திங்கள், பிப்ரவரி 29, 2016

பொன்விலங்கில் பூட்டப்பட்ட மதுரை


madurai1மதுரை சார்ந்த எழுத்தாளர்களுள் நா.பார்த்தசாரதி குறிக்கத்தக்கவர் ஆவார். இவர் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி என்றாலும் அவர் வாழ்ந்த ஊர் மதுரை ஆகும். மதுரையில் வாழ்ந்த பிறகு அவர் சென்னைக்குச் செல்கிறார். அங்குப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை படிக்கிறார். இதன்பிறக ஆய்வுப்படிப்பினை அவர் தொடர்கிறார்..
இதழாசிரியராக, சமுதாய மற்றும் வரலாற்று நாவலாசிரியராக, விளங்கும் இவர் படைப்புகளில் பொன்விலங்கு என்பது மதுரையை மையமிட்ட நாவலாகும். இதில் இடம்பெறும் சத்தியமூர்த்தி சத்தியத்திற்குத் தலைவணங்கும் கதைப்பாத்திரமாவான். இவனின் மனம் கவர்ந்த மோகினி என்ற நாட்டியப்பெண் கலைகளின் அரசி என்றாலும் அவளின் வாழ்க்கை கவலைகளால் நிரம்பியது ஆகும். இவர்கள் இருவரின் நாகரீகமான ஈர்ப்பின் இடையில் நிற்பவள் பாரதி என்னும் வசதிமிகுந்த சத்தியமூர்த்திக்கு வேலை வாய்ப்பளித்த கல்லூரி நிறுவனரின் மகள் ஆவாள். இந்த முக்கோணக் காதல் கதையில் எவர் காதலும் நிறைவேறாமல் போவது பொன்விலங்கின் சோகம் ஆகும்.
பொன்விலங்கு என்ற இந்தக்கதையின் தலைப்பே பொற்றாமரை என்ற மதுரையின் தொன்மம் சார்ந்து நா.பார்த்தசாரதியால் வைக்கப்பெற்றுள்ளது. மோகினி என்ற கதைப் பாத்திரம் நடனம் ஆடும் குலம் சார்ந்த பெண் ஆவாள். அவளின் வாழ்க்கையைச் சித்திரிக்கும்போது மதுரையில் கலைஞர்களின் நிலையைப் பற்றி நா.பார்த்தசாரதி விளக்க முனைகிறார். பணஆளுமை, அதிகார ஆளுமை ஆகியவற்றிற்கு கலைஞர்கள் அடிபணிந்து போகவேண்டிய நிர்பந்தம் இருந்ததை இந்நாவல் எடுத்துரைக்கிறது.
மதுரை நகர வீதிகளில் சத்தியமூர்த்தியும் மோகினியும் நடக்கும்போது மதுரைப் பகுதிகள் நா. பார்த்தசாரதியால் வாசகர் கண்முன் நிறுத்தப்படுகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:
madurai2தொடர்வண்டிப் பயணத்தில் சாகப்போன மோகினியைக் கரம் பற்றிக் காக்கின்றான் சத்தியமூரத்தி. இதன் காரணமாக அவர்களிடம் ஏற்பட்ட அறிமுக நட்பு மெல்ல வளர்ந்து உயிர்கள் ஒன்றும் காதலாக மலருகின்றது. இவர்கள் இருவரும் மறுமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்திக்கிறார்கள். இவர்களின் காதல் ஆலயத்தில் உறுதிப்படுகின்றது.
‘‘அம்மன் சந்நதிக்கு முன்புறம் கிளிக்கூட்டுமண்டபத்தினருகே எதி்ர்பாராதவிதமாக மோகினியைச் சந்தித்தான் அவன்….. அவளை முந்திக்கொண்டுப்போக நினைத்தான் அவன். ஆனால் அவன் நினைத்தபடி நடைபெறவில்லை. அவளை முந்திக்கொண்டு போய்விட நினைத்த அவன் நினைப்பு வீணாயிற்று. அம்மன் சந்நதியில் இரண்டாவது திருச்சுற்றில் கொலுமண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது அவனைப் பின்தொடர்ந்தாற்போல அவள் மிக அருகே வந்து சேர்ந்தாள்.
அம்மன் சந்நதியிலிருந்து சுவாமி சந்நதிக்குள் போகிற வழியில் நகர முடியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் பிரமாண்டமான முக்குறுணியரிசிப் பிள்ளையாரைக் கடந்து, வலது பக்கத்தில் தொடங்கும் பெரிய பிரகாரத்தில் இப்போது போய்க்கொண்டிருந்தார்கள் அவர்கள். இச்சந்திப்புகள் நாகரீகமான காதலர்கள் சந்திக்கும் புள்ளியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்ததைப் புலப்படுத்துகிறது. தற்போது மதுரை மீனாட்சி அம்மன்கோவில் கூட்ட அதிகரிப்பு ,பாதுகாப்பு மிகுதி ஆகியன கருதி ஒரு காட்சியரங்கமாக இருப்பதையும் இவ்விடத்தில் எண்ணிப்பார்க்கவேண்டியுள்ளது. நா.பார்த்தசாரதி கால மதுரைக்கும் தற்கால மதுரைக்கும் உள்ள இடைவெளி இதுதான்.
மதுரையின் பிற இடங்கள்:  
madurai5
மோகினியின் வீடு இருக்கும் இடம்பற்றி அவளே பின்வருமாறு அடையாளப்படுத்துகிறாள். ‘‘சங்கீத விநாயகர் கோயில் தெரு என்று வடக்கு மாசி வீதியிலிருந்து இந்தக் கோவிலுக்கு வருகிற வழியில் ஒரு சிறிய சந்து இருக்கிறதே தெரியுமா? ….வித்துவான் பொன்னுச்சாமிப்பிள்ளை சந்துக்கு மேற்குப் பக்கமாக மறுபுறம் தானப்ப முதலித் தெருவில் போய் முடிகிற மாதிரி ஒரு தெரு இருக்கிறதே, ஞாபகமில்லையா உங்களுக்கு?. கலைஞர்கள் வாழும் பகுதியான சங்கீத விநாயகர் கோயில் தெரு காட்டப்பெற்றுள்ளது. இதில் மிக முக்கியமான பகுதி சந்து என்ற சொல் இடம்பெறும் பகுதியாகும். ஏனெனில் மதுரைக்கு அழகு அல்லது அடையாளம் சந்துகளே ஆகும்.
தமுக்கம் மைதானத்தைப் பற்றிய குறிப்பும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. ‘‘இருவருமாகப் புறப்பட்டுத் தமுக்கம் பொருட்காட்சி மைதானத்துக்கு யானைக்கல் கல்பாலம் வழியே நடந்து சென்றார்கள். பொருட்காட்சியின் பகுதிகள் எல்லாவற்றையும் நன்றாகச் சுற்றிப்பார்த்துவிட்டு, மோகினியின் நாட்டியம் நடைபெற இருந்த திறந்தவெளி அரங்குக்குள் அவர்கள் நுழையும்பொழுது ஆறேகால்மணி. சித்திரைத்திருவிழாவின் பொழுது மதுரையில் நடைபெறும் புகழ்பெற்ற பொருட்காட்சி பற்றிய விவரங்கள் சொல்லப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
மதுரையில் உள்ள மருத்துவமனை பெரியது. புகழ்பெற்றது. அந்தக்களமும் பொன்விலங்கு நாவலில் நா.பார்த்தசாரதியால் இடம்பெறச்செய்யப்பெற்றுள்ளது. ‘எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் இருவரும் டவுன் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தபோது, வைகைப்பாலம் நெருங்கும் வேளையில் சத்தியமூர்த்தியின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது.ஓடுகால் பள்ளங்களும் மணல்மேடுகளும் மறைந்து வைகையில் செந்நிறப் புதுநீர் அபூர்வமாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. பாலத்தின் மேற்குப்புறம் கட்டை வண்டிகளும் மற்ற போக்குவரத்து வாகனங்களும் செல்கிற கல்பாலத்துக்கும் அப்பால் தளர்ந்த கல்தூண்களோடு எதற்கோ கட்டப்பட்டு நிற்கும் பழைய உண்மையாய் மைய மண்டபம் நின்றுகொண்டிருந்தது. அதற்கும் மேற்கே ரயில் பாலத்தில் பாலத்தின் இந்தக்கோடிக்கும் அந்தக்கோடிக்கும் சரியாயிருக்கிறார்போல் ஒரு கூட்ஸ்வண்டி போய்க்கொண்டிருந்தது. அந்தப்பாலத்தில் இரயில் வந்து கொண்டிருந்த அதிகாலை நேரமொன்றின்போதுதான் கீழே குதித்துத் தற்கொலைச் செய்துகொள்வதற்கிருந்த மோகினியை அவன் காப்பாற்றினான். வருணனைப்பகுதியில் வைகையில் வெள்ளம் வருவது அபூர்வம் என்று பார்த்தசாரதியால் காட்டப்பெற்றுள்ளது. எர்ஸ்கின் ஆய்பத்திரி தற்போது இராஜாஜி அரசு மருத்துவமனையாகத் தற்போது மாறியுள்ளது.
madurai4ஏறக்குறைய சத்தியமூர்த்தி கதைப்பாத்திரம் மதுரையில் இருந்துப் பணிநிமித்தமாக மல்லிகைப்பந்தல் என்ற மலைநிலத்திற்கும், ஆய்விற்காக ஜெர்மனிக்கும் செல்லும் மதுரைப்பிரிவு நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் சென்னைப் பயணப்பிரிவின் சாயல்கொண்டது என்பது குறிக்கத்தக்கது.
இவ்வகையில் மதுரையின் தற்கால நிலை ஒட்டிய வருணனை அணிவகுப்பினைப் பொன்விலங்கு நாவலில் காணமுடிகிறது. மதுரையைவிட்டுப் பணிநிமித்தம் சென்ற ஓர் இளைஞனின் மதுரை வாழ்க்கை இழப்பினைக் காட்டுவது பொன்விலங்கு நாவல். இதன்வழி தற்கால இலக்கியங்களில் மதுரையின் களம் என்பது குறிக்கத்தக்கது என்பது தெரியவருகிறது.
மேலும் மதுரையின் குறியீடுகளான மீனாட்சி அம்மன்கோவில், மாசிவீதி, வைகை, தமுக்கம் போன்றன இந்நாவலில் மதுரைக்கான வட்டாரத்தன்மையை நிலைநாட்டுவனவாக உள்ளன. மதுரைக் கலைஞர்கள், அறிஞர்கள் பற்றியதான ஒரு பதிவிலக்கியமாக இந்நாவல் விளங்குகின்றது.

நன்றி சிறகு இதழ்

கருத்துகள் இல்லை: