தமிழ் இலக்கியங்களில் அறியப்படாத பல இலக்கியங்கள் இன்னமும் உள்ளன. குறிப்பாக நாட்டுப் புற இலக்கியங்கள் பல இன்னும் வெளியுலகால் அறியப்படாமலே உள்ளன. திருவாடானை என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிநேக வல்லி உடனுறை ஆதி ரத்தினேஸ்வரர் ஆலயத்தை மையமாக வைத்து சட்டமுத்து என்ற என். குஞ்சம்மாள் இயற்றிய கும்மி வாருணி சரித்திர கும்மி என்பதாகும். இக்கும்மி இணைய வெளியில் கிடைக்கின்றது. இதுவரை அறியப்படாத இலக்கியமான இதனுள் பல நல்ல கருத்துகள் அடங்கியுள்ளன. குறிப்பாக வாருணி என்பவனின் தனிமனித ஒழுக்கம் குறித்தான செய்திகள் இதனுள் பாடப் பெற்றுள்ளன. அவற்றை எடுத்துரைக்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப் பெற்றுள்ளது.
வாருணி சரித்திர கும்மிப் பாடல் –அறிமுகம்
வாருணி சரித்திர கும்மியைப் பாடியவர் சட்டமுத்து என்ற என். குஞ்சம்மாள் ஆவார். இவரின் பிறந்த ஊர் அரும்பூர் ஆகும். இவரின் தந்தையார் பெயர் நல்லசாமி குருக்கள் என்பவர் ஆவார். இப்பெண் திருவாடானையில் வாழ்ந்த ஆபத் நாராயண குருக்குள் என்பவரைத் திருமணம்செய்ததன் காரணமாகத் திருவாடனைக்கு வந்து சேர்கிறார். இவருக்குப் படிப்பறிவு, கேள்வி ஞானம் போன்றன இருந்துள்ளன. இதன் காரணமாக இவர் திருவாரூர் சாமிநாத தேசிகர் எழுதிய திருவாடானை தல மான்மியம் என்ற நூலில் அமைந்துள்ள வாருணி சாபமடைந்த சருக்கம், வாருணி சாப விமோசனச் சருக்கம் ஆகிய பகுதிகளை அடிப்படையாக வைத்து வாருணி சரித்திர கும்மி என்பதைப் படைத்துள்ளார்.
வாருணி சரித்திர கும்மி பதினெட்டு கட்டங்களை உடையதாக எழுதப்பெற்றுள்ளது. கும்மிப் பாடல்கள் இவர் வாழ்ந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த இசைப் பாடல்களை அடியொற்றி எழுதப்பெற்றுள்ளது.
இதனை வெளியிட உதவியவர் இவரின் மாமா முறையினரான டி. முத்துசாமி குருக்கள் என்பவரால் 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றுள்ளது. இதனை சென்னையில் உள்ள சத்திய நேசன் என்ற அச்சகம் அச்சடித்து வெளியிட்டுள்ளது.
கும்மிப்பாடலின் முன்பகுதியில் விநாயகர், முருகன், நாமகள் ஆகிய கடவுளர்களின் வணக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதன்பிறகு சவுனக முனிவர் வாருணி சாபம் பெற்ற கதையைக் கேட்க சூத முனிவர் கதையைச் சொல்வதாக இக்கும்மி பாடப்பெற்றுள்ளது.
இதனுள் சூரியன், வருணன், வருணனின் மனைவி, வாருணி, பிருகு முனிவர், துர்வாச முனிவர், தேவர்கள், முனிவர்கள், அருள்மிகு ஆதி ரத்தினேஸ்வரர், அருள்மிகு சிநேக வல்லி போன்றோர் பாத்திரங்களாக இடம்பெறுகின்றனர்.
வாருணி என்ற வருணனின் மகன் சிவபெருமானைத் தரிசித்துவிட்டுத் திரும்பும் நிலையில் அவன் தன் படைகளுடன் துர்வாசர் முனிவர் தம் வனத்தில் தங்கிவிடுகிறான். அவ்வனம் மலர்கள், காய்கள், கனிகள் நிரம்பிக் கிடந்த வனமாகும். அவ்வனத்தில் நுழைந்த வாருணியின் படைகள் அவற்றைப் பறித்தும் அழித்தும் தேய்த்தும் நாசம் செய்ய அதனைத் துர்வாச முனிவர் தடுக்க வருகிறார். அவரிடம் வாருணி பணிவாக நடக்காமல் ஆணவத்துடன் நடக்க அவர் பதினான்கு ஆண்டுகாலம் ஆடு, யானை ஆகிய உருவக் கலப்பாக நீ பிறப்பாய் என்று சாபம் தருகிறார்.
இதனால் ஆட்டுத் தலையும், யானை உடலும் பெற்று வாருணி காண்பவர் சிரிக்கும் நிலைக்குத் தள்ளப்பெற்றான். இவன் சாபம் நீங்க திருவாடானை தலத்து இறைவனை வழிபடவேண்டும் என்று துர்வாசரும், அகத்தியரும் குறிப்பிட அவ்வழி இவன் திருவாடானை வந்து தவம் செய்து அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரரை, சிநேக வல்லித் தாயருடன் காளை வாகனத்தில் தரிசித்துத் தன் முன்வினைப் பயனைத் தீர்த்து நல்லுருவம் பெறுகிறான். இதன் காரணமாக சென்ற கால தீவினைகள் அழிக்கும் இறைவனாகத் திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் விளங்குகிறார் என்ற செய்தி தெரியவருகிறது.
இதன்பின்பு வாருணி வாருணி தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி அதன் அருகே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டு நற்கதி பெறுகிறான். தேவர்கள் மலர் மழை பொழிகிறார்கள். இதுவே வாருணி சாபம் பெற்ற கதையும் நீங்கிய கதையும் ஆகும். இதனைக் கும்மியாக வடித்துள்ளார் குஞ்சம்மாள்.
தனி மனித ஒழுக்கம்
தனிமனிதனின் ஒழுக்கமே அவன் சார்ந்த சமுதாயத்திற்கும் ஆகின்றது. அவனின் ஒழுக்கம் மீறல் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் மீறலாகி விடுகின்றது. எனவே தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கத்தின் மூலமாக விளங்குகின்றது. “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற வள்ளுவர் குறள் ஒழுக்கத்தின் மேன்மையைச் சுட்டும்.
வாருணி சரித்திர கும்மியில் வருணனின் மகன் வாருணி செய்த சில தனிமனித மீறல்களால் அவன் சார்ந்த குழுவும் அவனும் பாதிக்கப்படும் நிலையைக் காணமுடிகின்றது. வாருணி தனக்குச் சொந்தமில்லாத சோலையைப் பாழ்படுத்தும் நிலையில் அந்தச் சோலைக்கு உரியவரான துர்வாச முனிவரால் சாபத்திற்கு உள்ளாகிறான். இதனை இக்கும்மி
‘‘இந்த விதமிருக்க வந்த வாருணி சேனை
வந்து புஷ்ப பத்திர மாநதியை அடுக்க (மெத்த)
செஞ்சடை முனியுந்தன் தஞ்சமென்று வாருணி
அஞ்சிப் பணியாமல் அகங்காரத்துடன் நின்றான்(மெத்த)
அந்தமாய் வாருணியின் சிந்தைக் கெர்வத்தைக் கண்டு
செந்தழல் என ரிஷி சீரிச் சபிக்கலுற்றார்”
(என். குஞ்சம்மாள், வாருணி சரித்திர கும்மி ஏழாவது கட்டம்)
என்று பாடுகின்றது. துர்சாவ முனிவர் கோபம் என்ற தன்மையின் உச்சியில் நிற்பவர். அவரின் சோலையில் அவரின் அனுமதி பெறாமல் வாருணி சேனை சென்று அந்தச் சோலையை நாசம் செய்கின்றது. அதனை அறிந்து அங்கு வந்த துர்வாச முனிவரின் கோபம் கொள்ள அந்தக் கோபத்தைக் கண்டும் வாருணி அஞ்சாமல், பணியாமால் கர்வத்துடன் நிற்கிறான். இதன் காரணமாக தீபோன்று முனிவர் அவனைச் சபித்தார்.
இந்நிகழ்ச்சி வழியாக பெரியாரைப் போற்றல் என்ற பண்பினை வாருணி இழந்து நிற்கிறான். மேலும் அவன் கர்வத்துடன் பணிவின்றி நிற்கிறான். பெரியோரைத் தவத்தினரைக் கண்டால் பணிவும், கர்வமின்மையும் வரவேண்டும். இதனை மீறி கர்வத்துடன் நின்ற காரணத்தால் வாருணி என்ற வருண தேவனின் மகன் சாபத்திற்கு ஆளாகிறான். மனிதன் என்ற நிலையைத் தாண்டி தேவர் மகன் ஆயினும் பணிவும் கர்வமின்மையும் வேண்டும் என்பதை இந்நிகழ்ச்சி காட்டுகின்றது.
துர்வாச முனிவர் வாருணிக்குத் தந்த சாபம் விசித்திரமானது.
“சிந்தையில் துர்வாச ரிஷி சினமிகக் கொண்டு
மைந்தனான வாருணியின் வதனத்தை நோக்கி
அந்தணர் முனிவர்களை அவமதித்ததால்
உந்தன் முகம் அஜமும் யானை உடலும் ஆகவே
தந்தேன் சாபமென்று கூற தரணி வேந்தனும்
சிந்தை நொந்து மகரிஷியின் திருவடி பணிந்தான்”
(என்.குஞ்சம்மாள், வாருணி சரித்திர கும்மி, எட்டாவது கட்டம்)
என்று சாபத்தின் தன்மையைக் காட்டுகிறது இக்கும்மி. அந்தணர்கள், முனிவர்கள் ஆகியோரை அவமதித்த குற்றத்தால் வாருணியின் முகம் ஆட்டின் முகம் போலவும், உடல் யானையைப் போலவும் மாறட்டும் என்று சாபம் வழங்கப்படுகிறது. இச்சாபம் திருவாடானைத்தலத்தில் நீங்கவேண்டும் என்பது இங்குக் குறிப்பு. திருவாடானை என்ற ஊரின் பெயர் இந்தப் புராணத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. ஆடு, ஆனை வடிவிலான வாருணி என்ற தேவன் வணங்கிப் பழைய தன் உருவம் பெற்றதால் இவ்வூர் திருவாடானை என்றே வழங்கப்படுகிறது. இதனை அஜகஜபுரம் என்று வடமொழியில் அழைப்பர்.
வாருணி செய்த தவறினால் அவனும் அவனுடன் வந்த சேனையும் பாதிப்பினைப் பெற்றது. இச்சாபம் தீர வழியையும் துர்வாச முனிவர் அவனுக்கு அறிவிப்பதாகக் காட்டுகிறது இக்கும்மி.
வாரணமாக வருஷம் ஈராறு வாருணியே இருப்பாய்
தாரணியில் அகஸ்தியர் வார்த்தையால் தந்தையுடன் சிறப்பாய்
சேத்திரந் தன்னில் கீர்த்தி கண் வாய்ந்த
திருவாடானை வாழ் மூர்த்தியை பானுதீர்த்தத்தில் மூழ்கி
தோத்திரம் செய்திடுவாய்.
முன்னுருவாகி முனியாம் மார்க்கண்டர் தன்னடி பணிந்து
நன்னயமாய் உபதேசம் பெற்று நாயகனைப் பணிந்து
வீராசனத்தில் வீற்றிருக்கின்ற வேதநாதனின்
நேராகவே நீ பஞ்சாட்சரத்தை ஆறு லெட்சம் ஜபிப்பாய்.
என்று துர்வாசர் இயம்பிடக் கேட்டு ஏகினன் இறைவன் அன்று
அஜமும் யானையுடலும் ஆகினான் விரைவாய் (ஒன்பதாம் கட்டம்)
என்ற அடிகளில் சாபத்தைத் தீர்க்க வழி சொல்லப்படுகிறது. ஆறு லட்சம் முறை ஆண்டவனின் திருப் பெயரை உச்சரிப்பதன் வாயிலாக சாபம் தீரும் என்பது இவ்வடிகள் சொல்லும் வழியாகும்.
ஒருவர் செய்த பிழையைத் தீர்க்கத் தீர்த்தம் ஆடல், தோத்திரம் செய்தல் போன்ற நடைமுறைகள் செய்யப்பட வேண்டும் என்று இப்புராணம் காட்டுகின்றது. பிழைகளைத் தவிர்ப்பவன் இறைவன் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த சாபவிமோசனம் சுட்டப்பெற்றுள்ளது.
மேலும் இக்கும்மியில் நிறைவுப் பகுதியில் இறைவனை வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வதன் வாயிலாக எல்லா நன்மைகளும் பெறலாம் என்றும் காட்டப்பெற்றுள்ளது. வாருணி ரத்தினங்கள் பல இறைவனுக்கு அளித்து, வில்வ அர்ச்சனை செய்து தன் பழவினை தீர்கிறான்.
இவ்வாறு இக்கும்மி பிழைகள் செய்வோர் இயல்பினையும் அப்பிழைகளைத் தவிர்ப்பவன் இறைவன் என்பதையும் எடுத்துரைக்கின்றது. தனி மனிதன் தன் ஆசைக்கு உட்பட்டுத் தவறுகள் செய்யாமல் இறைநெறியில் செல்லவேண்டும் என்பதை இக்கும்மி எடுத்துரைக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக