"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து''
என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. முருகனின் ஆயுதமாக மட்டும் வேல் கருதப்பட்டிருக்குமாயின் அதற்கென தனி வழிபாட்டு மரபுகள் ஏற்பட்டிருக்க முடியாது . அதற்கு மேலும், அதாவது முருகனே வேலாக, வேலே முருகனாக எண்ணி வழிபடும் மரபு தோன்றிய போது தான் அதற்கென தனி வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. சங்க காலம் தொட்டு வளர்ந்து வந்துள்ள இவ்வழிபாட்டு முறைகளை ஆராய்கின்றபோது சங்ககாலம் தொட்டு இன்று வரை மக்கள் வேலின் பால் தெய்வநம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளமையை உணரமுடிகின்றது.
"வெறியயர்தல்''
சங்ககாலத்தில் `வேல்' வழிபாட்டுச் சடங்குகள் `வெறியயர்தல்' என்ற பெயரில் நிகழந்துள்ளன. அழகும் இளமையும் கொண்ட மகளிர் நலம் குன்றின காலத்து, அவர்களனி பெற்றோர் வேலனை வெறியாட அழைத்துள்ளனர் . இவ்வாறு அவன் வெறியாட அழைக்கப்படும் போது வேலன் கையில் வேல் கொண்டு வருகின்றான். வழிகள் சில சந்திக்கும் இடத்தில் வெய்மணலைப் பரப்பி, செந்நெல் வெண்பொறிகளைத் தூவி, பந்தர் அமைத்து, பூபல பெய்து, பசுந்தழை, காந்தள், பூக்குலைகளைச் சுற்றிக்கட்டி, வேலை மையமாக வேலன் நடுகின்றான். பிறகு முருகன் பெயரை வாழ்த்தி, முருகன் தம்மேல் எழுந்ததாகக் கொண்டு, வேல் எடுத்து ஆடுகின்றான். இவ்வாறு அவன் ஆடுகையில் மணிகள், இயம்பங்கள் ஒலிக்கின்றன. மகளிர் குறிஞ்சி பாட, தூபம் எங்கும் புகைகிறது.
"பொய்யா மரபினூர் முதுவேலன்
கழங்கு மெய்ப்படுத்துக் கன்னந்தூக்கி
முருகென மொழியுமாயின் ''
என்ற பாடலின் படி வேலன் கழங்கு இட்டு. கணக்கு பார்த்து நடந்தது. நடப்பது, நடக்கப் போவது உரைப்பதும் உண்டு. "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் '' என இவனின் சிறப்பைத் தொல்காப்பியம் (பொருள் :60) குறிப்பிடும். இவ்வாறு வெறியாடும் திறம் குறுந்தொகை, நற்றினை அகநாநூறு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் உள்ளன.
சிலம்பில் வேலுக்கென தனிக் கோட்டம் அமைக்கப் பெற்றதற்கான சான்று உள்ளது. (9. 1 ) மேலும் இவ்வெறியயர்தல் பற்றி,
`நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்
மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும் வேலன்'
(சிலம்பு. குன்றக்குரவை . க. க )
இறைவனை நல்லாய் இது நகையாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற் றன்ளை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வரு சென்றாள்'
(சிலம்பு குன்றக் குரவை .
என்றவாறு சிலம்பு பேசுகின்றது. மே
(சிலம்பு குன்றக் குரவை .
என்றவாறு சிலம்பு பேசுகின்றது. மேலும் வேலைப் பாராட்டும் வண்ணமுமாக,
`உரையினி மாதராய் உண்கள் சிவப்ப
புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்
உரவு நீர் மாகொன்ற வேலேந்தி ஏந்திக்
குரவைத் தொடுத்தொன்று பாடுகம் வா தோழி '
(சிலம்பு குன்றக்குரவை . 6)
என்று புகழந்து பாடி : சூரமா தடிந்த வேல்,
பிணிமுகம் கொண்டவுணர் பீடழியும்
வண்ணம் செய்த வேல், கிரி தடிந்த வேல்
என வேலை மட்டுமே நான்கு பாடல்களில் வாழ்த்துமாறு படைக்கின்றார் இளங்கோவடிகள்.
வேல் பெற்ற வரலாறு
கந்தபுராணம் வேல் பெற்ற வரலாற்றை விரித்துக் கூறி வேலின் பெருமை பேசுகின்றது.
"ஆயதற் பின்னர் ஏவின் முதண்டத்
தைம் பெரும் பூதமும் அடுவது
ஏயபல் உயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர் மேல் விடுக்கினும் அவர் தம்
மாயிரும் திறலும் வரங்களும் சிந்தி,
மன்னுயிர் உண்பது எப்படைக்கும்
நாயகம் ஆவது ஒரு தனிச் சுடர் வேல்
நல்கியே மதலைகைக் கொடுத்தான் ''
(கந்தபுராணம் . விடைபெறுபடலம் 38)
சிவபெருமான் சூரர்களை அழிக்க, முருகனுக்குத் தந்தது வேல். அது எப்படைக்கும் நாயகம் ஆவது என்று கந்தபுராணம் பேசுவது வேலின் தனித்த சிறப்பை முன் வைப்பதாக உள்ளது. மேலும் இற்றைக்காலத்தில் சிக்கல் போன்ற பல திருத்தலங்களில் வேல் வழங்கும் விழா சிறப்புற நடைபெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது,
வேல் குறித்த பக்திப்பனுவல்கள்''
வேல், புராணப்பின்னணி, சங்க இலக்கிய வழிபாட்டுப் பின்னணி பெற்றிருப்பினும், அருணகிரியார் காலத்தில் தான் தனி பெரும் நிலையை அஃதடைகின்றது. வேல் வகுப்பு , வேல் வாங்கு வகுப்பு, வேல்விருத்தம் போன்றன அருணகிரியாரால் `வேலை' முன்னிறுத்தி பாடப்பட்ட பனுவல்கள் ஆகும். இவை காலப்போக்கில், வேலை தனிப்பெருந் தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்த்துகின்றன.
"கண்டு குலையும் பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சமுத அங்கருணை வேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே''
(வேல் விருத்தம் . 4)
இப்பாடல் வரிகள் வேல் உணர்வுக்குச் சான்றாகின்றன. மேலும் மெய்ஞ்ஞான நிலைக்கு, `அயனுமாலும் முறையிட அசுரல் கோடி துகளெழ விடு மெய்ஞ் ஞான அயிலோனே (திருப்புகழ் . 317) என வேலை அருணகிரி நாதர் உணர்த்திப் பாடுகின்றார்.
எனவே வேல் இவ்வாறு பல புலவர் களாலும், முருகனுக்கு ஈடான புகழைப் பெருமளவிற்குச் சிறப்பு பெற்றுள்ளது என்ற தெளியமுடிகின்றது.
"வெல்லுகின்ற தன்மை உடையது ஆதலின் வேல் என்ற பெயர் உண்டாயிற்று . அந்தவேல் ஞான சக்தியின் வடிவத்தைப் பெற்றது''
"முருகனுக்கு ஆறுமுகம் இருப்பது போல வேலுக்கும் ஆறுபடைகள் உண்டு. முருகப் பெருமான் திருவுருவத்தையும், அவன்பால் சார்ந்திருக்கும் வேலையும் தரிசிக்கும் போது கவனித்தால், அது அவன் அடியையும் கரத்தையும் தொட்டுக் கொண்டு முடியுமளவும் செல்வதைக் காணலாம் ''
"இலங்கையில் (கதிர்காமம் ) சில கோயில்கள் மலேசியாவில் பத்துமலைக் கோயில், கோலாலம்பூர் கந்தசாமி கோயில் ஆகியவற்றில் வேலே நிறுவப்பெற்று வழிபடப் பெறுதல் முருகனும் வேலும் ஒன்றே என்ற சிந்தனையையும், முருகனுக்குக் கொடுக்கும் மதிப்பையே வேலுக்கும் கொடுத்தார்கள் என்ற உண்மையையும் புலப்படுத்துகின்றன.''
என்ற அறிஞர்களின் கருத்துக்களின் படி வேல் தனியொரு தெய்வமாக விளங்கி இக்காலத்தில் சிறப்புப் பெற்றுள்ளது என்பதை உணரலாம்.
மேலைச்சிவபுரி வேல் வழிபாடு
சங்ககால வெறியாட்டு நடைமுறை, அதன் பின் எழுந்த வேல் தனித்த தெய்வமாக ஆக்கப் பெற்ற நடைமுறை இரண்டும் இன்னமும் தமிழ்நாட்டின் சிலபகுதிகளில் நடைபெற்று வருகின்றன. "பழநியில் நடைபெறும் தைப்பூசத்திற்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நெருக்குப்பை, கண்டனூர், காரைக்குடி, தேவக்கோடடை முதலிய இடங்களிலிருந்து , பாதயாத்திரை மேற்கொண்ட செய்தியை காப்புகளுடன் சென்ற செய்தியை கி. பி. 1788 ல் தோன்றிய செப்பேட்டுப் பட்டயங்கள் நன்கு தூளக்குகின்றன'' என்ற கருத்து மேற்சொன்னதற்குச் சான்றாகும்.
இவ்வாறு தைப்பூசத்திற்குச் செல்லும் வேல்களுள் ஒன்றாகச் சிவபுரி வேலும் விளங்குகின்றது.
மேலைச்சிவபுரி வேல் வரலாற்றுப் பின்னணி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் தாலுகா, பொன்னமராவதி 3. கி. மீ தொலைவில் இருப்பது மேலைச்சிவபுரி ஆகும். இஃது சைவம் தமிழ் இரண்டையும் வளர்க்கும் சன்மார்க்கசபை, கணேசர் செந்தமிழக் கல்லூரி இரண்டையும் கொண்டு தமிழுலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கிறது. அதனுடன் சுப்பையா கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் சக்தி வேலாயுத சுவாமி என்ற வேல் வழிபடு கடவுளாக உள்ளது. இக்கோயில் எழுப்பப்படக் காரணம் சிறப்பிற்குரியதாகும்.
மேலைச்சிவபுரிக்கு அருகில் 2. கி. மீ தொலைவில் உள்ள பிடாரம்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு தலைமுறைகளுக்கு முன்னால் முத்தப்ப செட்டியார் என்பவர் வசித்து வந்தார். இவருடனே , நாடடக்கோட்டை செட்டியார் மரபினர் சிலரும் வசித்துவந்தனர். அப்போது மேலைச்சிவபுரி ஊரார்கள் செட்டியார்கள் இல்லாததால் . முத்தப்ப செட்டியாரை மேலைச்சிவபுரிக்கு அழைத்து வந்தனர்.
முத்தப்பசெட்டியார் சிறந்முருகபக்தர். இவர் வருடம் தோறும் பழனிக்கு மேலைச்சிவப்புரியிலிருந்து, தைமாதம் கார்த்திகை அன்று, காவடிகட்டி பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம், சென்று வந்தபின் தம்வீட்டில் சுக்கிரவாரம் தோறும் முருக பூசனை செய்து திருவிளையாடல்கள் புரிந்து வந்தார். எனவே அவரின் வீடு கோவில் வீடு என்றழைக்கப்பட்டது.
இவரின் திருவிளையாடல் புகழ் பெற்று புதுக்ட்டை மன்னர் தொண்டமான் ராஜா மருதப்பன் அரண்மனை வரை சென்றது. எனவே அரசரும் முத்தப்பச் செட்டியார் இல்லம் வந்து சில அருள் வாக்குகள் கேட்டார். பழனியாண்டவர் அருளால் அவர் சான்ன வாக்குகள் மெய்ம்மையுற , அரசர் செட்டியாருக்கு பொற்சால்வை, மோகரா மாலை, வளைதடி, குத்தீட்டி தந்து வேறென்ன வேண்டும் என்றார். அதற்குச் செட்டியார் தம் கோவில் வீட்டுக்கு ஒரு தாமிர வேல் சாஸ்திரப்படி செய்து தரவேண்டும் என்றார். அரசரும் செய்து தந்து, பழனி அன்னதான மடத்தில் வேலை நிறுத்திப் பூசை செய்யவும் வேண்டிய உத்தரவுகளைச் செய்தார். இவ்வாறு முத்தப்பச் செட்டியார் காவடி கட்டிப் புறப்பட்டு, வேல் எடுத்துச் செல்லும் முறை ஆண்டுதொறும் இன்றுவரை நடைபெற்று வருகின்றது.
மேலைச்சிவபுரியில் உள்ள சுப்பையா கோவில் `வேல்' வழிபாட்டு முறையைக் கொண்டிருப்பினும் அது, முருகனுக்கு ஈடான பெருமை பெற்றதாகும். ஒருமுறை புதுக்கோட்டை மன்னர் பரம்பரையில் வந்த மருதப்பருக்குப் பிள்ளை இல்லாத குறையை இவ்வேல் போக்கியது என்ற வரலாறும் வழங்கப் பெறுவது இக்கருத்திற்குச் சான்று பயப்பதாகும்.
இவ்வாறு முத்தப்ப செட்டியார் செய்த பணியை, அவரின் பரம்பரையாக வந்த முன்று கரைகாரர்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். முரு. ஆறு . ஆறுமுகம் செட்டியார், முருகுமணி, ஆளு. சுப. ஆறுமுகம் , ஆறுமுருகப்பன் , ஆறு, சுப்பபையா, ஆறு. கதிரேசன், ஆறு. அண்ணாமலை, ஆறு. முத்தப்பன், ஆறு . சண்முகம், சுப. முருகப்ப செட்டியார், முரு. பழனியப்பன், முரு. ஆறுமுகம், சுப. பழனியப்பன் , பழ. சுப்பிரமணியன், பழ. முருகப்பன், மு. அண்ணாமலைச் செட்டியார், அண. சுப்பிரமணியம், அண. முத்துராமன், பழ. ஆதிமுலம் போன்றோர் இப்போது இப்பணியைப் புரிந்து வருகின்றனர்.
சுப்பையா கோவில் அமைப்பு:
சுப்பையா கோவில் என்று இக்கோவில் அமைக்கப்பட்டாலும் கோவிலுக்கான முழு அமைப்பையும் பெறவில்லை. ஏனென்றால் இது பங்காளிகள் செய்து கொள்ளும் படைப்பு வீடு. அதாவது ஒரு தெய்வாம்சம் நிரம்பிய வீடாகும். என்றாலும் முன் மண்டபம் , கோபுரம் போன்ற அமைப்புடன் கூடிய உள் மண்டபம் என்ற அமைப்போடு விளங்குகிறது.
உள் மண்டபத்தில் மரக் கேடகத்துள், புதுக்கோட்டை மன்னர் தந்த தாமிரவேல் ஒன்றும், சிறுவேல் ஒன்றும் உள்ளன. இது தவிர, இடும்பன் ஆயுதமான இரும்புத்தடி ஒன்றும் உள்ளது.
இவற்றுள், மன்னர் தந்த வேல் பதினைந்து நாட்கள் பழனி நடையாத்திரையின் போது எடுத்துச் செல்லப்படுகின்றது. சிறுவேல், பெரியவேல் பழனி செல்லும் காலத்தில் கோவில் தெய்வமாக வணங்கப்பட்டு வருகின்றது. இச்சிறுவேல் முன்னொரு காலத்தில் பங்குனி உத்திரத்தின் போது குன்றக்குடி கோவிலுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நடைமுறை இப்போது பின்பற்றப் படவில்லை மேலும் இச்சிறுவேல் மன்னர் தந்த வேலுக்கு முன்னதாக முத்தப்பச் செட்டியாரால் பழனிக்குக் கொண்டு செல்லப் பட்டிருக்கக் கூடும் என்ற ஒரு செய்தியும் நிலவுகின்றது. இடும்பனுக்கு உள்ள தடிக்கு அபிஷேகம், தீபாராதனை ஆகியன செய்யப்படுகின்றன. மற்றவை ஏதும் இல்லை.
வழிபாடு :
படைப்பு வீடு என்பதால் மற்ற கோவில்கள் போலத் தினசரி வழிபாடுகள் கட்டாயப் படுத்தப் படவில்லை . வாரந்தோறும் வரும் வெள்ளி, மாதம்தோறும் வரும் கார்த்திகை, தினங்களில் அபிஷேகம் , தீபாராதனை முதலியன செய்யப் படுகின்றன. இவை தவிர நெய்வேத்தியம் போன்றனவும் கட்டாயப் படுத்தப்படவில்லை. விரும்பி எவர் எது தரினும் படைக்கப்பட்டுப் பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகின்றது.
பொங்கல் தினத்தில் சர்க்கரைப் பொங்கல் வைக்கப் பட்டுப் படையல் செய்யப் படுகின்றது. சிவன் ராத்திரியின போது ஆறுகாலப் பூஜை நடைபெறுகின்றது.
சிறப்பு வழிபாடு:
ஆண்டு தோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, நடையாத்திரை சிறப்புற நடை பெற்று வருகின்றது. நடையாத்திரையை வழி நடத்திச் செல்வது வேலே ஆகும் . எவ்வூரினரும் மேலைச்சிவபுரியைக் கடந்து நடை பயணம் பழனிக்கு மேற்கொள்வாராயின் இக்கோயிலுக்கு வந்து விபூதி பெற்றே செல்வர். எனவே தைப்பூச நடையாத்திரையின் போது சிறப்பு வழிபாடுகள் இயற்றப் படுகின்றன.
பெரிய கார்த்திகை (கார்த்திகை தீபம்) அன்று கோவில் வீட்டு வேல் கொண்டு செல்லும் சாமியாடி மாலையிட்டுக் கொள்கின்றார். தூய விரதம் மேற்கொண்டு அன்று முதல் தினசரி அபிஷேகம் , பஜனை செய்கின்றார். அவருடன் கோவில் வீட்டுப் பங்காளிகள் , ஊர்மக்கள் இணைந்து பக்திப் பாடல்கள் இசைக்கிறார்கள்.
பாதயாத்திரை விழா: தைப்பூசத்திற்கு 5 நாள் முன்னதாக வரும் கார்த்திகை அன்று பாத யாத்திரை தொடங்கப் பெறுகின்றது. அக்கார்த்திகை அன்று, படைப்பு வீடு, கழுவிச் சுத்தம் செய்யப் பெற்று, மாவிலை, விளக்குகள், பூக்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப் பெறுகின்றது. பின்னர் காவடி கட்டுபவர்கள் அங்கு காவடி கட்டுகிறார்கள் சிலர் வீட்டிவிருந்தே காவடியுடன் வந்து இங்கு சேர்கின்றனர். மதியம் அன்னதானம் நடைபெறுகிறது . அன்னதானம் படைப்பு வீட்டைச் சார்ந்த திருமண மண்டபத்தில் , பழனி முருகன் படம் முன்பு படையலிடப்பட்டுப் படைக்கப் படுகின்றது. இரவு நடையாத்திரை தொடங்கப் பெறுகின்றது. வேலை எடுத்துக் கொண்டு சாமியாடிவர , மேளவாத்தியம். கொட்டு, வேட்டு, மணி,அரோகரா கோஷம் முழங்க, அன்றைய கட்டளை பங்காளியர் பரிவட்டம் கொண்ட, வழியனுப்ப வர, ஊர் எல்லை வரை மக்கள் சென்று வழியனுப்புவர் , வேல் முன்னும் காவடிகள் பின்னும் செல்ல நடையாத்திரை தொடக்கம் பெறுகிறது. வழியில் உள்ள பிரான் மலைச் சிவன் கோவிலில் பானக பூஜை , செய்வித்துச் சமுத்திராபட்டியை வேல் அடையும். மாலை வேலுக்கு அபிஷேகம், ஆராதனை , காவடிக்கு அன்னதானப் பூஜை , செய்து பின் குயவபட்டியை வேல் மற்றும் காவடி அடையும், அதன் பின் அதே முறைப்படி அபிஷேக, ஆராதனை, அன்னதானம் தொடர , செம்மடைப்பட்டி அடைவர், பின் முன்முறைகள் தொடர, குழந்தை வடிவேலன் சன்னதியில் பானக்க பூஜை முடிந்து, காலை 7 மணிக்குக் கடுக்காய்பாறை செல்லும்.
கடுக்காய் பாறையில் வேல் மட்டும் குன்னக்குடி வேலாயுத (வேல்) சுவாமியுடன் இணைந்து பழனி அன்னதான மடம் செல்லும். காவடிக்கும் பாத யாத்திரையினரும் வேல் போனபின் பிரிந்து இடும்பன் குணம் அடைவர். பிறகு தீர்த்தமாடி இடும்பருக்குப் பூஜை செய்து. இடும்பர் மலை தென்பாகத்தில் குன்னக்குடி, மேலைச்சிவபுரிக் காவடிகளுக்கு அன்னதான பூஜை நடைபெறும்.
பழனி அன்னதான மடத்திலிருந்து காவடிகளுக்கு வரவேற்பு தரப்படும்.
அன்னதான மடம் வழிபாடு:
மடத்தில் அன்னதானமட பார்வதி அம்மாள் இரும்பு வேலாயுதம், தேவகோட்டை நகரத்தார் சொர்ணரத்தின வேலாயுதம், குன்றக்குடி மடத்து வெள்ளி வேலாயுதம், மேலைச்சிவபுரி தாமிர வேலாயுதம் ஆகியவை ஆறுகால் சவுக்கையில் ஒன்றாய் வைக்கப்பட்டு புனர்பூசம் முதல் ஐந்து நாட்களுக்கு அபிஷேகம் , பூஜை , ஆராதனை நடைபெறும்.
ஆறாம்நாள் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பழனி தேவஸ்தானத்தில் இந்தத் தொடர் நிகழ்ச்சி காலங்காலாமாய் நிகழ்ந்து வருவதால் இவர்களின் காவடிக்குக் கருவறை சென்று பூஜிக்க தனிச் சிறப்பு அனுமதி அளிக்கப் படுகிறது. பிறகு மலைத்தீபம் ஏழாம் நாள் பார்க்கப்பட்டு, அன்னதான மடத்தில் பரிவட்டம் கட்டும் விழா நடை பெறுகிறது. இதில் முறைகாரர்கள், சாமியாடிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலைச்சிவபுரி நகரத்தார் மட்டும் , பூசத்திற்கு நான்கு நாள் கழித்து ஒரு பஞ்சாமிர்த அபிஷேகம் சிறப்புடன் செய்கின்றனர். இதற்கும் தனித்த அனுமதி உள்ளது.
இவை முடித்தபின் வேல் திரும்பும் விழா நடைபெறுகிறது. காவடிகளும் வேலுடன் திரும்புகின்றன. காவடி எடுக்க வேண்டிக் கொண்டவர்கள் இதில் கலந்து கொள்ளாவிட்டாலும், காவடிகள் மீண்டும் நடைபயணமாகவே கொண்டுவருவத கட்டயமாக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் , சமுத்திரபெட்டி, ஆகிய இடங்களில் வேல் நிறுத்தம் பெற்று பூஜை கொள்கிறது. பிறகு சாமியாடிச் செட்டியாரிடம் விபூதிப்பிரசாதம், மரியாதை பெற்று, மேலைச்சிவபுரிக்கு அருகில் உள்ள எடுத்தலங்கண்மாய்க்கு வேல் வர, மீண்டும் ஊர் மக்கள் பங்காளிகள் வரவேற்பு நிகழ வேல் தன்னிடம் சார்கிறது.
இவ்வாறு பதினைந்து நாள் திருவிழா சீரும் சிறப்புமாக லட்சம் மக்களைத் தாண்டி நடையாத்திரை விழா சென்று கொண்டுள்ளது. ஏறக்குறைய வேலின் பயணம் 270 கிலோமீட்டர்களாக இருக்கலாம். வேல் போகும் வழியில், பலவித திண்பண்டங்கள், நீர் ,மோர், இளநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வேல் புறப்படும் போதும், வரும் போதும் குறிகளும் கேட்கப்படுவதுண்டு, வேலுக்கு அபிஷேகம் மட்டுமே, அன்னதான பூஜை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவடி கட்ட சில வரையறைகள்
காவடி அழகுற தண்டு இணைக்கப் பட்ட , வெல்வெட் துணிகளால் , மயிலிறகால் அழகு செய்யப்பட்ட சக்கரை வைத்துக் கட்டப் பெறுகின்றது. இச் சக்கரையே பிறகு பழனியில் அபிஷேகப் பொருளாகின்றது. இதற்கென கோவில் வீட்டில் 11ரு தந்து பதிவு பெற வேண்டும். தூய விரதம் பெரிய கார்த்திகையிலிருந்து காக்கப்பட வேண்டும். துக்க வீடு, புலால் வீடு, முதலியன தவிர்க்கப்படுகின்றன. பச்சை நிற வேட்டிகள், மணி மாலைகள் அணியப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே காவடிக்கு உரியவர்கள் . பெண்கள் வீட்ட விலக்கு நேரங்களில் விரதக்காரர்களுக்கு சமைப்பதில்லை. கண்ணில் எதிர்படுவதுமில்லை. காவடி செல்லும் போதும் திரம்பி வரும் போதும் நடையிலேயே வரவேண்டும். குளித்த பின்பே காவடியைத் தொட உரிமை உண்டு . நடுவில் இயற்கை உபாதைகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையாயின் மீண்டும் குளிக்க வேண்டும்.
வேல் சாமியாடி தேசிகர்
இவர்கள் ல்லுப்பட்டியிலிருந்து ஒரு காலத்தில் பூஜைக்காக அழைத்து வரப் பெற்றிருக்கின்றனர். ஏறக்குறைய புதலைமுறைகளாக பூஜைபுரிவதுடன் இவர்களே தற்போது வேலையும் சுமந்து நடைபயணம் மேற்கொள்கின்றனர். தகவாளியின் நினைவுக்கு எட்டிய வரை, சுப்பையா 30 வருடம், செம்பு லிங்கம் 30 வருடம், ராமையா 3வருடம் , மாணிக்கம் (தற்போது ) 25 வருடம் வேல் கொண்டு செல்லும் பணியில் உள்ளனர். இவர்களுக்கும் மேற்சொன்ன விரதம் பொருந்தும், மேலும் செட்டியார் இனத்தாரிடமிருந்து இவர்கள் எவ்வாற வேல் கொண்டு செல்லும் பணியைப் பெற்றனர் என்பத நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களுக்கென சில கைமாறுகள் செய்யப் பெறுகின்றன. இருப்பினும் நடை யாத்திரையின் போது மக்கள் வழங்கும் தட்சிணை இவர்களுக்கானதாகக் கொள்ளப்படுகின்றது.
வேல் வழிபாட்டில் சிலவரை முறைகள்
வேல் நடையாத்திரை சென்றிருக்கும் போது மங்கல விழாக்கள் நிகழ்த்தப்படுவதில்லை. இறப்பு நிகழ்ந்தால் கொட்டு கொட்டப்படுவதில்லை. வேலின் மேற்புறம் வெள்ளி , தங்க. முருகனின் கழுத்தளவு அங்கி சார்த்தப் பெற்று வருகின்றது. இஃது வேலையே முருகனாக வழிபடும் வழிபாட்டின் பாற்பட்டதாகும்.
மேலும் குழந்தை பிறந்தால் கரும்புகழிகள் கொண்டு தொட்டிச் சீலை வழி தொட்டி கட்டப்படுதல் உண்டு. கொப்பனாபட்டி ஊரார் சிலர் குழந்தை பிறந்ததும் மொட்டைஅடித்துப் பேர் வைக்க இங்கு வருகின்றனர்.
எண்ணெய் தீபம் ஏற்ற, மற்ற செலவுகளுக்கென பங்காளிகள் முறைப்படி ஆண்டாண்டு பணம் தருகின்றனர் . என்றாலும் வரும் வருமானம் குறித்த கணக்கு வழக்ககள் கேட்டுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறாக பழனி ஆண்டவரை, மேலைச்சிவபுரி சார்ந்த மக்கள் வேல் வடிவில் கண்டு வணங்குகின்றனர். வேலே முருகனாக வழிபடும் இம்முறை சங்ககாலந் தொட்ட இன்று வரை நடைபெற்று வந்திருப்பது எண்ண எண்ண இனிப்பதாகும். மேலும் வெறியாடல் முறை போன்ற வழிபாட்டு முறையும் இங்கு சுட்டப்பட்டுள்ளது. முருகவழியாடு இன்றும் பரவலாக, வழக்கில் இருந்து வருவது சிற்ப்பிற்குரிய ஒன்றாகும்.
1. ஔவை. சு. துரை சாமிப்பிள்ளை. (உ. ஆ ) , ஐங்குறுநூறு. அ . ப. க. சிதம்பரம் 1957 , ப. 57 முதல் 77 வரையுள் செய்திகளின் சுருக்கம்.
2. கி. வ. ஜகந்நாதன் , கந்தவேள் கதையமுகம் கந்தவேள் பதிப்பகம். சென்னை. 94 . ப. 183.
3. கி. வ. ஜகந்நாதன் (உரை . ஆ) அநுபூதி விளக்கம் , அமுத நிலையம். சென்ளை . 1967. ப. 53.
4. ப. அருணாசலம். முருகன் வழிபாடு. வேலும் மயிலும் . தமிழ் ஔ இதழ் 11. 197374 பக். 3. 4.
5. டாக்டர். சுப. திண்ணப்பன் (க. ஆ) தைப்பூசம், அருள் மிகு தெண்டாயுதபாணி கோயில் மஹா கும்பாபிஷேக மலர், சிங்கப்பூர், 1996. ப. 53 .
6. சுப்பையா கோவில் பங்காளிகள் மகேஸ்வர பூஜைமலர், சுப்பையா கோவில் வரலாறு . மேலைச்சிவபுரி 1982 பக் இல்லை . (கட்டுரையின் சுருக்கம்)
7. தகவளாளி : செ. பழனியப்பன், வயது . 43. ஆண் மளிகைக் கடை வைத்துள்ளார். வேல் பூஜை செய்யும் குடுபத்தவர்.
muppalam2006@gmail.com
2 கருத்துகள்:
மிக நன்று. கட்டுரை மிக அருமை. நல்வாழ்த்துக்கள்.
அன்பன்:
ந.மோகனசுந்தரம். வேந்தன்பட்டி(திருநெல்வேலி)
plnmohanasundaram@yahoo.com
thank u for ur response
கருத்துரையிடுக