வெள்ளி, மே 04, 2007

மன்னர் கல்லூரியின் இலக்கியத் தடம்

மன்னர் கல்லூரியின் இலக்கியத் தடம்
மாட்சிமை தங்கிய மன்னர்கல்லூரிக்குப் பல நினைவுச் செம்மைகள் உண்டு. வானுயர்ந்த செம்மை நிறக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், விளையாட்டுத்திடல், நூலகம், மரங்கள் இவையெல்லாம் கூடி மன்னர் கல்லூரி என்ற பெரும்பொருளை முழுப் பொருளாக்கிக் கொண்டுள்ளன. இக்கல்லூரிக்கு உள்ள பல முகங்களில் இக்கட்டிட, வடிவமைப்பு முகமும் ஒன்று. இக்கல்லூரிக்கு என இன்னும் பல முகங்கள் உண்டு. ஆரியர்களின் பெருமையாலும், மாணவர்களின் குளுமையாலும் பற்பல முகங்களை மன்னர் கல்லூரி கொண்டுள்ளது. அவ்வகையில் சிறப்பான மற்றொரு முகம் அதன் இலக்கிய முகம் ஆகும். இங்குப் பயின்றவர்கள், பாடம் நடத்திய ஆசிரியர்கள், அலுவலர்கள் எனப் பலரும் மன்னர் கல்லூரி இலக்கிய முகம் ஒன்றை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
அகிலன் தெடங்கி கேசவனில் வளர்ந்து மேலும் மேலும் பெருமை பூத்து விளங்குகிறது மன்னர் கல்லூரியின் இலக்கியமுகம். அந்த இலக்கிய முகத்தின் சில வர்ண ஜாலங்களை இக்கட்டுரை எடுத்துரைக்க முயலுகிறது.
ஒரு இலக்கியப் படைப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பல இலக்கணங்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. உருவாகி வருகின்றன. சித்திரப்பாவை படைத்த அகிலன் மன்னர் கல்லூரியின் மாணவர்களுள் ஒருவர். எழிலான படைப்பாளி. ஒரு படைப்பைப் பற்றியும், அதனைப் படைக்கும் படைப்பாளி பற்றியும், அதனை வாசிக்கும் ரசிகன் பற்றியும் தன் சித்திரப்பாவை நாவலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
" அச்சுப் போடுவது எதற்காக என்பதை முதலில் தெரிந்து கொள். அதிகப்படியான ரசிகர்களுக்கு ஏழை எளியவர்களாக இருக்கும் ரசிகர்களுக்குக் கூடப் படம் எட்ட வேண்டும் என்பதற்காகாத்தான் இதைநாம் அச்சுப் போடுகிறோம். படம் முதல் தரமான கலைப்படைப்பா, முன்றாம் தரமான கலைப்படைப்பா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். அச்சில் இந்தக் காலத்தில் குப்பைகளும் வெளிவருகின்றன. தரம்பிரித்து ரசிக்கத் தெரிந்து கொள்ளவேண்டிய பொறுப்பு ரசிகர்களுடையது. காலத்தின் வேகத்தைக் கண்டு பயந்து என்று கலைஞன் தன் போராட்டத்தை நிறுத்துகிறானோ அன்று உலகத்தில் மனிதன் இருக்க மாட்டான். மனித இயந்திரமிருக்கும். இயந்திரங்களின் உதவியால் மனிதர்களைச் சிலர் விலங்குகளாக மாற்ற முற்படும் போது ஏன் கலைஞன் அதே இயந்திரங்களின் துணைகொண்டு மனிதர்களை மனிதர்களாக்கிப் போராடக் கூடாது'' (அகிலன், சித்திரப்பாவை, ப. 453)
இந்தக் கருத்து இலக்கியத்திற்கு உள்ள வலிமையை எடுத்துரைப்பதாக உள்ளது. இவ்வாசகங்கள் மனிதன் இயந்திர வசப்படாமலும், இயந்திரம் மனித வசப்படாமலும் வாழும்போது ஏற்படும் முரண்களைக் காட்டி நிற்கிறது.
மனிதனை மனிதனாக்குகிற குணங்களுள் ஒன்று பணிவு. முனைவர் ஸ்ரீதரன் அப்பணிவு குறித்து ஒரு செய்தியை ஒரு நிகழ்வின் அடிப்படையில் எடுத்துரைக்கிறார்.
" கனிகள் அதிகமுள்ள மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி வளைவதைப்போல் உண்மையாகவே சிறப்புகளை உடையவர்கள் அடக்கமாக இருப்பார்கள். அவ்வாறு இருப்பதும் அவர்களுடைய சிறப்புகளில் ஒன்றாகிவிடுகிறது. ஒரு சமயம் அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனைப் பாதையில் பார்த்த ஒரு நீக்ரோ (கறுப்பினத்தவர் ) தன் தொப்பியை அகற்றி மரியாதை காட்டினார். பதிலுக்கு வாஷிங்டனும் அவ்வாறே செய்தார். அவரது அருகில் இருந்த ஒருவர் `அந்த நீக்ரோ உங்களைவிட அந்தஸ்தில் உயர்ந்தவர் இல்லையே நீங்கள் ஏன் திருப்பி வணங்கினீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு வாஷிங்டன் "நான் திருப்பி வணக்கம் தெரிவிக்காவிடில் பணிவுடைமை என்ற பண்பில் அவர் என்னை விட உயர்ந்தவராகி விடுவார்'' என்று பதிலுரைத்தார். (முனைவர் ஸ்ரீதரன், (இந்தித்துறைப் பேராசிரியராக விளங்கியர்) வாழ்க்கைப் பண்புகள், ப.102)
பணிவு என்னும் அணிகலம் எவ்வளவு பெருமை வாய்ந்தது என்பைத மேற்கண்ட உவமையும், நிகழ்வும் சிறப்பாக விளக்கியுள்ளன. இதுபோன்று தேவையான கதைகளை இணைத்துச் சொல்ல வந்தக் கருத்தைச் சொல்லிச் செல்லும் இனிய நடை ஸ்ரீதரன் அவர்களுடையது.
இலக்கிய நயமும், இனிமையும் கூடி எழுதுவதில் சிறந்தவர் கு. வெ. பாலசுப்பிரமணியம். அவர் தமிழ்த்துறை விரிவரையாளராக இக்கல்லூரியில் பணியாற்றியவர். அவரது சிறுகதையில் இருந்து வரிகள் சில .
"கவிராயர் வீடு என்றால் எல்லாரும் சொல்லுவார்கள். பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் பெயர். சின்னப் பிள்ளை கூட அந்தப் பெயரைச் சொன்னால் உடனே அடையாளம் காட்டிவிடும். தெருவுக்கு ஆனைகட்டித்தெரு என்று பெயர். வேலுச்சாமியைக் கேட்டால் மிக விவரமாகச் சொல்லுவான்.
எங்கத் தாத்தாவோட அப்பா பெரிய புலவரு. பாட்டு கட்டுவாரு. ஒரு சமயம் திருவனந்தபரம் ராஜா ஆனைமேல இந்தத் தெருவல வந்தபோது இறங்கி வரவேண்டும் மகாராஜான்னு ஒரு பாட்டு பாடினாராம். ராஜா கீழே இறங்கி எங்க தாத்தா பாடின பாட்டையெல்லாம் கேட்டு ஏறிவந்த யானையையே பரிசா கொடுத்துட்டுப் போய்ட்டாராம். அதிலேயிருந்து இந்தத் தெருவக்க யானைகட்டித் தெருவன்னு பேரு'' அப்படிம்பான் வேலுச்சாமி (டாக்டர் கு. வே. பாலசுப்பிரமணியம், துண்டு(சிறுகதைத் தெகுதி)) கவிராயர் வீட்டுக்கும், யானைகட்டித் தெருவக்கும் இந்த வரிகள் அழைத்துச் சென்று காட்டிவந்தன. அடுத்து ஒரு பேருந்து நிலையம் காட்சியாக விரிகிறது. இக்காட்சியை அப்படியே அப்பட்டமாக மங்கள்ராஜ் என்ற மங்களா விவரிக்கிறார்.
" நூற்றுக்கணக்கான பஸ்கள் வருவதும் போவதுமாக இருந்தன. வெளியே ரிக்ஷாக்காரர்கள் வரவேற்புக் குரல்கள். தாகத்தைத் தீர்த்து வைக்க இஞ்சிமுரப்பா எனக் கூவிக் கொண்டு செல்லும் குழந்தை வியாபாரிகள், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை என்று கூவித் திரியும் தலைச் சுமை வியாபாரிகள், பெற்றோர் கையிலுள்ள சிறு குழந்தைகள் முன் நின்று கொண்டு வண்ண வண்ண பலூன்களைக் காட்டி அவர்களை அழவைக்கும் பொம்மை வியாபாரிகள், வாங்கிக் கொடுக்க வழியில்லாத தாய்மார்கள், வியாபாரிகள் மீது காட்டமுடியாத கோபத்தைக் குழந்தைகள் மீது காட்டும் பரிதாபக் காட்சிகள் . . .
பஸ்ஸிலே ஏறிக்கோங்க . . நேரமாச்சு என்று குரல் கொடுத்த கண்டக்டரின் ஆணைக்கிணங்கி முண்டியடித்து, சட்டைகள் கசங்க, கால் செருப்பு வார் பிய்ந்திட ஆண், பெண் என்ற வேற்றுமையின்றி படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி முண்டியடித்து ஏறுவதையே தங்கள் நாகரிகமாகக் கொண்ட தமிழின மக்கள் இப்படிக்காட்சி தரும் பேருந்து நிலையம். . .'' (மங்களா, ராகம் தவறிய பாடல்கள் நாவல்,ப. 52)
புதுக்கோட்டைப் பேருந்துநிலையத்தைக் கண்முன் நிறுத்துவதுபோல இந்த வருணனை அமைக்கப் பட்டிருக்கிறது. படைப்பாளர்கள் சாதாரண நிகழ்வகளைக் கூட படைப்புக் கண் கொண்டு நோக்குகிறார்கள் என்பதை இவ்வரிகள் தெளிவு படுத்துகின்றன. தியைரங்கில் படம் பார்த்தச் சின்னக் குழந்தைகளின் அனுபவத்தை மற்றொரு படைப்பாளராகிய ஜெனா எடுத்துரைக்கிறார்.
" ஆயிரம் சிட்டுக் குருவிகளை ஒரே கூண்டுக்குள் அடைத்து வைத்ததைப் போல `ஹா' என்ற இரைச்சல். வெள்ளை, நீலம், பச்சை என்று பல நிற யூனிபார்ம்களில அன்று சில ஆரம்பப் பள்ளிப் பிள்ளைகளுக்கு அந்த தியேட்டரில் விசேஷ பகல் நேரக்காட்சி ஏற்பாடாகி இருந்தது. சலுகைக் கட்டணம். சினிமா படத்தின் பெயர் காந்தி.
டீச்சர்களுக்கு அவரவர்கள் பள்ளிப் பிள்ளைகளை அவரவர் இடத்தில் உட்கார வைப்பதற்குள் விழி பிதுங்கிக் கொண்டிருந்தது. `சைலன்ஸ், சைலன்ஸ்' ஏதோ ஒரு டீச்சரின் கீச்சுக்குரல். `டீச்சர், டீச்சர் எனக்கு இவன் தலை மறைக்குது டீச்சர்' ஏதோ ஒரு வாண்டுவின் முறையீடு.
திரையை விட்டுக் கண்ணை எடுத்தால் எங்கே படம் ஓடிவிடுமோ என்ற பயத்தில் ஸ்கிரீனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன விழிகள் கொள்ளாத அளவிற்குப் பெரிய 70. எம். எம் ஸ்கிரீன். அதில் படம் நிழலாட ஆரம்பித்தபோது அத்தனைக் குழந்தைகளின் மூச்சோட்டமும் மெலிதாயின. (துளிர் (சிறுகதைத் தெகுப்பு), நாரயணி பார்த்த படம் (சிறுகதை) ப.50)
இவ்வாறு கவிராயர் வீடு தெடங்கி பேருந்து நிலையம் அடைந்து அதன்பின் திரைப்பட அரங்கிற்கு அழைத்துச் சென்று ஊரை வலம் சுற்றிக் காண்பிப்பனவாக மன்னர் கல்லூரியின் இலக்கியக் களம் விளங்குகிறது.
ஒரு நல்ல ஆராய்ச்சியாளராக அறியப்பட்ட கேசவன் அவர்களின் சொற்களோடு இக்கட்டுரை நிறைவாகிறது. படைப்பு, படைப்பாளி, அதனை ஆராயும் ஆராய்ச்சியாளன் ஆகிய முவரையும் பற்றிய கருத்தாகப் பின்வரும் கருத்து விரிகிறது.
" இலக்கியம் என்பது ஒரு கலைவடிவம். ஆனால் இது மற்ற கலைவடிவங்களைவிட சிந்தனையோடு அதிகத் தெடர்பு கொண்டது. ஒவ்வெரு கலைவடிவமும் சமுகத்தின் ஏதாவதொரு பிரிவோடு உறவு கொண்டுள்ளது. இது அதன் உள்ளடக்கத்தாலே நிர்ணயிக்கப்படும். இதன் உள்ளடக்கம் கலைஞன் பிரதிநிதித்துவப் படுத்தும் வர்க்கத்தின் கருத்துகளாகவோ அல்லது அதன்மீது செல்வாக்கு கொண்டுள்ள பல்வேறு சமுகப் பிரிவகளின் கருத்துகளாகவோ அமையும். எனவே ஒரு படைப்பாளியையோ அவன் படைப்பின் உள்ளடக்கம், அதன் சாராம்சம் சமுகப் பிரிவகளுடன் கலைஞனின் தெடர்பு சமுக வாழ்வின் மீது படைப்பு செலுத்தும் செல்வாக்கு அதனால் ஏற்படும் விளைவகள் ஆகியவற்றை அப்படைப்புகள் எழுந்த காலத்தை ஒட்டியே ஆராயவேண்டும். ' (கோ. கேசவன், பாரதி இலக்கியம்,இயக்கமும் இலக்கியப் போக்குகளும், ப.1)
இப்படி எடுத்துக் காட்ட எடுத்துக் காட்ட மன்னர்கல்லூரியின் இலக்கியத் தடம் விரியும். என்றாலும் சிலவற்றை மட்டுமே இங்கு சொல்ல முடிந்தது. இன்னும் பலவற்றை இணைத்துச் சொல்லும் இடம் காலம் தேவை நேரும் வரை இந்தக் கட்டுரை மன்னர் கல்லூரியின் இலக்கியத் தடத்தை ஓரளவிற்கு எடுத்துக் காட்டும்.
கருத்துரையிடுக