இந்தியாவின் மெய்ப்பொருளியல் என்பது தொன்மை சார்ந்தது. அதுமட்டுமில்லாமல் உலக அளவில் நடைபெற்ற மெய்ப்பொருளியல் தேடல்களுக்கு இணையானது. சமண, பௌத்த, வேத, சைவ, வைணவ, அசீவக, சாங்கிய, உலகாயுத நெறிகள் அதற்கேற்ற வழிகளில் மெய்ப்பொருளியலைத் தேடின. இம்மெய்ப்பொருள் தேடலை வேதம் சார்ந்தமைவன, வேதத்தினை மறுத்துரைப்பன என்ற வைதீக, அவைதீக நிலைப்பாடு கொண்டதாக வகைப்படுத்திக்கொள்ள இயலும். சமணம், பௌத்தம், உலகாயுதம் ஆகியன வேதமரபை மறுத்துரைத்தன. இவ்வைகையில் வேதமரபு என்பது நேர்முகமாகவும் எதிர்முகமாகவும் இந்திய மெய்ப்பொருளியல் வளர உதவியுள்ளது என்பது உணர்ந்து கொள்ளத்தக்கது.
வேதங்களைக் குறிப்பிட்டவர்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும், பகிர்ந்து கொள்ள முடியும் என்ற கட்டுப்பாட்டில் தற்போது நெகிழ்வுத் தன்மை வந்துவிட்டது. காலமும், கருத்துச் சுதந்திரமும் இதற்கு வழிவகுத்தன. வேதங்களில் இருப்பது என்ன என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமும், ஆராய்வும் வளர்ந்து வருகிறது. இவ்வகையில் இரு நூல்களை இவ்வரிசையில் வைத்துக்காணமுடிகிறது.
திரு பொன்னியின் செல்வன் என்பவர் இருக்கு வேதம், யஜுர் சாம வேதங்கள் என்ற தலைப்பில் இரு நூல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார். சமஸ்கிருத அறிவும், இந்திய ஆட்சிப் பணி சார் அறிவும் அவருக்கு இவ்விரு நூல்கள் எழுதத் துணைசெய்துள்ளன.
தமிழ்ப் பக்தி மரபில் வேதங்களுக்கு உயர்வான இடம் உண்டு. இவ்வுயர்வான இடம் ஏன் ஏற்பட்டது என்ற அடிப்படைக் கேள்விக்கு இவ்விரு நூல்களும் விடை தேடுகின்றன. தமிழர்கள் தங்களுக்குரிய தத்துவம், மெய்ப்பொருள் ஆகியவற்றைத் தாண்டி, அல்லது ஆகியவற்றை விடுத்து ஏன் வேத மரபிற்கு முக்கியத்துவம் தந்தனர் என்ற கேள்வியை இவ்விரு நூல்களும் எழுப்புகின்றன. வேதங்கள் மறைபொருளாக வைக்கப்பெற்ற நிலையில் அவை அணுக முடியாத எல்லையில் இருத்தப்பட்டபோது, அதனைத் தூரத்தே இருந்தே தமிழர்கள் கண்டுள்ளனர். அதனை பெருமை உடையதாகக் கொண்டனர் என்பது இந்நூல் அளிக்கும் விடை அல்லது கருத்து.
குறிப்பாக தமிழர்கள் பற்றி வேதங்களின் உள்ள குறிப்புகள் மட்டும் தொகுக்கப்பெற்றுக் கிடைக்கப்பெற்றால் வேதங்களின் உண்மை நிலையைத் தமிழர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்ற நிலையில் இவ்விரு நூல்களும் வேதங்கள் உணர்த்தும் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைகளை வெளியுலகிற்குக் காட்டுவனவாக உள்ளன.
நெருப்பு வழிபாடு, சோமபானம் படைத்தல், பாதுகாப்பு இவை பற்றிய செய்திகளே வேதங்களில் அதிகம் காணப்படுகின்றன என்று இருக்கு வேத நூலின் முன்னுரையில் சுட்டுகிறார் ஆசிரியர். ‘‘இருக்கு வேதம் என்பது 948 பாடல்களைக் கொண்டது. இந்திரன்,அக்னி, மற்றும் வருணன் போன்ற தெய்வங்களை நோக்கி வேண்டுதல் புரியும் பாடல்களே. அவை முழுவதும் இக்காலத்தில் கொண்டாடப்படும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் அவர்கள் இவ்வேதத்தில் இடம்பெறவில்லை. ஓம் என்ற பிரணவ மந்திரம் வேதத்தில் இருப்பதாக இந்து மதப்பற்றாளர்கள் கூறி பெருமை கொள்கிறார்கள். வேதம் ஓதுவோரும் ஹரிஓம் என்று கூவியே ஓதத் தொடங்குகின்றனர். மிகப் பழையதும் பெரியதும் ஆன இருக்கு வேதத்தில் இம்மந்திரம் இல்லை’’ என்பது நூலாசிரியரின் இருக்குவேதம் பற்றிய அறிமுகம்.
இருக்கு வேதத்தில் குறிக்கப்பெறும் கருப்பு இன மக்கள் தமிழர்கள் என்று முடிவு காண்கிறார் நூலாசிரியர். பெருத்த விவாதத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமாக கருத்து இதுவாகும். ‘‘கருமை நிறமுள்ள மக்களின் கோட்டைகள் அக்கினியால் எரிக்கப்பட்டன என்பது செய்தி. கருமை நிறமுள்ள மனிதர்கள் யார் என்பது கேள்வி. அவர்கள் அந்நிலத்தில் வாழ்ந்த பழங்குடியினர்களாகத்தான் இருக்கவேண்டும். வெப்ப மண்டலமான பாரத தேசத்தில் உள்ள மக்கள் கருமை நிறம் பெற்றிருத்தல் இயற்கை. சூரியக் கதிர்கள் மெலனின் என்ற வேதிப்பொருளை மனித உடலில் உண்டாக்குகிறது என்று விஞ்ஞானம் கூறுகிறது. டாக்டர் அம்பேத்கர் கூற்றுப்படி பாரத தேசம் முழுவதும் கருத்த நிறத்தினரான தமழர்களே இருந்தனர். இக்கருத்தை ஹரப்பா, முகஞ்சதாரோ என்ற இடங்களில் ஆங்கிலேயர் செய்த அகழ்வாராய்ச்சியில் உறுதிப்படுகிறது. எனவே கருமை நிறத்து மக்களுக்கு எதிரான வெள்ளை நிறத்தவர் குளிர் மிகுந்த நாடுகளில் இருந்து பாரதத்தில் குடியேற வந்தவர்கள் என்பது தெளிவு. கருமை நிறந்தவர்களுக்கும் வெள்ளை இனத்தவர்களுக்கும் போர் நிகழ்ந்தது என்பதைத்தான் இப்பாடல் தெரிவிக்கிறது’’ (ப. 45) என்ற ஆசிரியரின் கூற்று பெருத்த விவாத்ததைக் கிளப்பியிருக்க வேண்டும். அல்லது கிளப்ப வேண்டும்.
இவ்வகையில் வேதங்கள் வழியாக தமிழர் வாழ்வை உரசிப்பார்க்கும் வேத விமர்சன நூல் இருக்குவேதம்.
இதுபோன்றே யஜுர், சாம வேதங்கள் பற்றிய நூலாசிரியரின் பார்வையும் விரிகிறது. ‘‘தமிழ் மக்களுக்கு யாகம் என்பது இறைவழிபாட்டு முறை அன்று. நீர் சொரிந்து பூவிட்டு, கனிகள் படைத்து போற்றி இசைத்து மனம் ஒன்றி வழிபடும் முறையே தமிழனின் பண்டைய வழக்கம். உயிர் பலியிட்டு நெருப்பைக் கொண்டு ஊண்வாட்டி அது கொண்டு இறைவனுக்கு என்று கூறி உண்டு மகிழும் வழக்கம் குடியேறி வந்தவர்களால் புகுந்த கொடிய வழக்கமாகும். இவ்வழக்கத்தின் செயல்முறைக் கையேடுதான் யஜுர் வேதம் ஆகும்’’ என்ற கருத்தும் விமர்சனப்பார்வைக்கு உரியது.
வேதங்கள் பற்றிய விமர்சனப்பார்வைகள் வரவேற்கத்தக்கன. அவை விவாதங்களாக அமைந்து இந்திய மெய்ப்பொருளியலுக்கு விளக்ககம் சேர்க்கட்டும். அவ்வகையில் இவ்விரு நூல்களையும் தமிழ் மக்கள் கண்ணுறவேண்டும். விவாதிக்க வேண்டும்.
நூல் வேண்டுவோர் மணிவாசகர் பதிப்பகம், சென்னை வழியாகப்பெறலாம். இருநூல்களும் முறையே 60, 30 என்ற விலைகளில் கிடைக்கின்றன. விமர்சித்து நூலாசிரியருக்குக் கடிதம் எழுதலாம். முகவரி பொன்னி தெய்வ நிலையம், 128 குறிஞ்சி நகர், பேரூர், கோயம்புத்தூர் 10 செல்பேசி 9150050056 (குறிப்பு நூலை ஆசிரியர் வழியாகவும் பெறலாம். ஆசிரியர் தமிழர் பற்றிய கருத்துகள் பரவ விலையின்றியும் தர வாய்ப்புள்ளது.)
நன்றி திண்ணை
http://puthu.thinnai.com/?p=34093
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக