திங்கள், மார்ச் 22, 2010

இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், - நூல் விமர்சனம்இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், இசைபதிப்பகம், கும்பகோணம், விலை. ரு.60


இணைய இணைப்பில்லா வீடு உலகத் தொடர்பில்லா வீடாகி விடும். உலகின் அனைத்துத் தகவல்களை, புகைப்படங்களை, செய்திகளை, அதிசயங்களை என அனைத்தையும் அறிந்து கொள்ள உதவும் அமுதசுரபி இணையம் ஆகும். இவ்விணையம் குறித்துப் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் செய்திகள் இருக்கும். நல்ல தமிழ் இருக்காது. தமிழும் ஆங்கிலமும் கலந்து விரவிக்கிடக்கும்.
ஒரு முறை நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அருகில் ஒரு பல்தொழில் நுட்பக் கல்வி கற்கும் (பாலிடெக்னிக்) மாணவர் அவரின் தேர்விற்காகப் புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டுப் படித்தவாறு இருந்தார். அவரின் புத்தகப் பக்கங்களைப் பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.அவர் தமிழ் வழியில் படிக்கிறார். அவர் வைத்திருக்கிற புத்தகத்தில் அல்லது ஆசிரியர் அளித்தக் குறிப்பில் தமிழ் வார்த்தைகளான வைத்து, எடுத்து போன்ற வினைகள் மட்டுமே இருந்தன. மற்ற நிலையில் டையை எடுத்து, ஆரஞ்சு கலர் கிரீன் கலர் கலந்து, வெசலில் ஊற்றி .....இதுபோன்ற நிலையில் ஆங்கிலச் சொற்களின் தமிழ்ஒலிநடை மட்டுமே இருந்தது. இவர் தமிழில் படிக்கிறாரா? அல்லது தமிழால் படிக்கிறாரா என்ற சந்தேகம் இன்று வரை எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு ஆங்கில ஒலிபெயர்ப்பு கொண்ட தமிழ்நடையே பல கணினிப் புத்தகங்களின் நடையாக உள்ளது. இது மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.
இந்நிலையில் இருந்து மாறி நல்ல தமிழ் கொண்டு எழுதப்பட்ட நூல்தான் இணையமும் இனியதமிழும். புற அமைப்பிலேயே நூலின் கணம் தெரிந்துவிடுகிறது. உள் அமைப்பில் இன்னும் கனமான செய்திகள் தரப்பெற்றுள்ளன.
இணைய வரலாற்றை அறிமுகம் செய்வதாக முதல்கட்டுரை அமைகிறது. இக்கட்டுரையில் உலக அளவில், இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் இணைய வரலாறுகள் அலசப்படுகின்றன. தேவையான பல அடிப்படை செய்திகளை இக்கட்டுரை அள்ளி வழங்குகிறது. இரண்டாவது கட்டுரையும், முன்றாவது கட்டுரையும் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி ஆவனமாக்குகின்ற முயற்சியை உடையனவாகும். இதனோடு தமிழ் இணைய நூலகங்கள் பற்றிய தகவல்களும் இணைக்கப் பெற்றுள்ளன. கூடவே படங்களும் தரப்பெற்றிருப்பது படிப்பவர்க்கு இணையத்துடன் உறவாடுவதுபோலவே இருக்கிறது.
யுனிகோடு ஒருங்குறி இது அதிகமாக புழக்கத்தில் தற்போது உள்ள சொல்லாகும். செம்மொழி மாநாட்டிற்கான கட்டுரை முன்வரைவை ஒருங்குறியில் அனுப்ப வேண்டும் என்ற புதுமையால் இது அதிகமாக தமிழ்ப்பேராசிரியர்களிடம் பேச்சாகி நின்றது. இவ்வொருங்குறியின் இயல்பை ஒரு கட்டுரை விரிவாக்கி உரைக்கிறது.
இணைய இதழ்கள், வலைப்பூக்கள் பற்றிய கட்டுரைகள் தமிழ் இணையப் பயன்பாட்டாளர்களுக்குப் பல தகவல்களை வழங்கும் கட்டுரைகளாகும். மாணவர்களுக்கு பயன்படுவனவாக பின் இரு கட்டுரைகள் உள்ளன. கல்வி சார் இணைய தளங்கள், வேலைவாய்ப்பு இணைய தளங்கள் முதலியன அவையாகும்.
இவ்வாறு பல்முனை நோக்குடையதாக இணையத்தை அறிமுகம் செய்திருக்கும் இந்நூலாசிரியர் மேலும் பல நூல்களைத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளம் எல்லாம் எழுகிறது.
Copyright:thinnai.com 
Friday March 19, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.

கருத்துரையிடுக