செவ்வாய், நவம்பர் 10, 2026

திருக்குறளிலும் நால்வர் திருமுறைகளிலும் பண்பாட்டு விழுமியங்கள்

 


திருக்குறளிலும் நால்வர் திருமுறைகளிலும் பண்பாட்டு விழுமியங்கள்

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருவாடானை

கட்டுரையின் சுருக்கம் (ஆங்கிலத்தில்)

  • Defining Culture (Panbaadu): Culture represents the refined internal growth of human minds, passed down through generations. While civilization refers to external changes (clothing, lifestyle), culture encompasses deep-rooted beliefs, compassion, duties, and hospitality. Tamil literature frames culture as Saandraanmai (righteous and dignified conduct).
  • The Interconnection of Thirukkural and the Saivite Quartet (Naalvar): Thirukkural is the foundational text of Tamil values, whose eternal impact reflects in the hymns of the Saivite holy Quartet: Gnanasambandar, Appar, Sundarar, and Manikkavasagar. Ancient Tamil verses state that Thirukkural, Moovar Thamil (Thevaram), and Thiruvasagam convey the same universal truth. The Naalvar structurally adapted Kural's concepts into their devotional literature.
  • Core Cultural Virtues Explained:
    • Humility and Self-Control (Adakkam): Kural emphasizes the control of the five senses like a tortoise withdrawing into its shell. The Naalvar mirror this by stating that the divine resides strictly within the hearts of those who have subdued worldly temptations and ego.
    • Domestic Life (Illaram): Kural celebrates monogamy and a harmonious family lifestyle. This is visually captured in Thevaram where Shiva is praised alongside Goddess Umadevi. A prime cultural example highlighted is Queen Mangayarkarasiyar, who balanced her husband's Jain views and her Saivite faith by simultaneously wearing sandalwood paste and sacred ash.
    • Hospitality (Virundhombal): Kural calls serving guests a sacred ritual (Velvi). The Thirumuraigal expanded Kural's concept of home hospitality into a grander community practice of Annadhanam (mass food distribution to devotees), as praised in Appar's verses at Chidambaram.
    • Penance (Thavam): Both Thiruvallur and the Naalvar describe true penance as keeping one's mind focused entirely on righteousness, warning humans against false rituals and superficial displays of renunciation.
    • Fearlessness (Anjaamai): Tamils possess an intrinsic quality of courage. Appar’s ultimate declaration "Naamaarkkum Kudiyallom, Namanai Anjom" (We are subjects to none, we fear not even death) directly complements Kural’s philosophy on living a dignified life free of fear.
    • Festivals and Worship (Poosai/Vizha): Festivals reflect the lively external execution of human culture. Kural ties grand temple rituals to seasonal rains, while Gnanasambandar’s Mylapore pathigam comprehensively lists the month-wise calendar of historic Tamil festivals celebrated even today.
  • Conclusion: Thirukkural established the initial moral blueprint of Tamil values, and the Naalvar Thirumuraigal successfully contextualized these secular values into active socio-religious practices, strengthening the timeless cultural fabric of Tamil society.

மக்கள் சமுதாயம் மேன்மையை நோக்கிப்  பயணித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் நலமுடன் வளமுடன், அறிவுடன், தெளிவுடன், எளிமையுடன், இனிமையுடன் வாழ விரும்புகின்றனர்.  எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கின்ற வாழ்க்கை அமைந்துவிட்டால் உலகில் சண்டைகளுக்கு இடமில்லை. சச்சரவுகளுக்கு இடமில்லை. போரில்லை. கவலை இல்லை. அடிமை இல்லை. ஆயுதங்கள் இல்லை. அன்பே நிறையும். அன்பைத் தேடி, அன்பால் இணைந்து, அன்பினை விளைவித்தலால் இனிய அமைதியான வாழ்க்கை கிடைத்துவிடும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு (திருக்குறள் 72)

என்று வள்ளுவர் அன்பினை உயிர்களின் இன்றியமையாத பண்பாகக் காட்டுகின்றார். இருப்பினும் அவர் காலத்திலும் அன்பில்லாதவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை சுய நல வாழ்க்கையாக இருந்திருக்கிறது.  அன்போடு இயைந்த வாழ்க்கையே  உலக மக்கள் அமைதியோடு வாழ்வதற்கான  நல்வழியாகும்.

 சமுதாயத்தை நல்வழி நடத்த சட்டங்களும், இலக்கியங்களும், போதனைகளும் உதவுகின்றன. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு வகையான வழிமுறைகள் அவர்களின் கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளன. எனவே இட, காலச் சூழல் கருதிய கட்டுப்பாடுடைய  வாழ்க்கை முறை   பண்பாட்டு வாழ்க்கை முறையாக உறுதிப்படுகிறது.

பண்பாடு

 “மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்ததே பண்பாடு“ என்கிறது வாழ்வியல் களஞ்சியம். தேவநேயப் பாவாணர் “பண்படுவது பண்பாடு. பண்படுதல் என்பது சீர்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும், திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம் என்கிறார்.  இவர் பண்பாடு என்பதைத் திருந்திய வாழ்க்கை முறை என்கிறார்

மனித சமுதாயத்தின் செம்மையான வாழ்வு நிலையைக் கண்டறிய உதவுவனவற்றுள், அச்சமுதாயம் பின்பற்றுகின்ற நாகரிகக் கூறுகளும் போற்றிப் புரக்கின்ற பண்பாட்டுக் கூறுகளும் தலைமை சான்றவை. இவற்றுள் நாகரிகம் மனிதர்களின் புறவளர்ச்சியைத் தெளிவுபடுத்தவல்லது. அதாவது நடை, உடை, பாவனைகளால், காலந்தோறும் பெருகி வருகின்ற புதுமைகளைக் கடைப்பிடிப்பதால் மனிதர்களிடையே-அவர்தம் புற ஒழுகலாறுகளிடையே-காணத் தக்க மாற்றங்களை விளக்க வல்லது. ஆயின் பண்பாடு அத்தகையதன்று. அது மனித சமுதாயத்தின் அக வளர்ச்சியை -மனவளர்ச்சியை முழுமையாக உணர உதவுவதாகும். தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கைகள், பொதுமைச் சிறப்பு, மனிதநேயம், கடமை உணர்வு, அழியாத மன உணர்வு முதலானவற்றைத் தெள்ளத் தெளிவாகக் காட்ட வல்ல செயல்களின் அடிப்படையில் பண்பாட்டு நிலை உணரப் பெறுகின்றது” என்கிறார் சி. பாலசுப்பிரமணியன் (மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்,ப. 20)  பண்பாடு என்பது மனித மனத்தில் அமைவது  என்பதை இதன் வழி உணரமுடிகின்றது.

பண்பாடு என்பது, ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், சமயங்கள், வழிபாட்டுமுறைகள், களவு, கற்பு, அக, புறத்திணைமரபுகள், இலக்கியமரபுகள், அரசியலமைப்புகள், ஆடை, அணிகலன்கள், திருவிழாக்கள், உணவுமுறை, பொழுதுபோக்குகள், விளையாட்டுகள் ஆகிய எல்லாவற்றையும், தன்னுள்ளடக்கியதாகும்.

மக்களின் உணவு உட்கொள்ளும் முறை, ஆடைகள் அணியும் விதம், மொழியாளும் திறன், அறிவுடைமை, விளையாட்டுத் திறன், அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம்,  பழக்கவழக்கங்கள் ஆகியன பண்பாட்டை உருவாக்குகின்றன. இவற்றில் ஒவ்வொரு சமுதாயத்திற்கான தனித்த அடையாளங்களும் குறியீடுகளும் இணைந்திருக்கின்றன. பண்பாடு என்பது  ஒரு காலத்திற்கு மட்டும் அமைவதில்லை. அது தொடர்ந்து காலம்தோறும் அமைவதாகும். இறந்தகாலத்தில் நிலைப்பாட்டில் நிலைத்து, நிகழ்காலத்தில் பாதுகாக்கப்பெற்று, எதிர்காலத்தில் மேலும் செழுமை பெறுவதாக உள்ளது. சமுதாய மக்கள்  அன்றாட பணிகளை நேர்மையான மனநிலையுடனும் நேர்மையான நோக்குடனும் மகிழ்ச்சியுடனும் செய்யும் நிலையில் பண்பாடு சிறக்கின்றது.

 தமிழ் இலக்கியங்கள் பண்பாடு என்பதைச்  சான்றாண்மையாகிய ஒழுக்கம் அல்லது உயர்ந்த வழி செல்லுதல்  என்ற நிலையில் வடிவமைத்துள்ளன. உலகம் என்பது‘‘ உயர்ந்தோர் மேற்றே” என்கிறது தொல்காப்பியம்.   இங்கு உயர்ந்தோர் என்பது பண்பாடு உடையவர்களை குறிக்கிறது.  நல்ல வழி முறைகளை பின்பற்றி வாழ்வதே சிறந்தது என்பதை ”பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.   இவ்வுலகம் பண்புடையவர்களால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை ”பண்புடையார் பட்டுண்டு உலகம்” என்கிறார் வள்ளுவர்.

 மனிதனை மேம்படுத்துகின்ற பண்பாட்டுக் கூறுகளுள்   மிகச்சிறந்தன அன்பு, ஈகை, புகழ்,  விருந்து புரத்தல்,  அஞ்சாமை  போன்றனவாகும். இவை பண்பாட்டு விழுமியங்கள் ஆகின்றன.  பண்பாடு என்பது மாந்தனது அகவுணர்வு வளர்ச்சியையும், சீர்மையையும்  குறிப்பது  ஆகும்.  மாந்தன் தன் அறிவுத் திறத்தாலும், உள்ளுணர்வு திறத்தாலும்,  உள்ளத்தை பண்படுத்தி அன்புடையவனாகவும், அருள் உடையவனாகவும், ஈகையுடையவனாகவும், இரக்கம் உடையவனாகவும், பண்பு உடையவனாகவும், வீரம் உடையவனாகவும், தீரமுடையவனாகவும், ஊக்கம் உடையவனாகவும், மெய்யுணர்வு உடையவனாகவும், மரியாதை உடையவனாகவும், பற்று உடையவனாகவும், பணிவு உடையவனாகவும், தன்னலம் கருதாதவனாகவும், பிறர் நலம் பேணுபவனாகவும் இருக்கின்ற நிலையே  பண்பாட்டு விழுமியங்கள் கொண்டு வாழ்கின்றன நிலையாகும்.

 இவ்விழுமியங்கள் தமிழ் இலக்கியங்களில் பெரிதும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்கள் ‘‘யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்றால் அன்பால் உலகை இணைக்கிறது. ”நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது  செய்தல் ஓம்புமின்”  என்பது சங்க நன்னெறி. மனத்துக்கண் மாசிலன் ஆதல் சிறந்த பண்பாட்டு விழுமியம் என்கிறது திருக்குறள்.

சிலப்பதிகாரம்

‘‘தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்

பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்

ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்

செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்

பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்

அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்

பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்

அறமனை காமின் அல்லவை கடிமின்

கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்

வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது

செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்

மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்.”

                        (சிலப்பதிகாரம், வரம்தரு காதை, 187- 202)

என்று பண்பாட்டு விழுமியங்களை அடுக்கி உரைக்கின்றது. தெய்வம், தெளிந்தோர்,தானம்,தவம், செய்ந்நன்றி, நட்பு போற்று. பொய்யுரை, புறம் பேசல், ஊன், உயிர்க் கொலை, பொய்சாட்சி, அல்லவை, கள்,காமம், களவு நீக்குக  என்று  செய்யத்தக்கனவற்றையும், செய்யத்தகாதனவற்றையும் குறிப்பிடுகிறது சிலப்பதிகாரம்.

            ”மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

            எண்ணில் நல்கதிக்கு யாதும் ஓர் குறைவில்லை” (தேவாரம், 3:24:1)

என்கிறது தேவாரம். இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டு் விழுமியங்கள் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. திருக்குறளிலும், நால்வர் மொழிகளிலும் உள்ள பண்பாட்டு விழுமியங்களைக் காணுகையில்  தமிழரின் அழியாத பண்பாட்டுச் செயல்பாடுகளை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

திருக்குறளும் நால்வரும்

திருக்குறள் தமிழின் மூத்த அற இலக்கியம் ஆகும். எக்காலத்திற்கும், எல்லாப் பொருள்கள் பற்றியும் எடுத்துரைக்கும் நல்வழி நூல் திருக்குறள்.  இதன் ஆளுமை, இதன் தாக்கம் அனைத்து படைப்பாளிகளித்திலும் உண்டு. நால்வர் என்றழைக்கப்பெறும் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய அனைவரும் திருக்குறளின் வழியில் அதன் தாக்கம் பெற்று தம் சைவ சமயக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

‘‘தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியுங் - கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகமென் றுணர்”

என்ற பழம் பாடல்  திருக்குறள், மூவர் தமிழ், திருவாசகம், திருக்கோவையார் ஆகிய அனைத்தும் ஒத்த கருத்துடைய தமிழ் வாசகங்களே என்று உணர்த்துகிறது.

            இதன்வழி திருக்குறளும் நால்வர் மொழிகளும் ஒத்திசைந்த கருத்துகளைக் கொண்டுள்ளன என்பதைத் தெளிவாக உணரமுடிகின்றது. திருக்குறளை அப்படியே அடியொற்றி நால்வர் மொழிந்துள்ளனர்.

            ‘‘இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லை என்னாது ஈத்துவக்கும்

            தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே” ( 2.42.9)

 என்ற சம்பந்தர் தேவாரம்,                         

            ”ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை

            வைத்திழக்கும் வன்க ணவர்” (திருக்குறள் 228)

என்ற குறளோடு ஒத்தமைகிறது.

            ”இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள் ஒன்று மோரா

            துழிதரும் ஊமர்காள்” (5.84.9)

என்ற அப்பர் வாசகம்,                                

            ”நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

            பெருமை உடைத்துஇவ் வுலகு.” (336)

என்ற திருக்குறளின் மறுவடிவாக உள்ளது.

            ”உறங்கி விழித்தாலொக்கும் இப்பிறவி” (  7.3.4)

என்ற சுந்தரர் தேவாரப் பகுதி அப்படியே

            ‘‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

            விழிப்பது போலும் பிறப்பு” (திருக்குறள் 339)

என்ற குறளின்  மறுபதிப்பாக உள்ளது.

            ”அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

            அஞ்சல் அறிவார் தொழில்” (திருக்குறள் 428)

என்ற திருக்குறள்  மாணிக்கவாசகரின்  அச்சப்பத்து கருப்பொருளாகியுள்ளது.

            இவ்வகையில் நால்வர் மொழியும் திருக்குறள் மொழியும் ஒத்த கருத்தின என்பதை உறுதியாகச் சொல்லமுடிகின்றது. திருக்குறளின் கருத்துகளைப் பொழிந்து தருவன திருமுறைகள்.            

அடக்கத்துடன் வாழ்தல்

            தனி மனிதனின் வாழ்க்கை என்பது அவன் தீர்மானிக்கும் வாழ்விலேயே இருக்கிறது.  உண்பது நாழி, உடுப்பது இரண்டு என்று எளிமையான வாழ்க்கை வாழலாம். பகட்டுமிக்க படடோப வாழ்வும்  வாழலாம்.  அடக்கம் மிக்க வாழ்வே என்றைக்கும் இனிமை தருவதாகும்.

”எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” (திருக்குறள் 125), ”நாகாக்க” (திருக்குறள் 127) என்று அடக்கத்திற்கான  நடவடிக்கைகளைத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

            ஒருமையுள் ஆமைபோல ஐந்தடக்கல் ஆற்றின்

            எழுமையும் ஏமாப்பு உடைத்து (திருக்குறள் 126)

என்ற குறளின் முழு இலக்கணமாகத் திகழ்வன திருமுறைகள் ஆகும்.

            ‘‘அகன் அமர்ந்த அன்பினராய் அறு பகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞான

புகல் உடையோர்-தம் உள்ள புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில்

தகவு உடை நீர் மணி தலத்து சங்கு உள வர்க்கம் திகழ சலசத்தீயுள்

மிக உடைய புன்கு மலர் பொரி அட்ட மணம் செய்யும் மிழலை ஆமே” (சம்பந்தர் 1421)

என்று ஆறுபகைகளை விலக்கி ஐம்புலனை அடக்கி வாழும் உள்ளத்தார் மனத்தில் ஆண்டவன் இருக்கிறான் என்கிறார் ஞான சம்பந்தர்.

            ‘‘அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி

  எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே”  (அப்பர் 64/3,4)

 என்று அப்பர் ஐம்புலனையும் அடக்கி இனியானை மனதில் ஏற்றி வாழ்கிறார். மற்றொரு பாடலில்  ‘‘அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்” (2243/3) என்றும் பாடுகிறார்  அப்பர். மற்றொரு இடத்தில் ”பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி” (அப்பர் 2700/3) என்றும் பாடுகிறார்.

            தன்வாழ்வில் தன்னை அடக்கம் கொண்டு வாழச் செய்தவன் சிவபிரான் என்பதை ‘‘அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார்” (சுந்தரர் 176/2) என்கிறார்.

            மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பம் முழுவதும் புலனடக்கத்திற்கான முயற்சிகளை வெளிப்படுத்துவதே ஆகும்.

            ”நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு

விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ

அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே

கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே”

 ( மாணிக்கவாசகர் நீத்தல் விண்ணப்பம் 12)

என்று மாணிக்கவாசகர் ஐம்புலன்களால் தான் கட்டுண்டு கிடப்பதையும், அதில் இருந்து ஆண்டவனால் விடுதலை பெறும் நிலையையும் காட்டுகிறார்.

            இவ்வாறு அடக்கம் மிக்க தன்னடக்கம் மிக்க வாழ்வே தமிழர் தம் நிறைவாழ்வாகின்றது. இந்நிறை வாழ்வினைத் தற்போதும் தமிழர்கள் கடைபிடித்து ஒழுகி வருகின்றனர்.

           

இல்லறம்

தமிழர்தம் அகவாழ்க்கை என்பது பண்பாட்டு விழுமியங்களுள் ஒன்று. இருவர் இணைந்து ஓருயிராய் ஒருமித்து வாழும் இன்ப வாழ்க்கை இல்லற வாழ்க்கை ஆகும். நால்வர் சிவபெருமானை உமாதேவியோடும் இணைந்தே போற்றி இல்லற நெறி நிற்கின்றனர்.

 

விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி

பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன்

அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது

கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

 சிவபெருமானை, மெல்லியாளோடு  இணைந்திருக்கும் அன்புக் காட்சியை விலங்குகள் பறவைகள் இணைந்து இன்புற்றிருக்கும் காட்சிகள்  திருநாவுக்கரசருக்குக் காட்டுகின்றன. உயிர்களின் அக இணைவில் ஆண்டவனும் அம்பிகையும் கலந்து நிற்கிறார்கள்.எல்லா உயிரும் இன்பம் எய்தும் நிலையில்  தமிழர் தம் அகப் பண்பாட்டு விழுமியம் சிறப்பிற்குரியதாக  விளங்குகிறது.

தமிழர்களின் இல்லறம் என்பது மிகச் சிறந்த கட்டுப்பாட்டை உடையது.  தலைவன், தலைவி, மக்கட் செல்வம், உறவினர்கள் என்ற கட்டமைப்பில் நெகிழ்வு ஏதும் ஏற்படாமல் மேலும் மேலும் பாசத்தால் இல்லறத்தை வலுப்படுத்தும் பண்புடையது. திருவள்ளுவர்

                        ‘‘பெற்றான் பெறின்பெறுவர்  பெண்டிர் பெருஞ்சிறப்புப்

                          புத்தேளிர் வாழும் உலகு” ( குறள் 58)

என்று இல்லறச் சிறப்பினைக் காட்டுகிறார் வள்ளுவர்.  சிறந்த கற்பினாளைப் பெற்ற கணவன் தேவ உலக வாழும் மகிழ்வைப் பெற்று வாழ்வான் என்பதே இக்குறள் தரும் மெய்ம்மொழியாகும். இதன்வழி ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டு மரபும், இல்லற வாழ்க்கையே இனிய வாழ்க்கை என்ற பண்பாட்டுத் தெளிவும் பெறப்படுகின்றது.

இக்குறளுக்கு இனிய இலக்கணமாக அமைபவர்  மங்கையர்கரசியார்  ஆவார். இவர் மதுரையை அரசாண்ட கூன் பாண்டியனின் மனைவி. அவனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கிய பெருமையர். சம்பந்தர் தன்  தேவாரப் பாடல்களில் தனிமனிர் சிலரை மட்டுமே குறித்துள்ளார். அவ்வகையில் மனைமங்கலம் கருதி தன் பதிகத்தில் மங்கையர்க்கரசியாரைக் குறிப்பிடுகிறார்.  இவரோடு இவரின் கணவரும், பாண்டிய நாட்டு அமைச்சர் குலச் சிறையாரும் தேவாரத்தில் குறிக்கப்படுபவர் ஆயினர்.

மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,

பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,

பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி

அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே. (சம்பந்தர் 4090)

என்று மங்கையர்க்கரசியார்  பெயர் குறிப்பிடப்பெற்றுச் சம்பந்தரால்  போற்றப்படுகிறார். மேலும் அவர் தன் கணவனுக்கு உரியவளாக நடந்து கொள்வதையும் இத்தேவாரத்தில் காட்டுகின்றார்.

”முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க,

பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய, நின்ற

சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்,

அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே” (சம்பந்தர் 4096)

என்ற பாடலில் பண்பாட்டு்ச் சிறப்பு ஒன்று அமைந்துள்ளது.

பாண்டிய நாடு சமண சமயத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. மன்னன் கூன் பாண்டியனும் சமண மதத்தில் நின்றான். திருநீற்றைப் பூசாது விட்டான். ஆனால் இவனின் மனைவியான மங்கையர்கரசியாரால் திருநீறு பூசாமல் இருக்க இயலவில்லை. அப்பெருந்தகையார்  சமண சமயத்தினர் அணியும் சந்தனத்தினோடு நீற்றையும் அணிந்து தன் கணவனின் கருத்தையும் ஏற்று, தன் கருத்தையும் ஏற்று இரண்டையும் விட்டுவிடாமல் இரண்டையும் அணிகிறாள். இதுவே மேற்பாடலில் சந்தனக்குழம்பும், நீறும் தன் மார்பினில் முயங்க என்று சம்பந்தர் பாடுகிறார். நெற்றியில் அணிய வேண்டிய திருநீறு சந்தனத்துடன் மங்கையர்கரசியாரின் நெஞ்சில் நின்றது.

பெண்ணின் மனதையும், கணவனின் மனதையும் காத்த பண்பாட்டுச் செயல்பாடாக சந்தனமும் நீறும் இணைந்து அணிதல் என்பது விளங்குகின்றது. இவை பண்பாட்டுக் குறியீடுகளாகும்.

 

விருந்து புரத்தல்

தமிழக மக்களின் விருந்து போற்றும் பாங்கு பண்பாட்டுச் செழுமை வாய்ந்தது. சங்க காலம்  தொடங்கி திருக்குறளில் வளர்ந்து, இன்றும் தொடர்கிற பண்பாட்டு நிகழ்வு விருந்து புரத்தல் ஆகும். எந்நாள் சென்றாலும் தலைநாள் போன்று அதாவது வந்த முதல் நாள் போல விருந்து செய்வான் அதியமான் என்ற வள்ளல் என்கிறார் ஔவையார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பவன் நல் விருந்தாக சமுதாயத்திற்கு அமைவான் என்கிறார் வள்ளுவர். சாவா மருந்து என்றாலும்  விருந்தினரை  வீட்டுக்கு வெளியில் வைத்து விட்டுத் தான் மட்டும் உண்ணாத பண்பினன் தமிழன் என்கிறார் வள்ளுவர். விருந்தினர் முகம் திரியாமல் நடந்து கொள்பவன் தமிழன்.

            ”பரிந்தோம்பிப் பற்றற்றோ மென்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.” (திருக்குறள் 88)

என்ற குறள் விருந்தோம்பலை வேள்வியாகக் கருதுகிறது. பொருள் சேர்த்து வைப்பது விருந்தினைச் செய்வதற்கே என்பது குறள் முடிபு.

            ”அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி ”( திருக்குறள் 226)

என்று பசி தீர்த்தல் சிறந்த அறம் என்றும் அவ்வாறு பசி  தீர்த்தல் என்பது  அறத்தையும் பொருளையும் பாதுகாக்கும் சிறந்த வழி என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

தன் இல்லம் தேடி வந்த விருந்தினர்களுக்கு மட்டும் அல்லாமல் அடியார் கூட்டத்திற்கு விருந்திடும் முறைமையைத் தோற்றுவிக்கின்றன திருமுறைகள். அடியார்களுக்குத் தொண்டர்களுக்கு  உணவிடும்  முறைமை திருமுறைகளால் துவங்கப்படுகிறது. படிக்காசு பெற்று சம்பந்தரும் திருநாவுக்கரசரும் அடியார்களுக்கு உணவிட்டுள்ளனர். படிக்காசு பெற்ற நிகழ்ச்சியில்  விருந்திற்கான நுட்பம் ஒன்றும் உள்ளது.

அப்பர் பெற்ற பொற்காசு விரைவினில்  பொருள் பெற்று அடியார்கள் மகிழ உணவு தந்தது. ஆனால் சம்பந்தர் பெற்ற காசு கால தாமதமாக பொருளாக மாற்றம் பெற்று அடியார் வருந்த  பசி தூண்ட உணவு தந்தது. இதனை அறிந்த சம்பந்தர் அடியார்கள் மனம் மகிழ வாசி தீர்ந்த காசினைப் பெறுகிறார்.

”வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே.”  (சம்பந்தர் 922-1)

இ்வ்வாறு விருந்தினர் முகம் கோணாதவாறு, முகம் திரியாதவாறு உணவிட்ட திருக்குறள் நிலையை அடியார்களிடத்தில் காணமுடிகின்றது.

விருந்து என்பது ஒரு சிறு குழுவினருக்கு தம் வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவளிக்கும் நடைமுறையாகும். ஆனால் அதனை அடியார்களின் கூட்டத்திற்கு உரியதாக்கி அன்னதானமாக அறமாக ஆக்கியது திருமுறை.

‘‘அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற

               இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” (அப்பர் 1071/1)

 

 என்ற திருநாவுக்கரசரின் பாடல் அன்னதானம் நடைபெறும் இடங்களில் எல்லாம் இன்று பாடப்படுகிறது. அன்னத்துடன் பொன்னும் கொடுத்து மகிழ வைக்கிறது இப்பாடல். தில்லைச் சிற்றம்பலவன் பேர் பாடி இவ்வாறு அன்னம் பாலிக்கும் நிகழ்ச்சி தமிழரின் விருந்து புரத்தல் என்ற பண்பாட்டின் வளர்ச்சியே ஆகும்.

‘‘காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,

பேணியே விருந்து ஓம்புமே!” என்று பேசினும் கொடுப்பார் இலை;

பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்!

ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.”

என்ற சுந்தரர் தேவாரம் ‘‘சுற்றம் நல் கிளை  பேணி விருந்து ஓம்புமே” (7-342)

 என்று அக்கால சமுதாயத்தில் விருந்து நடத்த வேண்டும் என்பதைச் சுட்டுவதாக உள்ளது.

‘‘இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால்

விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா

அருந்தினனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே

மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே” ( திருவாசகம் 8-18-2)

என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் விருந்தின் தன்மையை எடுத்துரைக்கிறார். விருந்தினரை யாரும் தமிழகத்தில் கைவிட மாட்டார்கள். எனவே உனக்கு விருந்தாக வந்த என்னை விட்டு விடாதே என்று மாணிக்கவாசகர் இறைவனிடம் அழுகிறார்.

தவம்

ஒன்றினைக் கருதி அதனை எண்ணி முடிக்கும் வரை அதன் நினைவில் அதன் முயற்சியில் இருக்கும் நிலை தவம் எனப்படுகிறது. தம் கருமம் செய்வார்  தவம்  செய்வார் என்கிறார் வள்ளுவர்.

            ”வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

            ஈண்டு முயலப் படும்” (திருக்குறள் 265)

என்று தவத்திற்கான வரையறையை வழங்குகிறார் வள்ளுவர்.  தவம் செய்பவர்கள் சிலரே என்றும் வள்ளுவர்  குறிப்பிடுகிறார். வள்ளுவரின் வழியில் நால்வரும் பயணிக்கின்றனர்.

‘‘நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம்

வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர் மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்

தாய அடி அளந்தான் காணமாட்டா தலைவர்க்கு இடம் போலும் தண் சோலை விண்

தோயும் கடந்தை தடம் கோயில் சேர் தூங்கானைமாடம் தொழு-மின்களே ”

(சம்பந்தர் 642-2)

என்று சம்பந்தர் மனிதர் வாழ்வில் நோய், பிணி, துயரம், அகல தவம் இயற்றுங்கள் என்று குறிப்பிடுகிறார்.  அதனோடு தூங்கானை மாடத்தில் இருக்கும் இறைவனையும் தொழுதால் அவனை நோக்கித் தவம் செய்தால் நன்மை பெறலாம் என்று  இப்பாடல் திருக்குறள் வழி நிற்கிறது.

”முத்தி ஆக ஒரு தவம் செய்திலை

அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை

தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே

பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே” (அப்பர் 1397-1)

என்று அப்பர் நெஞ்சத்தைத் தவம் செய்ய ஆற்றுப்படுத்துகிறார்.  முத்தி வேண்டுவோர் செய்யத் தக்கது தவமாகும். அதே நேரத்தில் அடியார்களுக்கும் ஆடை, அணி, உணவு அளித்திடல் வேண்டும். மேலும் இறைவனை நோக்கி பக்தி செய் என்றும் உரைக்கிறார் நாவுக்கரசர்.

‘‘தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி

பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க

முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை

செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே”

 (7-661-1)

என்ற சுந்தரர் பாடலில்  தவம் செய்தால் அதனோடு அவமும் செய்கின்றவர்களாக மனிதர்கள் உள்ளனர். அவர்கள் சடை கட்டி, எலும்பு மாலை அணிந்து  இவையெல்லாம் புனைந்து நிற்பது எதற்காக. திருத்தினை நகர் இறைவனைத் தொழுதால் எல்லாம் பெறலாம் என்கிறார்.

            திருவள்ளுவர் இதனை,

            ”தவம் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை  

             அஃதிலார் மேற்கொள் வது ” (திருக்குறள் 262)

என்று தவத்தையும் அவத்தையும் பிரித்துரைக்கின்றது.

”புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம்

தம்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க

சித்தம் சிவம் ஆக்கி செய்தனவே தவம் ஆக்கும்

அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ”

என்று பிற சமயத்தவர்கள் தவம் செய்ய முயலாதவர்கள். சிவசமயத்தார்களே தவம் செய்ய வல்லவர்கள். அவர்களின் கருணையைச் சொல்லித் தோள் நோக்கம் ஆடுவோம் என்கிறார்  மாணிக்கவாசகர்.

இவ்வாறு தவம் என்பது தமிழர் வாழ்வின் ஒரு பகுதியாக அமைவதைத் திருக்குறளும் காட்டுகின்றது. திருமுறைகளும் காட்டுகின்றன.

யாருக்கும் அஞ்சாத வாழ்வு

அஞ்சாமல் செயலாற்றும் துணிவு என்பது தமிழர்க்கான தனிக்குணம்.  சங்க காலத்தில் அகமும் புறமும் சமுதாயத்தின் இரட்டைப் பக்கங்களாக விளங்கின. வீர மிக்க சமுதாயத்தின் அடிப்படைப் பண்பாக அச்சமற்ற வாழ்வு அமைகின்றது.

            ”அச்சம் உடையார்க்கு அரணில்லை. ஆங்கில்லை

            பொச்சாப்பு உடையார்க்கு நன்கு” ( திருக்குறள் 112)

அச்சம் உடையவர்களை எவ்வரணும் காப்பாற்றாது. கடமை தவறியவர்களுக்கு நன்மை என்பது கிடைக்காது என்பது இக்குறளின் பொருள்.

            ‘‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும், துன்பமில்லை”

என்று வள்ளுவ வழியில் நாவுக்கரசர் தேவாரம் நடைபோடுகிறது. நாம் எவர்க்கும் அடிமை இல்லை என்று சுதந்திர கீதம் பாடுகிறார் நாவுக்கரசர். அச்சமில்லாத வாழ்க்கை இன்ப வாழ்க்கை.

நாவுக்கரசர் ”ஈண்டு கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை” (திருநாவுக்கரசர் 12)  என்று மற்றோரு இடத்தில் உரைக்கிறார்.

‘‘துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே

அஞ்செழுத் தோதில் நாளு மரனடிக் கன்ப தாகும்

வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த

நஞ்சழ தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.” (அப்பர் 483)

என்று பாற்சோற்றில் நஞ்சு கலந்து கொடுத்த நிலையிலும் அச்சமின்றி உண்டதற்குக் காரணம் சிவபிரானின் பேரருளே என்று அச்சமின்மையையும் தனக்கு நேர்ந்த கொடுமையையும் பாடலாக்கியுள்ளார் நாவுக்கரசர்.

திருவாசகத்தில் உள்ள அச்சப்பத்து செய்திகள் அனைத்தும் அஞ்சாமையைத் தருவன. துணிவை அளிப்பன.

‘‘புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;

வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்;

வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;

கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்;

பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;

வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்;

தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்;

தறி செறி களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்;

மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்;

கோண் இலா வாழி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;” (திருவாசகம் அச்சப்பத்து)

 என்று அஞ்சத்தகாதனவற்றைக் காட்டுகிறார் மாணிக்கவாசகர். பிணி, பிறப்பு, இறப்பு, சாதல், மன்னர் உறவு, கூற்றுவன் சீற்றம் , அரவு, பெண்களின் மையல் ஆகிய எதற்கும் நாம் அஞ்ச வேண்டுவதில்லை என்று அச்சம் தவிர்க்கிறார் மாணிக்கவாசகர்.

அச்சமற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அதுவே தமிழர்க்குரிய பண்பாட்டு விழுமியம் இதன்வழி அறியமுடிகின்றது. பழங்காலம் முதல் எதற்கும் அஞ்சாத வலிமை உடைய செயல்பாடுகளை உடையது தமிழகம். இந்நிலை தொடர்தல் வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் அதுவே வள்ளுவர் காட்டும் அஞ்சா நெறி. திருமுறை காட்டும் தூநெறி

 

 

சிறப்பான பூசனை

            தமிழர் தம் பண்பாட்டை வெளிப்படுத்துவன விழாக்கள் ஆகும். விழாக்களின் போது ஆடை, அணிகலன், விருந்து என எல்லாவற்றிலும் தமிழரின் பண்பாடு வெளிப்படுகிறது. இன்றைக்குத் தமிழர்களின் பல விழாக்கள் உலகத் தமிழர்களாலும், உலகத்தாராலும் தமிழ்ப் பண்பாட்டு மரபுடன் கொண்டாடப் பெற்று வரப்பெறுகின்றது.

            திருக்குறளில்

                        சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

                        வறக்குமேல்  வானேர்க்கும் ஈண்டு ( திருக்குறள் 18)

என்று சிறப்பொடு பூசனை செய்யப்பட்ட முறை சொல்லப்படுகிறது. நன்றாக மழை வளம் பெருகினால் மட்டுமே தெய்வங்களுக்கான பூசனை சிறப்பாக நடைபெறும் என்பது இக்குறளின் கருத்தாகும்.

            திருமுறைகளில் பல விழாக்கள் நடத்தப்பெற்றன. ஏற்படுத்தவும் பெற்றன.    சம்பந்தர் தம் காலத்தில் நடந்த   விழாக்களை வரிசைப் படுத்தி மயிலாப்பூரில் ஒரு பதிகம் பாடுகிறார். அப்பதிகம் எலும்புருவாக இருந்த பெண்ணை உயிர்பித்த பெருமை உடையது. நோயுற்றோர் பாட நோய் நீங்கும் தன்மை உடையது.

”மட்டிட்ட புன்னையங்  கானல் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான்  கபாலீச் சரம்அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின்  உருத்திர பல்கணத்தார்க்

கட்டிட்டல் காணாதே  போதியோ பூம்பாவாய்”(சம்பந்தர் 1971)

என்று தொடங்கும் பாடல் முதல் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களை வரிசைப் படுத்திச் சம்பந்தர் பாடுகிறார். சம்பந்தர் காலத்தில் நிகழ்ந்த இவ்விழாக்கள் இன்றும் மயிலாப்பூரிலும், மற்ற ஊர்களிலும் நடைபெற்றுவருகிறது. ஐப்பசி ஓண நாள், கார்த்திகைநாள், ஆதிரைநாள், தைப்பூச நாள், மாசிமக நாள், பங்குனி உத்திரநாள், அட்டமி நாள், பெருஞ்சாந்தி நாள் என்பன அத்திருவிழா நாட்கள் ஆகும். இந்நாட்களைக் காணாமல் போகலாமா என்று பூம்பாவையை எழுப்பி அதன்வழியாகப்  பிறந்தவர்கள் அனைவரும் காண வேண்டிய திருவிழாக்களாக இவற்றைச்  சம்பந்தர் உரைக்கிறார்.

‘‘கானமர் சோலைக்   கபாலீச்சரம் அமர்ந்தான்

தேனமர் பூம்பாவைப்  பாட்டாகச் செந்தமிழான்

ஞானசம் பந்தன்   நலம்புகழ்ந்த பத்தும்வலார்

வானசம் பந்தத்  தவரோடும் வாழ்வாரே.”( சம்பந்தர் 1981)

என்று பூம்பாவையை எழுப்பிய பதிகமாக இப்பதிகம் விளங்குகிறது.

‘‘திருவினார் செல்வம் மல்கு விழா அணி,

மருவினார் வலம்கொள், மறைக்காடரோ!

உருவினாள் உமைமங்கை ஓர்பாகம் ஆய்,

மருவினாய், கங்கையைச் சென்னி தன்னிலே” (அப்பர் 1160)

 என்று திருமறைகாட்டில் நடைபெற்ற விழாநிலையைக் காட்டுகிறார் அப்பர்.

 உயிருடனும் மனத்துடனும் உடலுடனும் தொடர்புடைய பண்பாட்டு விழுமிய நிகழ்வுகள் திருவிழாக்கள் என்பதை இதன் வழி உணர்ந்துகொள்ள முடிகின்றது.

முடிவுகள்

            திருக்குறள் நீதி நூல் என்பதைத்தாண்டி அனைத்து காலங்களிலும் அனைத்து இலக்கியங்களிலும் தாக்கம் ஏற்படுத்திற கருத்துகளைக் கொண்ட நூல் ஆகும். இந்நூலில் தமிழர்தம் பண்பாட்டு விழுமியங்கள் பலவும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. இவ்விழுமியங்களைத் திருக்குறளைத் தொடர்ந்து எழுந்த இலக்கியங்கள் பின்பற்று உயர்த்தி வந்துள்ளன.

            நால்வர் திருமுறைகள் திருக்குறளுடன் சொல், பொருள், பண்பாட்டுத் தொடர்புடையனவாக விளங்குகின்றன. அடக்கமுடைய வாழ்வினைத் தமிழர்கள் வாழ்ந்து வாழ்வில் நிறைவைப் பெற்றுள்ளனர் என்பதை குறளும் திருமுறைகளும்  எடுத்துரைக்கின்றன. இல்லற வாழ்வில் கணவன், மனைவி  ஆகியோரிடம் நல்லிணைவு ஓருயிராய்க் கலத்தல் வேண்டும் என்பதாயும் இறைவனே  இல்லற மாண்பில் திளைப்பவனாகவும்  விளங்குவதை இவ்விரு இலக்கியங்களும் காட்டுகின்றன. மேலும் விருந்து என்பதை அடியார்க்களிக்கும் அமுதாக பரவலாக்கின திருமுறைகள். தவம் செய்து அவம் நீக்க குறளும் முனைகின்றது. நால்வர் தமிழும் முனைகின்றது. திருவிழாக்கள்  பண்பாட்டு விழுமியங்களில் வெளிப்பாட்டு நிலை என்பதையும் திருக்குறளும், திருமுறைகளும் எடுத்துரைக்கின்றன.

            இவ்வாறு திருக்குறள் வழி நின்று நால்வர் தமிழ் அதற்கும் வலு சேர்த்து தன் பக்கத்து அடையாளங்களையும் இணைத்துத் தமிழ்ப் பண்பாட்டிற்கு வலு சேர்க்கின்றது.

கருத்துகள் இல்லை: