செவ்வாய், ஜூலை 21, 2009

கல்வி தரும் சகலகலாவல்லி மாலை


துயரம் நீங்க வேண்டுமானால் `சுந்தரகாண்டம்' வாசியுங்கள். மகப்பேறு வேண்டுமானால் "கண்காட்டும் நூதலானும்'' என்ற சம்பந்தர் பாடலை பாடுங்கள். செல்வம் பெறவேண்டுமானால் கண்ணதாசன் படைத்த `பொன்மழை' படியுங்கள். கல்வி பெருக வேண்டுமானால் குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையைப் படியுங்கள் என்ற பாராயணமுறை, மரபாக இன்று வரை தமிழகத்தில் பின்பற்றப் பெறுகின்றது.
இறைவனிடம் , இவற்றைத் தந்தருளவேண்டும் என மேற்கண்டபாடல்கள் முறையிடுகின்றன் அதனால் விரும்பிய செல்வங்களைத் தரும் வல்லமையை அப்பாடல்கள் பெற்றுவிடுகின்றன. இவற்றைப் பாடுவதன்முலம் பயனும் கிட்டுகின்றது பக்தியும் மேலோங்குகின்றது. இன்றைக்குக் `கற்றதனால் ஆயபயன்' என்றமுறை, சற்று மாறுபட்டு `பயனுக்காகக் கற்றல்' என்பது நிகழத் தொடங்கிவிட்டது. ஆகவே பயன்கருதி பல பனுவல்கள் பாராயணம் செய்யப்பெறுகின்றன.
`சகலகலாவல்லி மாலை' என்பது பத்துபாடல்கள் கொண்டபதிகம் ஆகும். `இந்துஸ்தானி ' மொழியை அறிந்து கொள்வதற்காக நாமகளை வேண்டி இப்பாடல்களைக் குமரகுருபரர் இயற்றினார். இப்பத்துப்பாடல்களைப் பாடிமுடித்ததும், சரஸ்வதிதேவி அருளால் குமரகுருபரருக்கு கற்காமலே இந்துஸ்தானமொழிப்புலமை வாய்த்தது என்பது கர்ணபரம்பரைக் கதையாகும்.
இப்பத்துப்பாடல்களில் நாமகளிடம் குமரகுருபரர் முறையான, செழுமையான கல்வியைத் தந்தருள வேண்டுகின்றார். கலைகளுக்கு அரசியான சரஸ்வதிதேவியை, சகலகலை வல்லவளாக நமக்கு அவர் அறிமுகப்படுத்தி, அவளிடம் கலைகளைப்பெற நம்மை ஆற்றுப்படுத்துகின்றார். இப்பத்துப்பாடல்களைப் பாடுவதால் கல்வி பெருகுமா?, இப்பாடல்களில் என்ன சொல்லி குமரகுருபரர் வேண்டுகின்றார்? என்ற கேள்விகளுக்கு விடைகாண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
1. வெள்ளையுள்ளம்
சகலகலாவல்லி மாலையில் இடம்பெற்றுள்ள பத்துப்பாடல்களும் படிப்படியாக கல்விவளம் சேர்க்கும் வகையில் இயற்றப் பெற்றுள்ளன. கற்பவனுக்குக் கொலை, களவு, குழப்பம், வஞ்சனை , பொய், கரவு போன்ற குற்றங்கள் அனுகா வெள்ளையுள்ளம் தேவை என முதல்பாடல் எடுத்துரைக்கின்றது.
"வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க, என் வெள்ளையுள்ளத்
தண்டாமரைக்குத் தகாதுகொலோ...''(1)
`சரஸ்வதிதேவியே, வெண்தாமரையில் நிற்கும் உன் மெல்லிய பாதங்கள், எந்தன் வெள்ளையுள்ளம் எனும் தாமரையில் நிற்கக் கூடாதா?' என மறைமுகமாக கற்பவரின் வெள்ளையுள்ளம் குறித்து இப்பாடல் எடுத்துரைக்கின்றது. உள்ளத்தூய்மை இருந்தால்தானே கற்கும் கல்வியிலும் தூய்மை இருக்கமுடியும். உள்ளம் தீயதன் வழிப்பட்டால் காப்பியம் முதலானவற்றைப் படிக்கும்போது, தீயவர்களின் செயல்கள் அல்லவா உள்ளத்தில் இடம்பிடிக்கும் அத்தீயவர்கள் சென்ற வழியில் அல்லவா மனம் செல்ல நினைக்கும். எனவே தீயதில்லா உள்ளம் வேண்டும் என குமரகுருபரர் இப்பாடலில் கருதியுள்ளார்.
கற்கவரும் மாணவசமுதாயம் நல்ல உள்ளத்துடன் கல்விநிலையங்களுக்கு வரவேண்டும் என எண்ணும் அவர் வழிப்படி நடந்தால் இற்றைக்கு மாணவ, மாணவியர்க்கு எதிராக நடக்கும் `கேலிச்சிக்கல்கள்' இல்லாமல் போகும் என்பது உறுதி.
2. நாற்பாடல் புனையும் திறம்
வெள்ளையுள்ளத்தில் நாமகள் வந்து நின்றுவிட்டால் எவரும் படிப்பாளராக, படைப்பாளாராக மாறிவிடலாம். படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், மாணவர்கள் படைக்கும் ஆற்றலைப் பெறவேண்டும் என குமரகுருபரர் நினைக்கின்றார்.
"நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்வாய்...''(2)
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்குவகைத் தமிழ்ப்பாக்கள் புனையும் அளவிற்கு தமிழறிவு பெற வேண்டும் தமிழ் மொழியைக் கற்பது மட்டுமல்லாது, படைக்கவும் திறம் பெற்றிருக்க வேண்டும் என்ற குமரகுருபரரின் தமிழ்க்கல்வி, தமிழ்நாட்டிற்கு என்றைக்கு ஏற்படுமோ? என்ற ஏக்கம் இப்பாடலைப் படிக்கும்போது எற்படுகின்றது. உள்ளத்தூய்மைக்குப்பிறகு, தாய்மொழிக்கல்விக்கு அவர் தந்துள்ள முதன்மைஇடம் இக்கால கல்வியாளர்கள் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். தூய்மையான உள்ளத்தில் தாய்மொழிக்கல்விதான் உடன்புக முடியும் என்பதைக் குமரகுருபரர் உணர்ந்து கொண்டு, மேற்கண்ட கல்வி முறையைக் காட்டியுள்ளார்.
3. செந்தமிழ்க்கடல் குளித்தல்
தமிழில் பாடல் புனையும்திறம் பெறுவதோடு மட்டும் குடரகுருபரரின் எண்ணம் நிறைவு பெறவில்லை. தமிழ் என்பது கடல். அதில் குளித்து,முழ்கி, முத்துக்களை அள்ளி வர அனைவரையும் அவர் வேண்டுகின்றார்.
"அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆதார்ந்து உன் அருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ...''(3)
என்ற அவரின் தமிழ்கடல் கல்விவிருப்பம் தமிழ்ப்படிப்போருக்கு தேவையான விருப்பமாகும்.
4. பிறதுறைக்கல்வி.
தமிழ்க்கல்வியை முதன்மையாகக் காட்டிய குமரகுருபரர், பிறதுறைக்கல்வியைப் புறக்கணிக்கவில்லை.
"தூக்கும் பனுவலத் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைத்தோய்,
வாக்கும் பெருப் பணித்தருள்வாய், வட நூற்கடலுந்,
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும், தொண்டர்செந் நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே.''(4)
இப்பாடலில் `துறைதோய்ந்த கல்வி' என வருவதால் பல்துறைக்கல்விகளைக் கற்கவும் குமரகுருபரர் வழிகாட்டியுள்ளார். அறிவியல், புவியியல், வரலாறு, கணிதம், வங்கியியல், ஆளுமையியல், கணினியியல் எனப் பல்துறைகளாகக் கல்விஉலகம் தற்போது பரந்து விரிந்து நிற்கின்றது. இவ்வாறு கல்வி வளருமென அப்போதே உணர்ந்திருந்த குமரகுருபரர், அவற்றைக் கற்கவும் வழிகாட்டியுள்ளமை அவரின் எதிர்காலஅறிவிற்குச் சான்றாக உள்ளது. மேலும் இப்பல்துறைக்கல்விகளையும் வழங்குபவள் சகலகலாவல்லி என அவர் இப்பாடலுள் முடிந்துள்ளார்.
வடநூற்கடலும், செழுந்தமிழ்ச் செல்வமும் ஒவ்வொருவருக்கும் கல்வியாகக் கிடைக்கவேண்டும் என்பது இப்பாடலின் வழியாகக் கிடைக்கும் மற்றொரு கருத்தாகும். இவ்வெண்ணம் அவரின் பிறமொழிகாழ்ப்பின்மையை விளங்குவதாக உள்ளது.
`வடநூற்கடலும், தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும், தொண்டர் செந்நாவினின்று காக்கும் கருணைக் கடலே சகலகலாவல்லியே' என்ற இவ்வரி இவர் இந்துஸ்தானப் புலமையைக் கலைமகளிடம் இருந்து பெற்றதற்கான அகச்சான்றாக உள்ளது.
5. பண், பரதக்கல்வி
தமிழ்க்கல்வி, பிறதுறைக்கல்வி கற்றுத்தேர்ந்தபின், அதற்கு அடுத்த நிலையில், இசை, நாட்டிய நாடக அறிவு பெற வேண்டும் என மாணவர்களை குமரகுருபரர் வேண்டுகின்றார்.
`பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிதெய்தநல்லாய்'(6)
என்ற குமரகுருபரின் கல்வி முறை, `காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்லபாட்டு' என பாரதியாலும் பின்பற்றப்பெற்றுள்ளமை இங்கு குறிக்கத்தக்கது. பண், பரதம், நாடகம் முதலானவை மனித உள்ளங்களை மகிழ்விக்கும் அழகுக்கலைகளாகும். இதனைக் கற்பதன்முலம் மனிதமனம் இன்பம் கொள்ளுகின்றது என்பதால் இக்கல்வியையும் கல்விமுறையுள் ஒன்றாகக் காட்டியுள்ளார் குமரகுருபரர். தற்காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள `கற்றலில் இனிமைப்பள்ளிகளின் பாடத்திட்டங்கள்' பாட்டும், நடனமும் கலந்தவை என்பது இங்கு எண்ணத்தக்கது.
6. கல்வியும் பயனும்
படிக்கின்ற கல்வி பயன் நல்க வேண்டும். பயன்நல்காக்கல்வி பயனற்றதாகும்.
`பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனும் என்பால்
எட்டும்படி நின் கடைக்கண்நல்காய்'(7)
என கல்விப்பயன் நல்கத் தேவியைக் குமரகுருபரர் வேண்டுகின்றார். பண், பாட்டு என இசைகல்வி கற்றபின்னால், அவவிசைப்பாடல் தரும் பொருள், அப்பொருள்தரும் பயன் ஆகியனவற்றை உணர்ந்து, அதன்படி நடக்க வேண்டும் என்ற இவரின் கூற்று `கற்றபின் நிற்க அதற்குத்தக' என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கியமாக உள்ளது. மேலும் பாட்டு, பொருள், பயன் அனைத்தும் தருபவள் அவளே என முழுஅடைக்கலாமாக, நாமகளைப் பணிவதாகவும் இப்பாடல் விளங்குகின்றது.
7. அவதானம், விற்பன்னம்
இதுவரை படித்தல், படைத்தல் என்ற கல்விப்படிநிலைகளைக் காட்டிய குமரகுருபரர் எட்டாம் பாடலில் அதற்கடுத்த கல்விப் படிநிலையை எடுத்துரைக்கின்றார். படித்தவற்றைத் தக்க சான்றுகளுடன் சொற்பொழிவாக எடுத்துரைத்தல், சொற்பொழிவாற்றும்பொழுது ஏற்படும் பல்வகை நிகழ்வுகளை அவதானித்தல் முதலானவை முத்தகல்விப்படி நிலைகள் எனக் குமரகுருபரர் கொள்கின்றார்.
சொற்பொழிவாற்றல் என்ற படிநிலைக்கு, மனப்பாடம் செய்தல், ஏற்றஇறக்கத்துடன் பேசுதல், மேற்கோள்களைக்கையாளல், இசையுடன் பாடுதல் போன்ற பல்வகைத்திறமைகள் வேண்டும். அவதானம் எனும் போது, பதின்கவனகம், பதினெனெண் கவனகம் நிகழ்த்தும்போது, முறையே பத்து, பதினெட்டு கவனஈர்ப்பு அறிவு தேவைப்படும். எனவே இவை இரண்டும் செய்ய வல்லார் கற்றாருள் சிறந்தவர் ஆகின்றார். அவரே கற்பிக்க உகந்தவர் என குமரகுருபரர் முடிகின்றார்.
"சொல்விற் பனமும், அவதானமும்,கல்வி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய் ''(8)
என்ற இத்தகுதிகள் உடையவரே ஆசிரியர் ஆகும் நிலைபெறுவர்.
8. மெய்ஞானக்கல்வி
மேற்கூறிய அறியாமை அகற்றும் கல்வியைக் கற்றபின்னர், அதனோடு மட்டும் நின்றுவிடாது, மெஞ்ஞானக்கல்வி பெறவேண்டும் என உயர்வழிகாட்டுகின்றார் குமரகுருபரர்.
`சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன'(9)
என்ற அவரின் கூற்று `வாலறிவனைத் தொழுவதே' கல்வியின்பயன் எனக் காட்டுவதாக உள்ளது. சொல், பொருள் அறிந்தாலும் அதனுளே மறைந்துகிடக்கும் உயிரான மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன ? என அறிய வேண்டுவதே ஒவ்வொருவரின் சிறந்த கல்வி என்ற குமரகுருபரரின் கல்விமுறை, ஆன்மக்கல்வி முறையாகும். மனக்கோணல் நீக்கும் நூற்கல்வியை முதலில் கற்று, அதன்பின் ஆன்மக்கூன் நீக்கும் ஞானக்கல்வி அடையக்கூறும் குமரகுருபரர் கல்விநெறி உயிர்களை உய்வடையச் செய்யும் நன்னெறி என்பதில் ஐயமில்லை.
9. பயன்
இப்பத்துப்பாடல்களைப் படிப்பதால் ஏற்படும் பணனையும், நூற்கல்வி, ஞானக்கல்வி, கற்றுத்தேர்ந்தால் வரும்பயனையும் இறுதிப்பாடலில் குமரகுருபரர் காட்டியுள்ளார். பதிகத்திருக்கடைக்காப்பு முறைப்படி பயன் கூறுவது தேவை என்பதால் இப்பாட்டு இன்றியமையாததாகின்றது.
"மண்கண்ட வெண்குடைக்கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவில் பணியச் செய்வாய் ''(10)
என முழுமைக்கல்வி கற்றவரை, எந்நிலமன்னரும் வணங்கிநிற்பர் எனப் பயன் கூறுகின்றார் குமரகுருபரர்.
இம்மாலையின்முலம் உள்ளத்தூய்மை கொண்டு, தமிழ்க்கல்வி, பிறதுறைக்கல்வி, வடமொழிக்கல்வி தேர்ந்து, பண் நாட்டியம் பயின்று, அவதானம் விற்பன்னம் முதலான அறிவு மிக்குடைச் செயல்களில் ஈடுபட்டு நூற்கல்வி நிறைவுபெறவேண்டும் என்பது தெரியவருகின்றது. இவ்வரிய வழியைக்கூறுவதன் முலம் இப்பாடல்களைப்படிப்பதால், இப்பாடல்கள் வழி நடப்பதால் நூற்கல்வி பெருகும் என்பது தெளிவு மேலும் ஒவ்வொரு பாடலும் கல்வியை வேண்டி கலைமகளிடம் முறையிடுவதாக அமைவதால், வேண்டுதல் இறைவியால் நிவேற்றப்படும் என்பதால் கல்விபெருகும் என்பது உறுதி இப்பதிகத்தைப்பாடிக் குமரகுருபரர் வடமொழி அறிவு பெற்றார் என்பதாலும், சிறுவயதில் அவர் தெய்வத்தன்மையால் பேசும் சக்தி பெற்றார் என்பதாலும், அவரின் சொற்கள் தெய்வத்தன்மை பொருந்தியனவாக இருக்கும் என்பதாலும் இப்பதிகத்தைப் பாராயணம் செய்வோர் கல்விப்பெருமை பெறுவர் என்பதில் ஐயமில்லை.
நூற்கல்வி பெற்ற பின்னால் ஞானக்கல்வி பெறுவது ஒவ்வொரு உயிர்க்கும் தேவையான உய்யும்முறை எனக்காட்டி, அது உடையோர் எவராலும் (மன்னராலும்) மதிக்கப் பெறுவர் என கருதும் குமரகுருபரர் நெறிப்படி அனைத்து உயிர்களும் முழுமைக்கல்வியை நோக்கிப் பயணித்தால் உலகம் நன்மைபெறுவது உறுதி.

கருத்துகள் இல்லை: