காரைக்குடி கம்பன் கழகத்தின் பெரும்பாலான நிகழ்வுகளில்
கலந்து கொண்டுச் சொற்பெருக்காற்றியவர் அ.ச.ஞானசம்பந்தனார். கம்பன் அடிப்பொடி அவர்களால்
காரைக்குடிக்கு ஆசிரியராக அறிமுகம் செய்யப்பட்டவர் ந. சுப்புரெட்டியார். கம்பன், வள்ளுவம்
போன்ற நூல்களை எழுதித் திறனாய்வு உலகில் தனக்கென தனித்த இடம் பிடித்தவர் வ.சுப. மாணிக்கனார்.
இவர்களின் தமிழ்த்தொண்டால் தமிழ் பெருமை கொண்டது என்று இவர்கள் மூவரையும் அறிமுகம்
செய்து வரவேற்புரையாற்றினார் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்.
அ.ச.ஞா வின் தமிழ்த் தொண்டு பற்றி சென்னை உயர்
நீதி மன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் பேசினார். அ.ச. ஞா அவர்கள் அனைவரையும்
ஒருமை வாடா போடா என்று அழைக்கும் வாஞ்சை மிக்கவர். அவரோடு ஒன்றாகச் சென்னைக் கம்பன்
கழகத்தில் இணைந்து செயல்பட்ட எ.வி.எம் சரவணன் அவர்களை மட்டும் அவர் மரியாதைக் குறைவாக
அழைத்ததில்லையாம். இது பற்றி எ.வி.எம் சரவணன் அவர்களே குறிப்பிட்ட செய்தி அ.ச. ஞா என்னை மட்டும் அப்படி அழைக்காமைக்குக் காரணம்
அ.ச.ஞாவின் அப்பா பெயர் சரவண முதலியார். அவரின் பெயர் கொண்டிருப்பதால் எ.வி.எம் சரவணன்
அவர்களை அ.ச. ஞா அவர்கள் மரியாதை குறைவாக அழைப்பதில்லையாம். தந்தையின் மீது மதிப்பு
கொண்ட பேரறிஞர் அ.ச.ஞா. இதனை இற்றைக்கால இளைஞர்கள் உணரவேண்டும் என்று த. இராமலிங்கம் பேசினார்.
இவரின் பேச்சிற்குப் பின்பு அ.ச.ஞா குடும்பம்
சார்ந்த திரு மெய்கண்டான் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அதில் அ.ச.ஞா. பெருமை சேர்ந்த
அனைத்து நிறுவனங்கள், அன்பர்களை அவர் நினைவு கூர்ந்தார்.
நூற்றாண்டு விழா காணும் சுப்பு ரெட்டியார் பற்றி
சாகித்திய அகாதமி பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன் பேசினார். பேராசிரியரின் மாணவரான
இவர் இந்நிகழ்ச்சி சுப்புரெட்டியார் பற்றி நடக்கும் 109 வது நிகழ்ச்சி என்றார். மேலும்
பெரியார் பற்றியும் நூல் எழுதிய வைணவர், சைவ குடும்பத்தவர் ந. சுப்புரெட்டியார். இவர்
சமயங்களை நம்பினார். ஆனால் சமயத்தின் வழியாக நடத்தப்படும் மூட நம்பிக்கைகளை பெரியார்
வழி நின்று வெறுத்தார் என்றார். ந. சுப்புரெட்டியார் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை
எழுதியவர். அவரின் தமிழ்ப்பணி அளப்பரியது என்றார். சுப்புரெட்டியார் அவர்களின் திருமகனார்
திரு இராமலிங்கம் அவர்கள் ஏற்புரை நல்கினார். அதில் அவர் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது
கம்பன் அடிப்பொடி அவர்களை நேரடியாகக் கண்டேன். அதுமுதல் அவரின் நிகழ்ச்சிச் செயலாக்கத்
திறனைக் கண்டு வியந்துள்ளேன் என்றார். அவரின் கம்பன் கழகம் சுப்புரெட்டியாரின் நூற்றாண்டைக்
கொண்டாடுவது சிறப்பு என்றார்.
செம்பல் வ.சுப. மாணிக்கனார் பற்றி முனைவர் பழ.
முத்துவீரப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார். யாயும் யாயும் யாராகியரோ என்ற குறுந்தொகைப்பாடல்
அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனைக் காதல் பாடல் என்று எல்லோரும் குறிப்பிடுவர். ஆனால்
இதனைக் கற்பு காலத்தில் முதன் முதலாகத் தலைவன் தலைவியைச் சந்திக்கும் நிகழ்வில் சொன்னது
என்றார் வ.சுப. மா என்று குறிப்பிட்டார். தமிழக முதல்வரிடம் ஒருநாள் முதல்வர் பொறுப்பைத்
தாருங்கள். தமிழை அரியணை ஏற்றுகிறேன் என்று முழங்கியவர் வ.சுப. மாணிக்கனார் என்றார்.
இவரின் பேச்சிற்குப் பின்பு வ.சுப. மா அவர்களின் புதல்வர் பூங்குன்றன் அவர்கள் ஏற்புரை
வழங்கினார். பதவிகளை தொண்டு எனக்கருதியவர் வ.சுப. மாணிக்கனார் என்றார் அவர்.
விழாவில் ரெ.முத்துக்கணேசனார், கவிஞர் மீனவன்
,பேராசிரியர்கள் செந்தமிழ்ப்பாவை. சிதம்பரம், பாலசுப்பிரமணியன், இராசாராம் போன்ற பலரும்
கலந்து கொண்டனர்.
விழாவில் நன்றியுரையை மு.பழனியப்பன் வழங்கினார்.
விழா முத்தமிழறிஞர் விழாவாக நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக