வெள்ளி, அக்டோபர் 04, 2013

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்



    மண்ணுலகம், பூவுலகம், மக்கள் உலகம் என்று இந்த பூமி பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  மண்ணால் நிரம்பியிருப்பதால் இதனை மண்ணுலகம் என்கிறோம். இந்த உலகம் பூமி என்றழைக்கப்படுவதால் பூவுலகம் எனப்படுகின்றது. மக்கள் நிரம்பி வாழ்வதால் இதனை மக்கள் உலகம் என்று அழைக்கிறோம். ,மக்கள் உலகம், பூவுலகம் இவற்றையெல்லாம் விட மண்ணுலகம் என்று சொல்லுவதில்தான் பொருள் ஆழம் அதிகம்.
 மண் தனக்குள் முளைக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இட்ட பொருளை அழிக்கும் திறனையும் கொண்டு விளங்குகின்றது. ஆக்க சக்தியாகவும், அழிக்கும் சக்தியாகவும் விளங்கும் மண்ணில் தோன்றும் அத்தனைப் பொருட்களும் மண்ணில் இருந்துத் தோன்றி, இந்த மண்ணுக்குள்ளே தன்னை அழித்துக் கொள்கின்றன. மூலமும் முடிவுமாக விளங்குகின்ற இந்த மண்ணுலக வாழ்வில் வாழும் காலம் என்பது ஒரு இடைப்பட்ட காலம்தான்.

     பிறப்பு , இறப்பு என்ற ஆரம்பத்திற்கும் நிறைவிற்கும் இடையில் இருப்பது - வாழ்தல் என்ற இடைவெளியாகும். இந்த வாழ்தல் என்ற இடைவெளியை ஒவ்வொரு உயிரும் வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெந்ததைத் தின்று வெறும் வாழ்க்கை வாழ்வதைவிட வெற்றிகரமான நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு மக்கள் உயிருக்குள்ளும் இருக்கின்றது. இந்த ஆர்வத்தாலேயே இந்த பூமி மகத்தான கண்டுபிடிப்புகளால் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மண்ணில் நல்ல வண்ணம் வாழ முடிகின்றது.

     மண்ணில் பிறந்துவிட்ட ஒரு மனிதன் தன் கடமைகள் என்ன என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. வாழத் தொடங்கும் காலத்திலேயே தனக்கான கடமைகள் என்ன என்பதை அவன் அறிந்து கொண்டுவிட்டால் அவனின் பயணம் வெற்றியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது. கடைசிவரை தன் கடமைகள் என்ன என்பதையே அறியாமல் சிலர் வாழ முற்பட்டு, வாழ்ந்து முடிக்கின்ற காலத்தில் ‘‘ஐயையோ எதையும் செய்யாமல் போனோமே’’ என்று வருந்துவது அவனுக்கும் சோகம். பூமிக்கும் பாரம்.

     அதிவீரராம பாண்டியர் என்ற புலவர் எழுதிய நூல்களுள் ஒன்று காசி காண்டம் என்பதாகும். இதனுள் மக்களின் கடமைகளை, நெறிகளை அவர் தொகுத்து அளிக்கின்றார்.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒன்பது சக மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும்; ஒன்பது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் காசி காண்டத்தில் குறிப்பிடுகின்றார்.

     ஆசிரியர், தாய். தந்தை, மனைவி, குழந்தைகள், விருந்தினர்கள், காலையும் மாலையும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், புதியவர்கள், ஆகியோர்களையும் ஒளியையும் பாதுகாப்பவனே மனிதர்களில் பயன் மிக்கவன். இவ்வொன்பதையும் பாதுகாக்காதவன் மக்களுள் பயன் இல்லாதவன் என்று காசிக்காண்டம் குறிப்பிடுகின்றது.

     குரவனைத் தாயைத் தந்தையை மனைவியை
           குற்றமில் புதல்வனை விருந்தை
     இரவு நண்பகலும் வழிபடுவோனை
           அதிதியை எரியினை ஈங்குக்
     கருதும்ஒன் பதின்மர் தம்மையும் நாளும்
           கருணைகூர்ந்து இனிது அளித்திடாது
     மருவும்இல் வாழ்க்கை பூண்டுளோன் தன்னை
           மக்களுள் பதடிஎன்று உரைப்பர்
     என்பது காசி காண்டத்தில் இடம்பெறும் பாடலாகும். இல்வாழ்க்கை மேற்கொள்பவர்களின் கடமை என்பது காசி காண்டம் காட்டும் ஒன்பதையும் பாதுகாத்து வாழும் வாழ்க்கை ஆகும். இந்தப் பாடலில் குரவர் என்ற நிலையில் ஆசிரியர்  ஒன்பது பேருள் முதல்வராக வைத்துப் போற்றப்படுகிறார். சமுதாயத்தில் ஆசிரியர் என்பவருக்குத் தரப்பட்டுள்ள இடம் எத்தகைய பெருமை வாய்ந்தது என்பது புலனாகும். பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் பாதுகாப்பது என்பது அடுத்து இடம்பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி, மக்கள், விருந்து என்று தொடரும் இந்தப் பட்டியலில் உள்ளவர்களை நாளும் கருணை கூர்ந்துப் பொருள்கள் அளித்து மகிழ்வுடன் பாதுகாத்து வந்தால், அதுவே மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்ததற்கான அடையாளம் ஆகும். இந்த அடிப்படை கடமையான இதனை நிறைவேற்றியபின்னே அரிய சாதனைகளைப் படைக்க மனிதன் புறப்படலாம்.

     இதுபோன்று இல்வாழ்க்கை வாழுகின்ற மனிதனுக்குத் தேவையான ஒன்பது குணங்களையும் காசிகாண்டம் எடுத்துரைக்கிறது.
     மெய்ம்மை, நற்பொறை, வெங்கொலை செய்யாது ஒழுகல்
           மேவும் எக்கரணமும் அடக்கல்
     செம்மைசேர் தூய்மை வரைவுறாது அளித்தல்
           சீற்றம் நீங்குதல் களவின்மை
     அம்மவென்று எவரும் அரற்றுதல் பரியா
           அருள் செயல் ஆய ஒன்பானும்
     வம்மென அமரர் எதிர் புகுந்து அழைப்ப
           வானிடை விடுத்த தூது ஆமால்
என்பது இல்லறத்தாருக்கு வேண்டிய ஒன்பது குணங்களையும் எடுத்துரைக்கும் பாடலாகும்.

     மனிதனாக வாழ்கின்றவனுக்குத் தேவையான குணங்கள் ஒன்பது என்பது அதிவீரராம பாண்டியரின் தெளிந்த கருத்தாகும். உண்மையைப் பேசுதல், பொறுமை, கொல்லாமை, புலன்அடக்கம், தூய்மை, மற்றவர்களுக்கு மனம் கோணாமல் பொருள்களை அளித்தல், கோபத்தை அடக்குதல், மனத்தால் கூட பிறர் பொருளை அடைய எண்ணாமை, மற்றவர்களின் துயரைக் கண்டு அதனைத் துடைத்தல் என்ற ஒன்பது குணங்களை உடையவனே மனிதன் எனப்படுவான். .

     வையத்துள் வாழ்வாங்கு வாழ நல்ல குணங்களை மனிதன் கடைபிடித்து நடக்கவேண்டியுள்ளது. உண்மை என்பதை மட்டும் மக்கள் அனைவரும் பின்பற்றினால் உலகத்தில்  குற்றம் குறைகளே இல்லாமல் செய்துவிடலாம். பொறுமை இருந்துவிட்டால்  நோய்களுக்கே இடமில்லாமல் ஆகிவிடும். கண், காது, மூக்கு, வாய், உடல் என்ற ஐந்து புலன்களை அடக்கிவிட்டால் துன்பமே எந்நாளும் இல்லை. கோபத்தை அடக்கிவிட்டால் எதிரிகளே இல்லாமல் ஆகிவிடுவர். மனதால் பிறர் பொருளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்படாவிட்டால் அமைதியான வாழ்க்கை கிட்டிவிடும். மற்றவர்களின் துன்பத்திற்கு இரங்கி அவர்களின் துன்பம் துடைக்க நம்மால் முடிந்த வழிகளைச் செய்துவிட்டால் மனிதநேயம் ஏற்பட்டுவிடும். இந்த எல்லாப் பண்புகளையும் விட்டுவிட்டு வாழ்பவர்கள் மனிதர்கள் அல்ல.இயந்திரங்கள். இயந்திரங்களே மற்றவர் துயரத்தைப் பார்த்தும் ஏதும் செய்யாமல் இருந்த இடத்திலேயே இருப்பனவாகும்.

     இத்தகைய ஒன்பது குணங்களில் ஒன்றிரண்டை மட்டும் பின்பற்றினால் போதும் என்று திருப்தியடைந்துவிடாமல் அனைத்துக் குணங்களையும் பின்பற்றி வாழத் தொடங்கினால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். ஆசிரியர், பெற்றோர், மனைவி, மக்கள், விருந்தினர், வழிபாடு நிகழ்த்துவோர் போன்ற ஒன்பதுபேரில் ஒருவரையும் விட்டுவிடாமல் அனைவரையும் அன்புடன் பாதுகாத்தால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்த அடையாளம் கிடைக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். நல் கதிக்கு இவற்றைவிட வேறுவழியில்லை.

கருத்துகள் இல்லை: