சனி, மார்ச் 13, 2010

இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்



லியோ ஜோசப் அவர்களால் மொழிபெயர்க்கப் பெற்ற சிறுகதைத் தொகுப்பின் பெயர் இந்தியமொழிச் சிறுகதைகள் ஆகும். இச்சிறுகதைத் தொகுதி பதினைந்து கதைகளை உள்ளடக்கியது. பன்னிரண்டு மொழிகள் சார்ந்து வெளிவந்த இக்கதைகளை இந்தியன் லிட்டரேச்சர் என்ற இதழ் ஆங்கில இதழ் வழியாக வாசித்து அதன் பின்னர் தமிழில் இக்கதையின் மொழிபெயர்ப்பளார் மொழி பெயர்த்துள்ளார். எனவே இந்திய மணம் கமழும் தொகுதியாக இத்தொகுதி விளங்குகிறது.
ஆசிரியரிடம் நடத்திய உரையாடலின் படி இத்தொகுதியில் மொத்தம் நான்கு கதைகள் பெண்களால் படைக்கப் பெற்றுள்ளன. அவற்றின் தலைப்புகளும், அதனை எழுதிய படைப்பாளர்கள் பெயரும் பின்வருமாறு.
சந்தியா ராகம் மால்டி ஜோஷி (ராஜஸ்தானி), வெறுமை உஷாபாண்டே(இமாசலம்) , ஐனகி மைனி மகந்தா(அஸ்ஸாமி), மறுக்கப்பட்ட பாதை சரஸ்வதி அம்மா (மலையாளம்) என்பன அவையாகும்.
சந்தியா ராகம் என்ற கதை வெளிநாடுகளில் இருக்கும் மகன்கள், மகள் போன்றோரால் அரவணைக்கப்படாத அல்லது இவளின் அரவணைப்பு வேண்டாத ஒரு வயதான முதாட்டி பற்றிய கதை ஆகும். இம்முதாட்டியின் கணவன் பெரிய செல்வந்தர் என்றாலும் இவர் இறந்தபின் மகன்கள், மகள் வெளிநாடு சென்றுவிட்ட காரணத்தால் தனிமையை இம்முதாட்டி சந்திக்கிறாள். இதனால் வெறுப்படைந்த இம்முதாட்டி தன் வீட்டைத் தங்கி உண்ணும் விருந்தினர்க்கு வாடகைக்கு விடுகிறாள். இது பணத்திற்காக அல்ல. அவளின் தனிமையை இனிமையாக்க. இவளிடம் வளர்ந்தவர்கள் இவளைப் பார்க்க வரும்பொழுது தன்மக்கள் பார்க்க வருவதாக அவள் எண்ணி மகிழ்கிறாள்.
வெறுமைஒரு ஐ. ஏ. எஸ் முடித்த திருமணம் வேண்டாத பெண் அதிகாரியின் வீட்டிற்கு விருந்தினராக கணவனுடன் வரும் தோழி பற்றிய கதை இது. இப்பெண் அதிகாரி தன் விருப்பத்தை தன் வாழ்வில் பல இடங்களில் காட்டுமளவிற்குச் செல்வச் செழிப்புடனும், அதிகாரத்துடன் வாழ்கிறாள். அதில் அவளுக்கு பெருமை உண்டு. இருப்பினும் குளிரான மாலை நேரத்தில் கணவனுடன் நெருக்கத்தோடு இருக்கும் தோழியின் நிலை அவளுக்கு அவளின் வெறுமையை உணர்த்தி விடுகிறது.
ஜானகி என்ற கதை இராவணனின் அரண்மனை விட்டு வந்த சீதையின் நிலை பற்றிய கதையாகும். இக்கதையில் இராமன் சமுகக் காரணங்களைக் காட்டிச் சீதையைத் தான் ஏற்கமுடியாது என்கிறான். இதனால் அவளை இலட்சுமணன்,விபீடணன், சுக்ரீவன் போன்றோரில் யாரையாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுகிறான். இது பொறுக்க முடியாத சீதை நெருப்பில் குளிக்கிறாள். இதுவே இக்கதையின் மையமாகும்.
மறுக்கப்பட்ட பாதையில் மருத்துவப் படிப்பு படித்த ஒரு பெண்மணி தன்னை வெறுத்து ஏமாற்றி விட்டுச் சென்ற முன்னாள் காதலனைச் சந்திக்கும் சூழலை உடையது. இந்த முன்னாள் காதலன் வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்துத் தற்போது தள்ளாத வயதில் இருக்கிறார். இவரின் மனைவி தீராத நோயால் அவதிப்படுகிறாள். இந்நேரத்தில் உதவி செய்வதற்காக ஒரு திருமணத்திற்கு அவ்வூருக்கு வந்த பெண் மருத்துவர் இவர்தம் வீட்டிற்கு வருகிறார். வந்து நோய் முற்றிய பழையகாதலனின் மனைவியை குணமடையச் செய்ய முயற்சிகள் எடுக்கிறாள். இவளிடம் தன் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றத்தைச் சொல்லவேண்டாம் என்று நினைத்த பழைய காதலன் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறான். ஆனால் இவள் தனக்கு அவரால் மறுக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட நன்மைகளை எண்ணிய வண்ணம் விடைபெறுகிறாள்.
இந்நான்கு கதைகளும் பெண்களால் படைக்கப்பட்ட கதைகள் ஆகும். இந்நான்கு கதைகளிலும் முதாட்டி, ஐ.ஏ.எஸ் படித்த பெண் அதிகாரி, ஜானகி, மறுக்கப்பட்ட பாதையைப் பெற்ற மருத்துவர் ஆகிய பெண்களை மையமிட்டே கதை படைக்கப் பெற்றுள்ளது.
குறிப்பாக இப்பெண்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விடை தரவேண்டிய நிலையில் ஆண்கள் படைக்கப் பெற்றுள்ளனர்.
வயதான முதாட்டிக்கு மகன்கள் என்ற ஆண்சார்புடைய தரப்பினால் பாதிக்கப் பெற்றுள்ளாள். இவளுக்கு பெறாத பிள்ளைகள் மகன்களாக இருந்து விடை தருகின்றனர்.
ஐ.ஏ. எஸ் அதிகாரிக்கு மணவாழ்க்கை ஏற்படா நிலைக்கு அவள் பக்கத்தில் காரணம் இருந்தாலும் ஆண்வயப்பட்ட இந்திய வாழ்க்கையில் ஆணுக்கும் முக்கிய காரணம் உண்டு. தக்க ஆண் அவளை மணம் முடிக்க முன்வரஇயலாத சூழலில் அவள் தோழியின் நெருக்கமான வாழ்வைப் பார்த்து வெறுமையை உணர்கிறாள் என்றாலும் அவள் ஆண்சமுகத்தைப் புறம்பாகவே பார்ப்பதாகக் கொள்ளலாம்.
ஜானகி கதை முற்றிலும் இராமன் இழைத்த அநியாத்தைத் தட்டிக் கேட்கும் நிலை உடையதாக உள்ளது.
மறுக்கப்பட்ட பாதை தன்னை மறுத்த காதலனை வாட்டும் பாத்திரமாக பெண் டாக்டர் படைக்கப் பெற்றுள்ளார்.
மேலும் இந்தியச் சமுதாயத்தில் பெண்கள் உயர் பதவிகளில் வந்துவிட்டார்கள் என்பதன் அடையாளமாகவும் இக்கதைகளின் பெண் மாந்தர்கள் விளங்குகின்றனர்.
இவ்வகையில் இந்தியப் பெண் எழுத்துக்களில் பெண்தன்மை என்பது ஊடாடிக் கொண்டுள்ளது என்பதை உணரமுடிகின்றது. இதனை மேலும் வலியுறுத்த கதைகளில் உள்ள உரையாடல்களை முன்வைப்பது சிறப்பாகும்.
"நேஹா ஆண்ட்டியிடம் விடை பெற்ற போது ஆண்ட்டி நேஹாவிற்கு ஒரு சந்தேரி சேலையும், ஒரு ஜோடி மிஞ்சியும், வளையல்களும் கொடுத்து அனுப்பினாள். ஆண்ட்டி நேஹாவைக் கட்டித் தழுவினாள். நேஹா ஆண்ட்டியைத் தலைவணங்கிக் கும்பிட்டாள்'' ( சந்தியாராகம்) என்ற பகுதியில் ஒரு பெண் மற்றொரு பெண்ணிற்குச் செய்யும் மரியாதையில் பெண்கள் விரும்பும் பொருட்கள் இடம் பெற்றிருப்பது பெண்மையமுடையதாகும்.
"அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து ஒரு பெஞ்ச் மீது அமர்ந்தார்கள். அந்த பெஞ்ச் ஆராதனா நிற்கும் ஜன்னலுக்குக் கீழே உள்ளது என்று அவர்களுக்குத் தெரியாது. ஏப்ரல் மாதத் தென்றல், ஜொலிக்கின்ற நிலவொளி, ஒரு மென்மையான சிரிப்புச் சத்தம், காதில் விழாத முணுமுணுப்புடன் மிக இலேசாக ஊடுறுவியது. .. ஆராதனாவிற்கு நீண்ட நேரமாகச் சலிப்பூட்டிய மேத்தாவின் கலையிழந்த அந்தக் கிழடு தட்டிப்போன முகம் இப்போது மாற்றம் பெற்றிருந்தது. அது கலையாக ஜீவன் உள்ளதாக புதுப் பொலிவடைந்ததாகத் தெரிந்தது. அன்பால் மின்னுகிற ஓர் இளைய இதயம்... '' (வெறுமை)
இதில் மிக நளினமாக பெண் மையலை இந்தப் பெண்படைப்பாளர் வெளியிட்டுள்ளார். பெண் அடையும் காதல் இன்பத்தைப் பெண்ணே பார்த்து ரசிக்கும் இந்த மனப்போக்கு ஆண்படைப்பு மையத்தில் இருந்து வேறுபட்டது என்பதைப் படிக்கும் போதே உணரமுடிகின்றது.
இராவணனின் பாதுகாப்பில் பல வருடங்கள் நீ இருந்ததால் எல்லாரும் உன்னுடைய கற்பில் சந்தேகப் படுவார்கள். பொது மக்களின் எதிர்மறையான எண்ணங்களால் ஏற்படுகின்ற பயமே உன்னை நான் மீண்டும் ஏற்றுக் கொள்வதில் தடங்கலாக உள்ளது....
உன் எதில்கால் நன்மைக்காவே இது என் அறிவுரை வார்த்தை. லட்சுமணன், விபீடணன், சுக்ரீவன் ஆகிய இவர்களில் யாராவது ஒருவனை உன் கணவனாகத் தேர்ந்தெடுத்துக்கொள் (ஜானகி) என்ற இராம ஆணின் சொற்களில் உள்ள சந்தேக உணர்ச்சி படிப்பவருக்கு எளிதில் புரிபடுகிறது. மக்கள் என்பது ஆண் சார்ந்த இனத்தை மட்டுமே குறிக்கும் ஒன்றொழிப் பொதுச்சொல்லாக இங்குப்பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் சந்தேகப்படலாம். பெண்களுமா இந்தச் சந்தேகத்தைப் படுவார்கள். அவர்களாவது உண்மையை உணரமாட்டார்களா? பெண்டீரும் உண்டுகொல் எனக் கண்ணகி கேட்பது போன்று பெண்டீர் சீதைக்குச் சாதகமாகப் பேசமாட்டார்களா... இதற்கு இடம் தராமல் இராம வார்த்தை ஆண்சார்புடன் இயங்குகின்றன. இவை பெண்ணுக்கு எதிராகக் கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தின் உண்மைநிலையை உரைக்கும் வார்த்தைகள் ஆகும்.
"நானும் என்போன்ற பெண்களும் நடந்து வந்த பாதையை மக்கள் மறுக்கப்பட்ட பாதை என்கிறார்கள். என்னுடைய நோக்கத்தை ஒத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அப்படிப்பட்ட மக்களை எதிர்த்துப் போராட நான் விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே. அது இயல்பு தானே''( மறுக்கப்பட்ட பாதை) என்ற டாக்டர் விசாலாட்சியின் மறுக்கப்பட்ட இதயம் தன்னை ஏற்கப்படுவதை விரும்புகிறது.
இவ்வகையில் காணும் போது பெண்களின் எழுத்துக்கள் பெண்ணுலகின் உண்மைப்போக்கினை அறியச் செய்வன. அவற்றின் கணம் கண்டு உணரத்தக்கது. குறித்து நோக்கிப் பெண்ணிய அணுகுமுறையோடு அவற்றை அணுகினால் அவை மேலும் பெண்ணுலகிற்குப் பெருமை சேர்க்கும் என்பது தெரியவருகிறது.


--------------------------------------------------------

பயன்பட்ட நூல்
1. லியோ ஜோசப், இந்திய மொழிச்சிறுகதைகள், ஸ்ரீ செண்பகா
பதிப்பகம், சென்னை, 2010

கருத்துகள் இல்லை: