அம்மூவனார்
முனைவர் மு.பழனியப்பன்
சங்க காலப் புலவர்கள் அகம், புறம் ஆகியவற்றைப் பாடுபொருள்களாகக் கொண்டு கவிதைகள் புனைந்தனர். அகம் என்ற காதல் பொருளை மட்டும் பாடிய புலவர்கள் சிலர் உள்ளனர். அவ்வழியில் குறிக்கத்தக்கவர் அம்மூவனார் ஆவார். இவர் நெய்தல் திணைப் பாடல்கள் பாடுவதில் சிறப்பிடம் பெற்றவர் ஆவார். ஐங்குறுநூற்றுத் தொகுப்பில் நெய்தல் பாடுவதற்குச் சிறந்தவர் அம்மூவன் என்ற அடிப்படையில் இவருக்கு நெய்தல் திணை ஒதுக்கப்பெற்று அதற்குரிய பாடல்களை இயற்றினார். இவர் சேரநாட்டுத் தொண்டியையும், பாண்டிய நாட்டுக் கொற்கையையும் பாடியவர் என்பதால் நாடுகள் தோறும் அறியப்பட்டவராக விளங்குகிறார். திருக்கோவலூர் பற்றிய குறிப்பும் இவர் பாடல்களில் காணப்படுகிறது. எனவே நாடுகள் தோறும் பயணித்து நல்ல கவிதைகளை வழங்கிய பெருமைக்கு உரியவராக இவர் விளங்குகின்றார்.
அம்மூவனார் என்ற பெயரில் உள்ள “அம்” என்பது அடைமொழியாகவும், “மூவன்” என்பது உதவிகள் செய்யும் ஒருவரின் பெயராகவும் கொள்ளமுடிகின்றது.
பாட்டும் தொகையும்
இவர் பாடிய பாடல்களாக கிடைப்பன மொத்தம் நூற்று இருபத்தேழு பாடல்கள் ஆகும். அகநானூற்றுத் தொகுப்பில் ஆறு பாடல்களும் (10, 35, 140, 280, 370, 390) ஐங்குறுநூற்றுத் தொகுப்பில் நெய்தல் திணை சார்ந்து நூறு பாடல்களும் (101-200), குறுந்தொகைத் தொகுப்பில் பதினோரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), நற்றிணைத் தொகுப்பில் பத்துப் பாடல்களும் (4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) அமைந்துள்ளன. இவை தொகுப்பு வகைப்பட்டு அமைந்த வகைப்பாடு ஆகும். இன்னும் இவர் பாடல்களைப் பல்வகைப்படுத்த இயலும்.
முழுக்க முழுக்க தலைவன் தலைவியின் காதல் ஒழுக்கத்தையே, களவு கற்பு கைகோள்களையே பாடியவர் இவர் ஆவார். இவர் பாடிய களவுப் பாடல்களின் எண்ணிக்கை எண்பத்தியிரண்டு ஆகும். கற்பு வகைப் பாடல்கள் நாற்பத்தைந்து ஆகும். ஆக மொத்தம் நூற்று இருப்பதேழு பாடல்களை இவர் பாடியுள்ளார்.
இவர் பாடிய பாடல்களைக் கூற்று அடிப்படையில் காணுகையில் தலைவி கூற்றுப் பாடல்கள் ஐம்பத்தாறு, தோழி கூற்றுப் பாடல்கள் நாற்பத்து மூன்று, தலைவன் கூற்றுப் பாடல்கள் பதினேழு. பரத்தை கூற்றுப் பாடல்கள் பத்து, நற்றாய் கூற்று ஒன்று என்ற நிலையிலும் இவர் பாடல்களைப் பகுத்துக் காணமுடிகின்றது.
இவர் பாடிய பாடல்களில் நூற்று இருபத்தைந்து பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்களாகும். குறுந்தொகையில் அமைந்துள்ள நூற்று இருபத்தேழாம் பாடலும், நற்றிணையில் அமைந்துள்ள முன்னூற்றுத் தொன்னூற்றேழாம் பாடலும் முறையே குறிஞ்சி, பாலைத் திணை சார்ந்த பாடல்கள் ஆகும்.
அம்மூவனாரே அகப்பாடல்கள் பாடிய புலவர்களில் தொகை அடிப்படையில் இரண்டாம் இடம் பெறுபவர் ஆவார். இவரின் பெரும்பாலான ஐங்குறுநூற்றுப் பாடல்கள் அழகான மூன்றடிக் கவிதைகளாக விளங்குகின்றன. சொற்சுருக்கம் மிக்கக் கவிதைகளைப் பாடுவதில் இவர் சிறந்தவராக உள்ளார். நெய்தல் திணை சார்ந்த முதற், கரு, உரிப்பொருள்களைப் பெரிதும் பயன்படுத்திக் கவிதைகள் வரைந்த புலவராகவும் அம்மூவனார் விளங்குகிறார்.
அந்தாதித் தொடை சார்ந்த பாடல்களைப் பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. ஐங்குநுறூற்றின் தொண்டிப் பத்து முழுவதும் அந்தாதித் தொடை பயின்றுவரப் படைக்கப்பெற்றுள்ளது. மேலும் இப்பத்து கிளவித் தொகை வழியாகவும் தொடர்புடையதாக உள்ளது. எனவே இவர் கோவை இலக்கியத்தின் முன்னோடியாகவும் விளங்குகின்றார்.
இவ்வகையில் அதிக அளவில் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடி நெய்தல் திணைக்கான புலமை அடையாளமாக விளங்குபவர் அம்மூவனார் ஆவார்.
முப்பொருள் சிறப்பு
நெய்தல் திணைக்கான முதற்பொருள் கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் ஆகும். இதன் சிறுபொழுது எற்படு ஆகும். பெரும்பொழுது ஆறு பருவங்களுமாக அமைகின்றது. நெய்தல் நிலக் கருப்பொருள்கள் கடற்காகம், சுறாமீன், உவர்கேணி. நெய்தல் மற்றும் தாழம்பூ, புன்னைமரம் மற்றும் ஞாழல் மரம், மீன் பிடித்தல் மற்றும் மீன் விற்றல், உப்பு வணிகம் போன்றனவாகும். உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகும்.
இவர் ஐங்குறுநூற்றில் முப்பொருளும் சிறக்கப் பாடியுள்ளார். சிறுவெண்காக்கைப் பத்து (ஏழாம் பத்து) வெள்ளாங்குருகு பத்து (ஆறாம் பத்து) ஆகியன கருப்பொருள்களின் வரிசையில் அமைந்த பறவைகள் பற்றி அமைவனவாகும். நெய்தல் நில மரமான ஞாழல் பற்றி இவர், ஐந்தாம் பத்தில் பாடியுள்ளார். நெய்தல் பூ பற்றி ஒன்பதாம் பத்தில் இவர் பாடியுள்ளார். இதன் காராணமாக கருப்பொருள்களை மையமிட்டு எழுதுவதில் வல்லவர் அம்மூவனார் என்பது குறிக்கத்தக்கது.
இவரின் தொண்டிப் பத்து நெய்தல் நிலத்தின் முதற்பொருளான கடற்கரை சார்ந்து பாடப்பெற்றுள்ளதால் முதல் பொருளைச் சிறப்பிப்பதாக உள்ளது. இவரின் தாய்க்கு உரைத்த பத்து. தோழிக்கு உரைத்த பத்து, கிழவர்க்கு உரைத்த பத்து, பாணற்கு உரைத்த பத்து ஆகியன உரிப்பொருளைச் சிறப்பிப்பனவாக உள்ளன.
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழ
பிரிதல் எண்ணினைஆயின் நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே (அகநானூறு – 10)
என்ற அகநானூற்றுப் பத்தாம் பாடலில் வான் கடற்பரப்பு என்ற நிலையில் முதற்பொருளும், கோட்டுமீன் என்பதில் சுறா என்ற கருப்பொருளும், பிரிதல் எண்ணினை ஆயின் தொண்டி நகர போன்ற இவளின் நலம் அழிந்து போகம் என்பதால் உரிப்பொருளும் சிறந்துள்ளன. இதன் காரணமாக நெய்தல் திணை சார்ந்த இலக்கணங்களை முற்றிலும் தம்பாடல்களில் காட்டி நிற்கும் இலக்கணக்கோட்டில் விலகாத இலக்கியப் புலவராக அம்மூவனார் விளங்குகின்றார்.
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே? (குறுந்தொகை -163)
என்ற குறுந்தொகைப் பாடலில் கடல் பெருந்துறை என்ற நிலையில் முதற்பொருளும், மீன் ஆர்குருகு, தாழை என்பனவற்றால் கருப்பொருளும், வருத்தப்பட்ட கடலின் குரல் என்ற நிலையில் உரிப்பொருளும் சிறக்க அம்மூவனாரால் பாடப்பெற்றுள்ளது. இவ்வகையில் நெய்தில் திணையின் இலக்கணத்திற்கு முழுவதும் பொருந்தும் தன்மை வாய்ந்த பாடல்களைப் பாடுவதில் வல்லவராக அம்மூவனார் விளங்குகியுள்ளார் என்ற கருத்து மேலும் உறுதிப்படுகின்றது.
நெய்தல் நில மக்கள் வாழ்க்கை
அம்மூவனார் பாடல்களில் சங்ககாலத்தில் நெய்தல் திணை சார்ந்த மக்கள் வாழ்ந்த முறை பற்றி அறிந்து கொள்ளமுடிகின்றது. நெய்தல்நில மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தம் பாடல்களில் பதிவு செய்து சங்க கால நெய்தல் வாழ்க்கை ஆவணமாக தன் பாடல்களை ஆக்கியுள்ளர் அம்மூவனார். நெய்தல் நிலத்தில் பரதவர்கள் மீன்வளத்தை கொண்டுவருபவர்களாகவும், உமணர்கள் உப்பினை வணிகம் செய்பவர்களாகவும் விளங்கியுள்ளனர்.
உமணர் வாழ்வு
நெய்தல் நிலம் உப்பு வயலாக வெண்மை பூத்துக் கிடக்கின்றது. இவ்வயலில் உழாமலே விளையும் செல்வம் வெள்ளிய கல்உப்பாகும். அதனை பொதிகளாகக் கட்டி வண்டிகளில் ஏற்றி விலை கூறி விற்றுக்கொண்டே உமணர்கள் செல்கின்றனர். அவர்களின் கரங்களில் மாடுகளை விரைந்து செலுத்தப் பயன்படுத்தப்படும் கோல்கள் உள்ளன. இவர்களின் வண்டிகள் குன்றங்களைக் கடந்து சென்றுகூட உப்பு வி;லை கூறி விற்கும். நிலையில் பயணித்துக் கொண்டுள்ளன.
இந்த வண்டியில் நின்று கொண்டு உமணரின் காதல் மடமகள்
“ சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி
‘நெல்லின் நேரே வெண் கல் உப்பு’ எனச்
சேரி விலைமாறு கூறலின் மனைய” (அகம். 140)
என்று பண்டமாற்று முறையில் உப்பினை விற்கிறாள். மருத நில வயலில் விளையும் நெல்லும், உழாமலே பயன் தரும் நெய்தல் நில உப்பும் ஒன்றுக்கொன்று பண்டமாற்றாக இங்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை அம்மூவனார் பதிவு செய்துள்ளார்.
நெய்தல் நில உப்பு, மருத நில நெல் இவையிரண்டிற்கும் அடுத்து உமணப் பெண்ணின் உடலில் காணப்படும் உப்பு இவை மூன்றும் ஒரு பாடலில் தலைவனால் ஒருங்கே அமைத்துப் பாடப்பெற்றுள்ளன.
“ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி
‘ ”நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
கொள்ளீரோ” எனச் சேரிதொறும் நுவலும்
அவ் வாங்கு உந்தி அமைத் தோளாய்! நின்
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்’ என”(அகம் 390)
என்ற பாடலில் நெல்லும் உப்பும் நேராகின்றது. மேலும் தலைவன் தலைவியின் உருவ அழகிற்கான விலை என என்று கேட்டு அவளின் வணிகத்திற்குச் சற்று விலங்கினம் (தடை ) ஏற்படுத்தினான்.
நெய்தல் திணை சார்ந்த இப்பாடல்கள் வழியாக சங்க உப்பு வணிகமுறை நடந்த நிலையை அறிந்து கொள்ள முடிகின்றது.
“ உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை
கணம் கொள் உமணர்” (குறுந்தொகை.138)
என்ற பாடலடிகளில் குன்றுபோல் குவித்து வைக்கப்பெற்றிருந்த உப்பினை பகர்ந்து விலை கூறும் வாழ்க்கையை உடையவர்கள் உமணர் என்ற குறிப்பு காணப்படுகிறது.
உமணர்கள் உப்பு ஏற்றிச் சென்ற சகடத்தின் ஒலிப் பெருக்கம் பற்றிய நற்றிணை நான்காம் பாடலில் குறித்துள்ளார் அம்மூவனார்.
“உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்” (குறுந்தொகை. 40
என்ற நிலையில் வெள்ளைக் குருகான கொக்கு வெண்கல் உப்பு பகரும் வண்டியின் ஓசை கேட்டு பயந்து பறக்கும் என்று அம்மூவனார் காட்டுகின்றார்.
மேற்கண்டவற்றின் அடிப்படையில் நெய்தல் நிலத்தில் உப்பு வணிகர்களாக உமணர்கள் வாழ்ந்த வந்தனர் என்பது தெரியவருகிறது. மேலும் அவர்கள் வண்டிகளில் உப்பை ஏற்றி இளைய தன் மகளை விலை கூறி விற்கச் சொல்வார்கள் என்பதையும் உணரமுடிகின்றது.
பரதவர் வாழ்வு
சங்க காலத்தில் நெய்தல் நிலத்தில் வாழ்பவர்களாக பரதவர் என்ற இனக்குழுவினர் வாழ்ந்து வந்துள்ளனர்.
“கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசை
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு” (நற்றிணை - 4)
கடற்கரையின் சோலைகள் நிறைந்த பகுதிகளில் சிறுகுடிலில் பரதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடலின்மேல் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன் பிடித்து வந்தபின் மீன் பிடித்த வலைகளை புன்னை மர நிழலில் உலர்த்தி காய வைக்கின்றனர். இந்தக் காட்சி இன்னமும் தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் பரதவர்தம் அன்றாட வாழ்க்கை முறையாக உள்ளது.
தொண்டி கடற்கரையில் செப்பம் செய்ய வேண்டிய படகுகளைச் செப்பம் செய்து புதுப் பொலிவுடன் கொண்டுவந்து நிறுத்தி மீன்பிடிக்கச் செல்லுகின்றனர். அவ்வாறு செல்லும் அவர்கள் சுறா மீனுடன் வருகின்றனர். சுறாவினைக் கரையில் உள்ளோர் அனைவருக்கும் பகுந்து கொடுக்கின்றனர். இவ்வாறு பரதவர்கள் வாழ்நிலை அம்மூவனாரால் காட்டப்பெறுகின்றது.
“பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி”(அகநானூறு 10)
என்ற நிலையில் நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறையைப் படம் பிடித்துக்காட்டுவதாக அம்மூவனாரின் நெய்தல் திணைப் பாடல்கள் அமைந்துள்ளன.
“வளைபடு முத்தம் பரதவர் பகரும்” (ஐங்குநூறு 195) என்று ஐங்குநூற்றுப் பாடல் பரதவர்கள் முத்து சேகரிக்கும் அரிய பணியையும் செய்தனர் என்று குறிப்பிடுகின்றது.
தலைவனும், தலைவியும் கொள்ளும் காதல் அறம்
அம்மூவனார் பாடல்களில் தலைவி பெரும்பாலும் நெய்தல் நிலம் சார்ந்தவளாக விளங்குகிறாள். தலைவனும் நெய்தல் நிலம் சார்ந்தவனாகவே உள்ளான். இவர்களிடத்தில் காணப்படும் அன்பு நீடித்து நிற்பதாக, ஒருவரை ஒருவர் பிரியநேரின் வருத்தம் கொளச் செய்வதாக விளங்குகின்றது.
தலைவன்
நெய்தல் நிலத் தலைவன் தலைவியின் காதல் வேண்டி நிற்பவனாகவும், அவளின் அழகில் ஈடுபடுபவனாகவும் விளங்குகின்றான்.
“கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலரும் துயரம் நல்கிப்
படலின் பாயல் நல்கி யோளெ.” (ஐங்குறுநூறு. 195)
தலைவி தலைவனுக்குத் துன்பம் தந்து அவனின் தூக்கத்தைக் கெடுப்பவளாக விளங்குகிறாள்.
நெய்தல் நிலம் சார்ந்த தலைவி ஒருத்தியை அடைவதற்காகத் தலைவன் தலைவியின் வீட்டில் தங்கி இருந்து அவர் சொல்லும் ஏவல் பணிகளைச் செய்து அவரிடம் நல்ல பெயர் பெற்றுத் தலைவியை மணக்க எண்ணம் கொள்கிறான். சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் தலைவியின், அல்லது தலைவனின் தந்தை பற்றிய குறிப்பு இடம் பெறுவதே இல்லை. ஆனால் அம்மூவனாரின் பாடலில் தலைவியின் தந்தை ஒரு பாத்திரமாக இடம் பெற்றுள்ளார்.
“ அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?” (அகநானூறு 280)
என்ற நிலையில் தலைவன் தலைவியின் தந்தை இடத்தில் தாழ்ந்து பணிந்துப் பணிகள் பல செய்கின்றான்.
தலைவியின் தந்தையான பரதவன் முத்துகளைத் தேடி பகுத்து உணரும் பெருஞ்செல்வன். அவனை அண்டி இருந்தால் தலைவியை அறம் கருதி தருவான் என்று தலைவன் எண்ணுகிறான். அதற்காகத் தலைவன் தன்னுடைய நாட்டில் இருந்துப் பெயர்ந்து தலைவியின் நாட்டிற்கு வீட்டிற்குச் சென்று, அங்கேயே உறைகின்றான். தலைவியின் தந்தையுடன் உப்புவயலில் உழைத்தும், பெரிய ஆழத்திற்குப் புனையோடு சென்றும், அவனுடன் படுத்துறங்கியும், பணிவுடன் திகழ்ந்தும், அவனை அண்டி இருந்தும் தன் வாழ்வை நடத்த எண்ணுகிறான். இவ்வழியிலாவது பரதவன் மகளைக் கரம் பிடிக்க வேண்டும் என்பது தலைவனின் எண்ணம்.
இப்பாடல் அகப்பாடல்களின் மிகவும் வேறுபட்ட பாடற்பொருளைக் கொண்ட பாடலாக உள்ளது. தலைவியை அடையத் தலைவியின் இல்லத்திற்கே சென்று பணியும் பாங்கினனாகத் அம்மூவனாரின் தலைவன் படைக்கப்பெற்றுள்ளான்.
தலைவன் ஒரு நாட்டையே திருமண உறுதிப்பாட்டிற்குத் தரும் வள்ளன்மை உடையவனாக உள்ளான் என்பதையும் ஓர் ஐங்குறுநூற்றுப் பாடல் அமைந்துள்ளது.
“ எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒள்தழை அயரும் துறைவன்
தண்தழை விலையென நல்கினன் நாடே.” (ஐங்குறுநூறு 147)
தலைவன் நாட்டைத் தந்தநிலையைச் சுட்டும் பாடல் இதுவாகும். தலைவன் காதல் அன்பில் சிறந்தவனாகவும் இவ்வகையில் விளங்குகிறான்.
களவில் தலைவி
பால்வரைத் தெய்வம்தான் தலைவனும் தலைவியையும் இணைக்கிறது என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அம்மூவனாரின் தலைவியும் பால்வரைத் தெய்வத்தை எண்ணியே தலைவி தலைவனைக் காதலிக்கிறாள். இத்தெய்வம் தலைவியின் காதலை வெற்றி பெறச் செய்யுமா இல்லையா என்று தோழி வருத்தம் கொள்கிறாள்.
“அன்னை வாழி! வேண்டு அன்னை! புன்னை
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை
‘என்னை’ என்றும் யாமே; இவ் ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே?”(ஐங்குநூறு, 110)
என்ற நிலையில் தன் தாயிடம் தலைவிக்காகத் தோழி பால்வரைத் தெய்வத்தை முன்வைத்து காதல் நிறைவேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். இவ்வகையில் தலைவி, தலைவன் இணைப்பு பால்வரைத் தெய்வத்தின் வழிப்பட்டது என்பதை அம்மூவனார் காட்டியுள்ளார்.
அம்மூவனாரின் நெற்தல் தலைவி இரங்கல் தன்மையுடையவளாகவே விளங்குகிறாள்.
தன்னை மணந்து கொள்வேன் என்றுச் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவன் வாராதநிலையில் அவனைக் களவன், கடவன், புணையன் என்று சொல்லிப் பழிக்கிறாள் தலைவி.
‘’ எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும் கடவனும் புணைவனும் தானே” (குறுந்தொகை. 318)
நெய்தல் நிலத்தில் சுறா மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. கடற்கரைப் பரப்பில் ஞாழல். புன்னை மலர்கள் பரவிக் கிடப்பது வெறியாடும் களத்தைப் போன்று காட்சி தருகிறது. இந்நிலத்திற்கு உரிய தலைவன் தலைவியை வரைந்து கொள்ளும் குறிப்புடையவனாக இருக்கிறாளா, இல்லை அக்குறிப்பற்றவனாக இருக்கிறானா என்பதை உணர்ந்து கொள்ள இயலாது தலைவி தவிக்கிறாள். வேற்று வரைவு வந்து விடும் நிலையில் தலைவியை அன்று களவில் மகிழ்ச்சிப் படுத்திய தலைவன் களவனாக நின்று அதனை எண்ணுவானா? அல்லது உன்னை மணப்பேன் என்று சொன்ன வஞ்சினத்தைக் காப்பானா? அவன் காத்தாலும், காக்கவிட்டாலும் அவனைப் புணை போன்றே தலைவி எண்ணுகிறாள். இந்நிலையில் தலைவனை எண்ணி இரங்கும் போக்கினளாகவே தலைவி விளங்குகிறாள்.
தலைவி தாயானவள் குழந்தையின் செய்கையால் கோபம் கொண்டு அக்குழந்தையுடன் பாசமற்று விளங்கும் நிலையிலும், அக்குழந்தை அம்மா என்றே அழைக்கும் குழந்தை போன்றவள் என்று அம்மூவனாரின் தோழி மொழிகிறாள்.
“தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு
‘அன்னாய்!’ என்னும் குழவி போல
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி
தன் உறு விழுமம் களைஞரோ இலளே” (குறுந்தொகை.397)
தலைவன் இன்னா செய்தாலும், இனிய செய்து காதல் அன்பினைச் செய்தாலும் தலைவி அவனையே தன் எல்லையாகக் கொண்டவள். அவளின் துயரைக் களைதல் தலைவனுக்கு மட்டுமே உரிய பண்பாகும். இவ்வாறு தலைவி இரங்கல் தன்மை உடையவளாக விளங்குகிறாள்.
தலைவன் திருமணம் என்று சொல்லி தலைவியை மணக்க வந்துவிடுவான் என்று தலைவி காத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவன் வந்து சேர்வதாக இல்லை. இந்நிலையில் இறப்பதே நலமா? அல்லது அவன் வருவான் எனக் காத்திருப்பது நலமா? என்று தடுமாறுகிறாள் தலைவி.
“நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!-
அந் நிலை அல்லஆயினும் ‘சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்’ என்று உடன் அமர்ந்து
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே. (நற்றிணை 327)
இந்தப்பாடலில் சான்றோர் இயல்பு இனிதாக உரைக்கப்பெற்றுள்ளது. சான்றோர் கடன் நிலை குன்றலும் இலர் என்பது சான்றோர் பண்பாக விளங்குகின்றது. சான்றோர் சொன்ன சொல் தவறமாட்டதாவர்கள் என்பது இதன் கருத்து. ஆனால் தலைவன் சான்றாண்மை உடையவனாக இல்லை என்பது குறை. சான்றோர் ஆகிய தலைவனை நம்புதல் பழி எனின் தான் உயிர்விடத் துணிவதாகத் தலைவி உரைக்கிறாள். இதன் காரணமாக தலைவன் சான்றாண்மை சார்ந்தவனாக விளங்கவேண்டும் என்ற தலைவியின் எண்ணம் வெளிப்படுகிறது.
தலைவி தலைவன் மீது கோபம் கொண்டுள்ளாள். அவன் தன்னைக் காண வரும் நிலையில் அவனுடன் அவனுக்கு இயைபான எதையும் செய்தல் வேண்டாம் என்று மனதிடம் சொல்லி வைத்தாள். ஆனால்அதுவோ வேறுவிதமாக நடந்து கொள்கிறது.
“மெல்லிய இனிய மேவரு தகுந
இவை மொழியாம்’ எனச் சொல்லினும் அவை நீ
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்-
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?’ (குறுந்தொகை 306)
மென்மையான, இனிமையான , தலைவன் விரும்பத்தக்க சொற்களை மொழியாதே என்று தலைவி தன் நெஞ்சிடம் சொல்லியும் அந்நெஞ்சம் கேட்கவில்லை. அக்கட்டளையை அது மறந்து, தெண்கடல் சேர்ப்பனைக் கண்டவுடன் அவனுக்கு இனிமைபட நடந்த கொள்ளத் தலைப்படுகின்றது.
இதே சாயல் ஐங்குறுநூற்றிலும் காணப்படுகிறது.
“அம்ம வாழி தோழி யான் இன்று
அறன் லாளன் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குறவன் சென்றனென்
பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே” (ஐங்குறுநூறு.118)
தலைவன் அறம் இல்லாதவனாக விளங்கும் நிலையில் அவனைக் கண்டபொழுது, அவன் மீது கோபமுற்றுச் சண்டையிடவேண்டும் என்று எண்ணிய தலைவியின் மனம் அவ்வாறு செய்யாது உலகியலை எண்ணி அவனை ஏற்றது என்பது இப்பாடலின் பொருள். தலைவியின் நிலைப்பாடு தலைவனை எக்காலத்தும் எந்நிலையிலும் ஏற்பது என்பதாகவே உள்ளது.
களவில் தலைவனைப் பிரிந்த தலைவி மாலை நேரம் வருவதை அறிந்து வருத்தம் கொள்கிறாள். அவள் மாலையை ஒரு உயிரினமாகக் கருதி, அது அதற்குரிய இயற்கையான காலத்தில் வந்த நிலையிலும். “மாலையே நீ நண்பகல் காலத்திலேயே வந்துவிட்டாய். நீ நெய்தல் கூம்பும் காலை நேரத்தில் வந்தாலும் உன்னைக் கேட்பவர் யாருமில்லை” என்று தலைவி வருந்தி உரைக்கிறாள்.
“கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.” (ஐங்குறு நூறு 183)
இப்பாடலில் தலைவன் குறிஞ்சி நிலம் சார்ந்தவனாகவும், மருத நிலம் சார்ந்தவனாகவும், நெய்தல் நிலம் சார்ந்தவனாகவும் கொள்ளப்படுகிறான். முந்நிலத்திலும் அவனின் ஆளுமை இருந்தமையால் இந்நிலையைக் காட்டுகிறார் அம்மூவனார்.
நெய்தல் தலைவி இரங்கல் பாங்கு உடையவளாகவும் தலைவனைத் தன்னைக் காக்கும் புணையாகவும் கொள்கிறாள்.
தலைவியின் விளையாடல்
நெய்தல் நிலத் தலைவி விளையாடிய பல விளையாட்டுகளைத் தன் பாடல்களில் காட்டுகிறார்.இதன்வழி தலைவி இளமை மிக்கவளாக, விளையாட்டில் ஆர்வம் கொண்டவளாக விளங்கிய நிலை தெரியவருகிறது.
தலைவி நண்டுகளுடன் விளையாடும் இயல்பினள் என்பதை “இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல் பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே” ( குறுந்தொகை.303), என்று குறுந்தொகை காட்டுகின்றது. தலைவி ஒளிந்து விளையாடும் விளையாட்டினையும் உடையவளாக உள்ளாள். தலைவன் தலைவியைக் காண வருகின்றான். பல நாள் கழித்து வரும் அவனைக் கண்டதும் தோழி தலைவியைப் பார்த்து ~~இவ்வளவு நாள்கள் கழித்து வரும் இத்தலைவன் நம்மை எவ்வளவு நாள் வாராது துன்பம் செய்தான். இவன் நம்மைக் காணாது மறைந்து கொண்டால் அதனால் ஏற்படும் ஏமாற்றத்தைத் தலைவன் பெறுவான். அதனைக் கண்டு நாமும் மகிழ்வோம் என்கிறாள் தோழி.இதன்வழி ஒளிந்து விளையாடும் விளையாட்டு தமிழர்தம் பாரம்பரிய விளையாட்டு என்பது உறுதியாகின்றது.
“ புன்னை
மா அரை மறைகம் வம்மதி-பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே.” (நற்றிணை 307)
இப்பாடலில் அல்லல் அரும்படர் காண மறைகம் வம்மதி என்ற தோழியின் கூற்று இனிமை பயப்பது.
தலைவி கடலில் பாய்ந்து விளையாடும் விளையாட்டினையும் உடையவளாக உள்ளாள்.
“கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே.” (ஐங்குறுநூறு. 123)
என்ற நிலையில் தலைவி தன் ஆயத்தோடு பெருங்கடல் அலைகளில் பாய்ந்து விளையாடும் இயல்பினளாக இருந்துள்ளாள்.
கடற்கரையில் வண்டலில் பாவை செய்து விளையாடும் விளையாட்டு தலைவி விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.
“ கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற் பாவை வெளவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே.”(ஐங்குறுநூறு. 124)
என்று தலைவி தான் செய்து வைத்த வண்டல் பாவையை அழித்துப் போன கடல் மீது கோபம் கொண்டு நுண்பொடி மணலை எடுத்து கடல் மீது வீசி அதனைத் தூர்த்துப்போகச் செய்யும் போக்கினளாகவும் விளங்குகிறாள்.
தலைவி தன்னுடன் பாவை ஒன்றை வைத்து விளையாடுபவளாகவும் உள்ளாள். அப்பாவைக்கு இவள் தாயாகி தன் மார்பிலிருந்து பால் தந்து விளையாடும் விளையாட்டின் எச்சம் இன்னமும் தமிழகத்தில் உள்ளது.
“ கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவையை ஊட்டு வோளே.” (ஐங்குறுநூறு. 128)
என்ற நிலையில் தலைவி தன் ஆயத்தோடு பெருங்கடல் அலைகளில் பாய்ந்து விளையாடும் இயல்பினளாக இருந்துள்ளாள்.
கடற்கரையில் வண்டலில் பாவை செய்து விளையாடும் விளையாட்டு தலைவி விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்றாகும்.
“ கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
வண்டற் பாவை வெளவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே.”(ஐங்குறுநூறு. 124)
என்று தலைவி தான் செய்து வைத்த வண்டல் பாவையை அழித்துப் போன கடல் மீது கோபம் கொண்டு நுண்பொடி மணலை எடுத்து கடல் மீது வீசி அதனைத் தூர்த்துப்போகச் செய்யும் போக்கினளாகவும் விளங்குகிறாள்.
தலைவி தன்னுடன் பாவை ஒன்றை வைத்து விளையாடுபவளாகவும் உள்ளாள். அப்பாவைக்கு இவள் தாயாகி தன் மார்பிலிருந்து பால் தந்து விளையாடும் விளையாட்டின் எச்சம் இன்னமும் தமிழகத்தில் உள்ளது.
“ கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவையை ஊட்டு வோளே.” (ஐங்குறுநூறு. 128)
உண்ணாப் பாவை அது எனத் தெரிந்து பால் வரா மார்பு அதுவென அறிந்தும் தலைவி அப்பாவைக்குப் பால் தந்து தன் விளையாட்டை விளையாடுபவளாக உள்ளாள்.
மற்றொரு இடத்தில் பைஞ்சாய்ப் பாவை என்று இப்பாவை குறிக்கப்படுகிறது.
தலைவனுடன் இணைந்து மகப்பேறு வாய்க்க என்று தோழி சொல்லும் நிலையில் தலைவி நான் களவின் போது தலைவனுடன் இணைந்து பைஞ்சாய்ப்பாவை பெற்று மகிழ்ந்தேன் என்று குறிப்பிடுகிறாள். கோரைப் புற்களால் செய்யப்பெற்ற பொம்மையைத் தலைவனும் தலைவியும் களவு காலத்தில் கொண்டு அதனைப் பெற்று விளையாடி மகிழ்ந்துள்ளனர் என்பது இதன்வழி தெரிகின்றது.
“ வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடுபெயரும் துறைவதற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே” (ஐங்குறுநூறு. 155)
என்ற பாடல் தலைவன் தலைவி இணைந்து விளையாடிய பாவை விளையாட்டைக் காட்டுவதாக உள்ளது.
இவ்வாறு தலைவியின் விளையாட்டு வண்ணம் அம்மூவனாரால் மொழியப்பெற்றுள்ளது.
கற்பில் தலைவி
களவில் அன்பு மிகுதியாக இருந்த தலைவன் கற்பு காலத்தில் தலைவியை விடுத்து, பரத்தையை நாடிப் பிரிகின்றான். தலைவி அது குறித்துப் பெரிதும் வருந்துகிறாள். இதன் குறியீடாக “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென காணிய சென்ற மடநடை நாரை” என்ற ஐங்குறுநூற்றுத் தொடர் அமைகிறது. பத்துப்பாடல்களில் இடம்பெறும் இத்தொடர் தலைவியின் வருத்தத்தைத் திரும்பத் திரும்பப் பதியவைக்கும் நோக்கில் அழுத்தமாக அம்மூவனாரால் எழுதப்பெற்றுள்ளது. வெள்ளாங்குருகின் சிறிய குஞ்சு இறந்துவிட்டது என்ற துயரத்தை ஆற்றுவதற்காக நாரைப் பறவையானது அங்கு செல்கிறது என்ற தொடர் பரத்தை கருதி பிரிந்த தலைவனுக்கு உரைக்கப்படுகிறது. இங்கு பிள்ளை என்பது தலைவியையும், வெள்ளாங்குருகு என்பது பரத்தையையும் குறிக்கும்.
“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்றும் கானலம் புலம்பம்
துரைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளுமார் அதுவே.” (ஐங்குநுறூறு. 152)
இப்பாடலில் தலைவன் இற்பரத்தை ஒருத்தியை மணம் புரிந்தான் என்று தலைவிக்குப் பலர் வந்து செய்தி அறிவிக்கின்றனர். இதனைக் கேட்ட தலைவி அவனின் காதல் அறம் தப்பியதை எண்ணி அழுகிறாள். அவன் அறம் சார்ந்தவன், அவனின் அருளும் அது என்று சொல்லி இரங்குகிறாள் தலைவி.
குறுந்தொகையின் தலைவி இம்மை மாறி மறுமையிலாவது தலைவன் தன்னை மட்டுமே நெஞ்சம் உறைபவளாகக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்.
“அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ (குறுந்தொகை. 49)
இதுவே கற்பில் தலைவியின் நிலைப்பாடாக விளங்குகின்றது. இதனையே ஐங்குநூற்றிலும் காட்டுகிறார் அம்மூவனார்.
“ பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல்கே என்னே” (ஐங்குறு நூறு. 167)
என்ற பாடலிலும் நல்குவன் போல நல்காதவன் ஆயினும் தலைவன் பல பிறவிகளிலும் நட்பு உடையவனே என்று தலைவி அமைதி கொள்கிறாள்.
அம்மூவனார் பாடிய பாலைப்பாடலிலும் இதே சாயல் உள்ளது. தலைவன் தலைவியை நாடி வரவில்லை. அவன் வரவேண்டிய காலமும் வந்துவிட்டது. அவன் வந்தபாடில்லை. மாலை வந்து தலைவியைத் துன்புறத்துகிறது. இப்படியே சென்றால் தலைவி இறப்பினை எதிர் கொள்ள நேரிடும். இதற்குக் கூடத் தலைவி வருந்தவில்லை. ஆனால் இறந்து பிறந்தால் வேறு பிறவியாக அது ஆகிவிட்டால் தலைவனை எண்ண இயலாதே என வருந்துகிறாள்.
‘சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன்’ எனவே” (நற்றிணை. 397)
இவ்வாறு தலைவனுடன் வாழும் வாழ்க்கை இனிதானது எனத் தலைவி எண்ணி அதற்காக ஏங்குகிறாள்.
இவ்வாறு அக இலக்கணம் பொருந்தத் தன் நெய்தல் பாடல்களை இலக்கணக்கோட்டிலேயே படைத்துக் காட்டியிருக்கிறார் அம்மூவனார். இவரின் பாடலகளில்; சொற்சுருக்கமும், முப்பொருள் அழுகும், உயர் கற்பனையும், இரங்கல் குறிப்பும் சிறக்கின்றன. உமணர் வாழ்வு, பரதவர் வாழ்வு, தலைவியின் விளையாட்டு நலம் முதலியனவற்றைச் சிறந்த முறையில் அம்மூவனாரின் பாடல்கள் பதிவு செய்துள்ளன. தலைவன், தலைவி இருவரும் அறம் சார்ந்த காதல் வாழ்வினை வாழத் தலைப்பட்டுள்ளனர். சான்றாண்மை, அறத்தன்மை மிக்க வாழ்வே நெய்தல்நில வாழ்வு என்று காட்டுகின்றார் அம்மூவனார்.
http://siragu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
http://siragu.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக