வெள்ளி, ஆகஸ்ட் 07, 2009

சேக்கிழார் விருது பெற்ற முனைவர் பழ. முத்தப்பன்.


முனைவர் பழ. முத்தப்பன் நாற்பதாண்டு காலமாக தமிழ்ப்பணியாற்றி வருபவர். இவரின் பணியால் மயிலம் தமிழ்க்கல்லூரி, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரி ஆகியன மேம்பாடு அடைந்தன. தற்போது திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வரும் இவர் சிறந்த பேச்சாளர். சைவ சிந்தாந்தச் சாத்திர வல்லுநர். பல நூல்களின் ஆசிரியர். சிந்து இலக்கியம், முப்பொருள் இயல்பு, கோவை இலக்கியம், திருமுறைகளில் அகக்கோட்பாடு, சிவஞான முனிவரின் அந்தாதி இலக்கியங்கள் போன்ற இவர் படைத்த நூல்கள். இவர் உரை வரைந்த திருக்கோவையார் முன்று பதிப்புக்களை இதுவரை கண்டுள்ளது. மேலும் இவர் காஞ்சி புராணம், சைவ சித்தாந்த சாத்திரங்கள் அனைத்திற்கும் உரை கண்டுள்ளார். அவை உடன் வெளிவர உள்ளன.
இவர் தமிழாகரர், சிந்தாந்தச் செம்மணி, சிவஞானச் செம்மல், பட்டிமன்றமாமணி, மேகலை மாமணி போன்ற பல பட்டங்களைத் தேர்ந்த அறிஞர்கள் வழியாக வளமையுடன் பெற்றவர். இப்பட்டியலில் சேக்கிழார் விருதும் சேர்கிறது.
இவரின் பணியைப் பாராட்டி இவ்வாண்டு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சிறந்த பேராசிரியருக்கான சேக்கிழார் விருதினை அளித்து இவரைப் பெருமை படுத்தியுள்ளது. இவ்விருது பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன், இராசம்மாள் அறக்கட்டளை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இவ்வறக்கட்டளையை நிறுவியோர் அமெரிக்காவைச் சார்ந்த அன்புச் செல்வி அப்புலிங்கம் ஆவார்.
இவ்விருது ஐயாயிரம் ருபாயையும், பாராட்டுச் சான்றினையும் உள்ளடக்கியதாகும். இதனை 24.07.2009 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை இராணி சீதை மன்ற அரங்கில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் நீதியரசர் பொன். பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்கள்.
சாத்திர நூற்புலமைக்கும், சேக்கிழார் நெறி பரப்புதலுக்குமாக வழங்கப் பெற்ற இவ்விருது பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.

கருத்துகள் இல்லை: