வெள்ளி, டிசம்பர் 22, 2023

கம்பர் பாடிய கருட துதி

 

கம்பரின்  கருட சேவை

                                                                                    முனைவர் மு.பழனியப்பன்

                                                                                    தமிழ்த்துறைத் தலைவர்

            அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,திருவாடானை, 623407

9442913985

கம்பர் இயற்றிய கம்பராமாயணம் தமிழகத்தின் இடைக்காலத்தில் எழுந்த மிகப்பெரும் செவ்விய படைப்பாகும். தமிழ் வளர்ச்சியில்  கம்பராமாயணம் மிகப் பெரும் சாதனைக் களமாக விளங்குகிறது. தனி ஒரு புலவன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து இயற்றிய காப்பியம் கம்பராமாயணம் என்றால் அது மிகையாகாது. எவர்க்கும் பணிந்து காவியம் பாடாது, தன் பணி காவியம் பாடுவது என தன் வாழ்க்கைப் பாட்டையும் சமாளித்துக்கொண்டு இராமனின் புகழ்பாட்டையும் பாடிய பெரும் புலவன் கம்பன்.

            முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய

உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:-

‘பித்தர் சொன்னவும். பேதையர் சொன்னவும்.

பத்தர் சொன்னவும். பன்னப் பெறுபவோ?’1

என்று அவையடக்கத்தில் கவிஞர்க்கான இலக்கணத்தைத் தருகிறார் கம்பர். கவிஞர்கள் உத்தமர்களாக இருக்கவேண்டும்.இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் அறிந்தவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் பித்தர்கள், பேதையர்கள், பக்தர்கள் ஆகியோரைக் கடந்து மேம்பட்ட நிலையில் கவிதையை நுகர்பவர்களாக இருக்கவேண்டும். இவை கம்பர் கவிஞர்களுக்குத் தரும் வரையறைகள்.

 இவ்வகை உத்தமக் கவிஞர்கள்  ஏற்கும் வகையில் நல்ல  காப்பியம் பாடப்பட வேண்டும் என்ற நிலையில் உத்தமக் காப்பியத்தை, முத்தமிழ்க் காப்பியத்தை, பித்தர்கள், பேதையர்கள், பக்தர்கள் என்ற நிலை தாண்டி உன்னதக் காப்பியமாகக் கம்பராமாயணத்தைக் கம்பர் பாடியுள்ளார். இருப்பினும் இக்கம்பராமாயணத்தில் கம்பர் வெளிப்பட நின்ற இடங்கள் மிக மிகக் குறைவே. 

தனக்கும் தன் மகனுக்கும் நேர்ந்த கொடுமைகளைப் பல இடங்களில் மறைமுகமாகக் கம்பர் பதிவுசெய்துள்ளார். மேலும் தன் சொந்த மண் சார்பான பல பதிவுகளை அவர் மறைமுகமாகக் கம்பராமாயணத்தில் தந்துள்ளார். தான் பிறந்த சோழ நாடு, சோழ நாட்டின் வளத்திற்குக் காரணமான காவிரியாறு, கம்பர் இளைப்பாறிய கதிரா மங்கலம் போன்றவற்றின் குறிப்புகளும் கம்பராமாயணத்தில் இருப்பதாக பாஸ்கரத் தொண்டைமான் கருதுகிறார்.2 இவற்றைச் சரியான கண்ணோட்டத்துடன் கண்டால் மட்டுமே அவை கம்பரின் சொந்த வாழ்க்கை நிகழ்வுகளின் சாயலுடையது என்பதை அறிந்து கொள்ள இயலும்.

கம்பரும் அவர் பிறந்த மண்ணும்

 அகத்தி்யர் தவம் செய்த இடத்தின் மேலே ஊர்த்துவ ரதன் என்பவன் தன் தேரைச் செலுத்த முயல அது அழுந்திய இடம் என்பதால் அந்த இடம் தேரழுந்தூர் என்று அழைக்கப்பட்டது என்று ஒரு செவி வழிக் கதை இங்கு நிலவுகிறது. ‘உபரிசரவசு என்ற ஒரு அரசன். அவனுக்கு ஒரு தேர். அந்தத் தேரோ வானவீதியிலேயே உருண்டு ஓடும் தன்மையுடையது. இந்த அரசன் கீழே பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார் என்பதை மதியாமல் அவர் தலைக்கு மேலே வானவீதியிலே தேரைச் செலுத்தியிருக்கிறான். பெருமாள் சும்மா இருந்தாலும், அவரது பெரிய திருவடியாம் கருடாழ்வார் சும்மா இதைச் சகித்துக் கொண்டிருப்பாரா? தம்முடைய மந்திர சக்தியால் தேரைக் கீழே இழுத்துப் பூமியில் அழுந்த வைத்து விடுகிறார். பின்னர் உபரிசரவசு பெருமானை வணங்கி மன்னிப்புப் பெற்றுத்தேரோடு திரும்பியிருக்கிறான் என்று இவ்வூருக்கான பெயர்க்காரணத்தைத் தருகிறார் பாஸ்கரத் தொண்டைமான்”3. இவ்வாறு தேரழந்தூர், அழுந்து எழுந்ததால் தேரெழுந்தூர் என்றும் அழைக்கப்படலாயிற்று.

 மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள இந்த ஊருக்கு அருகில் உள்ள மேட்டில் (கம்பர் மேடு) கம்பர் பிறந்தார். தான் பிறந்த தேரழுந்தூர் பற்றிய தகவல்களை அவர் தன் காப்பியத்துள் ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். அவை நுணுகி ஆராயும் நிலையில் கண்டு கொள்ளத் தக்கனவாக உள்ளன.

”அழித்த தேர் அழுந்தா முன்னம், அம்பொடு கிடந்து வெம்பி”4 என்று  தேரழுந்தூரை யுத்தகாண்டத்தில் இந்திரசித்தன் தேர் அழுந்திய நிலையில் குறித்துத் தன் ஊர் பற்றிய செய்தியைப் பதிய வைக்கிறார் கம்பர்.

திருவழுந்தூரில் உள்ள   அருள்மிகு ஆமருவியப்பன் திருக்கோயிலில் உள்ள ஆமருவியப்பன் கம்பரின் வழிபடு கடவுளாக விளங்குபவர். இக்கோயிலில் உள்ள ஆமருவியப்பன் தன் இரு சக்திகளுடன்  காட்சி தராமால், அதாவது ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் காட்சித் தராமல், பிரகலாதன், கருடன் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். ஆமருவியப்பனாகிய பெருமாள் தன் பக்தன் பிரகலாதனோடும், தன் தோழனாகிய கருடனுடனும் காட்சி தருகிறார்.

ஆமருவியப்பனை ‘‘தாய்தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை ஆயும் அறியும்; உலகின் தாயாகி, ஐய!”5என்று வாழ்த்துகிறர் கம்பர். அவரோடு இணைந்த பிரகலாதனை இரணியன் வதைப் படலத்தில் வாழ்த்துகிறார். மற்றொரு இணையான கருடனை நாக பாசத்தில் கருட துதி மூலம் வணங்குகிறார்.  தன்னூர் மூர்த்திகள் அனைவரையும் கம்பர் தன் காப்பியத்துள் போற்றிப் பணிந்துள்ளார்.

குறிப்பாக வடமொழி இராமாயணமான வால்மீகி இராமாயணத்தில் இரணியன் வதையும், கருட துதியும் இடம் பெறாத நிலையில் அவற்றைக் கம்பர் தன் இராமாயணத்தில் இணைத்தமைக்கான காரணம் அவரின் ஊர்ப் பாசம் என்றே கொள்ளலாம்.

வால்மீகி பாடாத, கம்பர் பாடிய பிரகலாதன்

தன் தந்தையின் ஆணவத்தை அழித்து அவனையும் அழித்து நின்ற பெருமாளிடம் பிரகலாதன் வேண்டும் வரம்

            ‘‘முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;

பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல்,

என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்என்றான்” 6

என்பதாகும். கம்பருக்கும் இது அப்படியே பொருந்தும். கம்பரின் வேண்டுகோளாக பிரகலாதனின் வேண்டுகோளாக படிப்பவரின் வேண்டுகோளாக ஆமருவியப்பனிடம் இப்பாடல் வைக்கப்படுகிறது.

வால்மீகி தொட்டுச் சென்ற கருடனும் கம்பர் நீட்டிச் சென்ற கருடனும்

இந்திரசித்தின் நாகபாசத்தால் இலக்குவன் உயிர் பிறழ்ந்து கிடக்கிறான். அப்போது இராமர் செய்வதறியாது திகைக்கிறார். இந்நேரத்தில் கருடன் வருகை தந்து அந்த நெருக்கடியைத் தீர்த்து இலக்குவனை மீட்டும் உயிர் பெற வைக்கிறார். இந்நிகழ்ச்சி வால்மீகி இராமாயணத்திலும் அமைந்துள்ளது. கம்பராமாயணத்திலும் அமைந்துள்ளது. ஆனால் கம்பர் விரிவாக இக்காட்சியை எழுதுகிறார். வால்மீகி சில  ஸ்லோகங்களில் இதனை முடிக்கிறார்.

வீரர்கள் நாகபாசத்தால் பிணிக்கபட்ட நிலையில் ‘‘திடீரென்று, எரியும் ஜோதியைப் போன்ற வீரம் மிக்க வினதாவின் மகனான கருடன் அந்த வானரர்கள் அனைவருக்கும் முன்னர் தோன்றினார், அவரைக் கண்டதும், வலிமைமிக்க அம்புகள் வடிவில் அந்த இரண்டு வீரர்களையும் கட்டிப்போட்ட பாம்புகள் ஓடிப்போயின. அதன்பிறகு, இரண்டு காகுத்தர்களையும் தொட்டு, அவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களை அளித்து, சந்திரனைப் போல பிரகாசித்த அவர்களின் முகங்களைத் தனது கைகளால் துடைத்தார். கருடனின் தொடுதலின் கீழ், இருவரின் காயங்களும் மூடப்பட்டன, அவர்களின் உடல்கள் உடனடியாக ஒளிரும் சாயலைப் பெற்றன. அவர்களின் வீரம், வீரியம், வலிமை, சகிப்புத்தன்மை, மற்றும் பல சிறந்த குணங்கள், நுண்ணறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நினைவாற்றல் ஆகியவை இரட்டிப்பாக ஆகின.

தனக்கு உதவிய வினதாவின் மகனிடம், இராமன் "உங்கள் கருணை மற்றும் கருணைக்கு நன்றி, ராவணன் எங்கள் மீது கொண்டு வந்த விசித்திரமான தீமையிலிருந்து நாங்கள் இருவரும் விடுவிக்கப்பட்டோம், எங்கள் வலிமை திரும்பியது. என் தந்தை தசரதன் அல்லது என் தாத்தா அஜா முன்னிலையில் இருப்பது போல், உங்கள் முன்னிலையிலும் என் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. கிரீடங்கள், தெய்வீக வாசனை திரவியங்கள் மற்றும் வான ஆபரணங்களைத் தாங்கி, தூசியிலிருந்து விடுபடும் ஆடைகளை  உடையவருமான தாங்கள் யார்?” என்றார்.

பிறகு, வீரம் நிரம்பியவனும், சிறகு படைத்த உயிரினங்களின் இறைவனுமான வைணதேயர், அவரது இதயம் பரவசமடைந்து, கண்கள் மகிழ்ச்சியால் பிரகாசித்த ராமனைப் பார்த்து கூறினார்:-

“நான் உனது அன்பான நண்பன், ஓ காகுத்தா! உங்கள் இருவருக்கும் உதவி செய்ய இங்கு வந்திருக்கிறேன்” 7 என்கிறார் கருடன். இவையே  வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் கருடனைப் பற்றிய குறிப்புகள் ஆகும்.

ஒரு சாதாரண இந்தச் சந்திப்பினை மிகவும் கனமுள்ளதாக, மிகவும் தேவையானதாக கம்பர் படைக்கிறார்.

‘‘இத் தன்மை எய்தும் அளவின்கண், நின்ற இமையோர்கள் அஞ்சி, ‘இதுபோய்

எத் தன்மை எய்தி முடியும் கொல்? ‘ என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,

அத் தன்மை கண்டு, புடைநின்ற  அண்ணல் கலுழன்தன் அன்பின் மிகையால்

சித்தம் நடுங்கி, இதுதீர, மெள்ள, இருள் ஊடு வந்து தெரிவான்”8

என்று நாகபாசம் கட்டிய காலத்தில்  தேவர்கள் பதை பதைக்க அந்த நேரத்தில் கருடன் இருளின் வழியே வந்த ஒளிக்கீற்றாகத் தோன்றுகிறார். பொன்மயமான சிறகுகளை உடையவராக, திசையானைகளை அடக்கும் வலிமை பெற்றவராக, பெரிய காற்று மண்டலததை உருவாக்குபவராக  கருடன் விளங்கினார் என்று கருடனின் இறகுச் சிறப்பினைப் பாடுகிறார் கம்பர். மேலும் பல மணிகள் பதித்த ஆபரணங்களைக் கழுத்தில் பூண்டவரும், வைரங்களைத் தன் மேனியில் பதித்தவரமான கருடன்  இராமனைக் கண்டு வணங்கினார். மேலும் இராமனைப் பலவாறு துதித்து அவனின் பாதங்களை வணங்கினார் கருடன். இத்தனை காலம் வணங்க இயலாமல் இப்போது கிடைத்து இருக்கும் தருணம் அருமையான தருணம் என்று இராமனைப் பலகாலும் வணங்கினார். மேலும் அபயம் பெற்றவர்களை வணங்கும் இயல்புடையவனே தாங்களே கலங்கலாமா என்று இராமனுக்கு நம்பிக்கை மொழிகளைக் கருடன் வழங்கினார்.

            மேலும் அதிரேக மாயை என்ற மாயையால் இராமன் இவ்வாறு வருத்தம் கொள்ளும் சூழல் உருவானது என்று கருடன் கருதுகிறார்.

            ”தான் அந்தம் இல்லை; பல “ என்னும்,   ஒன்று; “தனி “ என்னும், ஒன்று, “தவிரா

ஞானம் தொடர்ந்த சுடர் ‘‘ என்னும், ஒன்று;    ‘‘நயனம் தொடர்ந்த ஒளியால்,

வானம் தொடர்ந்த பதம் ‘‘ என்னும், ஒன்று;    மறைநாலும் அந்தம் அறியாது,

ஆனந்தம்என்னும், “அயல்என்னும்!    ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்?”9

                                               

என்ற பாடலில் அதிரேக மாயை பற்றி உணரமுடிகின்றது. கடவுள் இல்லை, இருக்கிறார், அவர் பல வடிவினர், அவர் ஒரு வடிவினர், அவர் தனி, , அவர் சுடர் , அவர் வான்பதம், அவர் ஆனந்த மயமானவர், அவர் அயல் நிற்பார் என்று  ஆண்டவனைப் பற்றிய பல கருத்துகளை பல் வேதங்களும் சொல்லி மாயைக்குள் திகழ்கின்றன. இதுவே அதிரேக மாயையாம்.

            இ்வ்வாறு பதினோரு  பாடல்களில் அதிரேகமாயையைக் காட்டி இராமபிரானைத் துதி செய்து வணங்குகிறார் கருடன். அதன் பின் நாக பாசம் நீங்குகின்றது. கருடன் துதிக்கும் நிலையில் உள்ள ஆமருவியப்பன் சன்னதி கம்பரின் வாக்கில் நாகபாசப்படலத்தில்  வெளிப்பட்டுள்ளது என்பது மிகத்தெளிவு.   மேலும் மாயை பற்றிய வேதாந்தக் கருத்துகளைக் கம்பர் நாகபாசபடலத்தில் கருடன் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

            இவ்வாறு இராமனைப் போற்றிப் புகழ்ந்த கருடன், தன்னைப் பற்றிக் கேட்ட இராமனிடம்

            பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், ‘பழைய நின்னோடு

          உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடுஅம்

மற வினை முடித்த பின்னர், வருவென்என்று உணர்த்தி, மாயப்

பிறவியின் பகைஞ! நல்கு, விடைஎனப் பெயர்ந்து போனான் 10

           

என்ற பாடலின்வழி பறவைக் குலங்கள் காக்கும் பாவகன் என்ற நிலையில் கருடன் அறிமுகமாகிறார். இதுவே மாயையின் தோற்றம் ஆகும். பரம்பொருளான இராமன் மனிதன் என்ற நிலையில் மறைந்து நிற்கிறார். அவரின் உண்மை அறிந்த கருடன் தானும் அதனை வெளிப்படுத்தாது மறைத்து அறிமுகம் கொள்கிறார்.

            இவ்வாறு  தன் ஊர் சார்ந்த நினைவுகளுக்கு இடம் தந்து கம்பராமாயணத்தில் வால்மீகி படைக்காத புதுமைகளைக் கம்பர் படைத்தளித்துள்ளார்.

முடிவுகள்

            கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தில் பல இடங்களில் வேறுபட்டு அமைகிறது. குறிப்பாக இரணியன் வதைப்படலம், நாக பாசப் படலத்தில்  கருட வருகையும் சந்திப்பும் ஆகிய இடங்களில் இவ்வேறுபாடுகளை உணரமுடிகின்றது. வால்மீகி பாடாத இரணியன் வதைப்படலம், வால்மீகி சில சுலோகங்களில் தொட்டுச் சென்ற கருட சந்திப்பு கம்பரால் புதிதாக , வளமையுடன் படைக்கப்பெற்றுள்ளது. மேலும் கருடன் இராமரின் உண்மை நிலை உரைக்கக் காட்டும் அதிரேக மாயை வேதாந்தக் கொள்கை சார்ந்தது. தன் ஊரில் உள்ள திருமால் கோயிலான ஆமருவியப்பனின் சன்னதியில் உள்ள இரு உருவங்களாக கருடன், பிரகலாதன் ஆகிய திருவுருவங்கள் கம்பரின் பாடுபொருள்களாக ஆகி வால்மீகியில் இருந்து அவரை வேறுபடுத்தி வளப்படுத்தி நிற்கின்றன.

சான்றாதாரங்கள்

1.     கம்பர், கம்பராமாயணம்,அவையடக்கம்  பா.எ.8

2.     பாஸ்கரத் தொண்டைமான், கம்பரின் சுயசரிதம், ப.7

3.     பாஸ்கரத் தொண்டைமான், குமரி முதல் வேங்கடம் வரை பகுதி 2,ப.67

4.     கம்பர், கம்பராமாயணம், நாகபாசப்படலம், பா.எ. 182

5.     கம்பர், கம்பராமாயணம், விராதன் வதைப் படலம், பா. 54

6.     கம்பர், கம்பராமாயணம், இரணியன் வதைப்படலம், பா.எ. 169

7.      https://www.wisdomlib.org/hinduism/book/the-ramayana-of-valmiki/d/doc424679.html (தமிழாக்கம்)

8.     கம்பர், கம்ப ராமாயணம், நாகபாசப்படலம். பா.எ. 243

9.     கம்பர், கம்பராமாயணம், நாகபாசப்படலம், பா.எ. 255

10.  கம்பர், கம்பராமாயணம், நாகபாசப்படலம், பா.எ. 270

துணைநூற்பட்டியல்

சுப்பிரமணியன்.ச.வே., (உ.ஆ), கம்பராமாயணம், மணிவாசகர் பதிப்பகம்,சென்னை

பாஸ்கரத் தொண்டைமான், கம்பரின் சுயசரிதம், நிவேதிதா பதிப்பகம், சென்னை 2005

பாஸ்கர தொண்டைமான். குமரி முதல் வேங்கடம் வரை பகுதி, 2 நிவேதிதா பதிப்பகம்,சென்னை

கருத்துகள் இல்லை: