காந்தியடிகள் தற்கால உலகின் இன்னல்களுக்குச் சத்தியத்தின் வழியில் தீர்வுகள் சொன்னவர். அவர் எதிர்காலம் பற்றியும் சிந்தித்துள்ளார். நாளைய உலகம் பற்றி அவர் பேசியுள்ளார்.
நாளைய உலகம் பற்றிய அவரின் சிந்தனைகள் கேள்விகள் கொண்டு தொடங்குகின்றன.
நாளைய உலகம் நன்முறை உடையதாக இருக்குமா?
அல்லது வன்முறை உடையதாக இருக்குமா?
என்பது அவர் எழுப்பும் முதல் கேள்வி. இக்கேள்வியைத் தொடர்ந்து
எப்போதுமே பசி, பட்டினி, ஆழ்துயர் இவை தீரவே தீராதா. தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமா?
என்று அடுத்த கேள்வியை முன்வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவர் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி தர்மத்தின் மீது எதிர்காலச் சந்ததியினருக்கும் ஆழமான நம்பிக்கை இருக்குமா?
சமுதாயத்தில் பெரியமாற்றம் ஏற்படும் என்றால் அது புரட்சியின் விளைவாகவா, அல்லது யுத்தத்தினாலா, அல்லது அமைதியான முறையிலா? என்பது நிறைவான கேள்வி. இந்தக் கேள்விகள் அனைத்தும் காந்தியடிகள் காலத்திலும் கேள்விகள் தான். இக்காலத்திலும் கேள்விகள்தான், எதிர்காலத்திலும் கேள்விகள்தான்.
இக்கேள்விகள் எல்லாவற்றுக்கும் ஒரே பதிலை முன்வைக்கிறார் காந்தியடிகள்.
எதிர்கால உலகம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட உலகமாகத் தான் இருக்கும். என்பது காந்தியடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அகிம்சை வாழ்வு என்பதற்கு ஒருவர் போதுமானது. அவ்வாறு மேற்கொள்ளும் ஒருவர் மற்றவர்களும் அவ்வழி பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது அவசியமற்றது. ஒருவர் கடைபிடிக்கிறார் என்றால் தனிநபர்கள் அடங்கிய சமுதாய அமைப்புகள் அதனைக் கடைபிடிக்க முடியாதா?
எனவே நாளைய உலகம் அகிம்சை உலகாக இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும். நாளைய உலகம் அகிம்சை உலகம்தான்.
அகிம்சை உலகில் சண்டை இருக்காது. தேவையான பொருள்கள் அனைத்தும் தேவையானவர்களுக்குத் தேவையான அளவில் கிடைக்கும். மனிதர்களின் இயற்கைத் தேவைகள் அனைத்தும் முழுமைபெறும். இதனால் பற்றாக்குறை என்பதே இருக்காது. அனைவரும் தேவையானவற்றைப் பெற்றிருப்பர்.
ஒருவருக்கு அரைக் கிலோ கோதுமை மாவு இன்றைய உணவிற்குத் தேவை என்றால் அதே அளவு அனைவருக்கும் கிடைக்கும். இந்நிலையில் சண்டைகள் சச்சரவுகள் வராது. ஒருவருக்கு அரை கிலோ மற்றொருவருக்கு ஐந்து கிலோ என்று கிடைக்கச்செய்வதன் வாயிலாகத்தான் ஏற்றத் தாழ்வுகள் சண்டை சச்சரவுகள் வருகின்றன.
எதிர்கால உலகில் எல்லாருக்கும் எல்லாமும் அகிம்சை வழியில் கிடைப்பதால் பேதம் இல்லை. வேறுபாடு இல்லை. சண்டை இல்லை. சச்சரவும் அகிம்சை அடிப்படையில் காணும் நாளைய உலகில் வறுமை இருக்காது. புரட்சிகள் இருக்காது. இரத்தம் சிந்துதல் இருக்காது. அந்த எதிர்கால உலகில் எப்பொழுதும் இருந்த தர்ம சிந்தனை இன்னும் அதிகமாகக் காணப்படும். கடவுள் மீதான நம்பிக்கைகளாக இருப்பவர்களின் நிலை என்ன என்றும் யோசிக்க வேண்டும்.
செல்வந்தர்களும் தமக்குத் தேவையான அதே அரைக் கிலோ கோதுமை மாவு பெறத் தகுதியுடையவர்கள். அதற்கு மேல் அவர்களுக்கு அனுபவிக்க உரிமை இல்லை. இருப்பினும் அவர்களிடம் இருந்து செல்வங்களைப் பறித்தல் என்பது அகிம்சையாகாது. அவர்கள் மனமுவந்து தனக்குத் தேவையான இயற்கைத் தேவை அளவினை எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் தன் பொறுப்பில் தர்மத்திற்குத் தம் செல்வத்தை அளிக்கவேண்டும். இறைவன் மீது நம்பிக்கை அதிகம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக