வெள்ளி, டிசம்பர் 26, 2008

தந்தை- மகள் - தமிழ் உறவு


தந்தை, மகன் என்ற நிலையில் தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்கள் பலர். தந்தை-மகள் என்ற நிலையில் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் மிகக் குறைவானவர்களே. அவர்களுள் முன்நிற்கும் தந்தை மறைமலை அடிகள். மகள் நீலாம்பிகை அம்மையார்.
மறைமலை அடிகளார்- மகள் நீலாம்பிகைக்கு ஆசானாகவும் இருந்துத் தமிழ் கற்பித்துள்ளார். மகள் நீலாம்பிகை தான் படைத்த நூல்களில் தந்தையாரின் நூற்களில் கண்ட கருத்துகளை மேற்கோள்களாகக் காட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும் தம் செய்நன்றியைத் தெரிவித்துள்ளார். இத்தகைய அளவில் தமிழையும் வளர்த்து, தலைமுறையையும் வளர்த்த பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு.
இவ்வம்மையார் முப்பெண்மணிகளின்வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மு்வர், வடசொல் தமிழ் அகரவரிசை(சிற்றகராதி), ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (1952) போன்ற பல நூல்களை எழுதியப் பெருமையாளர் ஆவார்.
இவருடைய கட்டுரை நூல்களின் வழியாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதாம் ஆண்டு முதல் ஐம்பதாம் ஆண்டு வரையான பெண்சமூகக் கட்டமைப்புக் குறித்த பல கருத்துக்களைப் பெற முடிகின்றது. இவர் தம் கட்டுரைகளைக் கருத்துக்கள் தெரிவிக்கும் களமாக மட்டும் அமைத்துக் கொள்ளாமல் அதனோடு தற்கால வாழ்க்கை நிலை, தற்காலப் பெண்களின் நிலை போன்றவைகளையும் இணைத்துக் கோடிட்டுக் காட்டும் சமூகச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் சாதனமாகவும் கையாண்டுள்ளார்.
பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்ற கட்டுரை நூலில் கண்ணப்பர் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரை மிக நீண்ட அளவில் காணப்படுகிறது. இக்கட்டுரையில் முற்பிறவி, பின்பிறவிகள் போன்ற பல கருத்துக்கள் பற்றிய செய்திகள் ஆங்கில நூல்கள், மற்றும் எடுத்துக்காட்டு நிகழ்வுகள் போன்றனவற்றைச் சான்றுகளாகக் கொண்டு எடுத்துரைக்கப் பெறுகிறது.மேலும் இவர் தன் குடும்பத்தாருடன் கண்ணப்பர் வாழ்ந்த இடமான காளத்தி மலைக்குச் சென்று வந்த பயணம் பற்றியும் குறிப்பிடப் படுகிறது. இதனைப் படிப்பவர்கள் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காளத்தி மலையை, அதன் செழுமையை இவரின் எழுத்துக்கள் வாயிலாக அறிந்து உணரமுடியும். மிக அருமையான பயணக் கட்டுரையாக இது விளங்குகிறது.
இதுபோலவே முப்பெண்மணிகளின் வரலாறு என்ற கட்டுரை நூலில் இவர் தேர்ந்த பெண்ணியக் கட்டுரையாளராகவும் இருந்துள்ளார் என்பது தெரியவருகின்றது. பெரும்பாலும் செல்வர்கள் வீட்டிலுள்ள நம் பெண்மக்கள் ஈர நெங்சமில்லாதவர்களாயும், தக்கவர்க்குப் பொருந்திய வழியில் அறஞ் செய்ய அறியாதவர்களாயும் இருக்கின்றனர். இன்னும் இவர்கள் ஆடை. அணிகலன்களிற் பெருவிருப்பு வைத்து அவைகளால் தம்மை ஒப்பனை செய்து கொண்டு, ஒத்த பெண்களோடு ஓயாமல் வீண்பேச்சுப் பேசுவதிலேயே காலம் கழித்து வருகின்றனர். இவர்கள் கடவுளையும் அவனடியார்களையும் கனவிலும் நினையார். ஆனால் (காரைக்கால்) அம்மையாரோ இயற்கையிலேயே தவப்பிறவியினராகலின் தாம் குடும்பத்தில் ஈடுபட்டிருந்தும் நேரங் கிடைத்த போதெல்லாம் அறிவு நூல்கள் பல கற்பதிலும், இறைவனை உருகி வணங்குவதிலும் தக்கார்க்கு அறஞ் செய்வதிலும் கருத்தூன்றி நின்றார்(பக். 15) என்ற பகுதியில் தற்காலப் பெண்களின் நிலையையும் அம்மையாரின் வாழ்வையும் ஒப்பு நோக்கியிருப்பது கருதத்தக்கது. இன்னமும் இக்காலப் பெண்களிடமும் ஆடை, அணிகலன்கள் குறித்த பெருவிருப்பு அதிகமாகிக் கொண்டே வருகின்றதே அன்றி குறைந்தபாடில்லை.
இவ்வகையில் பல பெண்ணியக் கருத்துக்களின் தோற்றுவாயாக இவ்வம்மையார் தம் படைப்புகளின் வழியாக விளங்கியுள்ளார் இவரின் வடசொல் தமிழ் அகரவரிசை என்ற நு}ல் தனித்தமிழ் இயக்கத்தினருக்கு ஒரு கைவிளக்கு. மேலும் பெண் படைத்த அகராதி என்ற அளவில் பெயர் சொல்லத்தக்கதாகவும் இது விளங்குகிறது.
இவரின் தனித்தமிழ் கட்டுரைகள் என்ற நு}ல் தந்தைப் பெரியாரின் பார்வைக்குச் சென்று அவரின் பாராட்டையும் பெற்றதாகும். இந்நூலில் தனித்தமிழில் எழுதப் பெற்ற பதிமு்ன்று கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை தனித்தமிழுக்குப் பெருமை சேர்ப்பன. பெரியாருக்குப் பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவரும் இவரே என்பதும் குறிக்கத்தக்கது.
இவரின் படைப்புகள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக வெளியிடப் பெற்றன. மறுபதிப்பும் ஆகியுள்ளன. இவரின் படைப்புகள் ஒரே தொகுப்பாக வரவேண்டும். இத்தொகுப்பு தமிழுக்கு தமிழ் உறவிற்குப் பெருமை சேர்ப்பன என்பதில் ஐயமில்லை.
கருத்துரையிடுக