்தாறு தலங்கள் தேவாரம் பாடப்பெற்ற தலங்களாக அறியப் பெறுகின்றன.  நாலாயிரத் திவ்ய பிரபந்தம் நூற்றியெட்டு திவ்ய தேசங்களை அடிப்படையாகக் கொண்டுப் பாடப்பெற்றது. இந்த எண்ணிக்கையில் இரண்டு மேல் உலகம் சார்ந்தவை. நிலம் சார்ந்த இலக்கியத்தில் தலைமை நிலையில் இருப்பன பக்தி இலக்கியங்களே ஆகும். இவை சோழ, சேர, பாண்டிய நாடுகள் என்று நாடுகள் தோறும் பக்தி வளர்த்தன.

சிற்றிலக்கிய காலத்தில் நிலம்

            சிற்றிலக்கியங்களும் நிலம் சார்ந்த பாடுபொருள் கொண்டவை. அபிராமி அந்தாதி  திருக்கடையூர்  என்ற ஊரில் நிகழ்ந்த அதிசயம். முக்கூடற் பள்ளு  திருநெல்வேலி சீவல்ல மங்கலப் பெருமை பேசுவது. திருக்குற்றாலக் குறவஞ்சி  குற்றாலச் சிறப்பினை நல்குவது. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் மதுரைக்கு உரியது. நந்திக் கலம்பகம்  தெள்ளாறு, காஞ்சி பெருமை தருவது. திருக்கயிலாய ஞான உலா திருக்கயிலாயம் காட்டுவது. இவ்வாறு நிலப்பெருமை சொல்லும் பாடுபொருள் சிற்றிலக்கிய காலத்திலும் தொடர்கிறது.

இக்கால இலக்கியங்களில் நிலம்

            தற்கால இலக்கிய வகைகளான சிறுகதை, நாவல், தன்வரலாறு, மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் போன்ற அனைத்தும் நிலப் பின்புலத்தில் அமைந்து கூடுதல் சிறப்பினைப் பெறுகின்றன. பாரதியார்  எட்டயபுரம், புதுச்சேரி, சென்னை என்று தன் வாழ்விடங்களுக்கு ஏற்ப கவிதை புனைகிறார். பாரதிதாசன் கவிதைகளில் புதுச்சேரி மண் வாசனை மேலோங்கி நிற்கிறது. கண்ணதாசன் கவிதைகளில் அவரது மண் பின்புலம்  ஆட்சி கொள்கிறது. வள்ளலாரின் பாடல்களில் வடலூர் வளமை பெறுகிறது.

            இக்கால இலக்கியங்கள் வட்டார இலக்கியங்களாக நிலமாட்சி கொள்கின்றன.  கரிசல் இலக்கியம்  கி. ராஜநாராயணன், பூமணி, சோ. தர்மன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோரால் அடையாளம் பெறுகிறது. கொங்கு வட்டாரம் ஆர். சண்முகசுந்தரம், பெருமாள் முருகன், ஞானி, சு. வேணுகோபால் போன்றோரால் எடுத்தாளப் பெற்றுள்ளது. நாஞ்சில் நாடு  தோப்பில் முகமது மீரான், நாஞ்சில் நாடன், போன்றோரால் எழுத்தில் வடிக்கப்பெற்றுள்ளது. சென்னையின் போக்கு ஜெயகாந்தன் புதுமைப்பித்தனால் வெளிவருகின்றது. தஞ்சை  பிரகாஷ்,  தி.ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன் போன்றோரால்  ஏற்றம் பெறுகிறது.

            உ.வே.சாமிநாதரின் தன் வரலாறு,  அப்துல் கலாம் அவர்களின் தன் வரலாறு  இவை வட்டாரத் தன்மையுடன் இயங்குகின்றன. 

            இவ்வாறு நிலப் பின்புலம் சார்ந்த இலக்கிய வளமை பாடுபொருள் வளமையாக வளர்ந்துள்ளது.

உலக அளவில் தமிழ் இலக்கியங்களும் அவற்றின் நில ஈடுபாடும்

உலக அளவில் தமிழ்க் களம் படைப்பாகம் பெற்று வருகிறது.  ஈழத்துத் தமிழ் இலக்கியம், மலேசியா சிங்கப்பூர் இலக்கியம், புலம் பெயர் இலக்கியம் என்ற வகைப்பாடுகள் நிலம் சார்ந்து படைக்கப்பெறும் இலக்கியங்களாக விளங்குகின்றன. உலகளாவிய தமிழ் அமைப்புகள் அந்த அந்த நிலப்பெயர்கள் கொண்டு, நகரப் பெயர் கொண்டு இயங்குகின்றன.  நிலச்சார்புடைய இலக்கியம் படைத்த தமிழர்கள், நிலமற்றவர்களாக வாழும் சோகத்தின் வெளிப்பாடு புலம்பெயர் இலக்கியமாகும்.

நீதிஇலக்கியங்களின் உலக அடையாளம்

            நீதி இலக்கியங்களில் ஊர், பேர் அடையாளங்களைக் காண முடிவதில்லை. அவை உலகையே இடமாகக் கொண்டு  உன்னதத் தத்துவங்கைள மொழிகின்றன. எனவே அவையும் நிலம் சார்ந்த பாடுபொருள் உடையன  என்பதை உணர இயலும்.

முடிவுகள்

 உலகைத் தன்னிடமாக, நாட்டைத் தன்னிடமாக, ஊரைத் தன்னிடமாகக் கொண்டு தமிழ் இலக்கியங்கள் பாடுபொருள் சிறப்பினைப் பெற்றுள்ளன. இவற்றின் வழியாக நிலத்தின் தன்மையை, நிலமாந்தர்களின் தன்மையை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. நிலமற்றவர்களின் ஏக்கத்தை உணரமுடிகின்றது. தமிழ் இலக்கியங்கள் நிலம் என்ற முதற்பொருளை  முதன்மைப் பாடுபொருளாகக் கொண்டு விளங்குகின்றன என்பதை உணரமுடிகின்றது.

சான்றாதாரங்கள்

1.    வெள்ளைவாரணனார், க., தொல்காப்பியம் - பொருளதிகாரம் உரைவளம், மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு, மதுரை, 1989, அறிமுக உரைப்பகுதி.

2.    வையாபுரிப்பிள்ளை, ச., இலக்கிய சிந்தனைகள், பாரி நிலையம், சென்னை, முதற்பதிப்பு: 1947, பக். 42-45.

  1. பரமசிவானந்தம், அ. மு., தமிழ் நாட்டு வரலாறும் பண்பாடும், தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை, 1967, பக். 112.

4.    தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருளதிகாரம, அகத்திணையியல் நூ. 4

 

 

 

 

கட்டுரையாளர்  விவரக்குறிப்பு

முனைவர் மு.பழனியப்பன், முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

மானாமதுரை  தஞ்சாவூர் நெடுஞ்சாலை, புதுப்பரளி, கோனாட்டு அஞ்சல் திருமயம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்.  622503

muppalam2006@gmail.com

9442913985

கட்டணம் செலுத்திய முறை

கருத்துகள் இல்லை: