ஸ்ரீபஞ்சதசி விளக்கும் மகா வாக்கியங்கள்
முனைவர் மு.பழனியப்பன்,
தமிழ்த்துறைத் தலைவர் ,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை
கட்டுரையின் சுருக்கம் (ஆங்கிலத்தில் )
- Introduction to Koviloor Vedanta Mutt: Vedanta philosophy has traditionally passed from gurus to disciples for centuries. In Tamil Nadu, the Koviloor Vedanta Mutt stands as a historic institution that pioneered teaching Vedanta structured as structured curriculum to everyone without any discrimination of caste, creed, or language.
- The 16 Texts of Koviloor Tradition: Founded by Koviloor Andavar Muthuramalinga Swamigal and nurtured by a lineage of twenty spiritual heads (including the current pontiff Sri Narayana Gnana Desika Swamigal), a curriculum of 16 key texts was formed. This includes prominent texts like Kaivalliya Navaneetham, Viveka Chudamani, and Sri Panchadasi.
- The Sringeri Connection & Sri Panchadasi: Sri Panchadasi was originally composed in Sanskrit by Vidyaranya, the 12th guru of the Sringeri Sharada Peetham. It consists of 15 chapters ("Pancha Dasa" meaning fifteen). The text acts as a philosophical bridge between the Sringeri and Koviloor traditions, having been translated into Tamil by Koviloor saints.
- Explanation of the Four Mahavakyas: The fifth chapter of the text, Mahavakkiya Anugrakamanihai, beautifully distills the core spiritual declarations (Mahavakyas) from the four Vedas:
- Rig Veda (Prajananam Brahma): Explains that ultimate consciousness (Prajananam) is Brahman. This divine intelligence manifests in all beings—from gods like Brahma and Indra to humans and animals.
- Yajur Veda (Aham Brahmasmi): Declares "I am Brahman". It shows that the all-pervading Supreme Soul (Paramatma) resides inseparably within the individual body and intellect (Jivatma), expressed as the true 'I'.
- Sama Veda (Tat Tvam Asi): Meaning "That Thou Art". It reminds the soul that before creation, before assuming names and forms, it existed in absolute unity with the supreme reality.
- Atharvana Veda (Ayam Atma Brahma): Asserts "This Self is Brahman". It highlights that the individual soul, when stripped of ego (Ahankara), is a self-luminous light identical to the universal truth behind the temporary world.
உலகம் முழுவதும் வேதாந்தக் கருத்துகள் பரவி வருகின்றன. பல நூற்றாண்டுகளாக வேதாந்தக்
கருத்துகள் குருமுகமாக ஓதப்பெற்றுச் சீடர்களால் கற்கப்பெற்றுப் பரவி வருகின்றன. தமிழகத்தில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட வேதாந்த மடங்கள் நிறுவப்பெற்று
அந்த மடங்கள் வேதாந்தக் கருத்துகளை எளியோர்க்கும் அறிவித்து வந்துள்ளன. தமிழில் வேதாந்தத்தை
அறிமுகம் செய்து, அதனைப் பாடங்களாக வகுத்து நாள்தோறும் கற்கும் முறையில் பரப்பி வந்த வேதாந்த நிறுவனங்களுள் ஒன்று கோவிலூர்
வேதாந்தத் திருமடம் ஆகும். இம்மடத்தில் சாதி, பேத ,இன, மொழி வேறுபாடு இன்றி வேதாந்தப்
பாடங்கள் பயிற்றுவிக்கப்பெற்றன.தற்காலத்திலும் வேதாந்தப் பாடங்கள் இணைய வழியில் பரப்பப்பெற்று
வருகின்றன.
கோவிலூர் மரபு வேதாந்த நூல்கள் என்ற அடிப்படையில்
பதினாறு நூல்கள் வேதாந்தப் பாடத்திட்டமாக கோவிலூர்
ஆதீனத்தால் உருவாக்கப்பெற்றுள்ளது. நாநா சீவ
வாதக் கட்டளை, கீதாச்சாரத் தாலாட்டு, சசிவன்ன போதம், மகாராஜா துறவு, வைராக்கிய சதகம்,
வைராக்கிய தீபம், இலட்சணா விருத்தி, வேதாந்த சூடாமணி, கைவல்லிய நவநீதம், விவேக சூடாமணி,
அஞ்ஞவதைப் பரணி, பஞ்ச தசி, ஈசுவர கீதை, பிரம்ம கீதை, பகவத் கீதை, ஞான வாசிட்டம் ஆகியன
வேதாந்தப் பாடத்திட்டத்தில் அமைந்துள்ளவையாகும்.
இப்பாடத்திட்டம் கோவிலூர் ஆண்டவர் என்னும்
முத்திராமலிங்கராலும், அவரைத் தொடர்ந்த ஞானப் பரம்பரையாலும் உருவாக்கப்பெற்றுள்ளது.
கோவிலூர்
ஆண்டவர் முத்திராமலிங்கரின் வேதாந்த மரபு
குரு தட்சிணாமூர்த்தி ஆதி ஜகத்குருவாக
அமைய, அவரின் வழியில் விண்டு, பிரமன், வசிட்டர், சத்தி, பராசரர், வியாசர், சுகர், கௌடபாதர்,
கோவிந்த யோகி எனத் தொடரும் வேதாந்த குருமரபில்
முக்கிய ஞான குருவாக ஆதி சங்கரர் வந்தமர்கிறார். அவரின் சீடர்களான பத்மபாதர்,
சுரேஷ்வரர், அஸ்தாமலகர், தோடகர் ஆகிய நால்வர்
வழியாக நான்கு வேதாந்த மடங்கள் முறையே கிழக்கில்
கோவர்த்தன மடம், தெற்கில் சிருங்கேரி மடம், மேற்கில் துவாரகை மடம், வடக்கில் ஜோஷி மடம்
ஆகியன தொடங்கப்படுகின்றன. இந்தியாவின் தெற்குப்பகுதிக்கான வேதாந்தப் பெருவழியாக சிருங்கேரி
அமைகிறது. இம்மடத்தின் தொடர்ச்சியாக நித்ய போத கந ஆசாரியார், ஞாந உத்தம ஆச்சாரியார்,
ஞாந கிரி ஆசாரியார், சிஹ்ம கிரி ஆசாரியார், ஈசுவர தீர்த்தர், நிருசிஹ்ம தீர்த்தர்,
வித்யா சங்கர தீர்த்தர், பாரதீ கிருஷ்ண தீரத்தர், வித்தியாரண்யர் ஆகியோர் வேதாந்தப்
பெருவழிக்கு உறுதுணையாக இருந்தனர்.
வித்தியாரண்ணியரின் மாணவர் சுப்பிரமணிய தேவன், அவரைத் தொடர்ந்து நயின ஈசன்,
அழகப்ப வாரியன், வீரபத்திர குரு, நாகை காரோணம்
வெற்றிலைக் கடை முத்தையா சுவாமிகள், அவரின் மாணவர் உகந்த குரு சுவாமிகள் என்று தொடரும் தென்திசை வேத மரபில் இவர்களின் வழியில்
ஆண்டவர் முத்திராமலிங்கர் வேதாந்த மரபில் அமைகிறார்.
இவர் கோவிலூரில் வேதாந்த மடம் பாடசாலை நிறுவி
அனைத்துத் தரப்பினரும் வேதநிலை உணர வழி வகை செய்கிறார். இவரின் வழியில் அருணாசல
ஞான தேசிகர், கருணாநிதி சுவாமிகள், இராமசாமி சுவாமிகள், வீரசேகர சுவாமிகள், அண்ணாமலை
சுவாமிகள், மகாதேவ சுவாமிகள், சோமசுந்தர சுவாமிகள், இராமநாத சுவாமிகள், இராமநாத சுவாமிகள்
(2) , காசி விசுவநாத சுவாமிகள், நாச்சியப்ப சுவாமிகள், மெய்யப்ப சுவாமிகள் ஆகியோர்
கோவிலூரின் ஞானப் பரம்பரையாக விளங்குகின்றனர். தற்போது கோவிலூர் மடத்தில் அருளாட்சி
புரிந்து வரும் சீர் வளர் சீர் நாராயண ஞான தேசிக சுவாமிகள் வேதாந்தப் பெருவழிக்குப் பெரிதும் ஆக்கமும் ஊக்கமும்
கொடுத்து வளர்த்து வருகிறார்.
கோவிலூர் மடத்தின் சீர் வளர் சீர் வீரசேகர
ஞான தேசிக சுவாமிகள் சிருங்கேரி சாரதா பீடத்தில் அம்பிகையின் திருக்கோயிலைத் தென்னிந்தியக்
கட்டடக்கலையின் அமைப்பில் செய்து தந்து கோவிலூரின்
வேதாந்தத் தொடர்பினை வலுப்படுத்தினார். சிருங்கேரி மடத்தின் வித்தியாரண்யர் இயற்றிய
ஸ்ரீபஞ்சதசி என்ற வேதாந்த நூல் கோவிலூர் அருணாசல
ஞான தேசிகர் காலத்திலும், வீரசேகர ஞான தேசிகர் காலத்திலும் தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது.
இதனை நித்தியானந்த சுவாமிகளும், சுப்பய்யா சுவாமிகளும் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.
இம்மொழி பெயர்ப்பே தற்போது சாரதா பீடத்திற்கும்
கோவிலூர் மடத்திற்கும் தத்துவப் பாலமாக அமைந்து
சிறக்கின்றது. இந்நூலே கோவிலூர் மரபு சிருங்கேரி
சாரதா மடத்தின் நெறிகளைப் பின்பற்றுவது என்பதை வெளிப்படுத்தும் சிறந்த சான்றாக விளங்குகிறது.
ஸ்ரீபஞ்சதசி
சிருங்கேரி சாரதா மடத்தின் பன்னிரண்டாம்
குருவான வித்தியாரண்யர் என்பவர் வடமொழியில் இயற்றிய நூல் ஸ்ரீ பஞ்சதசி என்பதாகும்.
இந்நூல் பதினைந்து அத்தியாயங்களைக் கொண்டதாகும்.
பஞ்ச தச என்ற பகுப்பின் வழியாக பதினைந்து என்பது
பெறப்பட்டு அதுவே இந்நூலின் பெயர்க்கான காரணமாகவும் அமைகிறது. இந்நூல் வேதங்கள் வழி வந்த உபநிடதங்களின் பிழிவுகளை
அறிவிப்பதாக உள்ளது. இந்நூலில் வேதாந்த மகா
மந்திரங்கள் நான்கின் தன்மை வெளிப்படுத்தும் நிலையை இக்கட்டுரை விவரிக்கின்றது.
மகா வாக்கியத்தின்
அநுக்கிர மணிகை
ஸ்ரீபஞ்சதசி வேதாந்த நூலில் ஐந்தாவது பகுதியாக விளங்கும் ‘மகாவாக்கியத்தின்
அநுக்கிரண மணிகை’ என்ற தலைப்பின் கீழ் நான்கு வேதங்களில் அமைந்துள்ள நான்கு தொடர்கள் மகாமந்திரங்கள் என்று அறிவிக்கப்
பெறுகின்றன. இந்நான்கு தொடர்களே ஒவ்வொரு வேதத்தின்
அடிமூலமாகவாகவும் அமைந்தனவாகும்.
ரிக்வேதம்,
ஐதரேய உபநிடத மகாவாக்கியம்
ரிக்வேதத்தில் அமைந்துள்ள வேதாந்த மகா
வாக்கியம் ‘‘பிரஞ்ஞானம் பிரம்மம்”
என்பதாகும்.
இதன் ஒலிவடிவை ஆராய்ந்து உரைக்கிறது பஞ்சதசி.
‘‘எதனிற் காண்பன் இதனை வினாவுவன்
வதுவை
கொள்வான் வழக்கிடுவான் மிக
மதுரம் அல்லது மற்றது தேருவன்
அதுகொலம் பிரஞ்ஞானம் என்பதே’’
என்ற செய்யுளின்வழி பிரம்ம ஞானம் என்பது விளக்கப்பெறுகிறது. கண்களால் பார்ப்பதன் வாயிலாகவும், காதுகளால் கேட்பதன்
வாயிலாகவும், மூக்கினால் நுகர்வதன் வாயிலாகவும், வாயினால் இனிப்பு மற்றும் கசப்புச்
சுவைகளை சுவைப்பதன் வாயிலாகவும் பிரஞ்ஞானம் ஓர் உயிருக்கு அமைகின்றது. இதன் வழியாகப்
பிரபஞ்சத்தின் இயக்கத்தை உணர்ந்து அதன் மெய்நிலையை
அறியமுடிகிறது.
இவ்வாறு இம்மந்திரத்தில் அமைந்துள்ள முதல்
பகுதியான பிரஞ்ஞானம் பிரம்மம் என்ற தொடருக்கான விளக்கம் எடுத்துரைக்கப்பெற்று, பிரம்மம் என்பதற்கான விளக்கம் பின்வரும் பாட்டில் தரப்பெற்றுள்ளது.
‘‘திசை முக இந்திர தேவர்கள் மானுடர்
அசுவம் கோ முதலானவற்றுள்ளுமே
இசையும் ஞானம் ஒன்றே பரம் ஆதலான்
நசைபரம் பிரஞ்ஞானம் என்பாலும் ஆம்’’
(2)
நான்கு
திசைகளை முகமாகக் கொண்ட பிரம்மா, இந்திரன், தேவர்கள் என்ற தேவ கணத்துள்ளும், ஆண் ,பெண்,
அலி என்ற மானுட கணத்துள்ளும், குதிரை, பசு போன்ற விலங்கு கணங்களிடத்தும் இசைந்துள்ள ஞானம் ஒன்றே அதுவே பரம் ஆகும். இதனால் ஒரே தரத்தில் அனைத்துக்
கனங்களிடத்திலும் பிரம்மம் அமைந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த அறிவின் வழியாக
மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவற்றைப் பற்றியும் , உயர்ந்த இறைவனைப் பற்றியும்
அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
யஜுர்
வேதம், பிரகதாரண்ணியக உபநிடத மகா வாக்கியம்
யஜுர் வேதத்தின் அடிப்படை தொடர் ‘‘நான் பிரம்மமாயிருக்கிறேன்’’ ‘‘அஹம் பிரம்மாஸ்மி’’
என்பதாகும்.
‘‘அறவும் பூரணம் ஆம் பரமாற்றுமா
உறும் இங்கே உணர்வுக்கு உரித்தாமுடற்
செறியும் புத்தியின் சீர்க்கரியாய்மரீஇப்
பிறிவிலாது அகம் என்று பிறங்குவான்’’ (3)
என்ற பாடலின்
வழி ‘‘நான் பிரம்மமாயிருக்கிறேன்’’ என்ற தொடரின்
பொருள் அறிவுறுத்தப்பெறுகிறது.
அறவும் பூரணமும் ஆக விளங்குவது பரமாத்மா
என்று பரமாத்மாவிற்கு உரிய இலக்கணம் இச்செய்யுள் வழி அறியப்பெறுகிறது. பரமாத்மா என்பது
எங்கும் எதிலும் எப்போதும் முழுமையுடன் விளங்கும் தன்மையது. இத்தகைய முழுமையும் நிறைவும்
பெற்ற பரமாத்மா, இந்த உலகத்திலும் எங்கும் நிறைந்துள்ளது.
இவ்வுலகத்தில் பரமாத்மா, உணர்வுகளுக்கு
இடம் தரும் மனித உடலில் புத்தியில் அமைந்திருக்கிறது.
பரமாத்மாவுடன் அறிவுத் தொடர்புடைய புத்தியானது, நான் என்றும் பெயரில் ஒலிக்கப்படுகிறது.
அந்த நான் என்பதிலும் பிரிவில்லாமல் இணைந்து இருப்பது பிரம்மம் ஆகும். எல்லையற்ற முழுமை
பெற்ற பரமாத்மா, மனித உடலில் உள்ள புத்தியின் செயல்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. ஆத்ம
ஞானத்திற்கு இடமளிப்பதாக விளங்குகிறது. இந்த ஆத்மாவிற்கு நான் என்பது பெயர் ஆகும்.
பிரம்மம் என்ற ஒலியின் பொருளை விளக்க மற்றொரு
செய்யுள் எழுதப்பெற்றுள்ளது.
‘‘உரிமைப் பூன்றம் என்றோது பரம்பொருள்
பிரமமென்பதாம்
பின்னும் இங்கு ஆகினேன்
ஒருமைத் தாம் என்று உணர்த்துவது ஆதலால்நான்
அருமைச் சன்மயம் ஆகின நான் அரோ’’ (4)
என்ற பாடலின்
வழி யான் பிரம்மமாக இருக்கிறேன் என்ற தொடர்
உறுதிப்படுத்தப்படுகிறது.
பரம்பொருள் என்பது எக்காலத்தும் முழுமையும்
நிறை அறிவும் பெற்றது. அது பிரம்மம் என்று அழைக்கப்பெறுகிறது. அது உயிர் ஆன்மாக்களில்
வேறாகாமல் ஒன்றியதாக உள்ளது. இதனால் நான் என்பது பிரம்மமாக இருக்கிறது என்பது உறுதியாகின்றது.
இங்கு பிரம்மம் என்ற சொல் பரம்பொருளைக் குறிக்கின்றது. ஒருமை என்பது பரமாத்மா ஜீவாத்மா ஒன்றுபட்ட நிலையைக் காட்டுகிறது. சன்மயம் என்பது
இரண்டும் ஒன்றாய் இருக்கும் நிலையாகும். பரப்பிரம்மம் என்று தன்னை உணரும் ஞானநிலையின்
உறுதிப்பாடு இங்குச் சுட்டப்பெறுகிறது.
சாமவேதம்,
சாந்தோக்கிய சுருதியின் மகாவாக்கியம்
சாம வேதத்தின் சாந்தோக்கிய சுருதி உபநிடத்தின்
வழி அறியவரும் மகா வாக்கியம் ‘‘தத்துவமசி
’’ என்பதாகும். தத் பரம்பொருள், துவம் ஜீவாத்மா,
அஸி இருக்கிறாய் என்ற நிலையில் நீயே அதுவாக
பரம்பொருளாக இருக்கிறாய் என்பது மகாவாக்கியம் ஆகும்.
‘‘ஏகம் ஏவ அத்துவிதம் எனும் சத்தே
ஆகும் நாம உருவம் கன்றது
மாகம் ஆதி வருமுன் இன்றுறும்
பாகுபாடிலப் பண்பு அது என்பதாம்’’ (5)
உயிர்கள்
தோன்றுவதற்கு முந்தைய காலத்தில் அவை பாகுபாடின்றி
பெயர் வேறுபாடின்றி, உருவ வேறுபாடின்றி அறிவில் சிறந்த பிரம்ம நிலையிலேயே ஒன்றியிருந்தது.
இன்றைக்கு பரமாத்மா ஜீவாத்மா என்ற பிரிவினையில் கிடந்தாலும், முந்தைய காலத்தில் பாகுபாடின்றி
நீயே அதுவாக இருந்தாய் என்று ஆன்மா இறைநிலையில் ஒன்றாய்க் கிடந்தமையை இச்செய்யுள் உரைக்கிறது.
‘‘வினவுவோன் உடல் இந்தியம் மேலாதாய்த்
துனுமெய்வத்து இங்கு தொம்பதம் என்பதாம்
மனு நல் ஒற்றுமை மற்று அசி தேற்றிடும்
தனிமை தொந்தத்தின் தான் பெறற் பாலதே
’’ (6)
என்ற பாடலில் துவம், அசி என்பதற்கான பொருள்கள் விளக்கப்பெறுகின்றன. நீயே அதுவாய் இருந்தாய் என்பதும் உணர்த்தப்படுகிறது.
மகா வாக்கியத்தை அறிய விரும்புவன் உடலும் உயிரும் உடையவனாக இருக்கிறான். அவன் துவம்
என்பதன் சாட்சியாக விளங்குகிறான். அசி என்பது
பிரம்மம், ஆன்மா இரண்டின் ஐக்கியத் தன்மையை
அறிவிக்கும். இரண்டும் நெருங்கியத் தொடர்புடையது
என்பதை தொந்தம் என்பது குறிக்கிறது. இத்தகைய
பொருந்திய நிலை அனுபவத்தினால் கிடைப்பது.
அதர்வண
வேதம், மாண்டூக்கிய உபநிடத மகாவாக்கியம்
‘‘அயமாத்மா பிரம்மம்’’ என்ற மகாவாக்கியம் அதர்வண வேதத்தின் மாண்டூக்கிய
உபநிடத்தின் வழி இந்த உலகிற்குக் கிடைக்கின்றது. இந்த ஆத்மா பிரம்மமாம் என்பது இதன் பொருள் ஆகும். இதற்கான விளக்கத்தை
‘‘சொயம் விளங்கிய சோதி நற்காட்சியே
அயம் எனும் சொலினால் உட்கொளத்தகும்
துயர் அகங்காரம் தொக்கு இறுவாயின் வேறு
இயைவது ஆற்றுமா என்று உரை செய்வதாம்’’
(7)
என்ற பாடலின்
வழி அயம் என்பதற்கான மகாவாக்கியச் சொற்றொடரின் பொருள் விளக்கம் பெறுகிறது.
அயம் என்பது சுயமாக விளங்கும் சோதி நற்காட்சி உடையது ஆன்மா
என்பதை விளக்க வந்தது. மேலும் அது , அகங்காரம்
அற்ற நிலையில் அமைய வேண்டும். இதுவே அயம் ஆத்மா ஆகின்றது.
பிரம்மம் என்பதற்கான பொருளை
‘‘திரிசியம் பொய்ச் செகம் முழுதுக்குமோர்
பிரிவின் மெய்ம்மைப் பிரமம் என்பதாம்
அரிய அப்பொருள் ஆன்றதற்சோதியாம்
துரிய ஆன்ம சொரூபம் அதாகுமே’’ (8)
என்ற நிலையில் பாடலாக விளக்கப்பெறுகிறது. கண்களுக்குப் புலனாகின்ற
நிலையற்ற தன்மை பெற்றதான இந்த உலகம் முழுவதிற்கான மெய்ம்மை பிரமம் எனப் படுகின்றது.
இப்பிரமம், அரிய பொருள் ஆகும். சுயம்பிரகாசமான தன்மை உடைய அப்பொருள் ஆன்மாவின் சுயம்பிரகாசன தன்மையையும் பெற்று விளங்குகிறது.
இவ்வாறு வேத மகா வாக்கியங்கள் ஸ்ரீபஞ்சதசி
நூலுள் காட்டப்பெற்றுள்ளன. இவற்றின் வழியாக வேத விளக்கம் பெறமுடிகிறது. பரமாத்மா, ஜீவாத்மா,
இவை இரண்டுக்குமான தொடர்பு ஆகியன அறியப்படுகின்றன.
உலக உயிர்கள் பரமாத்மாவின் பார்வை பட்டு
பரமாத்வையும் அறிந்து, தன்னையும்அறிந்து இரண்டையும் இணைவிக்கும் நிலையையும் அறிந்து
முன்னேறல் வேண்டும் என்பதே வேதாந்தத் தத்துவத்தின் கருத்தாக அமைகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக