செவ்வாய், நவம்பர் 10, 2026

அறம், பொருள், இன்பம் உயிரச்சம் தெரிந்து தெளிவோம்

 

திருக்குறள், பொருட்பால், அரசியல்

 அதிகாரம் 51. தெரிந்து தெளிதல்

---------------------------------------





அறம், பொருள், இன்பம் உயிரச்சம் தெரிந்து தெளிவோம்

முனைவர் மு.பழனியப்பன், முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமயம்

வள்ளுவர் தந்த மேலாண் தத்துவம்

தெரிந்து  தெளிதல்  அரசியல் அவசியம்

பணிகள் செய்யப்  பலபேர் உண்டு

எவரைச் சேர்க்க  என்று கேட்டால்

வள்ளுவ அலுவலர் வழிகள் சொல்வார்!

அறம்பொருள் இன்பம் உயிர்க்கு  அஞ்சுவான்

அவனே செயலைச் செய்ய உரியன்  

உறுதிப் பொருளுக்கு அவனே காவலன்

பழிச்சொல் அஞ்சும் நாணம் உடையான்

அரிய கற்றவன், அறியாமை அற்றவன்

குணங்கள் உடையான், குற்றம் இலான்

அவன்செயல் பெருமை சிறுமை உரைக்கும்

உறவிலா மனிதர் உதவ மாட்டார்

தனியாள் சாதனை புரிய மாட்டார்

அன்பால் தேரின் அவலம் அதிகம்

வேண்டுதல் வேண்டாமை இலாது சேர்க்க

பண்பால் தேர்க! பலன்கள் பெறலாம்!!

தேராது  துணையைக் கொண்டால் துக்கம்

நமக்குப் பின்பும் தொடரும்! ஆய்க!!

தெளிந்து சேர்த்த அன்பரை நம்புக!

நல்ல பணிகள் நாளும் செய்ய

தெரிந்து பணியாள் தேர்ந்து சேர்க்க!

 உலகம் உம்மால் சுழலும்!

உன்னதம் சேரும்! உழைப்பு பொன்னே!

கருத்துகள் இல்லை: