புதன், மே 29, 2013

சேக்கிழார் காலத்துக் கல்விச் சூழல்

பன்னிருதிருமுறைகளில் காப்பியத் திறனுடையது பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் சேக்கிழார். இவர் பல்வேறு காலச் சூழலில் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் படைத்தளித்துள்ளார். இந்நாயன்மார்கள் பலர் கல்வியறிவில் சிறந்தவர்கள் ஆவர். அவர்கள் வேதக்கல்வி, பள்ளிக்கல்வி, சமயக்கல்வி, குலக்கல்வி போன்ற பற்பல கல்விகளைக் கற்றவர்கள் ஆவர். இவர்களின் கல்விச்சூழலை விளக்கவரும் சேக்கிழார் அவ்வவ் இடங்களில் அவ்வவ் கல்வி குறித்த சிந்தனைகளை வகுத்தளித்துள்ளார். அவற்றை எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
வேதக்கல்வி
                பெரியபுராணத்துள் வரும் அந்தண குலத்தவர்கள் வேதக்கல்வியைப் பயின்றுள்ளனர். விசாரசருமர் (சண்டேசுர நாயனார்) கற்றது வேதக்கல்வியாகும்.
                ஐந்து வருடம் அவர்க்கு அணைய
                                அங்கம் ஆறும் உடன் நிறைந்த
                சந்த மறைகள் உட்படமுன்
                                தலைவர் மொழிந்த ஆகமங்கள்
                முந்தை அறிவின் தொடர்ச்சியால்
                                முகைக்கு மலரின் வாசம் போல்
                சிந்தை மலர உடன் மலரும்
                                செவ்வி உணர்வு சிறந்ததால் ( பாடல் எண்- 1223)
அந்தண குலத்தில் ஐந்தாம் வயதில் வேதக்கல்வி தொடங்கப் பெற்றுள்ளது. வேதங்களில் உள்ள ஆறு அங்கங்கள் குழந்தைகளுக்கு வேதவல்லவர்கள் கற்றுக் கொடுத்தனர்.  சிக்ஷை, வியாகரணம் சந்தோ, விசிதி, நிருத்தம், சோதிடம், கற்பம் முதலானவை வேதங்களில் உள்ள ஆறு அங்கங்கள் ஆகும். இவ்வாறு அங்கங்களும் விசாரசருமருக்கு கற்பிக்கப் பெற்றுள்ளன.
    மொட்டுக்குள்ளே வாசம் நிறைந்திருப்பதைப்போல சென்ற பிறவியிலேயே வேதத்தின் தொடர்பை விசாரசருபர் பெற்றிருந்ததால் அவர் விரைவில் வேதக்கல்வியில் தேர்ச்சி பெற்றார் என்று உவமை வாயிலாகச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.
                சிறுத்தொண்டர்புhணத்துள் அவரின் மகன் சீராளன் பள்ளியில் படித்த நிகழ்ச்சி சுட்டப் பெறுகிறது. சிறுத்தொண்டரும் மகாமாத்திரர் என்ற அந்தணக் குலப்பிரிவில் ஒருவகைப்பட்டவர் ஆவார். இவர் வேந்தருக்கும் அந்தணருக்கும் இடைப்பட்ட மரபினர் என்ற கருத்தும் உண்டு. இவரின் குழந்தை கல்வி கற்க பள்ளி சென்றது.
                வந்துவளர் மூவாண்டில் மயிர்வினை மங்கலம் செய்து
                தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்
                சிந்தைமலர் சொல்தெளிவில் செழுங்கலைகள் பயிலத்தம்
                பந்தம்அற வந்தவரைப் பள்ளியினில் இருத்தினர் (பாடல்எண்: 3686)

இப்பாடலில் மூன்றாம் வயதில் சீராளன் பள்ளிக்கு அனுப்பப் பெற்றுள்ளாள்ன.   வேதக்கல்வியே சீராளனுக்கும் வழங்கப் பெற்றது. 
                இப்பாடலில் இடம்பெறும் மயிர்வினை மங்கலம் என்பது செய்யப்பெற்றவுடன்தான் கல்விநிலையத்திற்குக் கல்வி கற்கப் பிள்ளைகள் அக்காலத்தில் அனுப்பப் பெற்றுள்ளனர். இதனை சவுளக் கல்யாணம் என வடமொழியில் அழைப்பர். சேக்கிழார் இச்சொல்லைத் தமிழாக்கித்தந்துள்ளார். மயிர்களையும் இச்சடங்கு அந்தணர்க்கு மட்டுமே உண்டு. ரிக்,யசுர் வேதம் சார்ந்தவர்களுக்கு மட்டுமே இச்சடங்கு நிகழ்த்தப் பெற்றுள்ளது. மற்றவர்கள் மயிர்களைதல் தவிர்க்கப் பெற்றுள்ளது. (தற்காலத்தில் முடிகாணிக்கை என்ற பெயரில் அனைத்துத் தரப்பாரும் மயிர்களைதலைச் செய்து கொள்ளுகின்றனர் என்றாலும் இம்முறை ஒரு சடங்காகத் தற்போதைய தமிழ்ச்சமுதாயத்தில் இல்லை)
                 சேக்கிழார் காலத்தில் அந்தணர்க்கு மட்டும்  வேதக்கல்வி வழங்கப் பெற்றுள்ளது என்பது தெளிவாகத் தெரியவருகிறது. இவ்வேதக் கல்வி முறையில் மறைகள், கலைகள் போன்றன கற்பிக்கப் பெற்றுள்ளன. அடுத்து அரச மரபினருக்கு வேதம் சார்ந்த சில பகுதிகளை அறிவிக்கும் கல்வி வழங்கப் பெற்றுள்ளது.
                சோழ அரசன் மனுநீதியின் மகனான வீதிவிடங்கன் அளவுஇல் தொல்கலைகள் கற்றுத் தேர்ந்தவன் என்று சேக்கிழாரால் குறிக்கப் பெறுகிறான்.                 சுந்தரர் ஆதிசைவ மரபினர். இவர் முந்நூல் சாத்தி கலைகள் கற்ற முறைமை அவரது புராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது.
                பெருமைசால் அரசர் காதல் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
                வருமுறை மரபில் வைகி, வளர்ந்து மங்கலம் செய் கோலத்து
                அருமறை முந்நூல் சாத்தி அளவுஇல் தொல்கலைகள் ஆய்ந்து
                திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப்பருவம் சேர்ந்தார் (பாடல்எண் 152)
என்ற பகுதி அரசரால் தன்பிள்ளையாக வளர்க்க ஏற்றுக் கொள்ளப்பெற்ற சுந்தரருக்குக் கல்வி தரப் பெற்றுள்ளது. அரசர், அரசர் சார்ந்தோர் போன்றோருக்கு வேதக்கல்வி விரிவுபடுத்தப் பெற்றிருந்ததை இந்நிகழ்வுகள் அறிவிக்கின்றன.
                மற்ற பிரிவினர் அவரவர் தொழில்சார்ந்த கல்வியைக் கற்றுள்ளனர். திண்ணன் எனப்படும் கண்ணப்பர் சிலைத்தொழில் பயிற்ற வேண்டி முந்தை அத்துறையில் மிக்க முதியவரை அடைத்துக் கூட்டி ( பாடல்எண்; 68) என்ற குறிப்பின்படி வேடக்குலத்துக்கல்வி திண்ணனாருக்குக் கற்பிக்கப் பெற்றமை தெரியவருகிறது.
                இவ்வாறு குலம் சார்ந்த கல்வி என்ற நிலையில் சேக்கிழார் கால சமுதாயத்தில் பிற வகுப்பினருக்குக் கல்வி கற்பிக்கப் பெற்றுள்;ளது.
சமண சமயம் சார்ந்த கல்வி
                திருநாவுக்கரசர் மருள்நீக்கியாராக இருந்த காலத்தில் அவர் சமண சமயக் கல்வியைக் கற்றுள்ளார். அவர் பாடலிபுத்திரம் என்ற நகரத்திற்குச் சென்று அங்குள்ள சமணப்பள்ளியில் இணைந்துக் கல்வி கற்றார் என்ற குறிப்பு பெரியபுராணத்துள் உள்ளது. வேளாள மரபினைச் சார்ந்த இவர் வேதக்கல்வி கற்க இயலாதவர் என்பதால் மாற்றுக்கல்வி முறைக்குச் செல்ல வேண்டியவரானார்.
                பாடலிபுத் திரம்என்னும் பதி அணைந்து சமண்பள்ளி
                மாடுஅணைந்தார் வல்அமணர் மருங்குஅணைந்து மற்றவர்க்கு
                வீடுஅறியும் நெறிஇதுவே எனமெய்போல் தங்களுடன்
                கூடவரும் உணர்வுகொளக் குறிபலவும் கொளுவினார் (பாடல்எண்: 1308)
பண்டைக் காலத்தில் பாடலிபுத்திரம் என்று இரு நகரங்கள் இந்தியாவில் இருந்தன. வடநாட்டில் இருந்த தற்போது பீகாரின் தலைநகராக விளங்குகின்றன பாட்னா என்பது ஒரு நகரம். இந்நகரில் பௌத்தமதம் சிறந்து விளங்கி அதனைப் பரப்பும் நிலையங்கள் இருந்தன. அசோகர் காலத்திலேயே பௌத்தக் கல்வி இங்குச் சிறந்து விளங்கியது. பௌத்தக் கல்வி இங்கு சிறந்திருந்தது என்ற குறிப்பின் காரணமாக  இங்குச் சமணக்கல்வி சிறந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகக் கொள்ள்லாம்.
 தமிழகத்தில்  உள்ள திருப்பாதிரிப்புலியூர் (தற்போது கடலூர் என்று அழைக்கப் பெறும் ஊர்) என்பது அக்காலத்தில் பாடலிபுத்திரம் என்றழைக்கப் பெற்றுள்ளது. இங்குச் சமணர்கள் அதிகம் இருந்தனர்.  இங்கிருந்த சமணப் பள்ளியில் மருள்நீக்கியார் இணைந்துக் கல்வி கற்கத் தொடங்கினார்  அவருக்கு சமண நூற்கள் பலவும் கற்பிக்கப் பெற்றுள்ளன. அமண் சமயத்து அருங்கலைநூல் எல்லாம் அங்கு பயின்று அவர் தருமசேனர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். மேலும் பல்சமயத்தாரையும் வாதில் வென்று சமண சமயத்தை அவர் நிலைநிறுத்தினார் என்று சேக்கிழார் சமண சமயக் கல்வி குறித்துப் பெரியபுராணத்தில் காட்டியுள்ளார்.
                சேக்கிழார் பல அடியவர்களை இணைத்துக் காப்பியத்தை இயற்றியிருந்தாலும் அவர்காலக் கல்விச்சூழல் அவரின் காப்பியத்தின் வழியாக வெளிப்படுத்தப் பெற்றுள்ளது. கல்விமுறை சிலருக்கு மறுக்கப் பெற்றதும், சிலருக்கு அளிக்கப் பெற்றதுமான கல்வியில் ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயமாக சேக்கிழார்காலச் சமுதாயம் இருந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.
முடிவுகள்
                பெரியபுராண காலத்தில் வேதக்கல்வி, குலக்கல்வி, சமணசமயக் கல்வி முதலானவை அவரவர் திறத்திற்கு ஏற்ப வழங்கப்பெற்றுள்ளன.
                அந்தணர்கள் வேதக்கல்வியைக் கற்றுள்ளனர். அரசர்கள், அரசர்களின் துணை பெற்றோர் வேதக்கல்வி கற்க அனுமதிக்கப் பெற்றுள்ளனர்.
                வேதக்கல்வியைக் கற்க இயலாத வணிகர், வேளாளர் போன்றோர் வேற்று சமயங்கள் வழங்கும் கல்வியைக் கற்கச் சென்றுள்ளனர்.
                வேடர் போன்ற உழைப்பாளர்கள் தம் குலத்துக் கல்வியைத் தம் குலமுதல்வர்கள் சொல்லித்தர அதனைக் கற்றும் தம் பணியைச் செய்துள்ளனர்.
                கல்விநிலையில் இருந்த இந்த ஏற்றத்தாழ்வுகள் மிகத்தெளிவாக பெரியபுராணத்திற்குள் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

துணைநின்ற நூல்கள்
1 கலியாணசுந்தரனார். திரு.வி.. ( அரும்பத உரையாசிரியர்) திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் ஆராய்ச்சி மையம், சென்னை, 1993
2. நடராசன். பி.ரா. (உரையாசிரியர்) பெரியபுராணம்( நான்கு தொகுதிகள்),  உமாபதிப்பகம், சென்னை, 2006
கருத்துரையிடுக