திருக்குறளுக்கு உரை வரைந்தவர்கள், உரை வரைந்துகொண்டிருப்பவர்கள் பலர் ஆவர். இந்நெடு வரிசையில் பெண் ஒருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அவர் கி.சு. வி. லெட்சுமி அம்மணி ஆவார். உரையாசிரிய மரபில் ஆண்களே கோலோச்சிக்கிக் கொண்டிருந்த நிலையில் இப்பெண் வரைந்துள்ள திருக்குறள் உரை, உரையாசிரிய மரபில் முதல் பெண் என்ற பெருமையை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. மருங்காபுரி ஐமீன்தாரிணியாக விளங்கிய இவர் திருக்குறள் மீது பற்று கொண்டவர். திருக்குறளில் அமைந்துள்ள நூற்றுப் பதினான்கு அதிகாரங்களுக்கு இவர் உரை வரைந்துள்ளார். மற்றவை எழுதப்படவில்லை. இதற்குக் காரணம் நேரமின்மையும், உடன் நூலைக் கொண்டு வரவேண்டும் என்ற ஆவலும் ஆகும். இதனை சாது அச்சுக் கூடம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
திருக்குறளின் அறத்துப்பால் அதிகாரங்கள் முப்பத்தெட்டிற்கும் முழுமையாக இவர் உரைநடை வரைந்துள்ளார். காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களுக்கும் முழுமையாக உரைநடையை அளித்துள்ளார். பொருட்பாலின் எழுபது அதிகாரங்களில் ஐம்பத்தொன்று மட்டும் இவரால் உரை எழுதப்பெற்றுள்ளது.
இவரின் உரை குறளைச் சொல்லி உரை வரையும் நிலையில் இல்லாமல், ஒரு கட்டுரை வடிவில் அதிகாரப் பொருளைச் சுட்டி வரிசை பட குறள்களை மேற்கோள்கள் போல் இவர் பயன்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அதிகாரக் கருத்து வேறு, அனுபவக் கருத்து வேறு என்று அமையாமல் அனுபவமும், தான் சொல்ல விரும்பும் கருத்துகளும், குறள்களும், மேற்கோள் செய்யுள்களும் கலந்து புதுவகையான வாசிப்பு அனுபவத்தைத் தரும் நிலையில் இவர் உரை அமைந்துள்ளது.
இதற்குத் திருக்குறள் உரை என்ற நிலையில் பெயரிடாமல் திருக்குறள் தீபாலங்காரம் என்ற பெயர் சூட்டப்பெற்றுள்ளது. தீப ஒளி போல் குறள்கள் ஒளிர, அதனை ஏந்தி நிற்கும் மண் அகல் போல் உரைப்பகுதி சூழ அமைகின்ற நிலையில் இப்பெயர் இந்நூலுக்குப் பொருந்துவதாக உள்ளது.
இவர் தனக்கு முன்னூலாக மு. ரா. அருணாசலக் கவிராயர் என்பவர் இயற்றிய திருக்குறள் வசனத்தைக் கொண்டுள்ளார். மேலும் ஆங்காங்கே கேட்ட திருக்குறள் மொழிகளையும் இவர் இணைத்து முதலில் சிறு குறிப்புகளாக எழுதி வந்துள்ளார். இதனைக் கண்டவர்கள் திருக்குறள் முழுமைக்கும் இதுபோன்று உரை எழுதி வெளியிடலாமே என்ற எண்ணத்தைச் சொல்ல இவர் அவ்வாறே திருக்குறளின் பெரும்பான்மைப் பகுதிக்கு உரை வரைந்துள்ளார்.
இவர் உரை எழுத முன்வந்தாலும் இவருக்குள் தான் இதை எழுதலாமா என்ற எண்ணம் இருந்துள்ளது. ‘‘அதிக நூல் பயிற்சியும், கேள்விகளும் இல்லாத அடியேன்
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி
என்னும் ஆன்றோர் வாக்கியத்திற் கிணங்க இந்நூலை எழுதலானேன். இந்நூலில் பிரயோகிக்கப்பட்ட வாக்கியங்கள் முரணாகவும், உதாரணங்கள் ஒவ்வாமையாகவும் இருக்கலாம். ஆயினும் அடியேன் புன்மொழிகளுக்கிடையே தெய்வப் புலமை வாய்ந்த திருவள்ளுவ நாயானர் திருவாய் மொழிகளும் சேர்ந்திருப்பதால் அந்த விசேடத்திற்காவது ஆன்றோர்கள் இந்நூலை அங்கீகரித்து, குற்றங்களை நீக்கி குணத்தைக் கொள்வார்களென்று நம்புகிறேன்” என்றக் குறிப்பில் இவரின் தான் இதனைச் செய்யலாமா என்ற ஊசலாட்ட எண்ணத்தைக் காட்டுவதாக உள்ளது. இருப்பினும் துணிந்து இந்த நூலை அவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இங்கு காணமயில்கள் ஆடுதல் என்பது குறியீட்டு நிலையில் ஆண் பாலினத்தைக் குறிக்கும். உரை மரபுகளும் ஆண் பாலினத்திற்கே உரியதாக இருக்கும் நிலையில் இப்பாடலை அவர் தன் சூழலுக்கு ஏற்பச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் என்று உணரமுடிகின்றது. தன் மொழிகள் புன்மொழிகள் என்றும், வள்ளவரின் வாய்மொழிகள் திருவாய்மொழிகள் என்றும் இவர் பொன்னே போல் மூல ஆசிரியரைப் போற்றித் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார். இவ்வாறு இவரின் புதிய முயற்சி துணிச்சலும். ஆர்வமும் மிக்கதாக விளங்கியுள்ளது.
இவரின் உரைநலத்தை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தின் அடிப்படையில் காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
வாழ்க்கைத் துணைநலத்தின் முன்னுரைப் பகுதி பின்வருமாறு அமைகிறது. ‘‘ஆடவர் வெளி விவகாரஸ்தராகவும், மாதர் வீட்டுக் காரியஸ்தராகவு மிருப்பதால் அம்மாதரே இல்லற நெறிக்குப் பெரும் பொறுப்பாளரா யிருக்கின்றனர். இல், இல்லாள், மனை, மனைவி, மனையாட்டி, கிருஹிணி முதலிய பெயர்கள் அவர்கள் குடும்ப நிர்வாகத்தில் எவ்வளவு பொறுப்புள்ளவர்களா யிருக்கின்றார்கள் என்பது இனிது விளங்கும். ஆகையால் அன்னார் பொறுமை, அடக்கம், வெகுளாமை, அன்பு முதலிய பொது குணங்களையும், நாணம், மடம் , அச்சம், பயிர்ப்பு என்னும் நால்வகைச் சிறப்பு குணங்களையும், கணவன், மாமன், மாமி முதலிய உறவினரிடத்தும் விருந்தினர் வறியவர், துறவி, குல தெய்வம் முதலியோரிடத்தும் முறையே நன்கு நடந்து கொள்ளுந் தன்மையையும், தலைவன் வரவுக்குத் தக்கபடி செலவு செய்யும் பண்பையும் பெற்றிருத்தல் அவசியம். இன்னோரன்ன அரிய இயல்புகளெல்லா மமையப் பெற்றவளே அவ்வாச்சிரமத்திற் குரியவளென்க, இதனை
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (ப.27)
என்று வாழ்க்கைத் துணை நலமாக அமையும் பெண்ணுக்கு வேண்டிய பண்புகளைத் திருக்குறளை முன்வைத்து இவர் எடுத்துரைத்துள்ளார். ஒரு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு, கடமை என்பது பெண்ணுக்கானது என்பதை இப்பகுதி எடுத்துரைக்கிறது. இருப்பினும் இல்லத்து வேலைகளைக் கவனிக்க வேண்டியவள் பெண்ணாகவும், வெளி வேலைகளை கவனிக்க வேண்டியவன் ஆணாகவும் இங்குக் காட்டப்பெற்றிருப்பது இப்படைப்பாளர் கால சமுதாய நிலை என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
கற்பு பற்றியும் இவ்வம்மையார் சிறப்பு பட உரைக்கிறார். கற்பு என்பது தன் கணவனன்றி வேறு ஓர் ஆடவரையும் எண்ணாதிருக்கும் நிலையாகும். ‘‘கற்பின் சிறப்போ அளவு கடந்தது.பெண்ணீர்மை கற்பழிய வாற்றால் கடல் சூழ்ந்த வையத்துள், அற்புதமென்றே யறி” என்ற அமுத வாக்கின்படி, கற்பென்ற வலிமையால் பெண்கள் தேவர்கட்கும் அரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். ஆகையால் அத்தகைய மாதர் சிறப்பை யாருரைக்க வல்லார்? அன்னார் மழை பெய்யெனப் பெய்யும். அவர்கள் உலகத்தை அழிக்கக் கருதினும் அது அக்கணமே அழியும்.” (பக். 28-19) என்ற நிலையில் இவர் கற்பின் பெருமையைப் பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறளை அடிப்படையாக வைத்துக் கருத்துரைத்துள்ளார். மேலும் இவர் கற்பில் சிறந்த பெண்மணியரையும் இங்கு சான்றுகளாக்கிக் காட்டுகின்றார். ‘‘அநுசூயை துவாதச பஞ்சத்தில், தங்கள் ஆசிரமம் வளங்குறையாமலிருக்க மேகங்களை உண்டாக்கி மாத மும்மாரி பெய்யும்படியாகச் செய்ததும், தமயந்தி வேடனை யெரித்ததும், சாவித்திரி நமனை வென்றதும், சந்திரவதி காட்டுத் தீயை அணைத்ததும் கற்பின் வலிமையல்லவா?” (ப. 29) என்று இவர் காட்டும் புராணத் தலைவியர் நிகழ்ச்சிகள் கற்பின் திறத்தை உறுதிப் படுத்துகின்றன.
இக்கற்பு நெறியில் திறம்பட நின்றுவிட்டு குடும்பத்திற்கு நன்மை செய்யாத பெண்களை இவர் நல்ல பெண்களாகக் கருதவில்லை. இவரது உரையில் ‘‘இவ்வாறு இருக்கச் சிலர், பரபுருஷ சம்சர்க்கம் செய்வதுதானே நம் பர்த்தாவுக்கு துரோகம் செய்வதாகும் என்றெண்ணி, அந்த விஷயத்தில் மட்டும் வைராக்கியமுடன் நடந்து கொண்டு மற்றக் காரியங்களில் முற்றும் முரணாகவும், எக்காரியங்களிலும் பிடிவாதத்தோடும் லௌகீக காரியங்களில் அதிகப் பற்றோடு நாயகன் அன்பு காட்டித் தன் எண்ணப்படி நடந்தபோது முகம் மலர்ந்தும், சற்றுக் கோபமுற்றால் தானும் முகத்தை மாறவைத்துக் கடுகடுப்பாய்ப் பேசியும் இன்னும் மாறான பல வகையாகவும் நடந்து கொள்கின்றனர் இஃது அறிவீனம்.
நன்மனை தோறும் பெண்களைப் படைத்தாய், நமனை என் செயப் படைத்தாய் என்றார் ஒருவர். அதை அனுபவமாக நாமும் பார்க்கின்றோமல்லவா? அந்தோ பாவம்! இடம் பொருள் ஏவல் அறிந்து நடப்பில் அத்தகைத் தாழ்விற்கிடமாகுமோ? இவற்றை எல்லாம் எளிதிலுணர்த்துவான் கருதியே ஔவையாரும்,
இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளு மில்லாளே யாமாயி னில்லாள்
வலிகிடந்த மாற்றமுரைக்குமே லவ்வில்
புலி கிடந்த துறாய்விடும்”
என்றறிவித்தார் ”(பக் 27-28) என்ற பகுதி பெண்களுக்கான வாழ்வனுபவத்தை ஒரு பெண்ணாக இருந்து இவ்வுரையாசிரியர் சொல்லித் தருகிறார்.
தான் கற்புடன் இருக்கிறேன் என்பது மிகச் சிறந்த வரையறை. அதன் காரணமாக புகுந்தவீட்டிற்கு வந்த பெண்கள் தங்களின் பிடிவாதத்தை விட்டுத்தராமல் இருப்பதுதான் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக் காரணம் என்று இவ்வம்மையார் தெளிவுபடுத்துகிறார். மேலும் தன் எண்ணப்படி கணவன் நடந்தால் முகத்தில் சிரிப்பையும், மாறாக நடந்து கோப்பட்டால் அவளும் கோபப்படுவதும் தான் இல்லறத்தில் ஏற்படும் சிக்கல்கள் என்று இவ்வம்மையார் தெளிவுபட இல்லற வாழ்க்கையின் இயல்பினைக் காட்டியுள்ளார். கற்புடைய பெண்டிர் சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் குடும்பத்திற்கு முரணாக நடக்காமல் இயைந்து நடக்கவேண்டியது அவசியம் என்பதை வள்ளுவ வழியில் உரைக்கிறார் இவ்வம்மையார். திருக்குறளுக்குப் பலரும் பல நிலைகளில் உரை வரைந்திருக்கும் சூழலில், பெண் என்ற பாலின அடிப்படையில் பெண்குலத்தை மையப்படுத்தி எழுதப்பெற்ற உரை அல்லது உரைநடை இதுவாகும். ஆங்காங்கே பெண் மக்கள் முன்னேற்த்திற்கான மின்னல் கருத்துகள் இதனுள் இடம்பெற்றுள்ளன. திருக்குறளை மரபு சார்ந்த பெண் ஒருவர் படித்து அதன் பொருளை விளக்கி எழுதி வெளியிட்ட முயற்சி இவ்வுரைநடை படைப்பாகும். இதனுள் பெண் சார்ந்த கருத்துகள் பல அடங்கியுள்ளன. அவற்றை ஆய்வுலகம் அறிந்து இந்நூலினைச் சிறப்பிக்கட்டும். —
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக