சனி, ஆகஸ்ட் 06, 2016

2. படைப்பவரும், காப்பவரும், அழிப்பவரும் திருமால்





தமிழில் படைக்கப் பெற்றுள்ளள தூது இலக்கியங்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் தூது போவனவாக இருக்கின்றனவோ இல்லையோ தமிழைப் படிப்பவருக்கும் படைப்பவருக்கும் இடையே தூது செல்வனவாக உள்ளன. படைப்பாளரையும் படிப்பவரையும் இணைப்பது இலக்கியங்கள்தானே. இலக்கியங்கள் தரமுடையனவாக இருந்தால் படிப்பவரை அவை கவர்ந்து விடுகின்றன. தூது இலக்கியங்கள் தூது சென்று வெற்றியடைந்தனவோ இல்லையோ, படைப்பாளர்களையும் படிப்பவரையும் இணைத்து இலக்கிய இன்பம் பெறச் செய்வதில் வெற்றி பெற்றுவிடுகின்றன.

தமிழ் விடு தூது என்ற இலக்கியத்தின் வழியாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் கால வரிசை முறையை அறிந்து கொள்ளமுடிகின்றது. அழகர் கிள்ளை விடு தூது வழியாகச் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது.

கூடல் திருநகரில் ஏடு அலர் தாரான் எழுந்தருளி ஆடலுடன்... தல்லாகுளம் வந்தது

என்று சித்திரைத் திருவிழா நடந்த முறையை, நடந்த இடங்களை அழகர் கிள்ளைவிடு தூது சுட்டிக் காட்டுகின்றது. தல்லாகுளம் என்ற இடத்தை, தேனூர் மண்டபத்தில் திருமால் எழுந்தருளும் நிலையை, அழகர் கிள்ளைவிடு தூது பதிவு செய்துள்ளது. இதன் காரணமாகச் சித்திரை விழாவின் பழமையை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இப்படித் தூது இலக்கியங்கள் தமிழில் தனித்த இடத்தைப் பெறுகின்றன.

அழகர் கிள்ளை விடு தூது என்ற இலக்கியத்தை எழுதியவர் பலபட்டடை சொக்கநாதப் புலவர் ஆவார். தலைவி ஒருத்தி அழகர் கோயிலில் உள்ள அழகரை விரும்பிக் காதல் கொள்கிறாள். அழகரிடம் அவர் அணிந்திருக்கும் மாலையை வாங்கி வரத் தூது அனுப்புகிறாள். தலைவி வளர்த்த கிளியும் தலைவியை ஏமாற்றாது அழகர் மலைக்கு வந்து அழகரிடம் மாலை கேட்டு நிற்கிறது. நன்றி உணர்வு மிக்க கிளி அது. அழகர் அருகில் இருக்கும் நேரங்களில் கீர்த்தனம் பாடும் கிளி அது. அழகரோடு நாச்சியார் பக்கத்தில் அமர்ந்து இருந்தால் அவர்களின் சிநேகத்தைக் கெடுக்காமல் நாச்சியாரின் கைகளில் அமர்ந்து அழகு செய்யும் கிளி அது. அந்தக் கிளியைப் பார்த்து, நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டால் அதற்கு அக்கிளி “மணிமாலே உன்னை வணங்க வந்தேன் என்று சொல்லும்”. ஆண்டாள் அருகே இருப்பதை அறிந்து கொண்டு அவள் அணிந்துக் கொடுத்த மாலையைத் தரச் சொல்லி தெலுங்கில் அழகருடன் பேசும் கிளி அது. ஆண்டாளின் தமிழுக்கு நம் தமிழ் ஈடாக இயலாது என்று கிளி தெலுங்கில் பேசுகிறதாம். ஆகவே இக்கிளியே பொருத்தமானது என்று கருதித் தலைவி அதனைத் தூதாக விடுத்தாள்.

அழகர் கிள்ளை விடு தூதில் பெருமாளின் பெருமைகளைப் பலபடப் பேசுகிறார் பலபட்டடைச் சொக்கநாத புலவர். அவற்றில் சில பகுதிகள் அவரின் கவி நுட்பத்தைக் காட்டுகின்றன.

உலகைக் காக்கும் பணியைத் திருமால் செய்கிறார். உலகைக் காக்கும் பணியை அவர் செய்கிறார் என்றால் உலகை உருவாக்கும் பணியை யார் செய்கிறார் என்ற கேள்வி எழும். உலகை உருவாக்கும் பணியை பிரம்மா செய்கிறார் என்று பதில் சொல்ல இயலும். இருந்தாலும் உலகைக் காக்கும் திருமாலே, உலகைப் படைக்கவும் செய்கிறார் என்ற கருத்தைப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நிறுவுகின்றார்.

திருமால் பிரம்மாவின் தொழிலையும் செய்கிறார் என்று கொள்வோம். அழித்தல் தொழிலைச் சிவபிரான்தானே செய்கிறார். அழித்தல் தொழிலையும் திருமாலே செய்வதாகக் காட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

உலகு அழிதலும், அழித்தபின் உருவாக்கலும், உருவாக்கிய பின் காத்தலும் என்ற முத்தொழில்கள் முக்கியமானவை. இவற்றைத் திருமாலே செய்கிறார் என்று தன் கவிதையால் மாயம் செய்கிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

அங்கண் உலகு
உண்ட கனிவாயன் --- உறையும் திருவயிற்றான்,
கொண்டபடி ஈன்ற கொப்பூழான் -பூமி
அளந்த திருத்தாளான் அன்று ஏற்ற கையன்

என்பது அழகர் கிள்ளை விடு தூதில் வரும் அடிகள் ஆகும். இவ்வடிகள் அழித்தல், ஆக்கல், காத்தல் அனைத்தையும் திருமாலே செய்வதாகக் குறிக்கின்றன.

கண்ணன் சிறு குழந்தையாக இருந்த பொழுது செய்த திருவிiளாயாடல்களில் ஒன்று மண்ணை உண்ணும் திருவிளையாட்டு ஆகும். தன் தாய் யசோதை வெண்ணையைத் தான் உண்ணத் தராத கோபத்தில் கண்ணன் மண்ணை உண்கிறான். அவன் மண்ணை உண்டதைக் கண்ட யசோதை ஓடிவந்து அவன் உண்ட மண்ணை உதிர்க்க வைக்கிறாள். வாயைத் திறந்துக் காட்டச் சொல்லுகிறாள். கண்ணனும் வாயைத் திறக்கிறான். கண்ணனின் வாயில் அவன் உண்ட மண்ணைக் காணவில்லை. யசோதைக்கு அனைத்து உலகங்களும் கண்ணன் வாயில் இருப்பது தெரியவருகிறது. இந்த அரிய காட்சியை யசோதை காண்கிறாள், பிரமிக்கிறாள்.

எனவே உலகின் அழிவுநிலையில் தன் வாயில் அவற்றை உண்டார் கண்ணபிரான். எனவே உலகை அழிநிலையில் தனக்குள் அடக்கி உலகைக் காக்கும் பெரும்பணியை அவர் செய்வதால் ருத்ரனின் பணியும் அவர் பணியாகின்றது. உண்ட உலகங்களைத் தன் வயிற்றுக்குள் பதமாக வைத்துத் திருமால் காக்கின்றார்.

வயிற்றுக்குள் அமிழ்ந்திருக்கும் உலகங்களை எப்படி வெளிப்படுத்தித் தோற்றம் செய்வது. தோற்றுவிப்பதும் திருமாலின் கடனல்லவா. கொண்டபடி ஈன்ற கொப்பூழான் என்று அதற்கும் திருமாலே காரணம் என்று உரைக்கிறது அழகர் கிள்ளைவிடு தூது. கண்ணன் உலகங்களை எந்த வரிசையில் விழுங்கினானோ அதே வரிசையில் வெளிப்பட வைக்க திருமால் எண்ணம் கொள்கிறார். தன் வயிற்றின் கொப்புழ்ப் பகுதியில் இருந்துத் தாமரை ஒன்றை எழச் செய்கிறார் திருமால். எழுந்த தாமரையில் பிரம்மாவைப் படைப்புக் கடவுளாக நியமிக்கிறார் திருமால். இதன் காரணமாக உலகைத் தோற்றம் செய்வதற்கும் ஆதியாக இருப்பது திருமாலே என்பது பலபட்டடைச் சொக்கநாதரின் கருத்து.


இவ்வாறு படைத்த பல உலகங்களை அவை சரியாக உள்ளனவா என்று அளந்து பார்க்கும் அளப்பரிய பணியும் திருமாலுக்கு உரியதாகும். பூமி அளந்த திருத்தாளன் என்று அழகர் கிள்ளை விடு தூதில் திருமால் காக்கும் பணி காட்டப்பெறுகிறது. உலகங்கள் சரியாக இயங்குகின்றனவா என அளக்கத் தன் கால்களை அளவீட்டுக் கருவியாகத் திருமால் பயன்படுத் அளந்து காக்கிறார்.

திருமாலை இந்தக் காக்கும் பணியைச் செய்யச் சொல்லிச் சொன்னவர் யார் என்று யாராவது கேட்டால் அதற்குப் பதிலையும் தருகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

அன்று ஏற்ற கையன் - என்று மாவலிச் சக்கரவர்த்திக்கு உலகைக் காப்பேன் என்று திருமால் கைகளில் நீர் ஊற்றிச் சத்தியம் செய்து தந்ததாகக் குறிக்கிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். இதன் காரணமாக உலகை அழித்தும், பிறப்பித்தும், காத்தும் முக்கடமைகளைச் செய்து வருபவர் திருமால் என்பதை உறுதியாக உரைக்கிறது அழகர் கிள்ளை விடு தூது. மூன்றடிக்குள் முத்தொழிலையும் அடக்கி அந்த முத்தொழில்களையும் திருமாலே செய்கிறார் என்று சான்றுகளும் காட்டும் கவி வல்லமை பலபட்டடைச் சொக்கநாதப் புலவரின் பெரு வல்லமையாகும்.

கருத்துகள் இல்லை: