செவ்வாய், நவம்பர் 26, 2013

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியங்களின் தாக்கம்

 

mathalaisomu

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் வெளியேற வேண்டிய சூழல் உருவானபோது எழுத்தாளர்களும் புலம் பெயர்ந்து எழுதத் தொடங்கினார்கள். கருணாமூர்த்தி ஷோபா சக்தி சை.பீர் முகம்மது முருகப+பதி மாத்தளை சோமு அ.முத்துலிங்கம் போன்றோர் இன்றைய நிலையில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் குறிக்கத்தக்கவர்கள் ஆவர்.
மாத்தளை சோமு தமிழகத்தின் ப+ர்வீகக் குடியினர் என்றாலும் இலங்கையில் வாழ்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர். தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் சில காலம் அவ்வப்போது உறைந்துவருபவர். நாவல்கள் சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதி வருபவர். இவரின் சிறுகதைகள் தொகுக்கப் பெற்று மாத்தளை சோமுவின் கதைகள் என்று இரு தொகுதிகளாக வந்துள்ளன. இவர் ~~வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்|| ~~வியக்கவைக்கும் தமிழர் காதல்|| ஆகிய கட்டுரை நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவ்விரு நூல்களும் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் வழியாகத் தமிழர் அடையாளத்தை வெளிப்படுத்துவனவாகும். மேலும் இவர் திருக்குறளுக்கு அறிவியல் நோக்கில் ஓர் அகல உரையைத் தந்துள்ளார். இவை இவர் செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.
இக்கட்டுரையில் மாத்தளை சோமுவின் சிறுகதைகள் – தொகுதி இரண்டு- என்ற தொகுப்பில் செவ்விலக்கியத் தாக்கம் பெற்ற கதைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப் பெற்று அவற்றின் திறம் ஆராயப் பெறுகின்றன.
~தமிழில் சங்க கால இலக்கியங்களாக முப்பத்தாறு நூல்கள் இருக்கின்றன. இவை தமிழின் தமிழரின் மூல வேர்கள். இவை ஊடாகத்தான் பழந்தமிழரின் அரசியல் நீதி கொடை வீரம் பண்பாடு காதல் சமூகவியல் வணிகம் வானவியல் ஆடை கட்டிடக் கலை மண்ணியல் நாட்டியம் இசை மருத்துவம் அணிகலன் அளவியல் கடல் நாகரீகம் சிற்பக்கலை என பலதுறைகளைப் பார்க்கின்றோம். அவற்றில் எல்லாம் அறிவியலின் பரிணாமமும் கலந்தே இருக்கிறது. பழந்தமிழ் நூல்கள் அடங்கிய இலக்கியங்கள் தமிழ்மொழியின் அடித்தளம். அவற்றில் மிக உன்னதமான கருத்துகள் குவிந்துள்ளன. ஆனால் இன்று ஆங்கில மற்றும் பிறமொழி மாயையில் தமிழர்கள் அவைகளைத் தொடுவதே தேவையில்லாத வேலை என்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். தாய்மொழி என்பது மரபுவேர் கொண்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை. இலக்கியம் மக்களுக்காக மக்கள் மேம்பட எழுதப்பட்டவை. ||( மாத்தளை சோமு வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்.ப. 111) என்ற இவரின் கூற்று செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் மீது இவர் கொண்டுள்ள மதிப்பினை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் காரணமாக இவரின் படைப்புகளில் செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் தாக்கங்கள் நிறைய காணப்பட வாய்ப்புண்டு என்பது தெளிவாகின்றது.
மாத்தளை சோமுவின் சிறுகதைகள் – தொகுதி 2 என்ற தொகுப்பு இவரின் முப்பத்து மூன்று கதைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல கதைகள் இலங்கையில் வாழ் மலையகத் தமிழர்தம் வாழ்க்கை முறையை நினைவு கூர்வன. இன்னும் சில கதைகள் இவரின் ஆஸ்திரேலிய வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியன. ஒரு கதை இலங்கையின் வரலாறு சார்ந்து எழுதப் பெற்றுள்ளது. இக்கதைகள் அனைத்திலும் ஆங்காங்கே செம்மொழி இலக்கியத்தின் தாக்கங்கள் காணப்படுகின்றன. என்றாலும் முழுக்க தாக்கம் பெற்ற ஐந்து கதைகள் இங்கு எடுத்தாளப்பெறுகின்றன.
தமிழ்ப் பண்பாடும் அதை வெளிநாடு வாழ் தமிழர்கள் உயிரெனக் கருதுவதும்
தமிழருக்கென்று தனித்த பண்பாடுகள் உண்டு. அந்தப் பண்பாடுகளை எழுத்து வடிவில் பதிவு செய்வன இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் இப்பண்பாட்டைத் தலைமுறைதோறும் கடத்தும் கருவிகளாகவும் விளங்குகின்றன. தமிழ்ப் பண்பாட்டை மறந்த மறுத்த வெளிநாடு வாழ் தமிழர்கள் அதனால் பாதிப்புகள் ஏற்படுகையில் தமிழர் பண்பாட்டின் தன்னிகரற்ற தன்மையை உணர்ந்து கொள்ளுகின்றனர்.
தமிழர்களின் பெயர்கள் நீளமானவை. அவற்றை வெளிநாடுகளில் சுருக்கி அழைப்பது என்பதும் சுருக்கி வைத்துக் கொள்வது என்பதும் தற்போது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. ~~இந்தத் தாயின் வயது|| என்ற சிறுகதையின் நாயகி காயத்ரி – காயா எனச் சுருக்கப்படுகிறாள். இவளின் பன்னிரண்டு வயது மகள் லாவன்யா. லாவண்யா வயதுக்கு வந்த நிகழ்வுடன் கதை தொடங்குகின்றது. காயாவும் அவளது கணவனும் பணம் சம்பாதிப்பதில் நாட்டம் செலுத்த லாவண்யா என்ற பன்னிரண்டு வயதுடைய குழந்தை வீட்டில் தனிமையில் பல நேரத்தைக் கழிக்கவேண்டியுள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் இவளின் தனிமையை ஓர் அயலக இளைஞன் பயன்படுத்திக்கொள்கிறான். இதன் காரணமாக ஒரு நாள் பள்ளியில் இருந்து காயாவுக்கு அழைப்பு வருகிறது. இவ்வழைப்பின் வழியாக லாவன்யா கர்ப்பமாக இருப்பதாக பள்ளி நிர்வாகத்தார் ஐயமுறுகிறார்கள். மருத்துவர்கள் பரிசோதனையில் அது உறுதியும் ஆகிறது. லாவன்யாவிடம் காயா பேசிப்பார்த்தாள். ஆனால் ~~அவள் எனக்கு பேபி பிறந்தால் அதனோடு விளையாடுவேன். எங்க அம்மா சிஸ்டர் பேபி தரவே இல்லை || என்று அறியாத பிள்ளையாய் இது குறித்து மகிழ்ச்சி அடைகிறாள்.
இக்கட்டான நிலையில் காயா சிந்திக்கிறாள். ~~அவள் இப்படி ஆவதற்குத் தானே ஒரு காரணமாகிப் போய்விட்டேனா? எப்போது பார்த்தாலும் பணம் என்ற சிந்தனை அதைத் தேட வேலை ஓவர்டைம் என்று இருந்துவிட்டேன். எல்லாம் இங்கே இருக்கிற திமிரில் எவரோடும் ஒட்டாமல் ஒதுங்கி இருப்பதே உயர்வென்று வீட்டில் தாய்மொழியின் நினைவோ நிழலோ இல்லை. லாவண்யாவுக்குத் தமிழே தெரியாது. தாய்மொழி என்பதை வெறும் மொழி என்றே நினைத்து வி;ட்டேனே! அது நமது அடையாளமாகவும் அதனோடு நமது வேர் ஊடுறுவி இருப்பதையும் மறந்து வி;ட்டேனே|| ( ப. 189) என்ற தற்சிந்தனையில் தமிழ் மொழியின் தேவை அம்மொழி சார்ந்த பண்பாடு போன்றவற்றின் தனித்தன்மையைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்திருக்க வேண்டிய அவசியத்தைக் காயா உணர்கிறாள்.
இதற்குப் பின் காயா தன் மகள் லாவண்யாவிற்குத் தனக்கும் தன் கணவனுக்கும் நடந்த திருமண நிகழ்வைக் காணொளியாக் காட்டி அதன் வழியாக திருமணம் குடும்பம் போன்றவற்றின் இன்றியமையாமையை உணர்த்துகிறாள். இவற்றோடு மனநல மருத்துவரின் நல்லுரைகளும் சேர லாவண்யா தன் கர்பத்தைக் கலைத்துவிட முன்வருகிறாள். அப்போது அவள் பேசிய மொழிகள் குறிக்கத்தக்கவை. ~~மம்மி! மம்மி! ஐ டோன்ட் வான்ட் பேபி. ஐ வான்ட் சிஸ்டர்|| (ப. 191) என்ற அவளின் தொடர் ஆங்கில வடிவமானது என்றாலும் அதனுள் புதைந்திருப்பது தமிழ்ப் பண்பாடு. இதனை உணர லாவண்யாவை காயா என்ற தாய் காயப்பட வைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.
~~வேர்கள்|| என்ற கதையும் தமிழ் மொழி பண்பாடு ஆகியவற்றின் வேர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் உணர உணர வைக்க ஏற்ற கதையாகும். இதில் சுலோச்சனா (சுலோ) என்ற சிறுமி சிட்னி நகரத்தில் இருந்து தன் வேரை அறிந்து கொள்ளத் திருச்சிக்கு வருகிறாள். வந்த சில நாட்கள் வரை ஆஸ்திரேலிய நாட்டுச் சிறுமியாக விளங்கிய சுலோ மெல்ல மெல்ல இந்திய தமிழகப் பெண்ணாக மாறும் கதை இந்தக் கதையாகும்.
சுலோச்சனாவின் தந்தையும் தாயும் சுலோச்சனாவை அழைத்துக் கொண்டு அவரின் தாத்தா வீட்டிற்கு அதவாது திருச்சிக்கு வருகின்றனர். இதற்குக் காரணம் சுலோச்சனாவின் அப்பா ஒரு மொரீசியஸ்காரரை ஆஸ்திரேலியாவில் சந்தித்ததுதான்.
மொரீசியஸ்காரரின் தாத்தா இந்தியாவைச் சார்ந்தவர். தந்தை மொரிஷியஸ் சார்ந்தவர். இவரின் மகள் ஒரு பிரெஞ்சு இளைஞனை மொரீசியஸில் திருமணம் செய்துவிட்டு மூன்றாண்டுகளில் அவனை விட்டுப் பிரிந்துவிடுகிறாள். இதற்குமேல் மொரீஸியசில் வாழ இயலாது என்று ஆஸ்திரேலியாவிற்கு அவர் குடி புகுந்துவிடுகிறார். ~~ நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் மொழி பண்பாடு என்பனவற்றைச் சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்…. நவ். டூ லேட்|| (ப. 156) என்று தன் தவற்றை மொரீசியஸ்காரர் சுலோச்சனாவின் அப்பாவிடம் எடுத்துரைக்கிறார். இதனால் தன் மகளுக்குத் தன் நாட்டின் வேர் தெரியவேண்டும் என்று சுலோச்சனாவின் அப்பா அவளை அவளின் தாத்தா வீட்டிற்கு அழைத்துவருகிறார். ~~மொரீசியஸ்காரரின் அனுபவம் எல்லாம் எனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நினைத்தேன். அதன் பின்னர்தான் குடும்பத்தோடு நீண்ட விடுமுறையில் இந்தியா போக முடிவெடுத்தேன்|| (ப. 157) என்ற சுலோச்சனாவின் அப்பாவின் முடிவு பண்பாட்டு வேர்களைத் தேடி தன் மகளுக்காக அவர் தொடங்கிய தாய்நாட்டு; பயணத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.
கதையின் வளர்ச்சியாக சுலோச்சனாவின் தந்தை ஒரு திருமணத்திற்காகக் கொழும்பு சென்று விட்டு தன் பழைய உறவுகளைச் சந்திக்க முயற்சி செய்து சிலரைக் கண்டுச் சில நாள்களில் வருகிறார். இச்சிலநாள்களில் சுலோச்சனா தமிழக் சூழலில் வளரும் குழந்தையாகிவிடுகிறாள்.
~~வீட்டுக் கேட்டைத் திறந்து உள்ளே கால் வைத்தபோது என்னால் நம்பவே முடியவில்லை.சுலோச்சனா எதிர்வீட்டு ஜமுனாவேர்டு தேங்காய்ச் சிரட்டையைச் சட்டியாக வைத்து சமைத்துக் கொண்டிருக்கிறாள். என்னைக் கண்டதும் மண் ஒட்டிய கரங்களோடு சுலோ ஓடிவந்தாள். அப்பா எனக்கு என்ன வாங்கியாந்த? …சுலோவின் தமிழைக் கேட்பதில் மகிழ்ச்சியானேன். அதே சமயம் மகளுக்கு எதுவுமே வாங்கி வரவில்லை என்ற குற்ற உணர்வு என்னை அழுத்தியது. மெல்ல சுலோவைத் தூக்கி அணைத்து முத்தமிட்டேன். பிறகு அவள் தன்னை விடுவித்துக் கொண்டு விளையாடப் போய்விட்டாள்|| (ப. 158) என்ற இந்தச் சொற்றொடர்கள் தாய்நாட்டிற்கு வருவதன் வழியாகக் குழந்தைகளுக்குப் பண்பாட்டின் வேர்களைக் கற்றுத் தந்துவிட இயலும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
சங்க காலத்தில் அகநானூற்றுத் தலைவி ஒருத்தி சிறுசோறு சமைக்கிறாள்.
~~..கானல்
தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது
இருந்தனமாக|| (அகநானூறு. 110- 7-9)
என்ற இப்பாடலில் தலைவி சிறுவீடு கட்டிச் சிறு சோறு சமைக்கிறாள். இதனால் அத்தலைவிக்குக் களைப்பு ஏற்படுகின்றது. சிறு சோறு சமைக்கின்ற இந்நிகழ்வே மாத்தளை சோமுவின் கதையில் தேங்காய்ச் சிரட்டையில் மண்சோறு சமைப்பதாகத் தொடர்கின்றது. மண் விளையாட்டு வண்டல் விளையாட்டாகச் சங்க காலத்தில் விளையாடப்பெற்றுள்ளது.
~~மணல் காண்தொறும் வண்டல்தைஇ|| (நற்றிணை 9 -8) என்று நற்றிணையிலும் ~~கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி|| ( அகநானூறு 60- 10-11) என்று அகநானூற்றிலும் பெண்கள் விளையாடும் வண்டல் விளையாட்டு இடம் பெற்றுள்ளது. அகநானூற்றுத்தலைவி மணல் விளையாட்டு விளையாடுவதன் காரணமாக அவளின் உடல் ஒளி குறைந்துவிடும் என்று- தாய் அவளை வீட்டுக்குள் அழைத்தாளாம். இங்கு சுலோ ஜமுனா ஆகியோர் விளையாட்டு ஆயமாகின்றனர். அவர்களும் வண்டல் தடவி விளையாடுகின்றனர். இவ்வாறு தொடர்கின்றது தமிழர் வண்டல் விளையாட்டு மரபு.
முதுமையும் துயரமும்
முதுமைக் காலத்தில் அரவணைப்பு இன்றி முதியவர்கள் அனாதைகளாக விடப்படும் சூழல் இக்காலத்தில் எல்லா நாடுகளிலும் நடைபெறுகின்ற செயலாகிவிட்டது. இளமையின் துடிப்பான தன்மையையும் முதுமையில் கோல் ஊன்றி நடக்கும் தளர்ந்த தன்மையையும் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.
~~இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே (புறநானூறு.243)
இளமையில் குளத்தில் பெண்களோடு கைகோர்த்து விளையாடுதலும் மருத மரத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து மூழ்கி ஆழ்மணலை எடுத்து வந்தமையும் இன்று எண்ணிப் பார்க்கத்தக்கதாக உள்ளது. இன்றைக்கு முதுமை வந்துவிடக் கோலூன்றி நடந்து இருமல் இடையில் பேசி வாழ்க்கையைக் கடத்த வேண்டி இருக்கிறது என்று இளமை முதுமை ஆகியவற்றின் இயல்பினை தொடித்தலை விழுத்தண்டினார் பாடுகின்றார். இப்பாடலை எழுதியவர் யாரென்று தெரியாததால் தொடித்தலை விழுத்தண்டினார் என்று பாடல் தொடரே பெயராக தரப் பெற்றுள்ளது.
இத்தகைய இரங்கத் தக்க முதுமையைப் பல இடங்களில் காட்டுகின்றார் மாத்தளை சோமு. அதில் ஒன்று அவருடைய ~~தேனீக்கள்|| என்ற தலைப்பிட்ட கதையில் இடம்பெற்றுள்ளது. ~~கிழவனுடைய தேகம் முழுவதும் வரிக்குதிரைபோல் காய்ந்த முந்திரிக் கோடுகளாகச் சுருங்கிக் கிடந்தது. அவன் மிகவும் தளர்ந்து போய்விட்டான். அது வயதின் காரணமோ வாழ்வின் காரணமோ தெரியவில்லை. கிழவன் கிழிந்த சட்டையும் இடுப்பில் வேட்டியும் கட்டியிருக்கிறான். வேட்டி என்ன நிறமோ? புதிதாக வாங்கும்போது வெள்ளை வெளேரென்று இருந்தது. இப்போதோ காய்ந்த மண்ணின் நிறமாகக் கூடவே வியர்வை நாற்றத்தையும் அள்ளி வீசியது.|| என்ற அம்மாசிக் கிழவனைப் பற்றிய வருணனை தொடித்தலை விழுத்தண்டூன்றிய பாடலின் மறுபதிப்பாக விளங்குகின்றது.
முதுமையின் இரங்கத்தக்கச் சாயலை ~~நமக்கென்றொரு ப+மி|| ~ஒரு கதா பாத்திரத்தின் முடிவுறாத கதை|| ~~அனாதைகள்|| ஆகிய இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகள் வாயிலாகவம் அறியமுடிகின்றது.
ஊஞ்சல்
ஊஞ்சல் விளையாட்டை மையமாக வைத்து ஒரு கதையினைப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கி மாத்தளை சோமு படைத்துள்ளார். கதையின் பெயர் ~~ஊஞ்சல் மரம்||.
~~அந்த ஊஞ்சலைக் கட்டி வைத்ததே அவர்கள்தான். முதலில் லயத்தில் ஒரு காம்பராவில் ஒருத்தன் கயிற்றைக் கட்டி சும்மா ஆடினான். அதைப் பார்த்துவிட்டு ஒருவன் அந்த மரத்தில் கயிற்றைக் கட்டி ஆடினான். அப்புறம் எல்லோரும் ஆட ஒருநாள் கயிறு அறுந்து ஒருவன் கீழே விழுந்துவிட்டான்.
அதைப் பார்த்துவிட்டு அந்த லயத்தின் கடைசிக் காம்பராவில் இருப்பவர் – டவுனுக்குப்போய்ச் சங்கிலியும் பலகையும் வாங்கி வந்து மரக்கொம்பில் ஊஞ்சல் அமைத்தான். மரத்தின் கீழே முளைத்திருந்த புற்களை அப்புறப்படுத்தி மணல் கொண்டு வந்து கொட்டி லயத்து வாண்டுகளின் அபிமானத்தைப் பெற்றான்|| (ப. 80)
என்பது மாத்தளை சோமு வரைந்துள்ள ஊஞ்சல் அனுபவம். இதே அனுபவம் சங்க இலக்கியப் பாடலொன்றில் கிடக்கின்றது. ~~ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கி ||(அகநானூறு. 20- 5-6) என்பது அப்பாடலடி.
சங்க காலச் சூழல். மரங்கள் அடர்ந்த ஒரு சோலை. அச்சோலயின் நடுவே ஒரு கொன்றை மரம். அம் மரம் ப+த்துக் குலுங்குகின்றது. அந்த மரத்தின் ப+விதழ்கள் புலிநகம் போன்று காட்சியளிக்கின்றன. அதனால் அம்மரத்திற்குப் புலிநகக் கொன்றைமரம் என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது. அம்மரத்தில் ஒரு கிளை வாகாக வளைந்து வளர்ந்துள்ளது. அந்தக் கிளையில் தாழை நாரால் செய்யப் பெற்ற மணமிக்க நாரால் ஊஞ்சல் உருவாக்கப்படுகிறது. இந்த ஊஞ்சல்தான் மலையகத்து இலங்கைத் தமிழர் தம் குடியிருப்பு அருகிலும் கட்டப் பெற்று தமிழ் செவ்விலக்கிய மரபு தொடர்கிறது.
கதை மேலும் தொடர்கிறது. பிள்ளைகள் ஊஞ்சலைத் தள்ளுவதும் ஊஞ்சல் ஆடுவதும் எனக் கோலகலமாக இருந்த இந்தவிளையாட்டைத் தேயிலைத் தோட்டத்தையாளும் துரையின் மகன் பார்க்கிறான். அவனுக்கு ஊஞ்சல் மீது ஆசை வருகிறது. துரைவீட்டில் உருட்டுக் கம்பிகளால் ஆன ஊஞ்சல் வந்து சேர்கின்றது. அங்கு துரைமகனுக்கு ஆடுவது சிறப்பாக இல்லை. எனவே அவன் உழைப்பாளர்களின் குழந்தைகள் ஆடும் ஊஞ்சலுக்கு வந்துவிடுகிறான். உழைப்பாளர் குழந்தைகளுடன் துரையின் மகனும் விளையாடுவதா என்று துரைக்கு அது கௌரவப் பிரச்சனையாகிவிடுகிறது. இதைத் தடுக்க என்ன செய்வது என்று எண்ணுகிறார் துரை.
நாள்கள் நகருகின்றன. அவர் ஒருமுறை இந்த ஊஞ்சல் இருப்பிடத்தைக் கடக்கையில் ஒரு குழந்தை அவரின் மகி;ழ்வுந்தில் விழுந்துவிட விபத்து ஏற்பட்டு விடுகிறது இதனையே காரணமாக வைத்து துரை ஊஞ்சல் விளையாட்டைத் தடுத்து நிறுத்த மரத்தை வெட்டிவிடச் சொல்கிறார்.
இந்த மரத்தின் இழப்பு அந்தப் பகுதியையே சோகத்திற்கு உள்ளாக்குகின்றது. மரம் குழந்தைகளை நேசித்தது. மனிதர்கள் நேசிக்கவில்லையே என்று கவலை கொள்கிறார் படைப்பாளர்.
~~அவர்கள் ஊஞ்சல் ஆடும்போது அந்த மரம் அவர்களை ஆசிர்வதிப்பதுபோல் தன்னிடம் ஒட்டிக்கிடக்கிற காய்ந்த இலைகளைக் காகிதப் ப+வாகச் சொரியும்….. குழந்தைகளை அந்த மரம் நேசிக்கிறது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம் அல்லவா! அதனால் அந்த மரம் அவர்களை ஆசீர்வதிக்கிறது. அது இந்த மனிதர்களுக்குத் தெரியவில்லையே|| (ப. 81) என்று படைப்பாளர் மக்களிடத்தில் மனிதநேயம் இல்லாநிலையை மரத்தின் வாயிலாக வெளிப்படுத்திவிடுகின்றார்.
ஒருவாய் நீர்
ஒருவாய் நீருக்காகக் தவிக்கும் குடும்பத்தைப் பற்றிய கதை ‘ஒருவாய் நீர்|| என்பதாகும். இந்தத் தலைப்பே புறநானூற்று பாடல் ஒன்றை உடனே நினைவுக்குக் கொண்டுவந்துவிடுகின்றது. செங்கணான் என்ற சோழ மன்னனுடன் நடந்த போரில் சேரமான் கணைக்கால் இரும்பொறை தோல்வியைத் தழுவுகிறான். கணைக்கால் இரும்பொறை செங்கணானி;ன் சிறையில் கிடக்கிறான். அவனுக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்படுகின்றது. சிறைக்காவலர்கள் நீரைத் தராது காலம் நீட்டியபோது தன் தன்மானம் குறைவுபடுவதை அம்மன்னன் உணர்கிறான். காலம் நீட்டித்து வந்த அவ்வொருவாய் தண்ணீரை அவன் குடிக்க மறுத்துத் தாகத்துடன் உயிர்விடுகிறான்.
~~….. வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே?||( புறநானூறு.பாடல். 74)
என்ற இந்தப் பாடல் ஒருவாய் நீருக்காகத் தன்மானத்தை இழக்காத தமிழனின் தலைசிறந்த பாட்டு.
இலங்கையின் அரசவையில் சிங்களத்திற்கும் தமிழுக்கும் மொழிப் பெயர்த்துக் கருத்துகளை வெளிப்படுத்தும் அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன் உள்நாட்டுப் போர் காராணமாக ஒரு பதுங்குக் குழியில் பதுங்கி இருக்கிறார். அப்பொழுது தொடர்ந்து: சீறிவந்து ஏவுகணைகள் அவர்கள் இருக்கும் இடத்தைத் தாக்குகின்றன. இந்த இக்கட்டான சூழலில் அவரின் அன்பு மகள் ஒரு வாய் தண்ணீர் கேட்கிறாள். அவரால் பதுங்குக் குழிவிட்டு எழுந்து போக முடியாத நிலை. தொடர்ந்து வெடித்த ஏவுகணைகளுக்கு இடையில் பத்துநிமிட இடைவெளி கிடைக்கிறது. அந்த இடைவெளிக்குள் தண்ணீர் கொண்டுவர அவர் பதுங்குக்குழி விட்டு எழுகிறார். தண்ணீர் எடுக்கிறார். சொம்பில் எடுத்துக் கொண்டு குழி நோக்கிவருகிறார். இதன்பின் நடந்த நிகழ்வுகளை கதையாசிரியார் காட்டுவதை அப்படியே காட்டுவது நல்லது.
~~வேக வேகமாக பதுங்கு குழியை நோக்கி நடந்தார். திடீரென்று வெச்சத்தம் கேட்டது மறுபடியும் எறிகணைகளை வீசத்தொடங்கி விட்டார்கள். வேறு வழியே இல்லை. வெளியே வந்தாகிவட்டது இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தால். . அதற்குள் ~விர்| ரென்று பறந்து வந்த ஓர் ஏவுகணையின் சிதறல் அவர் இடதுகையை பதம் பார்த்தது. வலது கையில் சொம்பு . அப்போதும் அந்த சொம்பை விடாமல் பதுங்கு குழியில் இறங்கினார். இடது கை விரல்களிலிருந்து ரத்தம் கொட்டுவதைக் கண்ட மனைவி அலறினாள் ~~அய்யோ! உங்கட ஒரு விரல் காணலியே?||
…மகள் அப்போதுதான் இடதுகையைப் பார்த்தாள் . ஒரு விரல் இல்லை. ரத்தம் கீழே கொட்டியது. மௌ;ள சொம்பைத் தூக்கிய மகள் அப்பாவிடம் வந்து அவரின் இடதுகையைத் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். . . கந்தசாமியின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் விழுந்தன. அது கண்ணீர் அல்ல. .. . . || (ப. 270) என்ற கதையாடலில் இரக்கம் படிப்பவர்க்கு மேலிடுகிறது. துயரமான நிகழ்வுகளுக்கு இடையில் மனித உயிர்கள் படும் பாட்டினை இந்தச் சிறுகதை அவலச் சுவை ததும்ப விவரிக்கின்றது.
மாத்தளை சோமு படைத்துள்ள கதைகளில் அவரின் கதையாடல் வளர்ச்சிமுறை மிகத் n;தளிவாகத் n;தரிகின்றது. அவரின் ஆரம்ப நிலைக் கதைகள் வளர் நிலைக் கதைகள் எனப் பல நிலைக் கதைகள் இத்n;தாகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் வழியாக அவரின் படைப்பு வளர்ச்சி அறியத்தக்கதாக உள்ளது.
மலையக மக்களை முன்வைத்து அவர்களுக்கான இலக்கியத்தைப் படைத்து வரும் அவரின் முயற்சி அவரின் படைப்புகள் சான்றுகளாக அமைகின்றன. இலங்கை சார்ந்த மலையக இலக்கியம் என்ற பிரிவிற்கு இவர் தனிச் சான்றாகின்றார்.
புலம் பெயர் இலக்கியம் என்ற நிலையில் ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்தம் நிலையை இவரின் கதைகள் எடுத்துரைக்கின்றன. சிட்னி நகர வாழ்வைப் படம்பிடித்துக்காட்டும் அவரின் படைப்புத்திறன் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தில் குறிக்கத்தக்க இடம் வகிக்கின்றது.
குறிக்கத்தக்க ஐந்து கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றில் தொனிக்கும் செம்மொழிச் சாயல்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது என்றாலும் விடுதலாகியுள்ள கதைகள் அனைத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமி;ழ்ச் செவ்விலக்கிய மரபு உறைந்துள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. இலங்கைத் தமிழர்கள் மலேயத் தமிழர்கள் சிங்கைத் தமிழர்கள் மொரிசீயஸ் தமிழர்கள் இன்று எல்லை தாண்டினாலும் அனைத்துத் தமிழர்களின் தாய்மண் தாய் இலக்கியம் செம்மொழி இலக்கியங்கள் என்பது கருதத்தக்கது. செம்மொழி இலக்கியங்களின் தாக்கம் திரைகடலோடிய தமிழர்கள் அனைவரிடத்திலும் ஏதாவது ஒருவகையில் தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு மாத்தளை சோமுவின் கதைகள் நல்ல சான்றுகள்.
பயன் கொண்ட நூல்கள்
மாத்தளை சோமு மாத்தளை சோமுவின் சிறுகதைகள் (தொகுதி.2)
இளவழகன் பதிப்பகம். சேன்னை 2003
சுப்பிரமணியம்.ச.வே. சங்கஇலக்கியம் எட்டுத்தொகை தொகுதி 123)
மணிவாசகர் பதிப்பகம் சென்னை 2010

 

கருத்துகள் இல்லை: