புதன், மே 29, 2013

செந்தமிழ்க் கல்லூரி நூலகத்தின் வழியாகப் பெற்ற பயன்


மதுரை மாநகரில் பார்க்க தகுந்த பல பகுதிகள் உண்டு. இருப்பினும் குறிப்பாக தமிழர்கள் அனைவரும் காண வேண்டிய ஓரிடம் மதுரைத்தமிழ்ச்சங்கம். இச்சங்கத்தில் பழம்பெரும் புலவர்கள் பலர் வீற்றிருந்து தமிழ்மணம் பரப்பினர். பெருமைக்குரிய பாண்டித்துரைத்தேவரின் இளமை எழில் நலம் அவரின்  தமிழ்ப்பற்று நல்ல நிறுவனத்தை உருவாக்கச் செய்துள்ளது. அவரின் இளமைத் தோற்றம் போல் கல்லூரியும் சங்கமும், நூலகமும் இன்றும் பொலிந்து வருகின்றன.
நகர நெருக்கடி மிக்க இடத்தில் சங்கம் அமைந்திருந்தாலும் சங்கத்தில் உள் நுழைந்துவிட்டால் அமைதியான சூழல். அந்தச் சூழலில் அமைந்திருக்கும் இரண்டடுக்கு மாடியான நூலகம் பெருந்த ஆலமரம் போன்று காட்சியளிக்கின்றது.

செந்தமிழ்க்கல்லூர்யின் பாண்டியன்  நூலகத்திற்குச் சென்று வந்த அனுபவம் புத்தகக் கடலுக்குள் சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தும். வந்தோர்க்கு வேண்டிய அத்தனை நூல்களும் உடன் எடுத்தக்க வகையில் நவீன முறையில் இயங்கி வரும் நல்ல நூலகம் ஈத.

குறிப்பாக செந்தமிழ்க் கல்லூரியின் சார்பில் வெளிவரும் மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழ் இதழ்கள் அனைத்தும் அங்கு பாதுகாக்கப் பெற்றுவருவது மிகுந்த சிறப்பு.
செந்தமிழ் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை அவற்றின் காலம், ஆசிரியர் இதழ் முறைப்படி அறிந்து கொள்ள ஒரு கையேட்டினை உருவாக்கியிருக்கும் நல்ல பணி ஆய்வாளர்களின் சிரமங்கள் பலவற்றைக் குறைத்துவிடுகின்றது. தொடர்ந்து அப்பணி நடை பெறவேண்டும்.
நூலகத்தின் பரந்த பரப்பைப்போல அங்கு பணியாற்றும் நூலகப் பொறுப்பாளர்களும் பரந்த மனம் கொண்டவர்கள். அவர்கள் வந்திருக்கும் ஆய்வாளர்களை வரவேற்று அவர்களின் நோக்கம் நேரம் ஆகியன அறிந்து அவற்றிற்கேற்ப தரவுகளை உடன் தந்து உதவுகிறார்கள்.

ஆய்வாளர்களுக்கு உதவும் நிலையில் செந்தமிழ்க்கல்லூரியின் நூலகம் இயங்கி வருகிறது, தமிழர்கள் அனைவரும் சென்று காணவேண்டிய பயன்பெற வேண்டிய நல்ல நூலகம் இதுவாகும்
என்னைப் பொறுத்தவரை செந்தமிழ் இதழில் வெளிவந்த அரசப்புலவர்கள் பற்றிய கட்டுரையைத் தேடச் சென்றேன். கையில் குறிப்பேடு மட்டும்தான் என்னிடம் இருந்தது. எழுதுகோல் மறந்தேன். அதனையும் தந்து புத்தகங்களையும் தந்து என் நேரத்திற்கு ஏற்ற வகையில் நான் தரவுகளைத் தேட உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: