ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

3. நந்தனார் கண்ட சிதம்பரம்






சிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை. வானத்தின் அடையாளமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலம். உலக இரகசியத்தின் உன்னதச் சின்னம் தில்லைச் சிற்றம்பலம். இந்தத் தில்லைக்கு வந்து சேருவது என்பது ஓர் அடியாருக்கு மிகவும் அரிய செயலாக இருந்தது. இத்தனைக்கும் அவர் சிதம்பரத்திற்கு அருகிலேயே ஒரு சில மைல்கல் தொலைவிலேயே வசித்து வந்தார். இத்தனை சொன்ன பிறகு யார் அந்த அடியார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். திருநாளைப் போவார் என்ற நந்தனார் என்பவரே அந்த அடியார்.

நாளைக்குச் சிதம்பரம் சென்றுவிடுவேன், நாளைக்குச் சிதம்பரம் சென்றுவிடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருந்ததால் அவருக்குத் திருநாளைப்போவார் என்றே பெயர் அமைந்துவிட்டது. ஆனாலும் அவர் சிதம்பரம் செல்லும் நாளும் வந்தபாடில்லை. அவரும் சிதம்பரத்திற்குச் சென்ற பாடில்லை. நந்தி விலகினார் கோயில் என்று தற்போது அழைக்கப்பெறும் திருப்புன்கூர் என்ற ஊரைச் சார்ந்தவர் நந்தனார். நந்தனாருக்காக நந்தியே விலகி நின்று திருப்புன்கூர் இறைவனின் காட்சியைக் காட்டி நின்றது. இருந்தாலும் தான் சிதம்பரம் கோயிலுக்கு வந்து அங்கு உள்ள இறைவனைக் காணவேண்டும் என்ற கொள்கையை தன் மனதில் வைத்திருந்தார் நந்தனார். ஆனால், அதற்குப் பல தடைகள் அவருக்கு எழுந்தன. அவற்றை எல்லாம் மீறிக் கடந்து அவர் சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தார்.

அவரின் வாழ்வைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் செய்யுட்பகுதியாக பாடினார். இசைக் கோலத்தில் நந்தனார் சரித்திரத்தைத் தந்தவர் கோபால கிருஷ்ண பாரதியார். இவர் நந்தனார் சரித்திர கீர்த்தனை என்று இசைப் பாடல் வடிவமாக நந்தனார் சரித்திரத்தைப் பாடினார். இக்கதையை மட்டும் அல்லாது திருநீலகண்டர், இயற்பகையார் போன்ற பலரின் வரலாறுகளையும் இசை வடிவில் பாடி மகிழ்ந்தவர் கோபல கிருஷ்ண பாரதியார். இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை போன்றவற்றில் தேர்ந்த அவரின் இசைப் புலமை நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் பெரிதும் வெளிப்பட்டுள்ளது. நந்தனின் பக்தியும் வெளிப்பட்டுள்ளது.


சிதம்பரம் செல்வதால் பெரும் நன்மையைப் பின்வருமாறு நந்தனார் கீர்த்தனை சொல்கிறது.

தெரிசிக்க வேணும் சிதம்பரத்தைத் தெரிசிக்கவேணும்
தெரிசித்தவுடன் உடல் கரிசைப் பிணிகள் அறும்.
பத்தர் பணியுந் திருக் கூத்தன் சந்நிதி தொழுது
தெரிசிக்க வேணும் சிதம்பரத்தைத் தெரிசிக்கவேணும்
வேதனை அடியவர் போதனை முனிவர்கள்
தெரிசிக்க வேணும் சிதம்பரத்தைத் தெரிசிக்கவேணும்
நாதனே கரம் குவித்து ஆதரவாக
ஈசனே! புலியூரில் வாசனே! கனக சபேசனே என்று
நடராசனைப் போற்றி காமத்தை அகல்வர்
வாமத்தினின்று சிவ நாமத்தைச் சொல்லி
அர்த்த சாமத்தில் வந்து தெரிசிக்கவேணும்
சிதம்பரத்தைத் தெரிசிக்கவேணும்.

என்று சிதம்பரத்தைத் தரிசித்தே ஆனந்தக் கூத்தனைத் தரிசித்த நிம்மதியைப் பெற்றார் நந்தனார். இத்தகைய காட்சிகளைக் காண எல்லோரும் சிதம்பரத்திற்குச் செல்லவேண்டும் என்று நந்தனார் குறிப்பிடுகிறார். பாவங்கள் போக, காமங்கள் நீங்க, பிறவித் துயர் நீங்க சிதம்பரம் போகவேண்டும்.

நந்தனார் சிதம்பரத்திற்குச் சென்றபோது அவ்வூரில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கண்ணுற்று அதிசயப்படுகிறார். ஆனந்தம் கொள்கிறார். இதனைக் கோபால கிருஷ்ண பாரதியார் இசை வடிவில் தந்து மகிழ்கிறார்.

ஆகமங்கள் வேதியர்கள் சிவனடியார்கள் கூட்டம்
மன தேகமாகி எப்போதும் விளைகின்ற யோகிமுனிகள் ஆட்டம்
பூலோகம் இது கைலாசம் என்று இதைப் போற்றுவார்கள் ஆட்டம்
...வேள்வி செய்யும் புகை மேலுலகம் எழும்பிப் போகுதையே
புண்ணியவான்கள் புரியுந்தவம்
அரகரசிவன் என்று ஆடிப்பாடிக் கொண்டு
பரிவுடன் தனைப் பிரதட்சணம் வரும் இடம்
மணியாடுது வெகு சனம் கூடுது வீதி வலமாகுது

சிதம்பரத்தில் ஒரு புறம் ஆகம பூசை நடைபெறுகிறது. வேதியர்கள் வேதங்கள் ஓதுகின்றனர். சிவனடியார்கள் கூட்டமாக நின்று ஆண்டவனைத் தொழ வந்த வண்ணம் இருக்கிறார்கள். உடலை வெறுத்து மனதுளே கடவுளை நிறுத்தும் யோகிகள், முனிகள் கூட்டம் ஒரு புறம் ஆண்டவனைக் காணச் செல்கிறது. இதனைக் கைலாசம் என்று பலரும் வணங்குகிறார்கள். வேள்விகள் பல செய்யப்படுகின்றன. அதனால் ஏற்படும் மங்கலப் புகையானது மேலுலகம் செல்லுகின்றது. புண்ணியவான் தவம் புரிந்துகொண்டுள்ளனர். அரகர சிவ மந்திரம் எங்கும் கேட்கிறது. மணியாடுகிறது வெகு சனம் கூடுகிறது என்று சிதம்பரத்தின் நிகழ்ச்சிகளைப் பட்டியலிடுகிறார் கோபால கிருஷ்ண பாரதியார்.

கோபால கிருஷ்ண பாரதியார் நாள்தோறும் சிதம்பரம் கோயிலுக்கு வந்து யோகநிட்டையில் இருப்பார். சிதம்பரம் கோயிலில் தனியிடம் ஒன்றில் அவர் நாளும் யோகநிட்டை பயிலுவார். அந்த இடத்தில் ஒரு நந்தனார் சிலை நின்ற நிலையில் இருக்கும். இந்தச் சிலையே கோபால கிருஷ்ணபாரதியாருக்கு நந்தன் கதையைப் பாடத் தூண்டுகோலாக இருந்தது என்று காரணம் சொல்லப்படுகிறது. பல சிரமங்களுக்கு இடையில் தில்லைச் சிற்றம்பலம் வந்த நந்தனார் நடராச அருள் உருவத்தைக் காண்கிறார். கண்டு அவ்வுருவத்தை மனத்துள் கொள்கிறார். அத்திருவுருவத்தில் முதலில் அவருக்குத் தெரிவது தூக்கிய திருவடி. பின் தெரிவது இடையில் அணிந்த கச்சு, அதற்குப் பின்பு அவர் காண்பது ஆடல், அதற்குப் பின்பு அவர் காண்பது நீலகண்டம். இதனைத் தொடர்ந்து நாடராசர் செம்பவள வாயில் சற்றே தெரியும் குமிழ் சிரிப்பு. இதனைத் தொடர்ந்து நெற்றிக்கண் இவையெல்லாம் நந்தனாருக்குத் தெரிகின்றன. பாதம் முதல் முடி வரை நடராச உருவத்தை நயந்து பார்க்கிறார் நந்தனார். இப்படிப் பார்த்த ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு பாடலைப் பாடுகிறார் கோபால கிருஷ்ணபாரதியார். அதில் ஒரு பாடல்;

ஊனத்தை நீக்கி உலகறிய என்னை ஆட்கொண்டவன்
தேனொத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் எங்கோன்
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கு
மேனத் தெயிறு கண்டாற் பின்னைக் கண்டு கொண்டு காண்பதென்னே


என்ற பாடல் நடராசனாரின் நீலகண்டத்தை நந்தனார் கண்ட அதிசயத்தை விளக்குவது. தில்லைச் சிற்றம்பலவன் எனக்குத் தேன் போன்றவன் என்கிறார் நந்தனார். தேன் உயரமானது. அணுகுவதற்கு எளியது அல்ல. ஆனால், அதன் இனிமை தேனின் அருகில் செல்ல வைக்கும். தேனீக்கள் தேனை மற்றவர்கள் அடையாமல் பாதுகாக்கும். இந்நிலையில் ஆண்டவனைத் தேனாக்கி தனக்கும் அவனுக்கும் இடையே உள்ள தூரத்தைக் காட்டுகிறார் நந்தனார். உயிர்களின் ஆணவம் என்ற ஊனத்தை நீக்குபவன் தில்லைச் சிற்றம்பலவன். வானத்தவர் வாழ்வதற்காக நஞ்சு உண்டவன் பரம்பொருள். அவன் உண்ட விஷம் இன்னமும் கண்டத்தில் இருக்கிறது. அதன் மேல் விலங்குகளின் பற்கள் அணிகளாக விளங்குகின்றன. அவற்றை நான் கண்டபின் வேறொன்றைக் காண என் கண்கள் விரும்பாது என்று உரைக்கிறார் நந்தனார்.

இவ்வாறு தேனாக இறைவனைக் கண்டு தெளிந்த நந்தனாரின் இறை விருப்பம் போற்றத்தக்கது. அனைவருக்கும் இறைவழியைக் காட்டுவது. அவரைக் கண்ட கண்கள், அவர் வரலாற்றைக் கேட்ட காதுகள் வேறொன்றும் அறியாது.

கருத்துகள் இல்லை: