திங்கள், ஜூலை 10, 2017

பெண்ணிய நோக்கில் குறிஞ்சிப்பாட்டு
Siragu kurunjippattu1
கடைச் சங்க காலத்தில் படைக்கப் பெற்ற இலக்கியங்கள்  எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும்.  பத்து நெடும்பாடல்கள் கொண்ட பத்துப்பாட்டு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுகிய அடிகளை உடைய பாடல்களுள் (261  அடிகள்) ஒன்று குறிஞ்சிப்பாட்டு ஆகும். இக்குறிஞ்சிப்பாட்டு கபிலரால் பாடப் பெற்றது.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காக இந்நூல் பாடப் பெற்றுள்ளது. இதனை “பெருங்குறிஞ்சி”  என்றும் அழைக்கின்றனர். இதற்குக் காரணம் குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்களுள் இதுவே நீளமானதாகும்.
இது அகப்பொருள் (காதல்) சார்ந்தது. அறத்தொடு நிற்றல் என்ற துறையில் அமைக்கப் பெற்றுள்ளது. இதன் பெருமைகளுள் ஒன்று சங்ககால தொண்ணூற்றொன்பது பூக்கள் இதனுள் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஆகும். இந்நூலில் தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்ற சில பாத்திரங்கள் மட்டுமே இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன. இப்பனுவல் நாடகச் சாயலை உடையது.
அறத்தொடு நிற்றல் துறை
அறத்தொடு நிற்றல் என்பது குறிஞ்சிப்பாட்டின் துறை ஆகும். அறத்தொடு நிற்றல் என்பதற்கு ,,களவினைத் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை”“ எனப் பொருள் கொள்ளுகின்றது தமிழ்ப் பேரகராதி.
தலைமக்களின் காதல் வாழ்வினை அறவழியில் திருமண வாழ்வாக நிலைப்படுத்த விரும்பும் தோழி முதலானோர் தலைவனும், தலைவியும் பிறர் அறியாமல் காதல் கொண்டமையை உரியவர்க்கு உரியவாறு எடுத்துரைக்கும் முறைமைக்குப் பெயர் அறத்தொடு நிற்றல் என்பதாகும்.
அறத்தொடு நிற்றல் என்ற துறை அடிப்படையில் காணுகையில் தலைவன், தலைவி இருவருக்கும் பொதுவானதுபோல் தோற்றம் தருகிறது. ஆனால் அதன் விரிவினை நோக்கும்போது அது ஒரு சார்பு பட அமைவதாகத் தோன்றுகிறது.
குறிப்பாக தலைவியின் காதலைத் தமர்க்கு அறிவுறுத்தி அவளை அவள் காதலித்த தலைவனுடன் மணந்து கொள்ளச் செய்யும் ஏற்பாடு அறத்தொடு நிற்றல் ஆகின்றது.
இது ஏழுவகைப் பட்ட சூழல்களில் நிகழத்தக்கது என்று கருதுகிறார் தொல்காப்பியர்.
           எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல்
            கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு
            உண்மை செப்பும் கிளவியோடு தொகைய
            எழுவகைய என்மனார் புலவர்”“
என்பது  அறத்தொடு நிற்றலுக்கான சூழல்களான எழுவகையை எடுத்துக்காட்டும் நூற்பாவாகும்.
எளித்தல் என்பதற்கு தலைவன் தலைவியினிடத்தில் எளியனாக  நடந்து கொள்ளுகிறான் என்பது பொருளாகும்.  “ஏத்தல்” என்பது தலைவனின் அருமைத்தன்மையை உரைத்தலாகும். “கூறுதல்” என்பது தலைவி தலைவன் மீது கொண்டுள்ள அழியாக் காதலைக் கூறுதல் ஆகும்.  “உசாதல்” என்பது தலைவியின் வருத்தத்தைத் தீர்க்க வெறியாடல் போன்ற செயல்கள் நடைபெறுகையில் தலைவியின் காதலை வெளிப்படுத்தல் என்பது ஆகும். ஏதீடு தலைப்பாடு  என்பது உயர்ந்த பாலது ஆணையின் இருவரும் தலைப்பட்டனர் என்று உரைத்தலாகும். “உண்மை செப்பும் கிளவி” என்பது  புனைந்துரை வகையால் அல்லது நடந்தது நடந்தபடி உண்மையை உரைத்தலாகும்.
 இவ்வேழு சூழல்களில் தோழியானவள் தலைவியின் காதலை செவிலிக்கு அறிவுறுத்துவாள். செவிலி, நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்கு அறத்தொடு நிற்பாள். இது முன்னிலை மொழியாகவும், முன்னிலைப் புறமொழியாகவும் உரைக்கப்படலாம் என்று அகப்பொருள் விளக்கம் தெரிவிக்கின்றது. இருப்பினும் தலைவி தோழியை அறத்தொடு நிற்கக் கூறும் சூழலில் மட்டுமே தோழி அறத்தொடு நிற்கவேண்டும் என்பதும் இலக்கண வரையறையாகும்.
இந்த ஏழு சூழ்நிலைகளில் தலைவனின் வீட்டிற்கு அவன் காதலை அறிவிக்கும் முயற்சிக்கு வாய்ப்பே இல்லை. தலைவியின் சூழல்களே அறத்தொடு நிற்றல் என்ற துறை கட்டமைக்கப்பட அடிப்படை காரணமாக விளங்குகின்றது.
 தலைவி அறத்தொடு நிற்கும் இடம் ஏழு என்று நம்பி அகப் பொருள் உரைக்கின்றது.
(1) தோழி தன் கண்ணீரைத் துடைத்தபோது அதை ஒரு
   வாய்ப்பாகக் கொண்டு, தான் கலங்கி நிற்பதற்கான
   காரணத்தைக் கூறுதல்.
(2) தலைவன் தெய்வத்தைச் சான்றாக வைத்துத் தன்னை
    மணந்து கொள்ளும் உறுதி கூறியதை வெளிப்படுத்துதல்.
(3) அவ்வாறு கூறிய பிறகு தலைவன் தன்னை விட்டு நீங்கியதை,
   தோழியிடம் கூறுதல்.
(4) தோழி, தலைவனின் பண்புகளைப் பழித்துக் கூறுதல் ங அது
   கேட்ட தலைவி தலைவனது பண்புகளைப் புகழ்ந்து கூறுதல்.
(5) தெய்வத்தை வேண்டிக் கொள்ள இருவரும் செல்வோம் என்று
   தலைவி கூறுதல்.
(6) தன் தாய் தன்னை வீட்டுக்காவலில் வைத்தாள் என்று
   தோழியிடம் கூறுதல்.
(7) செவிலித் தாய் இரவு நேரத்தில் தலைவன் வந்ததைப் பார்த்து
  விட்டாள் என்று தோழியிடம் கூறுதல்.
 என்பன தலைவி அறத்தொடு நிற்கும் முறைகளாகும்.
இவ்வேழு நி[லைகளில் தலைவனின் நம்பிக்கைத் தன்மை பொய்த்துவிடுகின்ற சூழல்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில்தான் தலைவி அறத்தொடு நிற்க முனைகிறாள் என்பது தௌpவாகின்றது. இங்கும் தலைவன் பக்கமான காதல் அறிவிப்பு முறை ஏதும் எடுத்துக்காட்டப் பெறவில்லை.
தலைவி தொடங்கி வைக்கும் இந்த அறத்தொடு நிற்றல் என்ற முறைமை தொடர்ந்து தோழி, செவிலி, நற்றாய், தந்தை என்ற வழிப்படி நிறைவேறும்.
பெண்ணிய நிலையில் அறத்தொடு நிற்றல் என்ற இந்தத் துறையை ஆராய்ந்தால் பெண்ணிற்குச் சங்ககாலத்தில், அல்லது இலக்கணப் புலவர்கள் இடையில் எத்தகைய காதல் கட்டுப்பாடுகள் இருந்தன என்பதும் ஆணிற்கு எத்தகைய காதல் விடுதலை இருந்தது என்பதை அறிய இயலும்.
Siragu-kurunjippattu4
அறத்தொடு நிற்றல் என்பது தலைவி தன் காதலை மெல்ல மெல்ல தோழி, செவிலி, நற்றாய், தந்தை என அனைவருக்கும் அறிவித்து அவர்களின் அனுமதி பெற்று அக்காதல் திருமணத்தில் முடியவேண்டும் என்ற நோக்குடையதாகும். இக்கால மரபிலும் ஒரு தலைவி (பெண்) தான் காதலிக்கிறேன் என்பதைத் தன் தந்தையிடமோ, அல்லது தாயிடமே நேரடியாக உரைக்க முன்வருவதில்லை. அப்படி முன்வந்தால் அந்தக் காதல் நிறைவேற பலநிலைகளில் நேர்;முகமான தடைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். தலைவி தன் காதலை மற்றவர்கள் அறியாது செய்து ஒரு கட்டத்தில்  அதனை மற்றவர்க்கு அறிவித்து அனுமதி பெற்றுக் காதலை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனையே அறத்தொடு நிற்றல் என்ற துறையாக இலக்கண ஆசிரியர்கள் வகுக்கின்றனர். காதலை அறத்தின் வயப்பட்டதாக அமைத்துக் கொண்ட இலக்கணச் சான்றோர்கள் ஏன்  அவ்வறத்தைப் பெண்களுக்கு மட்டும் வலியுறுத்துகின்றனர். ஆண் காதலிப்பதையோ, அவன் குடும்பத்தில் அக்காதலை எடுத்துரைத்தலையோ அறமாக ஏன் கருதவில்லை. அப்போது தலைவன் அறமற்ற முறையில் காதல் கொள்பவன் என்று கொண்டுவிடலாமாடூ அல்லது அவன் காதல் மற்றவர்களிடத்தில் அனுமதி பெற்றுச் செய்யவேண்டிய நிலையில் அக்காலத்தில் இல்லை என்று உணரலாமா போன்ற பல அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன.
இக்கேள்விகளைக் கூர்மையாக பின்வருமாறு அமைத்துக் கொள்ள இயலும்.
1.  அறத்தொடு நிற்றல் என்ற முறை தலைவிக்கு மட்டும் உரியதா அல்லது தலைவனுக்கும் உரியதா
2.  தலைவன் தன் காதலை எவ்வாறு தன் தந்தை, தாயிடம் எடுத்துரைத்திருப்பான்
3.  தலைவிக்கு உண்மையான காதலை, நன்மையான காதலை எடுத்துரைக்கவே இத்தனை முன்னேற்பாடு தேவையாக இருக்கிறது என்றால் தலைவனுக்கு இத்தகைய முன்னேற்பாடுகள் தேவையில்லையா
4. தலைவி காதலிக்க அறத்தொடு நிற்றல் என்பது ஒரு தடையாகவே செயல்படுகின்றது. ஆனால் காதல் விடுதலை பெற்றவனாக யாரை வேண்டுமானாலும் தான் காதலிக்கலாம், கரம்பிடிக்கலாம் என்ற நிலை தலைவனுக்கு  உள்ளதோ
5.  தலைவனை அவனின் பெற்றோர் ஏன் பகற்குறிக்குச் சென்றாய், இரவுக் குறிக்குச் சென்றாய் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தலைவிக்கு மட்டும் ஏன் இந்த அவசியம் ஏற்படுத்தப் பெற்றிருக்கிறது.
இந்த அடிப்படைக் கேள்விகளை அப்படியே வைத்துக் கொண்டு  குறிஞ்சிப் பாட்டினை ஆராய்வோம்.
 குறிஞ்சிப்பாட்டின் பொருள் சுருக்கம்
குறிஞ்சிப் பாட்டு முழுக்க முழுக்க  புனையப் பெற்ற ஒரு காதல் நாடகமாகும். இதனுள் தலைவன் தலைவயின் இன்னல்களை களைபவனாக வருகிறான். இதன் காரணமாக தலைவனும் தலைவியும் தாமாக களவு மணம் புரிந்துகொள்ளுகின்றனர்.
களவு மணம் புரிந்து கொண்டுப்  பிரிந்து சென்ற காதலன் தன்னை மணக்க வராவிட்டாலும் இறக்கும் வரையிலும் அத்துயரத்தைப் பொறுத்திருந்து அடுத்த பிறவியிலாவது தலைவனுடன் சேருவோம் என்ற எதிர்பார்ப்பு உடையவளாகத் தலைவி இருப்பவளாகக் குறிஞ்சிப் பாட்டு தலைவியின் பாத்திரத்தை அமைத்துள்ளது. வரதா தலைவன் பற்றிய குறிப்போ அல்லது அவனை இழுத்து வரச் செய்யும் முயற்சியோ இந்நூலில் தொடங்கப் பெறவில்லை.
தினைப் புனத்தில் தலைவியும் தோழியும் கிளி ஓட்டும் முறையும், குறிஞ்சி நிலத்தில் உள்ள பல்வகைப் பூக்களைத் தலைவியும் தோழியும் சூடி ஆற்றில் நீராடுதலும், தலைவிக்கு ஆபத்து ஏற்படுதலும், அதிலிருந்துத் தலைவன் அவளைக் காத்தலும், அவளிடம் தன் காதலை அவன் உறுதிப்படுத்துவதும், நேரமாகிவிட்டதால் தலைவன் பிரிதலும், அவன் இரவுக்குறிக்கு வருவான் என்று தலைவி காத்திருத்தலும் என்பதாக குறிஞ்சிப்பாட்டின் பொருள் சுருக்கம் அமைந்துள்ளது.
இதனிடையில் தலைவியின் வருத்தத்தைத் தாங்க முடியாத தோழி செவிலியிடம் அறத்தொடு நிற்கிறாள்.
தலைவியின் காதலும் அவளுக்கான கட்டுப்பாடும்
          ““முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
           நேர்வரும் குறைய கலம் கெடின் புணரும்
           சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
           மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
      ஆசு அறுகாட்சி ஐயர்க்கும் அந்நிலை
           எளிய என்னார், தொல் மருங்கு அறிஹர்
           மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
           நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி
           இருவேம் ஆய்ந்த மன்றல் இதுஎன
           நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ
           ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
           ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு”“ என
           மான்அமர் நோக்கம் கலங்கிக் கையற்று
           ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்”“
என்ற இந்தப் பகுதி தலைவியின் மொழியாகும்.
இப்பகுதியில் தலைவியும் தலைவனும் களவு மணம் கொண்டனர் என்பது தெளிவாகக் காட்டப்பெற்றுள்ளது. ““இருவேம் ஆய்ந்த மன்றல்”“ என்று இந்நிகழ்வு குறிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வடிகளில் கவனிக்க வேண்டியவை “நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி” என்ற தொடராகும். தலைவி தன் தந்தையின் கட்டுக்காவலை மீறி காதல் வயப்பட்டாள் என்பதே இத்தொடருக்கான பொருள் ஆகும்.    தலைவிக்குக் காதல் ஏற்படாமல் இருக்க பல கட்டுக்காவல்கள் அந்த காலத்தில் ஏற்படுத்தப் பெற்றுள்ளன என்பது இதன் வழி தெரியவருகிறது.
Siragu kurundhogai-6
அடுத்து தலைவனை களவில் மணந்த தலைவி அவன் வரும் வரை காத்திருக்க முயலுகிறாள். அவன் வராமல் போனாலும் ஏனை உலகமாக இருக்கிற மறு பிறவியில்   நான் அவனுடன் இணைவேன் என்று தன் காதல் உறுதியையும் தலைவி கொண்டிருக்கிறாள்.
ஆனால் இதே நிலை தலைவனுக்குக் காட்டப் பெறவில்லை. அவன் தோழனுடனோ அல்லது பிறருடனோ வரவில்லை. அவன் தனியனாகவே வருகிறான்.
தலைவனுக்கு அளிக்கப் பெற்றுள்ள காதல் விடுதலை
தலைவன் வேட்டைநாய்கள் முன்னே வர கம்பீரமாக தலைவி காதல் காத்துக் கொண்டிருக்கும் தினைப் புனத்திற்கு வருகை தருகின்றான்.
           ““தொன்று படு நறுந்தார் பூணொடு பொலிய
            செம்பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக்கையின்
            வண்ண வரிவில் ஏந்தி அம்பு தெரிந்து
            நுண்வினைக் கச்சை தயங்கு அறக் கட்டி
            இயல் அணிப் பொலிந்த வான் கழல்
           துயல் வருந்தோறும் திருந்து அடி கலாவ”“
என்று மிடுக்கான தோற்றத்துடன் தலைவன் வருகிறான். வந்தவன் வேட்டை நாய்களால் ஏற்பட்ட வருத்தத்தைத் தலைவிக்கு நீக்கி அவளுடன் உரையாடுகிறான்.
பின்னொரு நாளில் காயம் பட்ட மதயானை தலைவியைத் துரத்திக் கொண்டு வர அதனிடம் இருந்துத் தலைவியை தன் வில்லாற்றலால் தலைவன் காக்கின்றான். இதன் காரணமாகத் தலைவிக்கு தலைவன் மேல் ஈடுபாடு தோன்றுகிறது.  அவன் இக்காதலை வளப்படுத்தும் வண்ணம் சில நல்லமொழிகளைத் தலைவிக்குக் கூறுகின்றான்.
““ விருந்து உண்டெஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னொடு புரைவது”“ என்று தலைவிக்கு தலைவன் சூளுறைத்துத் தன் காதலின் மாறாததன்மையை எடுத்துரைக்கிறான்.
மேற்கண்ட தலைவனின் செயல்படுகளில் எவ்விதமான இறக்கங்களும் இல்லை. தலைவன் காதலிப்பதை யாரிடமும் சொல்ல வேண்டியவனாக இல்லை. அவனின் தாய் தந்தை இத்தலைவன் மணந்து கொள்ள உள்ளப் பெண்ணைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை என்பது மேற்கண்ட கருத்து வழி தெரியவருகின்றது.
தலைவன் காதலிப்பதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தப் படவில்லை. ஆனால் தலைவி காதலிப்பதற்கு அஞ்சி நடுங்குகிறாள். இந்த ஏற்றத் தாழ்வு, இந்த பின்னேற்றம் ஏன் எனச் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
பெண்ணிய நோக்கில் இச்சிக்கலுக்கான விடையைத் தேட முடிகின்றது. பெண்ணியம் தற்போது உலக அளவில் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகும். மு்ன்றாம்அலை என்ற பெண்ணிய அலை தற்போது உயர்ந்து எழுந்து வீசிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் பெண்கள் ஏன் ஆணுக்கு அடுத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர், ஆணுக்கு அடுத்த நிலையிலேயே இலக்கியத்திலும் ஏன் பெண்கள் படைக்கப் பெற்றிருக்கின்றனர் என்றும் அறியவேண்டி இருக்கிறது.
““சட்டம் இயற்றுபவர்கள், சமய வல்லுநர்கள், தத்துவ அறிஹர்கள், எழுத்தாளர்கள், மற்றும் அறிவியல் அறிஞர்கள் போன்றோர் பெண்களுக்கு சார்புநிலையையே தாங்கள் படைக்கும் உலகத்திலும், இந்த உண்மை உலகத்திலும் அளித்துள்ளனர். ஆணால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்திலும் இந்த ஆண் மேலாண்மைத்தனம் இருந்து கொண்டே உள்ளது”“ என்ற சைமன் டி பொவாயரின் கருத்து இங்கு எடுத்துக்காட்டத்தக்கது.
தமிழ்ச் சூழலில் சங்ககால இலக்கியங்களில் ஆணாதிக்கம் என்பது மிகப் பெரும் சக்தியாக விளங்கியிருக்கிறது. பெண் ஆண் சார்பினளாகவே வளர்த்தெடுக்கப் பெற்றாள். இதன் காரணமாக தொல்காப்பியர் அறத்தொடு நிற்றல் என்ற நிலையைத் தலைவிக்கு மட்டும் உரியதாகக் கண்டுள்ளார். தொடர்ந்து வந்த இலக்கண ஆசிரியர்;கள் தலைவியின் பக்கத்திற்கு மட்டுமே உரியதாக இந்த அறத்தொடு நிற்றல் என்ற துறையைக் கைக் கொண்டுள்ளனர். தலைவன் பக்கத்திற்கு இத் துறையை எடுத்துச் செல்லவே இல்லை.
““பெண்கள் எப்போதும் ஆண்சார்புடையவளாகவே விளங்குகிறாள். உலகில் என்றைக்கும் பொதுவான சமத்தன்மையை ஆண்களும் பெண்களும் பெற்றதே இல்லை என்று பெண்ணியவாதிகள் திண்ணமாக எடுத்துரைக்கின்றனர்.”“
பெண்கள் திருமணம் என்ற எல்லை வருகின்றபோது அடக்கப்படுவது, அல்லது கட்டுக்குள் வைக்கப்படுவது என்பது ஏன் நிகழ்கிறது என்று பெண்ணியவாதிகள் சிந்தித்துப் பார்க்கின்றனர்.
““குடும்பம் என்ற இணைவாழ்க்கை தொடங்கப்படுவதற்கு முன்வரை பெண்களும் ஆண்களைப் போலவே குழந்தைகளாக, இளம் பருவத்தினராக அறியப் பெறுகின்றனர். மணப்பருவத்தின் நெருக்கத்தின்போது ஆண் விரும்புகிறவனாகவும், காதல் வயப்படுகிறவனாகவும் ஆகின்றான். ஆனால் பெண் விரும்பப்படுகிற பொருளாகவும், காதலிக்கப்படுகிற பொருளாகவும் ஆக்கப் பெறுகிறாள். இதனடிப்படையில் திருமணத்தின்போது ஓர் ஆண் பெண்ணை தனக்கு மனைவியாகவும், தாயகப்போகிறவளாகவும் இனம் காணுகின்றான். இந்த மணவாழ்க்கைத் தத்துவத்தில் ஆண் தனித்து இயங்கும் விடுதலையைப் பெறுகிறான்.  பெண் சார்ந்து இயங்க வேண்டியவளாகவும் அமைகின்றாள். இது ஆண், பெண்ணின் சமத்தன்மையைப் பாதிக்கின்றது”“ என்ற பெண்ணியத்திறனாய்வாளரின் கருத்து திருமணம் என்ற நிலை வருகிறபோது உலக அளவில் ஏற்படுகிற ஆணாதிக்கத் தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது.
மேலும் ஆண் சார்புத் தன்மைக்கு ஒத்து இயங்கும்போது பெண்ணின் வாழ்க்கையும் வெற்றிகரமாகிறது. இதில் ஏதேனும் மாறுபாடு ஏற்பட்டால் பெண்ணுக்குக் குடும்பத்தில் இருந்து விலக நேரிடும் போக்கு அமைந்துவிடுகிறது. எனவே முழுக்க முழுக்க திருமண வாழ்வுக்குப்பின் பெண் அடங்கவேண்டியவளாக உலக சமுதாயம் கட்டமைக்கப் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.
Siragu-kurunjippattu3
இக்கருத்தின்படியே குறிஞ்சிப்பாட்டில் தலைவன் தனித்து இயங்குபவனாகவும் தலைவி சார்ந்து இயங்குபவளாகவும் வடிக்கப் பெற்றுள்ளாள்.
            ““நேர் இறை முன்கை பற்றி நுமர் தர
            நாடு அறி நல்மணம் அயர்கம்,; சில்நாள்
            கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர்”“
என்ற தலைவனின் மொழிகளில் தலைவன் விரும்புகிறவனாகவும், கொள்கிறவனாவும், தலைவி விரும்பப்படுகிறவளாகவும், கொள்ளப் பெறுகிறவாளகவும் அமைகிறாள். பலரது முன்னிலையில்  தலைவனின் கரங்களில் தலைவி ஒப்படைக்கிற மணமுறை ஏற்படும் என்று தலைவன் சூளுரைக்கிறான். இதனை நம்பி இவன் வருவான் வருவான எனக் காதலி காத்துக் கொண்டு இருக்கிறாள்.
இந்நாள் முதலாக தலைவன் பகல் நேரத்திலும், தற்போது இரவு நேரத்திலும் வருகை தந்து தலைவியைக் கண்டு அவளின் துன்பம் தீர்த்துவருவதாக தோழி கூறுகிறாள். ““அன்றை அன்ன விருப்போடு என்றும் இரவரல் மாலையானே”“ என்று தலைவனின் வருகையைத் தோழி செவிலிக்கு உரைக்கிறாள்.
இவ்வாறு இரவு நேரத்தில் தலைவன் வருகிறபோது அவனுக்குப் பல இன்னல்கள் நேரக்கூடும். இதுகருதி தலைவி அஞ்சுகிறாள்.
இரவில் தலைவன் வரும்போதெல்லாம் ஊர்க்காவலர்களால் துன்பம் நேரலாம். நாய் குரைத்து அவனுக்கு ஏதம் விளைவிக்கலாம். தாயாகிய நீ எழுந்துத் தடைசெய்யலாம். நிலவு நன்கு வெளிப்படலாம். இவ்விடைஞ்கள் ஏற்பட்டாலும் தலைவன் கோபப்படுவதில்லை.
          “பெயரினும் முனியல் உறாஅன்
            இளமையின் இகந்தன்றும் இலனே,; வளமையின்
தன்நிலை தீர்ந்தன்றும் இலனே;” என்பது தலைவனின் இயல்பு ஆகும்.
          ““ கொன் ஊர்
             மாயவரவின் இயல்பு நினைஇ தேற்றி
            நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
            ஈரிய கலுழும் இவள் பெருமதர் மழைக்கண்
           ஆகத்து அரி பனி உறைப்ப நாளும்
           வலைபடு மஞ்ஞையின் நலம் செலச்சாஅய்
           நினைந்தொறும் கழுலுமால் இவளே”“
என்பது தலைவியின் நிலையாகும்.
தலைவன் தலைவியின் ஊருக்கு வருகிறபோது ஏற்படும் இன்னல்களைப் பாடும்,  அவனின் பொறுமையை, பெருமையை வியக்கும் குறிஞ்சிப்பாட்டு அவனது ஊரின் தன்மையை அவன் ஊரில் அவனுக்குள்ள பெருமையை எடுத்துரைக்க முனைவதில்லை.
தலைவியைக் காட்டுகையில் அவள் தலைவனின் வருகைக்கு ஏற்படும் இன்னல்களுக்கு வருந்துபவளாகக் குறிஞ்சிப்பாட்டு படைத்துள்ளது. அதாவது தலைவனுக்கு ஏதேனும் துயரம் ஏற்பட்டு ஏதாவது ஆகிவிட்டால் தன் வாழ்வே கேள்விக் குறியாகிவிடும் என்ற சூழல் தலைவிக்கு அமைக்கப் பெற்றுள்ளது.
எனவே தலைவன் விரும்புபவனாகிறான். தலைவி விரும்பப்படும் பொருளாகிறாள். இந்தப் பொருள் தன் உரிமையாளனின் நலன் நாடுகிற பொருளாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் இப்பாடல் தொடங்குகிறபோது
““கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்
 வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது
      எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
          நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ”“ என்று தோழி செவிலியிடம் பேசுகிறாள்.
திருமணம் என்றால் அதற்கு என்ன என்ன தகுதிகள் தலைவனிடம் பார்க்கப் படவேண்டும் என்பதை இப்பகுதி எடுத்துரைக்கிறது.
நன்மை, குடிபிறப்பு, பண்பு, சுற்றம் முதலியன தலைவன் தலைவி இருவர் குடும்பங்களிலும் ஆராயப்படவேண்டும் என்பது அக்கால நியதி. ஆனால் இவற்றை அறிய இயலாமல் தலைவன் யார் என்று அறிந்து கொள்ளாமல் செய்து கொண்ட ஏமம் சால் அருவினை தலைவியின் இந்தக் காதல் ஆகும். இதில் ஏதேனும் குறையிருந்தாலும் இவற்றைப் பொறுத்து இத்திருமணத்தை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செவிலி செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் இங்கு வைக்கப்படுகின்றது.
தலைவனின் நன்மை, குடிபிறப்பு, பண்பு, சுற்றம் முதலியன ஆராயப்படாததற்குக் காரணம் என்னடூ இது ஆராயந்து அதன்பின் வருவது காதல் என்று ஏற்கமுடியாது. ஆனால் தலைவன்தான் தலைவியைக் காண வந்திருக்கிறான். தலைவி அவனை அவனிடத்தில் சென்று முதன்முதலாகச் சந்திக்கவில்லை. தலைவனே வலிய வந்து காதலித்து அதன் பின் வருத்தத்தைத் தலைவிக்குத் தந்து சென்றிருக்கிறான். இப்போது தலைவனின் அன்பைப் பெறமுடியாமலும், தலைவி வீட்டில் நற்பெயர் பெற முடியாமலும் தலைவி இக்கட்டுக்கு ஆளாகிறாள்.
குறிஞ்சிப்பாட்டு என்ற இந்தப் பனுவல் கபிலர் என்ற ஆணால், பிரகத்தன் என்ற ஆணுக்குச் சொல்லப்பட்ட நிலையது என்றால் இங்குப் படைப்பவரும், கேட்பவரும் ஆண் என்பது தௌpவு. இச்சூழலில் இப்பனுவலில் படைக்கப்படும் ஆணும் ஆணாதிக்கத் தன்மை கொண்டவனாக இருப்பான் என்பதல்லாமல் எவ்வாறு இருக்க இயலும்.
முடிவுகள்
பத்துப்பாட்டு நூல்களுள் குறிஞ்சிப்பாட்டு என்பது அகம் சார்ந்த ஒரு காதல் நாடகமாகப்படைக்கப் பெற்றுள்ளது. இதில் காட்சிகள் அவ்வப்போது மாற்றப் பெற்று விறுவிறுப்பு ஊட்டுவதாக உள்ளது.
குறிஞ்சிப்பாட்டு அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறை சார்ந்து குறிஞ்சித்திணையின் பாற்பட்டுப் படைக்கப் பெற்றுள்ளது.
அறத்தொடு நிற்றல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான துறையாக அமையவேண்டியது. ஆனால் அது பெண்ணுக்கு மட்டும் உரிய துறையாக வளர்த்தெடுக்கப் பெற்றுள்ளது.
பெண்ணின் காதலிக்கும் உரிமை, திருமணம் செய்து கொள்ளும் உரிமை போன்றன அவளின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்காமல் மற்றவர் துணையோடு அவள் தன் கருத்தை காதலை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டை, கடப்பாட்டை அறத்தொடு நிற்றல் என்ற துறை ஏற்படுத்தி நிற்கின்றது.
தலைவி காதலித்தால் அதனை தோழி, செவிலி, நற்றாய் வழியாக தந்தைக்கு உரைத்துத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. மறைமுகமாக இந்த ஏற்பாடு அனைவரையும் ஏற்புடையதாக மாற்ற வேண்டிய சூழலில் அமைக்கப் பெற்றுள்ளது.
Siragu-kurunjippattu2
தலைவி தானாகத் தன் துணையைத் தேடிக் கொள்ளும்  தன்மை பெற்றவள் இல்லை. அவ்வாறு அவள் தேடிக் கொண்டால் அவள் தன் குடும்பத்தில் உள்ள அனைவரது விருப்பத்தையும் அதன்பின் பெறவேண்டும். இந்த ஒப்புதல் அனைவரிடத்தில் இருந்தும் அவ்வளவு சீக்கிரம் அவள் பெற்றுவிட இயலாது. காதலித்தவனை விட்டுவிடவும் இயலாது. இந்தச் சூழலில் காதல் வெற்றி பெற அவள் கொள்ளும் ஆயுதம் அழுகை ஒன்றுதான். அழுது அழுதே தன் இன்ப வாழ்வை அவள் பெற ஒப்புதல் பெறவேண்டி இருக்கிறது.
ஆனால் தலைவன் யாரிடமும் ஒப்புதல் பெறவேண்டியவனாக இல்லை. அவனுக்கு தோழன், நண்பன் யார் துணையும் காதலிக்கின்றபோது தேவையில்லை. அவன் தலைவி இருக்கும் இடத்திற்கு வந்து காதல் செய்யும் உரிமை பெற்றவன். தலைவி காதலுக்காக வேறிடம் செல்லக் கூட அனுமதிக்கப் பெறாத காலம் சங்ககாலம் என்பது குறிக்கத்தக்கது. இத்தலைவன் தன் காதலை வெளிப்படுத்தவேண்டிய முறை பற்றி இலக்கண நூல்கள் எதுவும் சொல்லவில்லை. இந்த இடத்தில் இலக்கண நூல்கள் அமைதி காக்கின்றன. எனில் தலைவன் யாரைக் காதலித்தாலும் அவன் சுற்றத்தார் ஏற்றுக் கொள்பவர்கள் என்பது தெரியவருகிறது.
தலைவி தலைவனின் இயல்பு, குடிபிறப்பு முதலான அறியாமல் காதலிக்கிறாள். தலைவன் தான் இயல்பாக வந்த இடத்தில் தலைவியைக் காண்கிறான். காதல் கொள்ளுகிறான். ஆனால் தலைவன் இத்தலைவியைச் சந்திக்க அவளின் பின்புலம், குடிபிறப்பு முதலானவை அறிந்து கூட இந்த இடத்திற்கு அவளைக் கைப்பற்ற வந்திருக்கலாம். ஏனெனில் குறிஞ்சிப்பாட்டில் தலைவனின் வேட்டை நாய்கள் ஏவப்படுகின்றன. அந்த ஏவலைத் தடுத்துத் தலைவன் தலைவியின் நட்பைப் பெறுகிறான். இது இயக்கி வைக்க இயங்கிய நாடகப் பாங்குடன் படைக்கப் பெற்றுள்ளது. எனவே தலைவன் தலைவி பற்றி முன்னரே அறிந்து அவளைத் தன் வசப்படுத்த வந்த திட்டமிடுதலைக் குறிஞ்சிப்பாட்டு உள்ளீடாகக் கொண்டுள்ளது என்பதை உணரமுடிகின்றது.
உலக அளவில் பெண்ணியவாதிகள் திருமணம் என்று வருகிறபோது  ஆண் என்பவன் விரும்புகிறவன், பெண் என்பவள் விரும்பப்படுகிற பொருள் என்று கருத்துரைத்துள்ளனர். இந்தக் கருத்து முற்றிலும் உண்மை என்பதாக குறிஞ்சிப்பாட்டு படைக்கப் பெற்றுள்ளது.
குறிஞ்சிப்பாட்டு ஆண்பாட ஆண் கேட்க ஆணுக்காக எழுதப்பட்ட பனுவல் என்பது முடிந்த முடிவு.
துணைநூற்பட்டியல்
1.      குருநாதன்.இராம(உரையாசிரியர்), குறிஞ்சிப்பாட்டு, அநுராகம், சென்னை, 1992
2.      சுப்பிரமணியம்.ச.வே., தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 2007
3.      பதிப்புக் குழு, தமிழ் லெக்சிகன், சென்னைப் பல்கலை;கழகம், சென்னை, 1982
4.      நாகராசன். வி., பத்துப்பாட்டு இரண்டாம் பகுதி, என்சிபிஎச், சென்னை, 2004

கருத்துகள் இல்லை: