செவ்வாய், செப்டம்பர் 22, 2009

மண்மணம் கமழும் புதுக்கோட்டை நவராத்திரி விழா
























































கால் தூக்கி ஆடும் சிவனின் கீழே மத்தளம் வாசிக்கும் பிரம்மாவும்- தாளம் போடும் பெருமாளும் கொண்டிருக்கும் சிற்பம் (படம்2.)










தசரதனைத் தூக்கியபடி காட்சி தரும் கைகேயியின் சிற்பம் (படம்ஒன்று )
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருகோகர்ணம் கோயில் சரித்திரப் புகழ் வாய்ந்த திருக்கோயில் ஆகும். அக்கோயிலில் உள்ள பிரகதாம்பாள் என்ற அம்மன் புதுக்கோட்டை மன்னர்களால் பெரிதும் வணங்கப் பெற்றுள்ளாள். இவ்வம்மனின் தாசனாக ஒரு மன்னர் விளங்கியுள்ளார். அக்காலம் முதலே நவராத்திரி விழாக்கள் சிறப்புடன் இங்கு நடைபெற்று வந்துள்ளன.
இதன் தொடர்பாக கலைஞர்கள் பரிசளிக்கப் பெற்றுப் பாராட்டப் பெற்றுள்ளனர்.இது குறித்து உ.வே.சாமிநாதையரே ஒரு குறிப்பினை தன் கட்டுரை நூலில் எழுதியுள்ளார். தொடர்ந்து அரச விழாவாக நடைபெற்று வந்த நவராத்திரி விழா மெல்ல அதன் பொலிவை இழக்கத் தொடங்கியது.
தற்போது இழந்த பெருமையை மீட்டு எடுக்கும் வண்ணமாக பலரது முயற்சியால் நவராத்திரி விழாக்கள் கலைவிழாக்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கு புதுக்கோட்டை மன்னர் பரம்பரையினரும்- கோயில் நிர்வாக அதிகாரிகளும், நல்லுள்ளங்களும் உதவி வருகின்றனர்.
இங்கு கொலு வைக்கப் பெற்றுள்ளது. இக்கொலு மண்டபம் பல நல்ல கலைச் சிற்பங்களுடன் கூடிய மண்டபமாக விளங்குகின்றது. இதிலுள்ள பல சிற்பங்கள் கண்டு ரசிக்கத்தக்கன. குறிப்பாக தசரதனைத் தூக்கியபடி காட்சி தரும் கைகேயியின் சிற்பம் காணத்தக்கது. சம்பரா அசுரப்போரில் தசரச சக்கரவர்த்தி வெற்றிப்பெறப் போகும் நேரத்தில் அவரின் தேர் அச்சாணி முறிந்து விட அந்நேரத்தில் கைகேயி காத்து நிற்கிறாள். இதனை உள்வாங்கி இச்சிற்பம்செய்யப்பட்டுள்ளது. (படம்1)
அதுபோல கால் தூக்கி ஆடும் சிவனின் கீழே மத்தளம் வாசிக்கும் பிரம்மாவும்- தாளம் போடும் பெருமாளும் கொண்டிருக்கும் குழுச் சிற்பமும் கவனிக்கத்தக்கது. (படம்2.)
இவ்வாறு பல சிற்பங்களுடன் கூடிய இம்மண்டபத்தில் கொலு வைக்கப் பெற்றுள்ளது. இக்கொலுவில் புதுக்கோட்டை கலாச்சாரத்தினை உணர்த்துகின்ற பல பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் சாயலைப் பார்த்தால் எவை போலும் இல்லாமல் தனிப் பாணியில் அவை இருப்பது புரியும். அவற்றின் சாயல் புதுக்கோட்டை மண்ணைப் பிரதிபலிப்பதாக உள்ளது. சிலவே காணப்படும் இப்பொம்மைகள் நன்றாகப் பராமரிக்கப் பெற்றால் இன்னும் பல ஆண்டுகளுக்குப் புதுக்கோட்டை பெருமை நிலைத்துநிற்கும்.
மூன்றாம்நாளில் செய்யப்பட்ட அலங்காரமும் உங்களின் பார்வைக்கு
இவற்றோடு கோகர்ணேசுவரின் தோற்றமும், குடைவரையில் உள்ள கணபதி, கங்கை சூடிய பெருமானின் தோற்றமும் உடன் உங்கள் கண்களுக்கு விருந்தாகக் காட்சிதருகின்றன.

கருத்துகள் இல்லை: