அண்ணவர்க்கே சரண் நாங்களே!
முனைவர் மு.பழனியப்பன்.
தமிழாய்வுத்துறைத்தலைவர்,
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,
சிவகங்கை
கல்லூரியில் படிக்கும் காலங்களில் போட்டிகளில் கலந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த அனுபவமாகும். கல்லூரிக்குள் நடக்கும் போட்டிகளில் வெற்றிவாய்ப்பு எங்களுக்கே என்றாலும் மாவட்ட அளவில் , மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்பது என்பதில் வெற்றியும், வெற்றியை எதிர்நோக்கிய தோல்விகளும் சரிசம அளவில் வந்ததுண்டு.
எம்முடைய
கல்லூரிக் காலத்தில் அதாவது 1990ஆம் ஆண்டுகளில், மாநிலஅளவுப் போட்டிகளை ஆண்டாண்டுதோறும்
காலம் தவறாமல் நடத்துவதில் முக்கிய இடம் சென்னைக் கம்பன் கழகத்திற்கு உண்டு. மாநிலம்
தழுவிய நிலையில் கட்டுரைப் போட்டிகளையும், பேச்சுப் போட்டிகளையும் நடத்தி நாடறிந்த
அளவில் மாணவர்களை உருவாக்கும் அரிய பணியைச் சென்னைக் கம்பன் கழகம் செய்து வந்தது. அப்படி
ஒரு வருடத்தில் ஒரு நாளில் மாநிலம் தழுவிய நிலையில் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக
நானும் நண்பர் சேதுபதியும் சென்னையை நோக்கிப் பயணப்பட்டோம். எங்கள் இருவருக்கும் நட்பும்,
போட்டியும், தயாரிப்பும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பும் என்ற நிலையில் மிக்கப் பொருத்தம்
இருந்தது.
இருந்தாலும் சென்னை நகரம். நகரத்திற்கு உரிய பிரமாண்டம் நாங்கள் இறங்கியதும் எங்களைக் கொஞ்சம் பயமுறுத்தவே செய்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பயத்தைச் சொல்லிக்கொள்ளாமல் கட்டுரைப்போட்டி நடக்கின்ற பள்ளி நோக்கிச் சென்றோம். சென்னையில் யார் தெரிந்தவர்கள் என்று எண்ணிப் பார்த்து, எங்கு தங்கலாம் என்று எண்ணிப்பார்த்துப் பலவித தேடல் மனநிலையில் முதல்நாள் போட்டியில் கலந்து கொள்கிறோம். மெல்ல யார் போட்டி நடத்துகிறார்கள் என்று அறிந்து அவர்கள் சொல்லும் குறிப்பின்படி தங்குவதற்குத் தயாரானோம். போட்டிகள் அன்றைய தினம் முடிந்ததும் எங்களை மிக்க அன்புடன் தங்குமிடத்தில் இறக்கித் தங்க வைத்தனர். அதுவும் புது சூழல். உணவிற்குப் பக்கத்தில் உள்ள உணவகங்களும் சொல்லப்பெற்றன.. எங்களுக்கு நாள் படியும் வழங்கப் பெற்றது. அந்த நாள்படிக்கு ஏற்ப எங்கள் உணவுத்திட்டம் அமைந்து அதிலிருந்து மீறாமல் இருப்பதில் நாங்கள் இருவரும் கெட்டிக்காரர்கள் என்பதை நிரூபித்த வண்ணம் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டோம்.
தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் நடைபெறும்
கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு போதுமான அளவிற்குச் செய்தோம்.
சில நாள்கள் இடைவளி விட்டுப் பேச்சுப் போட்டிகள்
அணிவகுக்கும். இந்த இடைவெளியில் சென்னையில் தெரிந்தவர்கள் வீட்டில் அடைக்கலம் புகுந்துப்
பின் மீளவும் சென்னைக் கம்பன் கழக விருந்தினர்களாகி போட்டியாளர்கள் என்ற தொனியில் பெருமைப்படுவோம்.
பேச்சுப் போட்டிக்கு மிகப் பெரிய அரங்கம் எங்களுக்குக் காத்திருக்கும். ராணி மெய்யம்மை
அரங்கம்... இதில் பேச வேண்டும், கேட்பதற்கு வந்திருந்தப் போட்டியாளர்கள் இருப்பர்.
மூவர் நடுவர்களாக இருப்பர். இந்த நடுவர்கள் யார் யார் என்று அறிந்து கொள்வதே எங்களுக்கு மிகப் பெரிய வேலை.
ஒருபோட்டிக்கு எழுத்தாளர் பாலகுமாரன் வந்திருந்தார். எங்களை எங்களாலேயே நம்ப இயலவி்ல்லை.
பேச்சுப்
போட்டிகளும் தொடர்ந்து காலை ஒன்று மாலை ஒன்று என்று நடப்பதால் தயாரிப்புச்சிக்கல் எங்களுக்கு
ஏற்பட்டது. அதைவிட சென்னை மாநகரம் சார்ந்த மாணவர்கள் வந்தார்கள், வென்றார்கள் என்று
சென்றுவிட.... தங்கித் தமிழ் வளர்க்கும் நாங்கள் வீட்டு நினைவுகள் ஒருபுறம், வரப் போகிற
பேச்சுப் போட்டி நடுவர்களைக் கவரவேண்டும் என்ற நினைவு ஒருபுறம் என்று சிரமப்படுவோம்.
சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டியில் நான் பேசிவிட்டு வந்து என் இடத்தில் அமர்ந்தேன். சிலப்பதிகாரத் தலைப்பில் மாதவியைப் பற்றிக் குறை சொல்லும் வகையில் என் பேச்சு அமைந்திருந்தது. வந்து அமர்ந்ததும் நான் நன்றாகத்தான் பேசினேன் என்று மனம் சொன்னது. இருந்தாலும் என் பேச்சு சரியில்லையோ என்று போட்டிக்கு வந்திருந்த மாணவர்கள் கருதுவது எனக்குத் தெரிந்தது. இந்தச் சூழலில் நான் அமர்ந்திருந்த எட்டாவது வரிசை இருக்கையைத் தேடி வந்தது சிலப்பதிகாரத்தில் இந்த இந்த இடங்களைத் தொட்டுப் பேசியிருக்கலாம். என்று என் தோள்தட்டி அவர் பேசினார். எங்களின் மூன்றாண்டுகால சென்னை வரவிற்குக் காரணமாக இருந்த அந்தப் போட்டி அமைப்பாளர் திரு பழ, பழனியப்பன் அவர்கள்தான் அந்த அவர்.
போட்டி நடத்துவதில் அவர் காட்டிய நேர்த்தி, கண்டிப்பு, மேற்பார்வை இவற்றை எண்ணி வியந்து தள்ளிப்போய் நிற்கிற என்னைத் தொட்டு அவர் பேசிய பேச்சு இன்னும் மறக்கமுடியாமல் என் நினைவுச் சேமிப்புக்கிடங்கில் அழியாமல் நிலைத்து நிற்கிறது. அவருக்கு இருக்கும் பலதரப்பட்ட வேலைகளில் என் பேச்சையும் கவனித்துத் தொட்டு உணர்த்தும் தனிமனித அன்புத் தொடர்பாக அவரின் கரம் அன்று என் மேல் பட்டது.
வீட்டிற்கு வந்தோம். கட்டுரைப் போட்டிகளில் பலவற்றில் நான் வென்றிருந்தேன். நானும் நண்பரும் சேர்ந்து வெள்ளிச் சுழற்கோப்பைகளைப் பெரும் வாய்ப்பினைப் பெற்றிருந்தோம். வெற்றி கூறி வெண்சங்கு ஊதிவந்த அந்த போட்டிகளின் வெற்றி அறிவிப்புகளும் ஓரழகு. அதில் வண்ணப் போனாக்களால் எங்களின் பெயரும் தரமும் குறிக்கப் பெற்றிருந்த நேர்த்தி கருதி என்னை வியப்பு சூழ்ந்தது. பரிசு பெறும் அந்த ஆகஸ்டுப் பொழுதில் சென்னையில் இறங்கிச் சென்னைக் கம்பன் கழக விருந்தினர்களாகிப் பரிசு பெற்றோம். நானும் நண்பர் சேதுபதியும் சீறாப்புராணத்திற்காக பெற்ற வெள்ளிக் கோப்பைப் பரிசு அடுத்த நாள் தினமணியில் முதல் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது. அதுதான் தலைப்புச் செய்தி. சாதாரண மாணவர்களைத் தலைப்புச் செய்திக்குள் கொண்டுவந்த இந்த வளர்த்தெடுத்தலுக்குக் காரணமானவர் அண்ணன் பழ, பழனியப்பன் என்பதிலும் அவர் வழி நடக்க சிற்சில பாதைகள் எங்களுக்குக் கிடைத்தன என்பதிலும் மகிழ்ச்சி.
இதனைத் தொடர்ந்து காரைக்குடி கம்பன் விழாவில் பங்கேற்க எங்களை அண்ணன் அழைத்தார். ஒரு நிகழ்விற்குச் சென்ற நாங்கள், கம்பன் நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொள்ள சென்னைக் கம்பன் கழக முத்திரையே காரணம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கவிதைப்போட்டியில், பேச்சுப் போட்டியில் வெல்லும் நிலை பெற்று மகிழ்ந்தேன். பெரும்பாலும் நான் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெறுவதில்லை. எனவே எனக்குச் சென்னைக் கம்பன் அரங்கில் பேசும் வாய்ப்பு தள்ளிப்போகும். ஏனென்றால் போட்டியில் பங்கேற்று முதல்ப்பரிசு பெற்ற மாணவர்கள் பேசும் விவாதமேடை அக்காலத்தில் புதிய ஒன்றாக, கலகலப்பு நிறைந்ததாக விளங்கும். நான் கவிதைப் போட்டியில் வென்றதும் அதனை அடிப்படையாக வைத்து ஒரு விவாத மேடையில் கலந்து கொள்ளச் செய்யப் பெற்றேன். அவ்விவாத மேடைக்கு நடுவராக இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் விளங்கினார். எனக்கு பால சீனிவாசனுக்கு ஏற்பட்ட கருத்து மோதலை அன்று கண்டு ரசித்த இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் அவர்களின் நட்பு எனக்கு ஏற்பட அந்நிகழ்ச்சி முக்கியக் காரணம்.
தொடர்ந்து காரைக்குடி கம்பன் மேடைகளில் அவ்வப்போது நான் கலந்து கொள்வேன். என் நிலையும் மாணவர் நிலையில் இருந்து உயர்தது. பேராசிரிய நிலையை எய்தினேன். இருந்தாலும் சென்னையில் முதன்முதலாகக் கண்ட பழ. பழனியப்பன் என்ற மனிதரின் தனிஆளுமைத்திறனுக்கு முன் என்றைக்கும் நான் மாணவன்தான். அன்றைக்கு இருந்த அதே கட்டுப்படும் மனநிலைதான் இன்றைக்கும் மாறாமல் என்னுள் இருக்கிறது.
சென்ற ஆண்டு என்னை முன்னிறுத்தி கம்ப வானியல் என்ற தலைப்பில் நண்பர் சேஷாத்திரி அவர்கள் நிறுவியுள்ள அறக்கட்டளையில் பொழிவாற்ற வைத்தார். அப்பொழிவு நூலாக வருவதற்கும் அவரே முயற்சி செய்து தனி ஒரு நூலை நான் தர வழிவகுத்தவர் அண்ணன். தொடர்ந்து பவளவிழா நிகழ்வுகளுக்காக நான் அண்ணனுடன் உடனிருந்துச் செயல்பட நல்லூழ் கூட்டிவைத்தது. சிவகங்கை மண்ணிற்கு நான் மாற்றலாகி வந்ததும் நாட்டரசன் கோட்டைக்கு அருகில் நான் இருப்பதும் ஏதோ ஒரு காரணம் என்றால் அந்த ஒரே காரணம் கம்பன் திருநாள் பவளவிழாதான். அது இயற்கையின் கூட்டுவிப்பு என்பதில் ஐயமில்லை.
குகனொடும் ஐவரானோம். கம்பக் கவிச்சக்கரவர்த்த்தியே! நடையில் நின்று உயர் இராமனே! உன்னைப் படித்தவர்கள் நீயாகவே மாறிவிடுவர். அண்ணனுடன் நாங்கள் இணைந்து கம்பக்குடும்பமானோம். இந்தக் கம்பக் குடும்பத்தில் நாங்கள் இணைய மீனும் தரவில்லை. தூதும் போகவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.அவரிடம் பெற்றனவே அதிகம். தந்தன குறைவு என்பது தன்னடக்கமல்ல. அதுவே உண்மை.
கம்ப மேடைகளை உருவாக்குவதில், புதுமைகளைப் புகுத்துவதில் அண்ணனுக்கு நிகர் அண்ணன்தான். சென்னைக் கம்பன் கழகத்தில் இலக்கியச்சுற்றம் என்றொரு நிகழ்விற்கு அவர்கள் புறாக்களையும், கிளிகளையும் உயிருடன் கொண்டுவந்து ஒரு சோலையையே நிறுவியிருந்தார்கள். இப்படி ஒவ்வொரு நிகழ்வும் புதுமைப் பொலிவுடன் திகழ அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி தன்னிகரற்றது. புதுமைக்குச் சென்னைக் கம்பன் கழகம் என்றால் மரபிற்குக் காரைக்குடிக் கம்பன் கழகம். காரைக்குடியில் மரபு மாறாமல் வெள்ளிக்குவளைத் தண்ணீர், பாதம் தொட்டு வணங்கும் கம்பனடிப்பொடி வணக்கம், இலக்கியவாணர்கள் அமர்ந்து கொள்ள விசைப்பலகை என்று இன்னமும் கட்டிக்காத்துவரும் காப்பிய மரபிற்கு அண்ணன் ஓர் அடையாளம்.
கம்பனை
நினைந்து, கம்பனில் கரைந்து, கம்ப விரதம் எடுத்திருக்கும் கம்பனடிப்பொடி சீடர் கம்பன்
அடிசூடி நூறாண்டு கண்டு கம்பன் திருநாளையும் வெற்றியுடன் விடுதலையாய் நாளும் நடத்தவேண்டும்.
மாதக்கூட்டங்களுக்கு அவர் படும்பாடு, ஆண்டுக் கூட்டங்களுக்கு அவர் எடுத்துக் கொள்ளும்
சிரத்தை சொல்லில் அடங்காதவை. அவரில்லத்து முற்றத்தில்
அணில் பிள்ளைகளாய் நாங்கள் தொண்டு என்னும் பெயரில் பெயருக்குத் துணையாய் நிற்கிறோம.
அவரின் கம்பத் தொண்டு இன்னும் பெருகி கம்பன் தமிழை வளர்க்க வேண்டும்.
அண்ணனின் துணை ஆச்சி. அண்ணனின் செயல்பாடுகளில் இன்னமும் நேர்த்தியையும், ஒழுங்கையும் கூட்டிக் கொண்டே இருப்பது ஆச்சியின் பணி. எங்களின் அறிவை வளர்த்தவர் அண்ணனார். எங்களின் உயிரை, உடலைப் பேணுபவர்கள் ஆச்சி, வீட்டிற்குச் சென்றதும் எங்கள் குடும்பத்தின் சௌகரியத்தைக் கேட்டறிந்து, எங்களுக்கு வீட்டு நினைவைத் தொட்டுக்காட்டும் தாயுள்ளம் நிரம்பியர்வகள் அவர்கள். மென்மையான பேச்சும், மலர்ந்த சிரிப்பும் அவர்களின் உயர்விற்குக் காரணங்கள்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எப்படியோ இணைந்து நாளும் நாங்கள் அவர்களையும், அவர்கள் எங்களையும் நினைந்து கொள்ளும் அன்பு சார் நிலைக்கு கம்பனே காரணம். அவனே மூல காரணன். அவனே அண்ணன். அண்ணவர்க்கே சரண் நாங்களே. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழிய கம்பக் குடும்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக