புதன், மார்ச் 02, 2016

மதச்சார்பின்மை


இந்திய நாடு பல்வேறு சமயங்களின் பிறப்பிடமான நாடு. பல்வேறு சமயங்களுக்கு, பல்வேறு சமயம் சார்ந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் மதச் சார்பற்ற நாடு. தமிழ்நாட்டிலும் பல்வேறு சமயங்கள் வளர்ந்து வருகின்றன. ஒரு மதத்தின் கருத்துகளை மற்ற மதத்தார் ஏற்றுப் போற்றும் சமய பொதுமைப் பாங்கும் இன்னமும் இந்தியாவின் தமிழகத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது.

தமிழ் இலக்கியங்களும் பல்வேறு சமயங்கள் பற்றிய செய்திகளை அளித்துள்ளன. சைவசமயத்திற்குப் பெரியபுராணம். பௌத்தத்திற்கு மணிமேகலை, சமண சமயத்திற்கு சீவக சிந்தாமணி, வைணவத்திற்கு நாலாயிரத் திவ்ய பிரபந்தம், கிறித்தவத்திற்குத் தேம்பாவணி, இசுலாம் சமயத்திற்குச் சீறாப்புராணம் என்று சமயத்திற்கு மதிப்பளிக்கும் இலக்கியங்கள் பல தமிழ் மொழியில் அமைந்துள்ளன.

மணிமேகலைக் காப்பியத்தில் பல்வேறு சமய அறிஞர்கள் ஒன்றாய் இருந்து உறுதிப்பொருள் பற்றி ஆராய்ந்துள்ள செய்தி இடம் பெற்றுள்ளது. சமயம் கடந்த இலக்கியங்களும் தமிழ் மொழியில் அமைந்துள்ளன. திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் சமயச் சார்பற்றவை என்று போற்றி மகிழ முடிகின்றது.

பல்வேறு சமயங்கள் இருந்தாலும் அவை கூறும் நல்ல கருத்துகள் அனைத்தும் ஒன்றாக இருக்கின்றன. எல்லா மதங்களும் உண்மையே சிறந்தது என்கின்றன. நல்லது செய்தால் நல்லது நடக்கும்; அல்லது செய்தால் அல்லதே நடக்கும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. கருத்துகள், சொல்லும் முறை பலவானாலும் உண்மை ஒன்றாகத்தானே இருக்கமுடியும். பொய்கள் பலவாக இருக்கலாம். ஆனால் உண்மை ஒன்றே ஒன்றுதான். சமயங்கள் உணர்த்தவரும் பேருண்மை ஒன்றே ஒன்றுதான். அமைதியோடு அன்போடு அனைத்து மக்களும் வாழவேண்டும் என்பதே எல்லா சமயங்களின் நோக்கமாக அமைகின்றது.

ஔவையாரும் ஒரு சமயச் சார்பற்ற புலவர் ஆவார். அவரின் பாடல்கள் சமயச் சார்பற்றுத்தான் இருக்கின்றன. கடவுள் வாழ்த்துப் பாடல்களைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் அவரின் பல சமய ஏற்புத்தன்மை விளங்கும்.

நல்வழி என்ற நூலில் கடவுள் வாழ்த்திற்கு அடுத்து ஒரு பாடல் அமைகின்றது.

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணும்கால்
ஈது ஒழிய வேறு இல்லை எச்சமயத்தார் சொல்லும்
தீது ஒழிய நன்மை செயல்.

என்பது ஔவையார் வாக்கு.

எச்சமயத்தார் சொல்லும் தீது ஒழிய நன்மை செயல் என்ற இப்பாடலின் நிறைவடி மிக முக்கியமான அடியாகும். அதாவது தீமைகளை ஒழித்து நன்மைகளைப் பெருக்கவே எந்த சமயமும் மனிதர்களை வழிப்படுத்துகிறது என்பது இப்பாடலடியின் பொருளாகும். எச்சமயத்தார் என்ற குறிப்பு ஔவையார் காலத்தில் பல சமயங்கள் இருந்தன என்பதை எடுத்துரைக்கின்றது.


இவை மட்டுமா, சமயங்கள் சொல்லும் உண்மை, தத்துவங்கள், தத்துவ விளக்கங்கள், விரிவுரைகள், விவாதங்கள் எனச் சமயங்களுக்கு பற்பல கோணங்கள் உண்டு. அவ்விவாதங்கள் எதைப் பற்றி நடக்கின்றன என்றால் அதற்கும் ஒரு அடிப்படையைத் தருகிறார் ஔவையார்.

புண்ணியம் ஆம் - புண்ணியங்கள் செய்தால் நலம் பெருகும். அறம் செய்தால் பயன் பெருகும். நன்மைகளை நாடி நாளும் செய்தால் அதுவே புண்ணியம். இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மையைச் செய்த புண்ணியங்களே தரும்.

பாவம் போம். பாவம் செய்தால் அழிவே வரும். குற்றம், குறைகளைச் செய்தால் அழிவு நிச்சயம். தாழ்வு நிச்சயம். பாவங்களின் அளவிற்கு ஏற்ப அழிவுகளின் தாழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகமாகின்றன.

போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - சென்ற பிறப்புகளில் செய்த பாவங்கள் இக்காலத்தில் மண்ணில் இந்தப் பிறவியாகப் பிறந்து இதனை அனுபவிக்க வேண்டும் என்று கணக்கு எழுதப் பெற்றுள்ளது.

முன் வினையில் நல்லது செய்தோமோ, அல்லது செய்தோமோ தெரியாது. ஆனால் தற்காலத்தில் இந்த விழிப்புணர்வுடன் நல்லதை நாளும் செய்வோம். எதிர்காலத்திலும் நல்லவைகளைச் செய்ய நம்மை வழிப்படுத்திக் கொள்வோம்.

இவ்வடிக்கருத்தையே எல்லா சமயங்களும் வலியுறுத்துகின்றன என்கிறார் ஔவையார். எச்சமயத்தார் சொல்லும் இதுவே என்கிறார் ஔவையார்.

சமயங்கள் அனைத்தும் ஒரே அடிக்கருத்தில் இயங்குகின்றன என்பதை ஔவையார் கண்டறிந்துள்ளார். இந்த ஒரே அடிக்கருத்தை விதம் விதமாக அனைத்து மதங்களும் சொல்லியுள்ளன என்பது அவரின் சிந்தனை. ஆறுகள் பலவானாலும் சென்று சேரும் இடம் கடல்தான். ஔவையார் ஆறுகள் பிறக்கும் இடத்திலும் நீரின் ஊற்றுதான் உள்ளது. அந்த ஊற்று ஒன்றே என்கிறார். அவர் வழியைப் பின்பற்றி அனைத்து சமயக் கருத்துகளுக்கும் மதிப்பளிப்போம். நல்ல கருத்துகளைப் பல சமயங்களில் இருந்துத் தொகுத்துக் கொள்வோம். நல்லன செய்து நாளும் வளம் பெறுவோம்.
கருத்துரையிடுக